என் ஆசிரியர் : 1

You are currently viewing என் ஆசிரியர் : 1

கடுகு சிறிது; காரம் பெரிது

ஓர் ஆசிரியரின் இயல்புகளும் அவர் பாடம் சொல்லும் முறையும் பிடித்துவிட்டால் அந்தப் பாடத்திலும் பேரார்வம் தோன்றிவிடும். இளவயதில் இருந்து தமிழ்ப்பாடம் மட்டுமே எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. பாடநூலில் இருக்கும் எல்லாச் செய்யுள்களையும் மனனம் செய்துவிடுவேன். குறிப்பு நூல் இல்லாமலே தேர்வெழுதும் ஒரே பாடம் அதுதான். அதற்காக மற்ற எதிலும் சோடை போனதில்லை. முயற்சி எடுத்து எப்படியாவது படித்துவிடுவேன். ‘படிக்கிற பையன்’ வரையறைக்குள் தான் இருந்தேன். வகுப்பில் எப்போதும் இரண்டு அல்லது மூன்றாம் இடத்தில் இருப்பேன். அரிதாகச் சிலசமயம் முதலிடம் பெற்றதும் உண்டு.

தமிழுக்குப் போட்டியாக எனக்குள் இன்னொரு பாடம் வந்து சேரும் என்று நினைத்ததேயில்லை. பதினொன்றாம் வகுப்பில்  அப்படி வந்து சேர்ந்த பாடம் வேதியியல். பன்னிரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் தவிர எல்லாப் பாடங்களிலும் எண்பது விழுக்காட்டுக்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்த நான் தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்ந்தேன். அதில் சேர எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இடையிடையே இந்த வேதியியல் பாடம் மட்டும் சிறுநட்சத்திரக் கண்சிமிட்டலோடு வந்துவந்து என்னை மயக்கிக் குழப்பியது. ‘தமிழ் இலக்கியம் சேர்ந்திருக்கிறேன்’ என்று சொன்னால் கேட்டோர் முகம் அருவருப்பாக மாறிற்று. மலத்தைக் கையில் எடுத்துவிட்டது போல அசூயையுடன் ‘தமிழா?’ என்றார்கள். அவர்களை எல்லாம் சமாளிக்க முடிந்த என்னால் இந்த வேதியியலின் காதல் பார்வையைப் புறமொதுக்க முடியவில்லை.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றேன். பதினொன்றாம் வகுப்பில் கணிதம், உயிரியல் பிரிவு தமிழ் வழியில் படிக்கச் சேர்ந்தேன். வேதியியல் பாடம் நடத்த வந்த ஆசிரியர் இளைஞர். எங்களை விடவும் ஏழெட்டு வயதுதான் மூத்தவராக இருப்பார். அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருக்கவில்லை. +2 கல்விமுறை வந்து சில ஆண்டுகளே ஆகியிருந்ததால் முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் சில நிபந்தனைகளோடு ஆசிரியர்களாக நியமித்தனர். பணிக்குச் சேர்ந்து ஓரிரு ஆண்டுக்குள் கல்வியியல் படிப்பு முடிக்க வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனை. அனேகமாக அந்த ஆசிரியரும் பணியில் சேர்ந்த பிறகுதான் பி.எட். படித்தார் என நினைவு.

அவர் குள்ளம். நானும் குள்ளம் என்பதால் அவரோடு என்னை இயல்பாகப் பொருத்திக் கொள்ள முடிந்தது. அழகாகவும் திருத்தமாகவும் உடுத்துவார். சட்டையை இன்சர்ட் செய்திருப்பார். ஒயில் நடை அவருடையது. சுருட்டை முடியை லேசாக நெளி எடுத்துச் சீவியிருப்பார். அவை அவரைத் தனித்துக் காட்டும். உயரக்குறைவை ஓரளவு மறைக்கவும் உதவும். எப்போதும் புன்னகை தவழும் முகம். பாடம் நடத்தும்போது அவ்வப்போது மின்னல் போலப் புன்னகை வந்து செல்லும். முக்கால் மணி நேர வகுப்பில் எத்தனை முறை புன்னகைத்தார் என்று கணக்கெடுப்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்குச் சொல்வோம். என் கணக்குத்தான் சரி, உன் கணக்குத்தான் சரி என்று சண்டை போடுவோம். அறிவியல் பாடத்தைக் கடுகடு முகத்தோடு அல்லாமல் இப்படிப் புன்னகையோடு ஒருவர் கற்றுக் கொடுத்தால் பிடிக்காமலா இருக்கும்?

மாணவருக்குச் சிரமம் தராத வகையில் அவரது கற்பித்தல் இருக்கும். ஒருபாடத்தை இதைவிட எளிமையாக ஒருவரால் சொல்லித்தர முடியாது என்று தோன்றும். கரும்பலகையை அவசியத்தோடு மட்டும் பயன்படுத்துவார். அளவான சொற்கள் கொண்ட சிறுவாக்கியங்களைப் பேசுவார். தான் சொல்வது எதிரில் இருப்பவருக்குப் புரிகிறதா என்பதை அனுமானிப்பார். எளிய கேள்வி கேட்பார். பாடம் சுமையாவது போலத் தோன்றினால் சட்டென்று ஒருநிமிடம் பாடத்திலிருந்து வெளியேறிவிடுவார். இருபத்து நான்கு, இருபத்தைந்து வயது இளைஞருக்குக் கற்பித்தல் திறன் எப்படி இவ்வாறு பிடிபட்டது என்பது ஆச்சரியம்தான். அவர் வகுப்பில் மாணவருக்குக் கவனம் சிதற வாய்ப்பேயில்லை. கற்பிக்கும் ஆற்றல் கொண்ட ஆசிரியர் மீது இயல்பாகவே எனக்குப் பற்று ஏற்பட்டுவிடும்.

