- சரோஜா, குமரேசன் கதாபாத்திரங்களை எப்படி தேர்வு செய்தீர்கள்?
கதாபாத்திரங்களை எழுத்தாளர் தேர்வு செய்வதில்லை. அவர்கள்தான் எழுத்தாளரைத் தேர்வு செய்கின்றனர். என் ஊரில் வழங்கும் காதல் கதைகள், என் மாணவர்களின் காதல்கள், செய்திகளில் வரும் காதல்கள் என எல்லாவற்றையும் ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். எல்லாக் கதைகளிலிருந்தும் உருண்டு திரண்டு குமரேசனும் சரோஜாவும் எனக்குள் வந்து நின்றார்கள். ‘எங்களைப் பற்றி உன்னால் எழுத முடியுமா?’ என்று சரோஜா கேட்டுச் சிரித்தாள். ‘சரி, எழுது. எப்படித்தான் எழுதுகிறாய் என்று பார்க்கிறோம்’ என்று குமரேசன் எனக்கு முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டான்.
அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்டு எழுதினேன். எழுத எழுத அவர்கள் விமர்சனம் செய்து கொண்டே இருந்தார்கள். அவற்றைச் செவிமடுத்துத் திருத்தங்கள் செய்தேன். அப்போதும் அவர்களுக்குப் பெரிதாக நிறைவு வரவில்லை. வாசகருக்கு நிறைவளிக்கும் வகையில் எழுதிவிடலாம். கதாபாத்திரங்களுக்கு நிறைவளிப்பது சாதாரண காரியமல்ல. எழுதி முடித்துப் புத்தகமாக வந்த பிறகு குமரேசன் சொன்னான், ‘கடைசியில் சோடாபாட்டிலுக்குள் என்னை அடைத்துவிட்டாய்.’ கடும் விமர்சனம் அது. கல்லுளி மங்கன் அவன். கொஞ்சம் முன்னால் அப்படிச் சொல்லியிருந்தால் கோலியை விரலால் அழுத்தி அவனை விடுவித்திருப்பேன். வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
- நாவல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகியும் நாவலின் கதைக்களம் தற்போதும் பொருந்துகிறதே. இதை நீங்கள் முன்னரே கணித்தீர்களா?
நாவலின் கதைக்களம் கொண்டிருக்கும் காலம் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முந்தையது அல்லவா? அத்தனை பின்தள்ளி எழுதினாலும் இக்காலத்துக்கும் பொருந்தும் என்னும் உணர்வு இருந்தது. இதில் கணிப்பு என்றெல்லாம் ஒன்றுமில்லை. பெரும்பாலும் சமகாலத்துக்கான விஷயத்தைத்தான் எழுதுகிறோம். களம் காலத்தால் முன்னால் போயிருந்தாலும் அது சமகாலத்தைத்தான் பேசும்.
அப்புறம் காதல் பற்றிப் பேசுவதற்கு என்ன காலம் வேண்டியிருக்கிறது? இன்னும் நூறு ஆண்டுகள் கழித்தும் காதல் இருக்கும்தானே. அப்போதும் இந்நாவல் பொருந்தும்; வாசிக்கப்படும். வேண்டுமானால் ‘காதலில் இத்தனை பிரச்சினைகள் இருந்தனவா?’ என்று அப்போதைய காதலர்கள் வியக்கக் கூடும். ஆனால் ஆர்வமாக வாசிப்பார்கள்.
- அந்த வகையில் இதை ஒரு செவ்வியல் நாவலாக கருதலாமா?
ஒரு படைப்புக்குச் செவ்வியல் தன்மையைக் காலம்தான் வழங்குகிறது. பல்வேறு அடுக்குகளும் நுட்பங்களும் கொண்டிருக்கும் படைப்புகளுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. இந்நாவலில் அவையெல்லாம் இருக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். அவற்றை ஆழ்ந்து நோக்கி வெளிப்படுத்தும் விமர்சனங்கள் பெரிதாக வரவில்லை. இரண்டு பகுதி வட்டார மொழி இந்நாவலின் பிரதான அம்சங்களில் ஒன்று. அதை அறிந்து வெளிப்படுத்தும் ஒரு கட்டுரைகூட இதுவரை வரவில்லை. இப்படிப் பல கூறுகள் இந்நாவலில் புதைந்துள்ளன. அவற்றை வாசகர்கள் கண்டடைகிறார்கள். வாசக ஏற்பினால் பூக்குழிக்கு அந்த மதிப்பு கிடைக்கும். எனினும் காலத்திடம் விட்டுவிடுவோமே. பத்தாண்டுகள் தானே ஆகியிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டாவது ஆகட்டுமே.
