- உங்களது புதிய நாவல் ‘நெடுநேரம்’ ஆணவக் கொலைகளைப் பற்றியது எனச் சொல்லப்படுகிறது?
2021ஆம் ஆண்டு Bynge செயலியில் தொடராக எழுதிய நாவல் ‘நெடுநேரம்.’ மூன்று தலைமுறையினர் இதில் வருகின்றனர். பல காதல்கள் வருகின்றன. போன தலைமுறைக் காதல் ஒன்று ஆணவக்கொலை நடப்பதற்கான சூழலை எதிர்கொள்கிறது. நாற்பதாண்டுகளாக அணையாமல் கனன்று நிற்கும் அக்காதலை மையமிட்டுச் செல்கிறது நாவல். காதல் சார்ந்த விழுமியங்களைக் காலம் எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதையும் பாத்திரங்களின் குணவியல்புகளின் விசித்திரங்களையும் பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.
- ஊர்கள், ஜாதிகள் எல்லாம் கற்பனைப் பெயர்களாக இருக்கின்றன?
ஆமாம். ‘மாதொருபாகன்’ நாவலில் வரும் ஊர்ப்பெயர்கள், பாத்திரப் பெயர்கள்கூடப் பிரச்சினைக்கு உள்ளாகின. அதன் பிரதான பாத்திரம் ‘பொன்னா’ என்று அழைக்கப்படும் பொன்னாயி. இப்பெயர் கொங்குப் பகுதியில் பரவலாகப் பெண்களுக்கு வைத்த பெயர். என் பாட்டி, அம்மா ஆகிய தலைமுறைப் பெண்கள் பலருக்கு இப்பெயர் இருந்தது. என் அத்தை பெயர் பொன்னாயி. ஒவ்வொரு ஊரிலும் பத்துப் பொன்னாக்கள் இருப்பார்கள். பொன்னா, பொன்னக்கா, பொன்னம்மா என்றெல்லாம் வயதுக்கேற்ப அழைப்பார்கள்.
ஊரில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒரு பொன்னாவிடம் சிலர் போய் ‘உங்களை இழிவுபடுத்தி எழுதியிருக்கிறார்’ என்று சொல்லிவிட்டார்கள். என்னவென்று அவருக்குப் புரியவில்லை. என்றாலும் வருத்தப்பட்டு என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மக்கட்பெயர், ஊர்ப்பெயர், சாதிப்பெயர் ஆகியவை பிரச்சினைக்கு ஆதாரமாயின. அதன் தாக்கத்திலிருந்து இன்னும் வெளிவர இயலவில்லை. ஆகவே பூனாச்சி நாவல் முதற்கொண்டு அசுரலோகத்தைக் கதைக்களமாக்கி அதற்குரிய பெயர்களைச் சூட்டி எழுதுகிறேன். பூனாச்சி, கழிமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து ‘நெடுநேரம்’ நாவலிலும் புதிய பெயர்கள் தொடர்கின்றன.
- இந்த நாவலில் உங்கள் கூற்றுமொழியில் ஒரு துரிதம் தெரிகிறது.
மகிழ்ச்சி. சமகால வாழ்வை எழுதும்போது இயல்பாகவே மொழித்துரிதம் கூடும். இந்நாவல் கொரானோ பொதுமுடக்கத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்கிறது. இன்றைய இளைஞன் ஒருவனின் நோக்குநிலை. இரண்டும் இந்த மொழித்துரிதத்தைக் கூட்டக் காரணமாக இருக்கலாம். இதைத் தொடராக எழுதத் தொடங்கியபோது வாரம் இரண்டு இயல்கள் என வெளியிட்டார்கள். ‘தினமும் ஓர் இயல் வெளியிட்டால் நல்லது’ என வாசக வேண்டுகோள் வந்ததால் அன்றாடம் ஓர் இயல் வெளியிடும்படி நேர்ந்தது. அதற்கேற்ற வகையில் விரைவாக எழுதினேன். ஓர் இயல் ஆயிரம் சொற்கள் என்கிற வரையறையும் இருந்தது. இவையும் காரணமாக இருக்கலாம். இந்நாவலை வாசகர்கள் ஆவலோடு வாசிக்க இந்த மொழித்துரிதம் உதவியது. அதில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
- தீவிர இலக்கியம், வெகுஜன இலக்கியம் ஆகிய இடைவெளி இன்றைக்கு குறைந்துவருகிறதா?
