நீர்வழிப் படூஉம் புணை
- எங்கள் ஐயா என்று உங்களின் மாணவர்கள் உங்களைப்பற்றிக் கட்டுரைகள் தந்திருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் இப்படி ஒரு நூல், இப்படி ஒரு ஆசிரியர் வருவதென்பது கானல் நீர்தான் என்று தோன்றுகிறதே? அந்த மாணவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
- தி.குமரேஸ்வரன், ஆய்வியல் நிறைஞர், வரலாற்றுத்துறை, ராஜீக்கள் கல்லூரி, இராஜபாளையம்.
‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான பிரச்சினையின்போது களத்தில் இறங்கி எதிர்வினையாற்ற என் மாணவர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களின் நலன் கருதி அந்த ஆவேசத்தைத் தடுத்துவிட்டேன். எதுவும் செய்ய முடியாமல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டோமே என்று அவர்கள் மனம் புழுங்கினார்கள். ஏதாவது செய்ய வேண்டும் என்னும் அவர்கள் விருப்பம் ஓராண்டுக்குப் பிறகு ‘எங்கள் ஐயா’ நூலாக வெளிப்பட்டது. அப்படி ஒரு நூல் வெளியிடுவதில் எனக்கு ஆர்வமில்லை. என்றாலும் அவர்களின் உணர்வுகள் வெளிப்பட ஏதாவது ஒரு வழி வேண்டும் என்னும் எண்ணத்தில் சில நிபந்தனைகளோடு ஒப்புக்கொண்டேன். வெறும் புகழ்ச்சியாகக் கட்டுரைகள் அமையக் கூடாது, எதையும் புனைந்து எழுதக் கூடாது, அனுபவ வெளிப்பாடாக இருக்க வேண்டும் எனச் சில. அவற்றுக்கெல்லாம் ஒப்புக்கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு எழுதி நூலாக்கம் செய்தார்கள். அவர்கள் எழுதியதன் மூலமாக என்னையே நான் புதிதாகக் கண்டுகொண்டேன். போகிறபோக்கில் என் இயல்புக்கேற்பச் செய்த சிறுசெயல்கூட மாணவர் வாழ்க்கையை மாற்றிய விந்தையை அவர்கள் எழுத்தால்தான் அறிந்தேன். என் ஆசிரிய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவே கழிந்திருக்கிறது என்னும் நம்பிக்கையைப் பெற்றேன். முன்னுதாரணம் அற்ற நூலாக அது தமிழ்ச் சூழலில் கருதப்படுகிறது. என்னை விடவும் சிறந்த ஆசிரியர்கள் வர வேண்டும் என்பதே என் விருப்பம். இப்போதும்கூட இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து இன்னும் பல நூல்கள் இப்படி வர வேண்டும். அது கல்விச் சூழலுக்கு நன்மை செய்யும்.
கட்டுரை எழுதியவர்கள், எழுத விரும்பி இயலாமல் போனவர்கள், இப்படி ஒரு நூல் வரப் போவது தெரியாமல் போயிற்றே என வருந்துபவர்கள் என மாணவர்கள் அனைவரும் என் மேல் அன்போடு இருக்கிறார்கள். இதன் இரண்டாம் பாகம் வர வேண்டும் என்று விரும்புபவர்களும் உள்ளனர். ஒன்று போதும், வேறு ஆசிரியர்கள் பற்றி இனி யாராவது எழுதட்டும் என்று சொல்லிப் புன்னகையோடு கடந்துவிடுகிறேன்.
2. கெட்டவார்த்தை பேசுவோம் என்று நீங்கள் எழுதிவந்த கட்டுரைகள் புத்தகவடிவம் பெற்று இரண்டாவது பதிப்பிலிருந்து இன்று காலச்சுவடு பதிப்பகத்திலும் கிடைக்கிறது. இலக்கிய உலகம் உடலின் பகுதிகளை அங்கங்கே தொட்டுச் சென்றிருக்கிறது. ஆனாலும், அவற்றைப் பேச ஏதோ ஒரு தயக்கமும் இருந்துகொண்டே இருக்கிறது. இன்று நல்ல சொற்கள் எனக்கூறப்பட்டவைகூட கேவலமான சொற்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அல்லது இரட்டுறமொழிதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்? இவற்றைத் தவிர்க்காது இடம்பெறச் செய்வதின் அவசியமாக எதைப் பார்க்கிறீர்கள்?
- கலிங்கப்பட்டி க. கருப்பசாமி, ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயுடு கல்வியியல் கல்லூரி, பருவக்குடி.
