நொந்தேன் நொந்தேன்

You are currently viewing நொந்தேன் நொந்தேன்

தீபாவளி முடிந்து ஊருக்குச் செல்லும் கூட்டத்தில் நானும் கொஞ்சம் அல்லாட நேர்ந்தது. கேரளம், கோழிக்கோட்டிலிருந்து கரூருக்கு ரயில் பயணம். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம். அதில் நீந்தித்தான் ஏற்கனவே பதிவு செய்த என் ரயிலையும் உரிய பெட்டியையும் அடைய முடிந்தது. அங்கிருந்த ரயில்வே உணவகத்தில் ஒருதோசை வாங்கிச் சாப்பிடப் போராட்டம். முன்பதிவில்லாத பெட்டிக் கதவுகளில் பிதுங்கித் தொங்கிய உடல்களைப் பார்க்கையில் சரியாகத் தைக்காத புளிமூட்டைகள் போலத் தோன்றின. பயம் ஏறியதால் பார்க்கக் கண் கூசிற்று. கம்பத்திலோ நடைமேடையிலோ இடித்துக் கீழே விழுந்துவிடுவர் என்று கற்பனை தோன்றித் தூங்க விடவில்லை.

ஒன்றரை மணி நேரம் தாமதமாகக் கரூருக்கு ரயில் வந்து சேர்ந்தது. சிறப்பு ரயில்கள் பல செல்வதால் வழியில் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை. ஈரோடு ரயில் நிலையத்திற்குப் பத்துக் கிலோ மீட்டர் தொலைவில் மட்டும் முக்கால் மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. கரூருக்கு அருகில் வந்து சிக்னல் கிடைக்கவில்லை என்று இருபது நிமிடம் நின்றது.  கரூரில் இருந்து பேருந்துப் பயணம். சேலம் செல்லும் பேருந்தில் ஏறி நாமக்கல்லில் இறங்கினேன். எப்படியோ இருக்கை பிடித்து உட்கார்ந்து கொண்டேன். பொம்மைகளைப் போல அடுக்கி வைத்த மனிதர்கள் நின்றுகொண்டே வந்தனர். நாமக்கல்லில் இறங்குவதற்குள் பெருங்கூட்டம் ஓடிவந்து கதவை முட்டியது. அவர்களைப் பையால் அழுத்தித் தள்ளித்தான் வெளியே வந்தேன். முன்பதிவு செய்தே இருப்பினும் பண்டிகை காலப் பயணத்தை இனித் தவிர்த்தே ஆக வேண்டும்.

நொந்தேன் நொந்தேன்

இப்பயணம் பல கொடும்பயண நினைவுகளைக் கொண்டு வந்தது. சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட சிறுபயண அனுபவத்தைச் சொல்லத் தோன்றுகிறது. சென்னையில் சில நாட்கள் தங்குகையில் நேரம் கிடைத்தால் ரோஜா முத்தையா நினைவு நூலகத்திற்குச் சென்று வருவது  வழக்கம். 09-10-24 அன்று அப்படி அரைநாள் கிடைத்தது. மேற்குத் தாம்பரத்தில் மகன் வீட்டில் தங்கியிருந்தேன். நூலகம் தரமணியில் இருக்கிறது. நேரம் இருந்ததால் நிதானமாகச் சென்னையை வேடிக்கை பார்த்துக்கொண்டு போகலாம் எனத் திட்டமிட்டேன்.

தாம்பரத்திலிருந்து தரமணி செல்ல இரண்டு வழிகளை யோசித்தேன். தாம்பரத்திலிருந்து புறப்பட்டுக் கிண்டி, கோட்டூர்புரம், மந்தைவெளி, கண்ணகி சிலை, தலைமைச் செயலகம் வழியாகப் பாரிமுனை சென்று சேரும் 21ஜி பேருந்து முப்பது ஆண்டுகளாக எனக்குப் பரிச்சயம். அதிலேறி அண்ணாப் பல்கலைக்கழக நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ பிடித்துப் போவது ஒருவழி. மின்ரயில் மூலம் கிண்டியில் இறங்கினால் அங்கிருந்து அடையாறு செல்லப் பல பேருந்துகள் கிடைக்கும். மத்திய கைலாஷ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றுவிடலாம். அது இன்னொரு வழி.

