பறவைகள் பற்றி எழுதினேன்
- ஏறுவெயிலை நாவலாக ஆக்கியதன் பின்னனி ஏதும் இருக்கிறதா?
பா.செயப்பிரகாசம் அவர்களைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு வெளியான இடதுசாரி இலக்கிய இதழான ‘மனஓசை’யில் கதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். சிறுகதை வடிவம் எனக்குப் போதுமானதாக இல்லை. அப்போது என் கதைகளை வாசித்து வந்த மனஓசை ஆசிரியர் குழு உறுப்பினரான தோழர் சுரேஷ் என்கிற சீனிவாசன் ‘நீங்கள் நாவல் எழுதுவதுதான் உங்கள் பிரச்சினை தீர வழி’ என்று சொன்னார். அவர் கொடுத்த தைரியத்தைப் பிடித்தபடி மேற்சென்று எழுதிய நாவல்தான் ‘ஏறுவெயில்.’ நகர்மயமாதலால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்பம் என்னுடையது. அப்பிரச்சினையை மையமாகக் கொண்டு குடும்பம் மட்டுமல்லாமல் ஒரு கிராமமே என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறது, மாற்றத்தின் போது மனித மனோபாவங்கள் எப்படி இருக்கின்றன என எளிதாக அவ்வுலகத்தில் பயணம் செய்தேன்.
15. எனக்கு நெருக்கமானது, எளிதாக வெளிப்படுத்துவதற்குக் கவிதையே அருமையான வடிவம் எனச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் சொந்தக் குரலாகவே ஒலிக்க முடியும் என்பதாலா?
இருக்கலாம். மேலும் கவிதையில் ‘அந்தரங்கம்’ எப்போதும் கூடுதல்தான். அதுவும் காரணமாக இருக்கும்.
- கூள மாதாரி எனக்கு மிகப் பெரிய தூண்டுதல் என்று கூறி இருக்கிறீர்கள். அந்த நாவல் உங்கள் சொந்த அனுபவத்தை பகிர்ந்து இருப்பதலா?
என் சொந்த அனுபவங்களைக் கடந்துவர அந்நாவல் உதவியது என்பதால்தான் அப்படி நினைக்கிறேன். மனதை அழுத்தும் அனுபவங்களிலிருந்து விடுபட அவற்றை எழுதித் தீர்த்துவிடுவதுதான் ஒரே வழி. அப்படித் தீர்த்துவிட்டால் பிறகு சுதந்திர வெளியில் உலவலாம். கூளமாதாரி எழுதி முடித்த பிறகு அப்படி ஒரு சுதந்திரத்தை அனுபவித்தேன்.
- வட்டாரப் புனைவு போல் வட்டாரக் கவிதை என ஒன்று இருக்கிறதா எனத் தெரியவில்லை.உங்களுடையவை வட்டாரக் கவிதை என நினைக்கிறீர்களா?
என்னுடையதை வட்டாரக் கவிதை என்று வகைப்படுத்த முடியும் என நினைக்கவில்லை. வட்டாரக் கூறுகள் இருக்கக்கூடும். பழமலை போன்றவர்கள் எழுதியவற்றை அப்படி வகைப்படுத்தலாம். ஆனால் அது தனி வகையளவு வளரவில்லை என்றே தோன்றுகிறது.
- பேராசிரியர் என்பதை விட எழுத்தாளன் என்ற அடையாளமே எனக்கு மிகப் பெரிய அங்கீகாரம் என்பதாேடு அதைத்தான் தான் விரும்புவதாகச் சொல்கிறீர்கள். எழுத்தில் விரும்பும் அடையாளம் கவிஞர் என்பதா இல்லை எழுத்தாளர் என்பதா?
ஒற்றை அடையாளத்துக்குள் சுருங்கிவிட விரும்பவில்லை. எனினும் எழுத்தாளர் என்பதற்குள் கவிதையும் அடங்கிவிடும்தானே.
- மாதொருபாகன் முடிவின் தொடர்ச்சி எனும்போது, குறிப்பிட்ட ஒரு முடிவை மட்டுமே தேர்ந்தெடுக்காமல், இரண்டு விதமாக இருந்திருக்கக்கூடிய முடிவுகளைப் பற்றியும், அதன் பின்-விளைவுகளைப் பற்றியும் எழுத வேண்டும் என்று எண்ணம் எப்படி ஏற்பட்டது?