உடலைப் பற்றியும் பாலுறவு பற்றியும் நம் சமூகம் பேசிக்கொண்டேதான் இருந்திருக்கிறது. எழுத்திலும் பலவாகப் பதிவாகியிருக்கின்றன. அச்சு வந்த பிறகுதான் பல தடைகள். எழுத்துக்குக் குறுங்குழு வாசிப்பாளர்களாக இருந்தபோது ஏற்படாத தயக்கம் வாசகத் திரளாக விரியும்போது ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அச்சு ஊடகம் குறித்த பொது மனப்பதிவு என் ஆய்வின் முக்கியமான ஒரு கோணம். சமூகத்தின் பொதுமனத்தைப் புரிந்துகொள்ளும் ஒரு முயற்சியாகவே அதை எழுதினேன். அதை இன்னும் விரித்து எழுத நிறைய வாய்ப்பிருக்கிறது.
எழுத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை எதுவுமில்லை. எல்லாமே எழுத்துக்குள் வர வேண்டும். இத்தகைய சொற்களைக் கலகமாகவும் இயல்பாகவும் பயன்படுத்தும் போக்கு உலகளவில் இருக்கிறது. சில மொழிகளில் ‘வசைச்சொல் அகராதிகள்’ தயாரிக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் அவ்விதமான அகராதிகள் பல இருக்கின்றன. தமிழிலும் அப்படி ஓர் அகராதி தொகுக்கப்பட வேண்டும்; தமிழின் சொல்வளம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு இலக்கிய ஆட்சி முக்கியம். அவ்வகையிலும் நவீன இலக்கியத்தில் ‘கெட்ட வார்த்தைகள்’ இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன்.
- ஒவ்வொரு நூலும், படைப்பும் படைப்பாளிக்கு ஒரு குழந்தைதான். நீங்கள் பிரசவித்த மாதொருபாகன் நூலில் நீக்கப்பட்ட பகுதியை எப்படிப் பார்க்கிறீர்கள்? குழந்தையின் மிக முக்கியப் பாகத்தை இழந்ததாக உணர்ந்தீர்களா?
- கலிங்கப்பட்டி க. கருப்பசாமி, ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயுடு கல்வியியல் கல்லூரி, பருவக்குடி.
மாதொருபாகன் நாவலின் இப்போதைய பதிப்பில் ஓரிரு பத்திகளை நீக்கியிருக்கிறேன். ஊர்ப்பெயர்களை மாற்றியிருக்கிறேன்; சாதிப்பெயர்களை நீக்கியிருக்கிறேன். இவற்றால் நாவலுக்கு எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடவில்லை என்றே கருதுகிறேன். குழந்தை கீழே விழுந்து காயம் பட்டுவிடுகிறது. ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தி மருத்துவர் சில தையல்கள் போட்டுச் சரி செய்கிறார். நானும் அப்படித்தான் செய்திருக்கிறேன். ஆனால் காயத்தின் வடு இருக்கத்தான் செய்யும்.
4.*பீக்கதைகள்* னு ஒரு கதைத் தொகுப்பு போட்டீங்க ஐயா. அந்த நூல் ஒரு படைப்பாளி தன்னுடைய திருப்தி, வாசகர்களின் தேவை இந்த இரண்டையும் தாண்டி சமூகத்தின் மீது எப்போதும் அக்கறை கொண்டவனாகச் சமூகத்தைப் படைப்பில் பிரதிபலிக்கிறவனாகவே இருக்கணும்ங்கறத வெளிப்படுத்தறதா நான் கருதுகிறேன். நானறிந்த வரையில் பெரிதும் பேசப்படாத, அதே நேரத்தில் யாரும் அவ்வளவு எளிதாக எடுத்து எழுதாத ஒரு பக்கத்தை எப்படி எழுத தோன்றியது? அந்த எண்ணம் எப்படி உதித்தது. எழுதி முடித்த பின்பும், அது அச்சேறி வெளிவந்த பின்பும் , ஒவ்வொரு படிநிலையிலும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது. அந்த உணர்வைப் பற்றி கூறுங்கள் ஐயா.
- சோ.விஜயகுமார், முதுகலை இதழியல், சென்னை இந்துஸ்தான் கல்லூரி, கள்ளக்குறிச்சி.