ஒன்பது மணிக்கு அங்கே சென்றுவிட்டால் எம்.எஸ்.சுவாமிந்தான் அறக்கட்டளை அலுவலக உணவகத்தில் உண்டுவிட்டு ஒன்பதரை மணிக்கு நூலகம் திறக்கும்போதே உள்ளே நுழைந்துவிடலாம் எனத் திட்டம். காலை ஏழே முக்கால் மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன்.  தாம்பரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்த கூட்டத்தைப் பார்த்து அரண்டு போனேன். பேருந்து நிறுத்தம் அரைபர்லாங்கு தூரம் நீண்டது. எந்தப் பேருந்து எங்கே நிற்கும் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏதேதோ எண் கொண்ட பேருந்துகள் வந்தன. 21ஜியைக் காணவில்லை. அறிவிக்கும் கூண்டுக்குள் இருந்தவரைக் கேட்டான். ‘வரூஉம்’ என்றார். ‘ஆனா வராஅது’ என்றே எனக்குக் கேட்டது. வந்தாலும் காத்திருக்கும் கூட்டத்தோடு அடித்துப் பிடித்து ஏறத் திராணி போதாது.

நொந்தேன் நொந்தேன்

மின்ரயில் பயணம் எனக்குப் பிடித்தமானது. ஜன்னலோர இருக்கையைப் பிடித்துவிட்டால் சென்னையின் பெரும்பாலான பகுதிக் காட்சிகளைப் பரவலாகக் கண்டுவிடலாம். மாற்றம், வளர்ச்சி எல்லாம் கண்ணுக்குள் வந்து நிற்கும். விதவிதமான பயணிகளையும் பார்க்கலாம். சென்னையின் சமகாலம் பற்றி மங்கலான சித்திரத்தை வரைந்துகொள்ள முடியும். இப்போது பறக்கும் ரயில், மெட்ரோ எல்லாமும் இருக்கின்றன. சென்னைக்குள் எங்கே செல்வதென்றாலும் ரயில் செல்லும் வழியைத்தான் முதலில் யோசிப்பேன். அன்றும் ரயில்தான் பொருத்தம் என்று தாம்பரத்தில் ஏறிக் கிண்டியில் இறங்கினேன்.

கிண்டி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து சுரங்கப் பாதை வழியாக எதிர்ப்பக்கம் செல்ல வேண்டும். ரயில் நிலையத்திற்கும் சுரங்கப்பாதைக்கும் இடையே நூறு அடி தூரம் இருக்கும். அதில் பெருங்கூட்டம் அப்படியே ஸ்தம்பித்து நின்றது. இரண்டு மூன்று ரயில்கள் ஒருசேர வந்திருக்கும் போல, கூட்டம் கொஞ்சம் வெளியேறட்டும் என்று ஓரத்தில் ஒதுங்கி நின்றேன். அடுத்து இன்னொரு ரயிலும் வந்திருக்கிறது. அதில் இறங்கிய கூட்டமும் சேர்ந்து ஆயிரம் பேருக்கு மேல் அப்படியே நின்றார்கள். எள் போட இடமில்லை என்று சொல்வார்களே, அதை நேரில் கண்டேன். ஒருவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் காற்றுக்கூட நுழைய முடியாது. அத்தனை நெரிசல். எறும்பு ஊர்வதுகூடக் கொஞ்சம் வேகமாக இருக்கும். கூட்டம் ஊரவும் இல்லை.

ஆட்டோக்காரரை விசாரித்தேன். ரயில் நிலையத்தில் வேலை நடக்கிறது. சுரங்கப்பாதையை ஒட்டி வேலை நடப்பதால் அதனுள் செல்லும் வழியை அடைத்துவிட்டார்கள். சாலையிலிருந்து உள்ளே வரும் வழியில் மெட்ரோ ரயில் நிலையப் பார்க்கிங்கிற்குச் செல்லும் கார்கள் மறித்துக் கொண்டு நிற்கின்றன. சுரங்கப்பாதைக்குள் நுழைய ஒரே ஒருவர் மட்டும் செல்லத்தான் வழியிருக்கிறது. ஒவ்வொருவராகத்தான் செல்ல முடியும். இன்னும் ஒருமணி நேரத்திற்கு இப்படித்தான் இருக்கும், பத்து நாட்களாக இப்படித்தான் இருக்கிறது என்று அவர் தகவல் சொன்னார். கூட்டம் குறையட்டும் என்றால் இன்னும் ஒருமணி நேரம் அப்படியேதான் நிற்க வேண்டும். அடுத்தடுத்து ரயில்கள் வரவரக் கூட்ட நெரிசல் கூடியதே தவிரக் குறையவேயில்லை. எதிர்ப்பக்கம் இருந்து ரயில் நிலையத்திற்கு வருவோருக்கு ஒற்றையடிப் பாதை மட்டும் கிடைத்தது. அதில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