அப்படித் தோன்றவில்லை. இப்போதும் இரண்டுக்குமான இடைவெளி தெளிவாகவே இருக்கிறது. புத்தகக் கண்காட்சிகள், சமூக ஊடகங்கள், இணைய விற்பனைத் தளங்கள் ஆகியவற்றின் மூலமாகத் தீவிர இலக்கியம் கூடுதலான வாசகர்களைச் சென்றடைகிறது. அதனால் இந்த மயக்கம் தோன்றுகிறது. பெருந்திரளான வாசகர்கள் வாசித்தால் அது தீவிர இலக்கியமாக இருக்காது என்னும் பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இரண்டையும் வேறுபடுத்திக் காட்டும் உட்கூறுகள் பல உள்ளன. அவற்றில் மாற்றம் நேரவில்லை. சான்றாக ஒன்றைச் சொல்கிறேன். தீவிர இலக்கியம் விதிவிலக்குகளின் மேல் கவனம் குவிக்கும். வெகுஜன இலக்கியம் விதிகளின் மீது கவனம் கொள்ளும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
- மாதொரு பாகன் சர்ச்சை உங்கள் எழுத்தில் என்னவிதமான பாதிப்பை விளைவித்துள்ளது?
அதைத் தெளிவாகச் சொல்ல எனக்கே தெரியவில்லை. மாதொருபாகன் பிரச்சினைக்கு முன் நான் எழுத நினைத்திருந்தவற்றை இப்போது எழுத முடியவில்லை. அவற்றைப் புதுப்பிக்கும் உத்வேகம் கூடவேயில்லை. புதிதாகத் தோன்றுபவற்றையே எழுதுகிறேன். முன்சொன்னது போல ‘அசுரலோகம்’ என்னும் கற்பனைப் பின்புலத்தைப் படைத்துக்கொள்வது எனக்குச் சஞ்சரிக்க வசதியாக இருக்கிறது. பெயர்களைப் புதிதாக உருவாக்குவது உற்சாகம் தருகிறது. இப்படி என்னவெல்லாம் நேர்ந்திருக்கின்றன என்பதை இன்னும் கொஞ்சகாலம் கடந்து பார்த்தால் சுவாரசியமான விஷயங்கள் பிடிபடும் என்று நினைக்கிறேன்.
- ஆடியோ புக் செயலியில் உங்கள் கதைகள் அதிகம் கிடைக்கின்றன. இது புத்தக வாசிப்பில் என்ன மாற்றத்தை விளைவிக்கும்?
