ஆசிரியரின் சொந்த வாழ்க்கைப் பிரச்சினை எதுவானால் மாணவருக்கு என்ன? எங்கள் எட்டாம் வகுப்பு ஆசிரியர் அறிவியல் பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுப்பார். மரத்திலான ஸ்டேண்டில் நிறுத்தி வைத்த கரும்பலகைதான் எங்கள் வகுப்பில் இருந்தது. மூன்று துண்டுகளை இணைத்த கரும்பலகை. ஊமத்தை இலைச்சாறும் அடுப்புக்கரியும் சேர்த்திடித்து அதில் தடவிக் கருப்பாக்குவோம். எழுதினால் துகள் உதிரும். அதிலேயே அருமையான படங்கள் வரைவார். எங்களையும் வரைய வைப்பார். பாடம் நடத்தி முடித்ததும் ஐந்தாறு பேர்களையாவது எழுப்பிக் கேள்வி கேட்பார். பதில் சொல்லத் தடுமாறுபவனைத் திட்ட மாட்டார். அடுத்தவனை நோக்கிக் கேள்வி போய்விடும். யாராவது ஒருவர் சரியான பதில் சொல்லும் வரை கேள்வி தாவிக் கொண்டேயிருக்கும்.
அதைவிட முக்கியமான விஷயம் யாரையாவது எழுப்பிப் பாடத்தை வாய்விட்டு வாசிக்கச் சொல்வார். அறிவியல் சொற்கள் எல்லாம் புதிதாக இருக்கும். அவை பொதுவில் புழங்காதவை. சொல்லை அறிமுகப்படுத்திக் கொள்வதும் ஒலிப்பதும் சிரமம். அதை எளிதாக்கவே இந்த வாசிப்புப் பயிற்சி. தவறாக வாசித்தால் நிறுத்தி அச்சொல்லை அழுத்தமாகச் சொல்லித் திருத்துவார். அவர் நடத்தப் போகும் பாடத்தை வீட்டிலேயே ஒருமுறை வாசித்துவிட்டுச் செல்வேன். என்னை வாசிக்கச் சொன்னால் திருத்தமாக வாசிப்பேன். ‘நல்லாப் படிக்கறடா’ என்று முதுகில் ஒருதட்டுத் தட்டுவார். அந்தத் தட்டுக் கிடைக்கும் நாளில் நண்பர்களின் பொறாமைக்கு ஆளாவேன். சிலசமயம் ‘முருகன மாதிரி படிக்கணும்’ என்று பிற மாணவர்களுக்கும் சொல்வார். எனக்குப் பெருமை பிடிபடாது. அது பெரும் உற்சாகத்தையும் கொடுத்தது.
வீட்டில் எல்லாப் பாடங்களையும் வாய்விட்டு வாசிப்பேன். எங்கள் மேட்டுக்காட்டு வெளியில் புத்தகத்தைக் கையில் பிரித்து வைத்துக்கொண்டு சத்தமாக வாசித்தபடி நடப்பேன். பனைகளில் இருந்து பறவைகள் எதிர்க்குரல் கொடுக்கும். திருத்தமாக வாசிக்கவும் மனனம் செய்யவும் அது உதவும். காட்டுவெளியில் ஆடுமாடு மேய்ப்பவர்கள் என் வாசிப்பைக் கேட்டுவிட்டு ‘அந்தப் பையன் என்னமாப் படிக்கறான்’ என்று வியப்பார்கள். அந்தப் பேச்சு என் அம்மாவின் காதுக்கு வந்தால் உடனே திருஷ்டி சுற்றிப் போடுவார். சிலசமயம் வாரத்தில் இரண்டு மூன்று முறைகூடத் திருஷ்டி சுற்றிப் போடுதல் நடக்கும்.