எனக்குப் பல காட்சிகள் நினைவுக்கு வந்தன. விமான சாகசக் காட்சிகளைக் காணச் சென்ற கூட்டத்தில் ஐந்தாறு பேர் இறந்த நிகழ்வு நடந்து ஒருவாரம்கூட ஆகவில்லை. சென்னை நெரிசல் எத்தனையோ பேரை பலி கொண்டிருக்கிறது. மீண்டும் ரயிலுக்கே சென்று வேறு ஏதாவது நிலையத்தில் இறங்கிக் கொள்ளலாமா என்று யோசனை ஓடிற்று. உள்ளே செல்லும் வழியையும் கூட்டம் அடைத்திருந்தது. தயங்கி நின்றால் சொர்க்கமில்லை.  ‘அடைந்தால் நூலகம், இல்லாவிட்டால் சொர்க்கம்’ என்று முடிவெடுத்து நானும் கூட்டத்திற்குள் சேர்ந்தேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் ஒருநிமிடம் ஆயிற்று. முப்பதடி தூரத்தில் இருந்த சுரங்கப்பாதையை அடைய அரைமணி நேரம். கூட்டம் கீழே தள்ளிவிடுமோ, நெரிசலில் மிதிபடுவோமோ என்று ஒவ்வொரு நொடியும் மனம் அதிர்ந்து கொண்டிருந்தது. மக்கள் பொறுமை காத்து நகர்ந்து என்னையும் காப்பாற்றினார்கள்.

ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் ரயில் நிலையத்தில் வேலை நடக்கிறது என்றால் மாற்றுவழியை உருவாக்க வேண்டாமா? ஒப்பந்ததாரருக்கு அந்த நிபந்தனை கண்டிப்பாகப் போடப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறையில் இல்லை. கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில் சுரங்கப்பாதைக்குச் செல்லும் வழியை அகலப்படுத்த வேண்டும். வேலை முடிய அதிக நாளாகும் என்றால் எதிர்ப்பக்கம் செல்லத் தற்காலிகப் பாலப்பாதை ஒன்றை அமைத்திருக்கலாம். ஒழுங்குப்படுத்த ஒப்பந்ததாரரே ஆட்களை நியமித்திருக்கலாம். போக்குவரத்துக் காவலர்கள் இருந்திருக்கலாம். எத்தனையோ வழிகள். ஏன் எதையுமே செய்யவில்லை?

கடந்த பத்தாண்டுகளில் சென்னை நெரிசல் பல மடங்கு பெருகிவிட்டது என்பதைத் தொடர்ந்து உணர்ந்து வருகிறேன். வாகனங்களின் எண்ணிக்கையும் மிகுந்து கொண்டேயிருக்கிறது. அங்கங்கே கட்டும் மேம்பாலங்கள் பிரச்சினையைத் தீர்க்காது. மக்கள் மேலும் மேலும் சென்னையை நாடி வருவதைக் குறைக்க வேண்டும். இப்போது இருப்பவர்கள் நிம்மதியாக வாழப் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கலாம். பொதுப் போக்குவரத்தை அதிகமாக்க வேண்டும். நிமிடத்திற்கு ஒருரயில் விட வேண்டும். பேருந்துகளின் எண்ணிக்கையைப்  பல மடங்கு கூட்ட வேண்டும்.

நகருக்கு நடுவில் இருக்கும் பள்ளி கல்லூரிகளை இடமாற்றலாம். தொழிற்சாலைகள், அலுவலகங்களை முறைப்படுத்தலாம். அலுவலக, கல்வி நிறுவன நேரங்களை மாற்றலாம். செய்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. இங்கிருக்கும் அரசியல் சூழலில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் அரசு எடுப்பதில்லை. ஏதேனும் நிர்ப்பந்தம் வந்தால்தான் ஏதாவது நடக்கும். இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டே சுரங்கப்பாதை வழியாக எதிர்ப்பக்கம் வந்தேன்.

கிண்டி பேருந்து நிறுத்தத்திலும் பெருங்கூட்டம். மந்தைவெளி வரை மட்டும் செல்லும் 27ஜி கட் சர்வீஸ் பஸ் ஒன்று வந்தது. அதில் ஏறி போக்குவரத்து நெரிசலில் வெகுநேரம் நின்று பின் அண்ணா பல்கலைக்கழகத்தில் இறங்கி உடனடி மழையில் நனைந்து நிறுத்தத்தில் கூட்டத்தோடு ஒடுங்கி நின்று அரிதாகக் காலியாக வந்த ஆட்டோவைப் பிடித்து ஒருவழியாக நூலக வாயிலில் நின்ற போது மணி பத்து. இரண்டே கால் மணி நேரம் ஏழு மலை ஏழு கடல் கடந்து வந்தது போலிருந்தது. ஓலா, ஊபர், ரெட் டாக்சி என எந்தச் செயலியும் என்னிடம் இல்லை. அவை எனக்கு இதுவரை தேவைப்பட்டதும் இல்லை. கிளம்பும்போதே வண்டி பதிவு செய்து தருகிறேன் என்று மகன் சொன்னான். சென்னையில் வழி எல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும், எல்லாவற்றையும் உற்றுக் கவனிக்கப் போகிறேன் என்று வீராப்பாகக் கூறிவிட்டு வந்து நொந்தேன்.