என் ஆசிரியர் : 1

அந்த ஆசிரியரைப் பிடிக்க இன்னொரு காரணம் அவருக்கு இருந்த இலக்கிய ஆர்வம். பாரதியாரின் பல கவிதைகள் அவருக்கு மனனம். ஆன்மிக ஈடுபாடும் இருந்தது. மேடைகளில் பேசும்போது ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆற்றொழுக்காகப் பேசுவார். சில கருத்துக்களை மையப்படுத்தி விளக்கிச் செல்லும் பேச்சு பாணி. அறிவு சார்ந்த உரையாக இருக்கும். இளமை, இனிமை, அறிவு எல்லாம் ஒருசேரக் கொண்ட அவரை எங்கள் முன்மாதிரியாகக் கருதினோம். அவரைப் போல ஆக வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருந்தது. அவர் பெயரின் இடைச்சொல்லை உருவிக் ‘காரம்’ என்று செல்லப்பெயர் சூட்டியிருந்தோம். காரம் வேதியியல் சார்ந்த சொல்லாகவும் இருந்ததால் அப்பெயரை வைத்தோம். இனிமையானவரை முரண் சொல்லால் காரமாக்கினோம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்னும் பழமொழியும் அவருக்குப் பொருந்தும்.

இயல்பு வேதியியல், கரிம வேதியியல், கனிம வேதியியல் என மூன்று பகுதிகள் உண்டு. கரிம வேதியியல் பகுதி என்னைப் பெரிதும் கவர்ந்தது. அதில் புதிர்க்கேள்வி ஒன்று வரும். அதை விடுவிக்கும் சாமர்த்தியம் எனக்கிருந்தது. காரம்தான் அதை நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். புதிர்வழியில் நுழைந்து முட்டி மோதி வெளியே வரும்போது பெருவெளிச்சம் தெரியுமே, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கச் செய்தவர் அவர். அறிவியல் பாடமும் இப்படியெல்லாம் சுவை கொண்டிருக்கும் என்று உணர்ந்தது அப்போதுதான். மனம் கொள்ளும் வகையில் எடுத்துரைக்கும் நல்லாசிரியர் கிடைத்துவிட்டால் எதுவுமே சுலபமாகும்.

எங்கள் பள்ளியில் முதுநிலை வேதியியல் ஆசிரியர்கள் இருவர். பதினொன்றாம் வகுப்புத் தமிழ் வழிக் கணிதம், உயிரியல் பிரிவு மாணவர்களுக்கும் பன்னிரண்டாம் வகுப்பு அதே பிரிவு ஆங்கில வழி மாணவர்களுக்கும் இவர் பாடம் நடத்தினார். நான் தமிழ் வழி மாணவன் என்பதால் பன்னிரண்டாம் வகுப்பில் எங்களுக்கு இவர் வரவில்லை. அது எங்களுக்கு பேரிழப்பாக இருந்தது. பதினொன்றாம் வகுப்பில் தேனடையை நாக்கில் வைத்துச் சுவைக்கச் சொல்லிவிட்டுப் பன்னிரண்டாம் வகுப்பில் வெறும்சக்கைக்குக்கூட வழியில்லை என்றால் எப்படியிருக்கும்?

(தொடர்ச்சி நாளை)

—–  22-05-25

Latest comments (4)

சுராகி கொடுமுடி

பிற மொழிகள் எளிமையானது என்றால் தமிழ் மொழி வலிமையானது அன்றோ?

பேராசிரியர் முபெ முத்துசாமி

தமிழ் வழியில் படித்தல் எனக்கு எல்லா பாடங்களும் கடினமாக இருந்தது. ஆனால் ஆங்கில வழியில் படித்தல் தமிழ் உட்பட எல்லா பாடங்களும் எனக்கு எளிமையாக இருந்தது.

பாரத் தமிழ்

எனக்குத் தமிழ் படிக்க விராப்பம் ஐயா. பன்னிரண்டாம் வகுப்பில் 200 க்கு 180 மதிப்பெண் தமிழில். 2007 இல் ஊரீசு கல்லூரியைச் தவிர எந்த அரசுக் கல்லூரியிலும் தமிழ்த்துறை இல்லை. ஊர்சு கல்லூரி அரசு உதவிப் பெறும் கல்லூரி. வேறு வழியின்றி வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரியில் வரலாற்றுத் துறையைக் தேர்வு செய்தேன். அந்தக் கல்லூரியில் சேர்ந்து விட்டு வீட்டுக்கு வருகிறேன் ஊரீசு கல்லூரியிலிருந்து தமிழ்த் துறையில் சேர் கடிதம் வந்திருந்தது. அரசுக் கல்லூரியில் கட்டிய கட்டணத் தொகையைத் திருப்பித் தர இயலாது என்று சொல்லி விட்டார்கள். இல்லையென்றால் நானுமே உங்களைப்போல் தமிழ்த்துறைதான் படித்திருப்பேன்.

எல் கோபாலகிருஷ்ணன்

உயர் பள்ளி வகுப்புகளை இருபாலர் பள்ளியில் தாங்கள் படித்திராதது…
நான் வருந்துவதைத் தவிர வேறு என்ன சொல்ல!