பிற்காலத்தில் செய்யுள்களை வாசிக்கவும் மாணவர்களை வாசிக்கச் செய்யவும் அந்த அறிவியல் ஆசிரியர் கொடுத்த பயிற்சியே அடிப்படை என்று தோன்றும். பொதுவாக அறிவியல் ஆசிரியர்கள் மொழியைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்று சொல்வதுண்டு. எத்தனை பிழைகளுடன் எழுதினாலும் விஷயம் சரியாக இருந்தால் மதிப்பெண் போட்டுவிடுவார்கள். ஆனால் என் அறிவியல் ஆசிரியர் மொழியில் கவனத்தைக் குவிக்கச் செய்தார். எழுத்தில் பிழை வந்திருந்தாலும் திருத்துவார். அருகில் அழைத்துப் பிழையைச் சுட்டிக்காட்டுவார். திருத்தம் சொல்வார். பள்ளிக் காலத்திலேயே என் மொழியில் பிழை நேராது என்று தைரியமாகச் சொல்லிக்கொள்வேன். அதற்கு அந்த ஆசிரியர் ஊட்டிய உணர்வே காரணம். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல் பாடப்பிரிவில் பயின்றேன். அதுவரைக்கும் அறிவியல் பாடம் எடுக்கும் எந்த ஆசிரியரும் மொழியைப் பற்றிக் கவனம் கொண்டதேயில்லை. அவர் என் மனதில் நிற்க மொழிக் கவனம் முக்கியமான காரணம்.
ஒரே ஒரு ஆண்டுதான் அவரிடம் படித்தேன். ஆனால் ஒருபோதும் அவரை மறக்கவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எங்கள் நிலம் அரசு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பாக மாறிய தொடக்கத்திலேயே அங்கே அவர் குடிவந்துவிட்டார். பேருந்து நிறுத்தத்திலோ மளிகைக் கடையிலோ அவரைச் சந்திக்க நேரும். அப்போதெல்லாம் என் படிப்பைப் பற்றி விசாரிப்பார். என் அம்மா அப்போது இரண்டு எருமைகள் வைத்துப் பால் வியாபாரம் செய்தார். விடிகாலையில் வீடு வீட்டுக்குக் கொண்டுபோய்ப் பால் கொடுக்க வேண்டும். அந்த ஆசிரியர் வீட்டுக்குக் கொஞ்ச காலம் அம்மா பால் ஊற்றினார். அதிகாலையில் பல நாள் நான் கொண்டுபோய்க் கொடுத்து வந்திருக்கிறேன். அவர் கண்ணில் பட்டால் ‘பால் ஏவாரத்துக்குப் போயிராத. நல்லாப் படி’ என்பார்.
பன்னிரண்டாம் வகுப்பில் கணக்கும் அறிவியலும் படித்து நல்ல மதிப்பெண் பெற்றேன். ஆனால் பட்டப் படிப்பில் எனக்குப் பிடித்த தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்தேன். பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியர்கள் எல்லோரும் எனக்கு அறிவுரை சொல்லி வெறுப்புக்கு ஆளாயினர். அச்சமயத்தில் மளிகைக்கடையில் இந்த ஆசிரியரைச் சந்திக்க நேர்ந்தது. இவரும் அறிவுரை சொல்வார் என்று அஞ்சி ஒரு வணக்கத்தோடு நகரப் பார்த்தேன். அவர் விடவில்லை. அருகில் அழைத்துப் ‘படிக்கிறாயா?’ என்று கேட்டார். உழவுக் குடும்பப் பையன்கள் உயர்கல்விக்குச் செல்லும் வழக்கம் அப்போது அரிது. ‘ஆமாம்’ என்றேன். தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்திருக்கிறேன் என்றேன். அதை இழிவாகப் பலரும் கருதுவது அவருக்கும் தெரியும்தானே! பெருத்த அறிவுரையைக் கேட்கக் காதையும் மனதையும் தயார்ப்படுத்திக் கொண்டு நின்றேன்.
‘எந்தப் படிப்புன்னாலும் சரி, நல்லாப் படி, நல்லா வரலாம்’ என்று சொன்னார்.
தமிழ் இலக்கியப் படிப்பு பற்றிச் சகல தரப்பிலிருந்தும் ஏளனத்தையே எதிர்கொண்டு வந்த எனக்கு அவர் சொற்களைக் கேட்டதும் கண்கள் கலங்கிவிட்டன. அதன்பின் அவர் மீது மரியாதை மிகுந்தது. எங்கே எப்போது சந்தித்தாலும் நானாகவே சென்று அவரிடம் பேசுவேன். மகிழ்ச்சியோடு உரையாடுவார். தம் மாணவர் ஒருவர் கல்வியில் மேலே செல்வது பற்றிய பெருமித உணர்வு அவர் பேச்சுத் தொனியில் தெரியும். அரசு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து ஒருமாதம் ஆகியிருக்கும். ஆத்தூர் கல்லூரியில் முதல் பணியிடம். ஒரு திங்கட்கிழமை விடிகாலை ஐந்து மணிக்கு ஆத்தூர் செல்லும் பேருந்து ஏறுவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அந்நேரத்திற்கு அவரும் பேருந்து ஏற அங்கே வந்தார். அவர் ஓய்வு பெற்றுச் சில ஆண்டுகள் ஆகியிருந்தன. வணக்கம் போட்டுவிட்டுப் பணியில் சேர்ந்த விவரத்தைச் சொன்னேன். பெருமகிழ்ச்சி அடைந்தார் அவர்.