000

‘நொந்து நூலானேன்’ என்று என் பிள்ளைகளிடம் சொன்னால் ‘நொந்து நூடில்ஸ் ஆனேன்னு சொல்லுப்பா’ என்று கேலி செய்வார்கள். எல்லாத் துயர்களில் இருந்தும் மீட்சி தருவது இலக்கியம்தான். ‘நொந்தேன்’ என்னும் சொல் மனதில் வந்தாலே உடன் ஔவையாரும் சேர்ந்து வருவார். இன்றைக்காவது வண்டி வாகனங்கள் பெருகிக் கிடக்கின்றன. அன்றைக்கு எங்கு போவதென்றாலும் நடைதான். சோழனைக் காண்பதற்காக ஔவையார் வெகுதூரம் நடந்து செல்கிறார். நடந்து நடந்து கால் வலி வந்துவிட்டது. நோவுக்கு வலி, கஷ்டம், துயர் என்றெல்லாம் பொருள். சோழனைப் பார்த்தால்தான் துயர் தீரும் என்பதால் எங்கும் தங்காமல் வேகவேகமாக நடக்கிறார்.

அவர் நடந்து வந்த தூரத்தைக் கணக்கிட்டுத் தீராது. சோழன் அரண்மனையை அடைந்தபோது அரசவைக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிர விவாதம். ஔவையாரை யாரும் கவனிக்கவில்லை. உடனே பேசாவிட்டால் போகிறது, உட்காருங்கள் என்றாவது ஓர் இருக்கை தரலாம் அல்லவா? அவருக்குக் கோபம் வந்தது. கோபப்பட்டு என்ன செய்வது? தம்மைக் கவனிக்கச் செய்ய வேண்டுமானால் கவிஞருக்கு இருக்கும் ஒரேவழி கவிதைதான். தம் பையிலிருந்து  தாளை உருவி எடுத்து நீட்டுவதோ தம் பேசிப் பக்கத்தை ஒளிரச் செய்து காட்டுவதோ இக்காலக் கவிஞர் இயல்பு. ஔவை உடனே பாடும் ஆற்றல் பெற்ற ஆசுகவி. தம் நோவைச் சொல்லி வெண்பா ஒன்றை உரக்கப் பாடுகிறார்.  ‘உன் பார்வை படுமென்று வெகுநேரம் காத்திருக்கும் எனக்கு எங்கே இருக்கை’ என்று கேட்கும்  அவ்வெண்பா:

கால்நொந்தேன் நொந்தேன்; கடுகிவழி நடந்தேன்;

யான்வந்த தூரம் எளிதன்று; – கூனல்

கருந்தேனுக்(கு) அண்ணாந்த காவிரிசூழ் நாடா!

இருந்தேனுக்(கு) எங்கே இடம்? 

கோபத்திலும் சோழநாட்டு வளத்தைப் புகழத் தவறவில்லை. மரக்கிளைகளில் வளைவாகக் கட்டியிருக்கும் கருநிறக் கூடுகளில் நிறைந்து சொட்டும் தேனை அண்ணாந்து நின்றாலே பருகலாம். அப்படிப்பட்ட வளத்திற்குக் காரணமான காவிரி ஆறு சூழ்ந்து ஓடும் சோழநாடனே என்று அவனை விளிக்கிறார். எத்தனை அலுவல் இருந்தாலும் பலபேர் சூழ்ந்திருந்தாலும் ஒரு புகழ்மொழிக்குக் காதைச் சாய்க்காத மனிதனும் இவ்வுலகில் உண்டோ? சோழன் கவனம் திரும்பியது. ஔவையாருக்கு இருக்கையும் விருந்தோம்பலும் நடந்தது.

கவிஞர் சொல் அம்பலம் ஏறிய காலம் ஒன்று இருந்தது.

—–    04-11-24

Latest comments (4)

N தாமோதரன்

அருமை. சுரங்கப்பாதை நெரிசல் படிக்கும்போதே நொந்து மூச்சு முட்டி திரும்பி விடத் தோன்றியது.

Akilan Ethirajan

நகர்ப்புற நெரிசல் உலகெங்கிலும் ஒரே போன்றுதான் இருக்கிறது. தேர்தல் தருணம் என்பதால் அமெரிக்க சாலைகள் கவனம் பெற்று ஒரே நேரத்தில் செப்பனிடப்பட்டு வருகின்றன. இடையூறுகளுக்கு மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்கிறார்கள். அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. நகர்ப்புற திட்டமிடல் மேம்பாடடைந்தே தீர வேண்டும்.