(ஜூன் 2025 காலச்சுவடு இதழில் என் சிறுகதைகள் குறித்து ஜார்ஜ் ஜோசப் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. முழுமையாகக் கதைகளை வாசித்து தம் அவதானிப்புகளை விரிவாக இக்கட்டுரையில் முன்வைத்துள்ளார். வாசிப்புச் சுவை மிக்க விமர்சனக் கட்டுரை. அதன் ஒரு பத்தியை மட்டும் இதில் தருகிறேன். காலச்சுவடு அச்சிதழில் கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம். சந்தா செலுத்தியோர் அல்லது செலுத்தி இணையத்திலும் வாசிக்கலாம். இணைப்பு: https://kalachuvadu.com/magazines/kalachuvadu/issues/306/articles/17-punaivilisaikapadumviduthalai )
நிறைய எழுத்தாளர்களுக்குச் சிறிய வெளிகளை உடைய கதைகளைக் கட்டமைப்பது எளிதாகக் கைக்கூடிவிடும். ஒரு கிராமமே பங்கேற்றுத் திருடனைப் பிடிப்பது, மரண வீட்டைச் சித்திரப்படுத்துவது, உடன்போகிய காதல் இணையைத் குழுவாகத் துரத்திச் செல்வது, திருவிழா எடுப்பது போன்று நிறைய கதாப்பாத்திரங்களுக்கு இடமளிக்கக்கூடிய களங்களை பெ.மு. இலகுவாகக் கையாள்கிறார். அத்தகைய கதைகளில் குறைந்தது ஐந்திற்கும் மேற்பட்டோரது பார்வைகளும் பேச்சுகளும் நடத்தைகளும் பதிவாகிவிடுகின்றன. அப்பதிவுகள் ஒரு கூட்டு மனச் சித்திரத்தை உண்டாக்கிக் கதையை விசாலமாக்குகிறது. கதையின் அர்த்த அடர்த்தியைக் கூட்டித் தருகிறது. அனாவசியமான பாத்திரம், தேவையற்ற விவரணை, பொருளற்ற ஒப்புமைகள் என எதுவும் பெ.மு.வின் கதைகளில் இருப்பதில்லை. திருட்டுசார் கதைகள் என்றில்லாமல் பொதுவிலே இவரது எழுத்தில் செவ்வியல் எழுத்தாளர்களது அடிப்படை ஒற்றுமைப் பண்பாகிய மானுட அறத்தையும் கருணையையும் உயர்த்திப் பிடித்தல் எனும் போக்குள்ளது. ஆனால் அவை குரூரங்களையும் வன்முறைகளையும் சகிக்க முடியாத் துன்பங்களையும் பேசுவதன் வழிதான் வெளிப்படுகின்றன. பேரிலக்கியக் கர்த்தாக்களுக்கே உரிய பண்புபோலும்.
—– 02-06-25
Add your first comment to this post