‘ஆசிரியராயிட்டயா?’ என்று மகிழ்ச்சியாகத் தொடங்கியவர் ‘கல்லூரி ஆசிரியரா?’ என்று ஆச்சரியப்பட்டார். பிறகு அவர் பேச்சில் ‘நீ’ போய் ‘நீங்கள்’ வந்துவிட்டது. அப்போது சொன்ன அறிவுரை இது:
‘உங்க பாடத்துல எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிங்க. படிச்சுத் தெரிஞ்சுக்கிட்ட எல்லாத்தயும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுங்க. இது போதும், இவ்வளவு போதும் அப்படின்னு நெனைக்க வேண்டாம். தெரிஞ்சதெல்லாம் சொல்லிக் குடுங்க. நல்லாச் சொல்லிக் குடுங்க.’
அந்த அறிவுரையை என் பணிக்காலம் முழுதும் கடைப்பிடித்தேன். அப்பேர்ப்பட்ட அந்த ஆசிரியரும் சிங்கம்தான். ஆம், அவர் பெயர் நரசிம்மன். நரசிம்ம வாத்தியார் என்போம்.
—– 28-02-25
மிகவும் சிறப்பு பேராசிரியர் அவர்களே. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நேர்மறை எண்ணம் கொண்டு பேசினால் மாணவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவர். அதுதான் தங்களுக்கும் நடந்துள்ளது. ‘நீ போய் நீங்கள் வந்தது’ என்று கூறினீர்கள். அதுதான் மிகவும் முக்கியம். நான் இருபத்தெண்டுகள் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளை மரியாதையாக அழைத்தால் நன்றாக இருக்குமே என்று கடந்த ஐந்தாண்டுகளாக “நீங்கள் வாங்க பேசுங்க படிங்க” என்று தான் உரையாடுகிறேன். விளைவு குழந்தைகள் தங்கள் வீடுகளிலும் அவ்வாறே மரியாதையாக பேசுகிறார்கள். பெற்றோர்கள் மிகவும் பெருமையாக கூறினர். எதிர்கால தலைமுறை வகுப்பறையில் தான் உள்ளது என்று பெரியோர்கள் பேசியதை உணர்ந்து வருகிறேன். தங்களின் கட்டுரையும் மிகுந்த உற்சாகம். கட்டுரை மட்டுமல்ல தங்களின் அனைத்து நூல்களுமே மிகவும் சிறப்பு. தங்களின் பள்ளி ஆசிரியருக்கும், தங்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் தொடர மனமார வாழ்த்துகிறேன் பேராசிரியர் அவர்களே
நிறைய வாசிக்கிறேன் ஐயா. பாடக்கருத்துகளோடு வாசித்தவற்றையும் முடிந்தளவு மாணவர்களுக்குக் கடத்துகிறேன். நல்லவற்றை நாளும் சொல்கிறேன். அதைப் பற்றிக்கொண்டு யாரேனும் மேலே வருவர் என்ற நம்பிக்கை உறுதியாக எனக்குண்டு. தங்கள் கட்டுரை அவ்வுறுதியை மேலும் வலுவாக்குகிறது.
நன்றி ஐயா.
அருமையான பதிவு.என் பள்ளி நாட்களில் நடந்தவற்றை நினைவுகூர்வது போல் உள்ளது.
தங்களின் அனுபவத்தை வாசிக்கும் போது என்னுடைய ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள் ஐயா. என் கணித ஆசிரியர் கோவிந்தராஜ், உயிரியல் ஆசிரியர் முருகன், தமிழ்ப் பேராசிரியர் பெ. முருகன் என்ன அதிசயமோ எனக்குப் பிடித்த ஆசிரியர்கள் முருகன் கடவுளாகவே உள்ளனர். நன்றிங்க ஐயா நீங்கள்தான்.
அருமை ஐயா.