தூது இலக்கியம் 3

You are currently viewing தூது இலக்கியம் 3

செங்கால் நாராய்!

ஔவையார், அதியமானின் தூதுவராகத் தொண்டைமானிடம் சென்றார். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் பகை. தொண்டைமான், அதியமான் மீது படையெடுத்து வருவதற்குத் தயாராக இருக்கிறார். அதியமான், அவ்வையாரிடம் சொல்கிறார். தொண்டைமானும் அவரைப் போல ஒரு சிறு மன்னன். அவ்வையாரைத் தூதனுப்பித் தொண்டைமானிடம் நட்பாக இருப்பதற்குப் பேசச் சொல்கிறார். நாம் பகை கொண்டு போர் செய்து கொள்வதனால் இரண்டு நாடுகளுக்கும் பேரழிவு ஏற்படும். ஆகவே அப்படி அழிவு வராமல் தடுப்பதற்குத் தொண்டைமானிடம் சென்று சமாதானப்படுத்துவதற்கு அவ்வையாரை அதியமான் தூதுவராக அனுப்புகிறார். தொண்டைமான் உடைய நாட்டிற்கு அவ்வையார் தூதாகச் செல்கிறார். தொண்டைமான், அவ்வையார் பேசுவது எதையும் கேட்பதாக இல்லை. எப்படியாவது அதியமான் மீது போர் தொடுக்க வேண்டும் என்ற வேகத்தில் இருந்தார். தொண்டைமானுடைய வேகத்தை எப்படித் தணிப்பது என்று சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தார் அவ்வையார்.

“இவ்வே பீலி அணிந்து” என்ற புறநானூற்றுப் பாடல் கூறும் செய்தி இது. தொண்டைமான் தன் படைக்கலக் கொட்டிலை அவ்வையாருக்குக் காட்டுகிறார். அங்கு வில், வாள், வேல் முதலிய படைக்கல கருவிகள் எல்லாம் புத்தம் புதிதாக இருந்தன. எண்ணெய் தடவிப் பளிச்சென்று எல்லா கருவிகளும் மின்னின. அதை தொண்டைமான் அவ்வையாரிடம் காட்டுகிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வையார். “உன்னுடைய படைக்கலக் கொட்டிலில் அற்புதமாக இந்த கருவிகள் எல்லாம் இருக்கின்றன. புத்தம் புதிதாக இருக்கின்றன. எந்தச் சேதாரமும் இல்லாமல் இருக்கின்றன. ஆனால்  அதியமான் படைக்கலக் கொட்டிலில் உள்ள கருவிகள் எல்லாம் நுனி உடைந்து முனை சிதைந்து கொல்லருடைய பட்டறையில் கிடக்கின்றன. அந்தக் கருவிகளை எல்லாம் பழுது பார்க்க வேண்டும். அவையெல்லாம் பல முறை பயன்படுத்தப்பட்டு பழுதடைந்து விட்டன. ஆகவே அவற்றைக் கொல்லருடைய  பட்டறைக்கு அனுப்பியிருக்கிறார்கள்” என்று தொண்டைமானுடைய படைக்கலக் கொட்டிலையும் அதியமானுடைய படைக்கலக் கொட்டிலையும் ஒப்பிட்டு அவ்வையார் பேசுகிறார்.

இதைக் கேட்டவுடன் தான் தொண்டைமானுக்கு தான் செய்யவிருந்த தவறு புரிகிறது. அதியமான் பல போர்களில் பங்கேற்றுப் போர் செய்வதில் மிகுந்த அனுபவம் உடையவன். அவனுடைய கருவிகள் எல்லாம் திரும்பத் திரும்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் தானோ போர் செய்வதில் அனுபவம் அவ்வளவு இல்லாதவன் என்பதை உணருகிறான் தொண்டைமான். இந்தத் தூது புறத்தூது ஆகும். சங்க இலக்கியங்களில் இவ்வாறு அகத்தூதும் புறத்தூதும் தொடர்ந்து வந்து இருப்பதை நாம் காணலாம்.

தூது இலக்கியம் 3

தலைவி தலைவனுக்குத் தூது அனுப்புவது தான் தூது இலக்கியத்தின் அடிப்படையா  என்று கேட்டால்  அவ்வாறு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தலைவன் தூது அனுப்புவதும் உண்டு. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள சத்திமுற்றம் என்னும் ஊரைச் சேர்ந்த சத்திமுத்தப் புலவர் தன் மனைவிக்குத் தூதாக எழுதிய பாடல் அனைவரும் அறிந்தது.

நாராய் நாராய் செங்கால் நாராய்

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்

நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி

வடதிசைக் கேகுவீ ராயின்

எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி

பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு

“எங்கோன் மாறன் வழுதி கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே”

ஒரு அரசனிடம் பரிசு வாங்கச் சென்ற சத்திமுத்தப் புலவர் அந்த அரசரைப் பார்க்க முடியவில்லை. அரண்மனைக்குள் செல்ல முடியவில்லை. வாடைக் காற்று வீசக்கூடிய பருவத்தில் குளிரில் நடுங்கிப் போர்த்திக் கொள்ள ஆடையும் இன்றி  உண்ண உணவும் இன்றி வீதியில் ஓரமாகப் படுத்து கிடந்ததை விவரிக்கும் காட்சி இப்பாடல். நாரையைத் தூது விடுவது தனிப்பாடல்களில் நிறைய இருக்கிறது. இப்பாடல் பிரபலமானதற்கு அவர் பயன்படுத்திய இரண்டு உவமைகளே காரணமாகும். நாரையின் வாய் பனைங்கிழங்கைப் பிளந்தால் எப்படி இருக்குமோ அது போல் இருக்கிறது என்பது ஒரு உவமை. பாம்பு நீண்ட உடலமைப்புடன் ஆனது. ஆனால் ஒரு கூடைக்குள்  சுருண்டு படுப்பது அதற்கு எப்படித் துன்பமாக இருக்குமோ அதுபோல அவரின் துன்பத்தை  என்பது இன்னொரு உவமை. எனவே இந்தப் பாடல் பிரபலமானதற்கு ‘பழம்படு பனையின் கிழங்கு’ என்ற உவமையும் ‘பேழையில் இருக்கும் பாம்பு’ என்ற இந்த உவமையும் காரணங்களாகும். ஓர் ஆண் தன்னுடைய மனைவிக்கு நாரையைத் தூது அனுப்புவதாக அமைந்தது இந்தப் பாடலாகும். எனவே தலைவன் தலைவிக்குத் தூது அனுப்பியதும் நம் இலக்கியத்தில் உண்டு என்பதற்கான சான்று இது.

—–   16-03-25

Latest comments (2)