‘பீக்கதைகள்’ நூல் முதலில் திட்டமிட்டு எழுதப்படவில்லை. நான் எழுதிய கதைகளைத் தொகுத்துப் பார்த்தபோது அப்பொருளில் கணிசமான கதைகள் எழுதியிருப்பதை எதேச்சையாக அறிந்தேன். அப்பொருளிலேயே இன்னும் சில கதைகள் எழுதிச் சேர்த்துத் தனித் தொகுப்பாக்கலாம் என்று நினைத்து மேலும் எழுதினேன். பிற கதைகளை எத்தகைய உணர்வு நிலையிலிருந்து எழுதினேனோ அதே உணர்வுநிலைதான் இந்தக் கதைகளுக்கும் இருந்தது. பின்னர் நூலாயிற்று. அதை நூலாக வெளியிடப் பட்டபாடு குறித்து நூலின் முன்னுரையில் எழுதியிருக்கிறேன். ‘பேசப்படாத பொருளைப் பேசுதல்’ என் எழுத்தின் இயல்புகளுள் ஒன்று. அந்தக் கதைகள் தமிழ்ச் சமூகத்தால் வாசிக்கப்படும், ஆனால் கவனப்படுத்தப் படாது என்றுதான் நினைத்தேன். எதிர்பார்ப்புக்கு மாறாக நல்ல கவனம் கிடைத்தது. இளம் வாசகர்களிடம் வரவேற்பு மிகுதி. தலைப்பின் காரணமாக அதை வாங்காதவர்கள், வாங்கிப் படித்த பிறகு மறைத்து வைத்தவர்கள் எனப் பல வகை எதிர்வினைகள் வந்தன. முதல் முயற்சி ஒன்று அப்படித்தான் எதிர்கொள்ளப்படும். இந்தச் சமூகம் அந்தக் கதைகளை இன்னும் கூடுதலாகப் பொருட்படுத்தி வாசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்பது என் ஆசை. இப்படிக் கலவையான உணர்வுகள்.
5.மாதொருபாகன் நூலின் பிரச்சனைகளுக்கு நடுவே நீங்கள் எழுதிய கவிதைகளைக் காலச்சுவடு கோழையின் பாடல்கள் என்று வெளியிட்டுள்ளது. கோழையின் பாடல்களென நீங்கள் அதற்குப் பெயரிடக் காரணமென்ன? அந்தக் கடுநாள்களும் நீண்ட காலத்திற்குப் பின்பு உங்களுடைய ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவரக் காரணமாக இருந்திருக்கிறதே? அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அப்படியான நாட்கள் இருந்திராவிட்டால் இப்படியான ஒரு கவிதைநூல் வராது போய்ருக்குமல்லவா? இப்படியாக நீங்கள் நினைத்துப் பார்த்தீர்களா?
– கலிங்கப்பட்டி க. கருப்பசாமி, ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயுடு கல்வியியல் கல்லூரி, பருவக்குடி.
அப்போது பிரச்சினையை நான் எதிர்கொண்ட விதம் குறித்துக் ‘கோழைத்தனம்’ என விமர்சனம் வந்தது. அதன் ஏற்பாக என்னைக் ‘கோழை’ எனக் கருதிக் ‘கோழையின் பாடல்கள்’ எனத் தலைப்பு வைத்தேன். அதே தலைப்பில் ஒரு கவிதையும் நூலுக்குள் இருக்கிறது. வீரம், கோழைத்தனம் என்பவை பழைய மதிப்பீடுகள். போரில் பலர் தலையை வெட்டுபவனை வீரன் என்று போற்றிய காலத்தை இன்றைக்குக் காட்டுமிராண்டித்தனம் என்று பேசுகிறோம். ஆகவே கோழையாக இருப்பது ஒன்றும் குற்றமல்ல என்னும் கருத்தில் எழுதப்பட்ட கவிதை அது.
கடுநாட்களின் விளைபொருளாக ஒரு கவிதைத் தொகுப்பு அமைந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. கடுநாட்களைக் கடப்பதற்குக் கவிதையைத்தான் துணையாகப் பற்றிக்கொண்டேன். எழுத்து புறத்தில் என்ன செய்யும் என்பதற்கு ‘மாதொருபாகன்’ உதாரணம் என்றால் அகத்தில் என்ன செய்யும் என்பதற்குக் ‘கோழையின் பாடல்கள்’ சான்று. கடுநாட்களுக்கான இலக்கிய சாட்சியம் அக்கவிதைகள். எதிர்பாராத சம்பவம்; எதிர்பாராத வரவு.
6.உங்களுடைய எழுத்துக்கள் இனி பயணப்படவேண்டிய களம்னு அல்லது இதுபற்றி பேசியே ஆகவேண்டும் என்று இப்போது எதன்மீதாவது கவனமிருக்கிறதா? அப்படி இருந்தால் சொல்லுங்கள்.