‘ஒலி நூல்கள்’ இன்றைய காலத்தின் தவிர்க்க இயலாத வடிவம். இது இப்போதுதான் தோன்றிய புதிய வடிவமும் அல்ல. வானொலி நேயர்களாக இருந்தவர்கள் பல நாவல்களையும் சிறுகதைகளையும் ஒலி வடிவில் கேட்ட அனுபவம் கொண்டிருப்பார்கள். இன்றைய தொழில்நுட்பம் அதை விரிவாக்கியிருக்கிறது. ஒலி நூலால் வாசக எண்ணிக்கை கூடும். நல்லதுதானே. இப்போது நாம் மிகுதியாகப் பயணம் செய்கிறோம். பயணத் துணையாகப் பாடல்களை மட்டுமே கொண்டிருந்தோம். புத்தக ஆர்வலர்களுக்கு ஒலிநூல் துணையாகிறது. மின்னூல் வடிவம் எப்படி ஏற்கப்பட்டதோ அதேபோல ஒலிநூலும் ஏற்கப்படும். ஒருநூல் பல வடிவங்களில் கிடைக்கும்போது ஒவ்வொருவருக்கும் வசதியான வடிவத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். ஒருவர் ‘மாதொருபாகனை’ ஒலிநூலாகக் கேட்டுவிட்டுப் புத்தகமாக வாசிக்கும் ஆர்வம் பெற்றார். வாசித்தார். இரண்டும் தனக்கு வெவ்வேறு விதமான அனுபவங்களைக் கொடுத்தன என்று சொல்லி அவற்றை மகிழ்ச்சியோடு விவரித்தார். வாசிப்போருக்கு இப்படிப் பல வாய்ப்புகள் கிடைக்கின்றன. நல்ல மாற்றங்களே இவை.
- இந்திய ஆங்கில இலக்கிய உலகமும் சர்வதேச இலக்கிய உலகமும் தமிழ்ப் படைப்புகளை எப்படி அணுகின்றன?
மிகுந்த ஆரோக்கியத்தோடு அணுகுகின்றன. இந்திய அளவில் ஆங்கிலத்தில் இலக்கியத்தை வாசிப்போர் எண்ணிக்கை மிக அதிகம். அவர்கள் ஏதோ ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஆனால் தாய்மொழியில் வாசிக்க இயலாதவர்கள். இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்க்கும் படைப்புகளைத் தமக்கு நெருக்கமாக உணர்கிறார்கள். தம் வேர்களை அறியும் ஆர்வத்திலும் புதிய நிலக்காட்சிகளை, வாழ்க்கையைக் காணும் பரவசத்திலும் ஆழ்ந்து வாசிக்கிறார்கள். சர்வதேச இலக்கிய உலகிலும் இதையே காண்கிறேன். தமிழ் என்று மட்டுமல்ல, உலகத்தின் எந்த மொழி இலக்கியமாக இருந்தாலும் தரமான படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
இந்தச் சூழலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆரோக்கிய மனநிலை நம்மிடையே இல்லை என்பதுதான் குறை. ஆங்கிலப் பதிப்புலக நடைமுறைகள், சர்வதேசப் பதிப்புலக நடைமுறைகள் ஆகியவற்றை நன்றாக அறிந்துகொண்டு தெளிவுடன் முயன்றால் தமிழ்ப் படைப்புகளைப் பெரிய அளவுக்குக் கொண்டு சேர்க்கலாம். இதில் காலச்சுவடு கண்ணன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். பலருடைய படைப்புகளையும் பிற மொழிகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார். இப்போது சென்னைப் புத்தகக் காட்சியில் சர்வதேசப் பதிப்பாளர் அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது சிறந்த முன்னெடுப்பு. இவற்றை எல்லாம் தமிழ் எழுத்தாளர்களும் பதிப்புலகமும் உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
- புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி போன்றவர்களின் ஆக்கங்களுக்கு ஆங்கிலத்தில் கிராக்கி இல்லை. இங்குள்ள பிரச்சினைகளைத்தான் ஆங்கில இலக்கியம் விரும்புகிறதா?
அப்படியல்ல. எல்லாப் படைப்புகளுமே பிரச்சினைகளைத்தானே பேசுகின்றன? புதுமைப்பித்தனும் அழகிரிசாமியும் பேசாத பண்பாட்டுப் பிரச்சினைகளா? நம் மொழி இலக்கியங்கள் ஆங்கிலத்திற்குச் சென்றதன் வழியாக இந்தியாவைப் பற்றிய பழைய பார்வைகள் மாறியிருக்கின்றன; மாறி வருகின்றன. நம் திணைப் புலங்கள், பண்பாட்டுச் செழுமை, வாழ்வியல் ஆகியவற்றைப் பற்றிய தெளிவுகள் கூடியிருக்கின்றன. சாதியமைப்பு பற்றிய புரிதல் மிகுந்திருக்கிறது. ஏற்கனவே புழக்கத்தில் இருந்த கற்பனைச் சித்திரம் கலைந்திருக்கிறது. நாமே சிலவற்றை இழிவு எனக் கருதிக்கொள்கிறோம். அதனால் அப்படித் தோன்றுகிறது. நம் இலக்கியங்கள் பரவலாவதைத் தடுக்கும் நோக்கிலும் தவறாக அப்படி ஒரு கருத்தை முன்வைப்போர் உள்ளனர்.
வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளில்தான் ஆங்கிலப் பதிப்புலகம் மிகுதியும் கவனம் செலுத்துகிறது. ஒரு நூலைச் சந்தைப்படுத்தலுக்கு எழுத்தாளர் தேவைப்படுகிறார். நூல் அறிமுகம், விவாதம், வாசிப்பு, நேர்காணல் என்பவை எல்லாம் எழுத்தாளரின் இருப்பால் சாத்தியமாகின்றவை. மேலும் வாழும் எழுத்தாளர் ஏதோ ஒருவகையில் சமகாலத்தின் பிரதிநிதியாகத் தம் படைப்புகளில் வெளிப்படுகிறார். சமகாலத்தைப் பேசும் படைப்புகளுக்குக் கிராக்கி அதிகம்தான். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி முதலியோரின் படைப்புகள் நவீனச் செவ்வியல் தன்மை பெற்றுவிட்டவை. பொதுவாகவே செவ்வியல் இலக்கியங்களுக்குக் குறைவான வாசகர்கள்தான் உண்டு. அந்த வாசகர்களை நோக்கித் தமிழின் நவீனச் செவ்வியல் படைப்புகளைத் தேர்ந்தெடுத்தும் நல்ல மொழிபெயர்ப்பிலும் கொடுத்தால் தமிழ் முன்னோடி எழுத்தாளர்கள் பலருக்கும் வரவேற்பு இருக்கும்.
- தமிழ்த் திரைப்படத் துறை தேவை இலக்கியத்தில் பாதிப்பை விளைவித்திருக்கிறதா?
தமிழ்த் திரைப்படத் துறையில் கொரானோ காலத்திற்குப் பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஓடிடி தளங்கள் நிறைய இருக்கின்றன. அவை திரைப்படங்களையும் தொடர்களையும் வெளியிடத் தயாராக இருக்கின்றன. ஆகவே தீவிர இலக்கியப் படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் தேவை அதிகரித்திருக்கிறது. சிலர் அந்தத் துறையை நோக்கிச் செல்ல வாய்ப்பு கூடியிருக்கிறது. இப்போது சில எழுத்தாளர்கள் அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் பரவலாகும் போதுதான் திரையால் இலக்கியத்தில் ஏற்படும் பாதிப்பை அறிய முடியும். அதற்கு இன்னும் கால அவகாசம் தேவை.
- இலக்கியத்தில் இளம் தலைமுறை எப்படி இருக்கிறது?
உற்சாகமாக இயங்குவதைக் காண்கிறேன். என் தலைமுறை எழுத்தாளர்கள் எழுதத் தயங்கியவற்றை எல்லாம் சாதாரணமாக எழுதுகிறார்கள். இந்தத் தலைமுறை அனுபவிக்கும் சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு காண்கிறேன். மொழி ஆளுமை சிலரிடம் மட்டுமே நன்றாக இருக்கிறது. பெரும்பாலோர் மொழியில் ஆளுமை குறைந்தவர்களாகவே உள்ளனர். அது நம் கல்விமுறையின் குறைபாடு என்றும் தோன்றுகிறது.
—– 31-03-25
( ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 15-01-23 அன்று வெளியான நேர்காணல். கண்டவர்: மண்குதிரை)
Add your first comment to this post