எழுத்துக்கு அஞ்சும் சமூகம்
- உங்கள் பூர்வீகம் பற்றிச் சொல்லுங்கள்.? பெருமாள் முருகன் என்பது அப்பா அம்மா வைத்த பெயரா? இல்லை நீங்களே வைத்துக் காெண்டீர்களா?
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கூட்டப்பள்ளி நான் பிறந்து வளர்ந்த ஊர். அங்கிருந்து பத்துப் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆனங்கூர் என்னும் கிராமமே என் முன்னோர் வாழ்ந்த ஊர் என்று சொல்வார்கள். இப்போதும் எங்கள் குலதெய்வமாகிய கரியகாளியம்மன் கோவில் ஆனங்கூரில் தான் இருக்கிறது.
என் பெற்றோர் வைத்த பெயர் முருகன். பழனி முருகனுக்கு வேண்டுதல் வைத்து நான் பிறந்த காரணத்தால் எனக்கு முருகன் எனப் பெயர் சூட்டினர். என் தந்தையின் பெயர் பெருமாள். நான் கல்வி கற்க வேண்டும் என்று பெரிதும் விரும்பிய தந்தையின் பெயரை இணைத்துப் ‘பெருமாள்முருகன்’ என்று வைத்துக்கொண்டேன்.
2. மாதொருபாகன் எழுதும்போது அல்லது எழுதி முடித்த பின் இப்படி பிரச்சினை வரும் என நினைத்ததுண்டா?
பிரச்சினை வரும் என்று நினைத்திருந்தால் நாவலை வேறு வடிவத்தில் எழுதியிருப்பேன். அல்லது ஊர்ப்பெயர்கள், பாத்திரப் பெயர்களை வேறு மாதிரி வைத்திருப்பேன். இந்தச் சமூகத்தை எடை போடத் தவறிவிட்டேன் என்பது என் வருத்தம். சமகால அரசியல் குறித்து என் கவனம் போதுமான அளவுக்கு இல்லாமல் போய்விட்டது என்றும் நினைத்திருக்கிறேன். வாய்மொழி மரபையே பெரிதும் உடைய நம் சமூகம் எழுத்துக்கு இவ்வளவு அஞ்சும் என்னும் அனுமானம் இல்லாமல் போனது என் குறைதான்.
- நீங்கள் பள்ளியில் படித்துக் காெண்டிருக்கும்போது, தமிழ்த் துறையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது? அதற்குச் சிறப்புக் காரணம் ஏதாவது உண்டா?
நான் எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்தபோதே கவிதைப் போட்டிகளில் பள்ளி சார்பாகப் பங்கேற்றிருக்கிறேன். பத்தாம் வகுப்புப் படிக்கும்போது பாரதியார் நூற்றாண்டு விழா வந்தது. எங்கள் கல்வி மாவட்டத்தில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றேன். அப்போது எனக்குக் ‘கவிஞன்’ என்னும் அடையாளம் கிடைத்திருந்தது. நண்பர்கள் அன்பாகப் ‘புலவா’ என்று அழைப்பார்கள். என் ஆர்வம் இலக்கியத்தில் என்று கண்டுகொண்ட காரணத்தால் தமிழ் இலக்கியம் பயின்றேன். பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், உயிரியல் பயின்று நல்ல மதிப்பெண் எடுத்த மாணவன் நான். வேறு பாடங்களுக்குப் போகாமல் தமிழ்தான் படிப்பேன் என்று பிடிவாதமாகச் சேர்ந்தேன். என் பெற்றோருக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஏனென்றால் அவர்கள் படிக்காதவர்கள். என் ஆசிரியர்களுக்குத்தான் பிரச்சினையாக இருந்தது. என்னை மாற்ற அவர்கள் எடுத்த முயற்சிகளை முறியடித்து ஒரே மனதாகத் தமிழ் இலக்கியம் பயின்றேன். அத்தகைய முடிவெடுத்ததால் இன்றைக்கு வரைக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
4. மாதொருபாகன் பிரச்சினையில் உங்கள் குடும்பம் தவிர்த்து நண்பர்கள், பதிப்பகம் அதோடு மட்டுமல்லாது பல படைப்பாளிகளும் அமைப்புகளும் உங்கள் பக்கம் நின்றார்கள். அவர்களைப் பற்றி அல்லது அது தொடர்பாய் நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?
தனிமனிதர்கள், இலக்கிய அமைப்புகள், பதிப்பகங்கள் ஆகியவை பெரிதும் உறுதுணையாக நின்றார்கள். ஓரிரு எழுத்தாளர்களைத் தவிர அனைவரும் எனக்கு ஆதரவு தெரிவித்தார்கள். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் இதில் முன்னின்றார்கள். காலச்சுவடு பதிப்பகம் பெரிய அளவில் எனக்கு உதவியது. நண்பர் ஆ.இரா.வேங்கடாசலபதி செய்த உதவி பெரிது. இந்தியா முழுக்கவும் பல அமைப்புகளும் எழுத்தாளர்களும் கருத்துரிமைக்கு ஆதரவாக எழுதினார்கள்; பேசினார்கள். உலக அளவிலும் பல இடங்களில் இருந்து ஆதரவு கிடைத்தது. எல்லோருக்கும் சொல்லாலும் செயலாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நன்றி தெரிவித்து வருகிறேன். இன்றைக்கு அதை எனக்குக் கிடைத்த ஆதரவு என்று சுருக்கிப் பார்க்காமல் கருத்துரிமைக்குக் கிடைத்த ஆதரவு என விரிவான தளத்தில் வைத்துப் பார்க்க விரும்புகிறேன்.
- தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்கள் அரிது. அப்படி அரிதான நேரத்திலும் ஒரு எழுத்தாளரின் சொந்த முயற்சியால் செய்து கொண்டால் தான் உண்டு என்னும் நிலை இருந்தது. உங்கள் நூல்களை ஆங்கிலத்தில் மாெழிபெயர்த்தல் எப்படிச் சாத்தியமானது?
வ.கீதா இணைந்து பணியாற்றிய ‘TARA’ என்னும் பதிப்பகம் சென்னையில் இருக்கிறது. ஆங்கிலத்தில் சிறுவர் நூல்களை வெளியிடும் பதிப்பகம் அது. அவர்கள் இளைஞர்களுக்கான நாவல்களை வெளியிடலாம் என்று முடிவு செய்து ஒரு பயிலரங்கத்தைச் சென்னையில் நடத்தினார்கள். அதில் பங்கேற்க என்னை அழைத்தனர். இது 1998இல் நடந்தது. அப்போது கூளமாதாரி நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதியை அப்பயிலரங்கில் வாசித்தேன். அது அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதற்கு முன் நான் எழுதியிருந்த நிழல்முற்றம் நாவலும் பதின்வயது இளைஞர்களைப் பற்றியது என்பதால் இரண்டு நாவல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட அவர்கள் விரும்பினார்கள். அப்பதிப்பகத்திற்காக வ.கீதா இருநாவல்களையும் மொழிபெயர்த்தார். 2004ஆம் ஆண்டு இரண்டும் ‘CURRENT SHOW’, ‘SEASONS OF THE PALM’ என்னும் தலைப்புகளில் ஆங்கிலத்தில் வெளியாயின. அப்பதிப்பகம் முதலில் வெளியிட்ட நாவல்கள் என்னுடையவை. துரதிர்ஷ்டவசமாக அவர்கள் நாவல் வெளியீட்டைத் தொடரவில்லை. சிறுவர் இலக்கியத்திலேயே தொடர்ந்து கவனம் செலுத்தினார்கள். என்றாலும் என் இருநாவல்களுக்கும் நல்ல கவனம் கிடைத்தது. ‘SEASONS OF THE PALM’ நாவல் தெற்காசிய நாடுகளில் வெளியாகும் நாவல்களுக்கு வழங்கும் மதிப்புமிக்க விருதாகிய ‘கிரியாமா விருது’க்கான இறுதிப் பட்டியலுக்குத் தேர்வானது.
பிறகு காலச்சுவடு கண்ணன் தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெருமுயற்சி எடுத்தார். ‘மாதொருபாகன்’ நாவலின் மாதிரிப் பிரதி பென்குவின் பதிப்பகத்திற்குப் பிடித்திருந்தது. அவர்கள் வெளியிட்டார்கள். இப்படித்தான் என் படைப்புகள் ஆங்கிலத்திற்குச் சென்றன. இந்திய மொழி இலக்கியங்களை ஆங்கிலத்தில் வெளியிட இன்றைக்குப் பல பதிப்பகங்கள் விரும்புகிறார்கள். வாசகத் திரளும் இருக்கின்றது. இச்சூழலில் கண்ணன் போன்ற பதிப்பாளரின் முயற்சிக்குப் பலன் கிடைக்கிறது. என் நாவல்கள் மட்டுமல்ல, பல எழுத்தாளர்களுடைய படைப்புகள் ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் செல்லக் கண்ணன் காரணமாக இருக்கிறார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
—– 27-05-25
(2020இல் படைப்புக் குழுமம் சார்பில் எடுத்த நேர்காணலின் ஒருபகுதி.)
தமிழாசிரியராக இருந்தும் சீறந்த நவீன படைப்பிலக்கியங்களை தமிழில் உருவாக்கியுள்ளார்.மாதொருபாகனை வாசிக்காமலே எதிர்த்த அறிவிலிகளை கண்டித்து பலரிடம் பேசினேன்.
சிறப்பு பேராசிரியர்.
மாதொருபாகன் பிரச்சினையின் போது
தோழர் திருமாவளவன் உங்களுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் நடத்தியது
நினைவுகொள்ளத் தக்கது.
ஐயா 🙏 தங்களை தமிழுக்குத் தொண்டு செய்ய தமிழ் அன்னை நினைத்தாகவே எண்ணுகிறேன். நீங்கள் வேறு அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயின்று இருந்தால் உங்கள் நட்பு எங்களுக்கு கிட்டியிருக்காதே! நாங்களும் ஏதோ தவம் செய்து இருப்பதால்தான் நீங்கள் எங்களுக்கு கிடைத்து இருக்கிறீர்கள். இதற்காக அந்த இயற்கைக்கு நன்றி கூறுகிறேன். நன்றி!