- – தி.குமரேஸ்வரன், ஆய்வியல் நிறைஞர், வரலாற்றுத்துறை, ராஜீக்கள் கல்லூரி, இராஜபாளையம்.
இப்போது பெரிய திட்டங்கள் ஏதும் இல்லாமல் ‘நீர்வழிப் படூஉம் புணை போலச்’ செல்கிறேன். என்ன வருகிறதோ வரட்டும். திட்டங்கள் வைத்திருந்து அவற்றை ஒருசேர இழக்கும் மனநிலைக்குப் பின் உருவான ஞானம் இது.
7.உங்களுடைய படைப்புகளை ஒரு தனித்துவம் கொண்டதாகப் பார்க்கிறோம். பல எழுத்தாளர்கள், தங்களுக்கு வாய்க்காத அனுபவங்களை, கதைக்களத்தை ஒரு படைப்பைத் தருவதற்காக மெனக்கெட்டு கள ஆய்வுகள் மூலமாக அறிந்து கொள்கிறார்கள். தரவுகளை திரட்டுகிறார்கள். அப்படி அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா ஐயா. உங்களுடைய படைப்புகளில் நுட்பமான பல செய்திகள் கிடைக்கிறதே! அதற்கு இதுபோன்ற மெனக்கெடுதல்கள் காரணமா? இல்லை உங்கள் வாழ்க்கைச் சூழலின் அனுபவங்களா?
- சோ.விஜயகுமார், முதுகலை இதழியல், சென்னை இந்துஸ்தான் கல்லூரி, கள்ளக்குறிச்சி.
பெரும்பாலும் என் வாழ்க்கைச் சூழல் சார்ந்த அனுபவமே காரணம். ஒரு சம்பவத்தை என் சூழலுக்குள் கொண்டு வந்து பொருத்திக் கொள்ளும் வித்தை மனதுக்குத் தெரியும். சில தகவல்களைப் பெறுவதற்காகக் கள ஆய்வை நாடுவதும் உண்டு. அது ஆய்வாளர்கள் செய்யும் கள ஆய்வு போன்றதல்ல. தகவல்கள், தரவுகள் புனைவுக்குக் குறைவாகவே தேவை. ஆனால் அவை நுட்பமானவையாக அமையும். அதை ஒரு படைப்பு மனம் எங்கிருந்தும் பெற்றுக்கொள்ளும்.
8.வழக்குச் சொல்லகராதி வெளியிட்டிருக்கிறீர்கள்! கி.ராவின் தாக்கம் உண்டா? கி.ரா. பற்றிச் சொல்லுங்களேன்.
– கலிங்கப்பட்டி க. கருப்பசாமி, ஸ்ரீ கே ராமச்சந்திரா நாயுடு கல்வியியல் கல்லூரி, பருவக்குடி.
கொங்கு வட்டாரச் சொல்லகராதிக்குச் சொற்கள் சேகரித்துக் கொண்டிருந்தபோது கி.ரா.வின் அகராதியை நான் அறிந்திருக்கவில்லை. அகராதி வெளியிடும் நோக்கமும் அப்போது இல்லை. பின்னர் அவ்வகராதியை அறிந்தபோது அதே போல நாமும் செய்யலாம் எனத் தோன்றியது. அவ்வகையில் கி.ரா.தான் முன்னோடி. எனக்கு மட்டுமல்ல, பின்னர் வட்டார வழக்கு அகராதிகள் தொகுத்த பலருக்கும் அவரே முன்னோடி. விரிவாக்கி இரண்டாம் பதிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். என்னால் இதுவரைக்கும் இரண்டாம் பதிப்பு கொண்டுவர இயலவில்லை. காலம் கனிய வேண்டும்.
கிராமத்து வாழ்வுக்கு ஒரு மகத்துவத்தை வழங்கியவர் கி.ரா. அதற்கு முன் ஆர்.சண்முகசுந்தரம் உள்ளிடப் பலர் கிராமத்தை எழுதியிருந்தனர். எனினும் கிராம வாழ்வு மதிப்புடையது என்னும் எண்ணத்தைப் பரவலாக்கக் கி.ரா. எழுத்தே உதவியது.
—– 12-03-25
(படைப்புக் குழுமம் சார்பாக 2020ஆம் ஆண்டு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எழுதி அளித்த பதில்கள். படைப்புக் குழுமத்திற்கு நன்றி.)
அருமையய்யா
நல்ல பதில்கள் ஐயா. கேள்விகளும்.