அதற்கு வாசக எதிர்வினைகளே காரணம். மாதொருபாகனின் முடிவைக் கொண்டு காளி என்னவானான் என்று கேட்காத வாசகரில்லை. நானும் அவர்களைப் போலக் குழம்பித்தான் இருந்தேன். அக்கேள்விகளும் குழப்பமும் என்னை உந்தின. இரண்டு வகையாகவும் இருக்கலாம் என முடிவு செய்து இரண்டையும் எழுதினேன். மிகவும் மகிழ்ச்சியுடனும் படைப்பு உந்துதலுடனும் எழுதிய நாவல்கள் ஆலவாயன், அர்த்தநாரி ஆகியவை.
- எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரு கோபம் இருக்கும். ஒரு எழுத்தாளனாக உங்களின் கோபம் என்ன? உங்களின் நடைமுறை என்ன? நீங்கள் எழுதுவதற்குத் தேர்ந்தெடுக்கும் நேரம் காலையா? இரவா?
கோபத்திற்கு ஓராயிரம் காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகையான காரணம். ஒற்றையாகச் சொல்வது என்றால் ‘சக மனிதரை மதிக்க மறுத்தல்’ பற்றிய கோபம் என்று சொல்லலாம்.
எழுத எனக்குப் பிடித்த நேரம் காலையே. ஆனால் பல வருடங்கள் எனக்குக் காலை நேரம் கிடைக்கவே இல்லை. குடும்பம், வேலை ஆகியவற்றால் காலை எனக்கு ஏக்கமாகவே மாறிவிட்டது. அதனால் பெரும்பாலும் இரவிலேயே எழுதியிருக்கிறேன். இப்போது காலையை ஓரளவு கைப்பற்றிக் கொண்டுவிட்டேன். எழுதுவது என்று தொடங்கிவிட்டால் வேறு எதிலும் மனதைச் சிதறவிடாமல் இருக்க வேண்டும். அப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்துகொண்டு எழுதுவதே என் நடைமுறை.
21. தமிழ் இலக்கியத்தோடு கர்நாடக இசையின் பின்னணியில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை துவங்கியுள்ளீர்கள். நீங்கள் கீர்த்தனைகள் எழுதவும் தொடங்கியிருக்கிறீர்கள். உங்களுடைய கீர்த்தனைகளை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா கச்சேரிகளில் பாடுகிறார். இது எப்படி? உங்களுக்கும் அவருக்கும் ஹெமிஸ்ட்ரி எப்படி வேலை செய்தது?
இதைப் பற்றி ஏற்கனவே பேசியிருக்கிறேன். அவரோடு 2016இல் எனக்கு ஒரு சந்திப்பு ஏற்பட்டது. அப்போது கீர்த்தனைகள் எழுதித் தரும்படி அவர் கேட்டார். கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் பாடத் தயாராக இருக்கும்போது நமக்கு எழுதித் தருவதில் என்ன தடை? பஞ்சபூதக் கீர்த்தனைகள் என்று சிலவற்றை எழுதினேன். பறவைகள் பற்றிக் கொஞ்சம் எழுதினேன். காதலைப் பற்றி எழுதினேன். எல்லாவற்றையும் அவர் பாடினார். அவரது சீடர்கள் பாடினார்கள். அவர் மனைவியும் கர்நாடக சங்கீதப் பாடகருமான சங்கீதா சிவகுமார் பாடினார். நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து பாடுகிறார்கள். அவர் பாடிய ‘நீ மட்டுமே என் நெஞ்சில் நிற்கிறாய்’ என்னும் காபி ராகக் கீர்த்தனை மிகப் பிரபலம். அதைப் பலர் பாடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. கர்நாடக சங்கீதப் பரப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பது அவர் விருப்பம். அதற்கு இயையும் மனநிலை எனக்கும் இருக்கிறது. அவருடைய கருத்துக்கள் பெரும்பாலும் எனக்கு ஒத்தவை. ஆகவே அவரோடு இணைந்து பணியாற்றுவது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது.
—– 29-05-25
(2020இல் படைப்புக் குழுமம் சார்பில் எடுத்த நேர்காணலின் இறுதிப்பகுதி.)
அவரவர் கருத்தை அவரவர் உரைக்கையில் ஆயிரம் தருக்கங்கள் வருவதுண்டு; ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் போராடி வெல்வதில் நிறைவுண்டு!