- சாதிய கொடுமைகள் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் நடக்கின்றன. நீங்கள் ஏன் கொங்கு வட்டாரப் பின்புலத்தை மையப் படுத்துகிறீர்கள்?
நான் வாழும் நிலப்பரப்பும் பண்பாடும் மொழியும்தான் என் படைப்புகளில் இடம்பெறும். எதையும் தன்னுடையதாக்கிக் கொள்வது என்பது எழுத்தாளனுக்குப் பிரதானம். கிடைப்பது குயில் முட்டையாக இருக்கலாம். .பொறிக்க வைக்க வேண்டுமானால் காக்கைக் கூட்டில்தானே வைக்க வேண்டும்? நான் பிறந்து வளர்ந்து வாழ்வது நாமக்கல் மாவட்டத்தில். இதன் நிலப்பரப்பும் வாழ்வியலும் என்னுள் ஆழப் பதிந்திருக்கின்றன. என் கதாபாத்திரங்களைக் கைப்பிடித்து இழுத்து வந்து ஒரு மொட்டைப்பாறையில் அமர்த்திவிட்டால் எழுதிவிடலாம் என்னும் நம்பிக்கை எனக்கு வந்துவிடும். அது மொட்டைப்பாறையாக இருந்தாலும் சாதியம் உயிர்க்கும் இடமாக இருக்கிறது. ஆகவே என் பாத்திரங்கள் சரியாகப் பொருந்திக் கொள்கின்றன. பொருந்தாத ஒன்றைக் கட்டாயப்படுத்தி வைக்க முடியாது. குயில் முட்டையைப் புறாக்கூட்டில் வைக்க முடியாதே.
சரி, சாதியக் கொடுமைகள் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் நடக்கின்றன அல்லவா? அதற்குள் கொங்கு வட்டாரமும் அடங்குகிறதல்லவா? அப்படியானால் ஏன் கொங்கு வட்டாரப் பின்புலத்தை மையப்படுத்தி எழுதக் கூடாது? கொங்கு வட்டாரத்தைச் சாதியத்திலிருந்து விலக்கிப் புனிதப்படுத்தி விடலாமா? கொங்கு வட்டாரத்தை மையப்படுத்தி இங்கிருக்கும் சாதியத்தை வெளிப்படுத்துகிறேன் என்பது குற்றச்சாட்டானால் அந்தக் குற்றத்தைத் தொடர்ந்து செய்யவே விரும்புகிறேன்.
- ஏன் நாவலிலும் எதிர்மறையான முடிவு?
குமரேசனின் மிதிவண்டி ஓசையில் நம்பிக்கையின் கீற்று தென்படுவதாகப் பல வாசகர்கள் உடன்பாடாக எடுத்துக் கொள்கிறார்கள். நீங்கள் எதிர்மறை என்கிறீர்கள். ஒவ்வொருவர் மனமும் எதை விரும்புகிறதோ அதை நோக்கி முடிவு அமைகிறது. ஆகவே முடிவு உங்கள் விருப்பம். குமரேசனுக்கும் சரோஜாவுக்கும் ஆதரவாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றுதான் நாவலை அப்படி முடித்திருக்கிறேன். உங்கள் வாக்கு எந்தப் பக்கம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதைக் கொண்டு உங்களையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளலாம்.
(புத்தகம் பேசுது, ஜூன் 2023இல் வெளியான நேர்காணல். கேள்விகள்: முனைவர் வேல்முருகன்.)
—– 30-03-25
https://open.spotify.com/episode/6zxvOlAC5sUVN3RUlrw3PF?si=MM12MCdKSGizeVpjYgyE7A
இதில் வரும் அநேக சம்பவங்கள் என் கிராமத்திலும் நடந்திருக்கிறது.எனவே என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியது இந்த நாவல்
இந்த நாவலை வெகுமக்களிடம் கொண்டு சேர்க்க சிறிது முயற்சி செய்து என் குரலில் பதிவிட்டு dpotify podcast ல் பதிவிட்டிருக்கிறேன்.
நன்றி