தமிழர்களுக்கு நீண்ட வரலாறு இருப்பினும் அதை எழுதி வைப்பதிலும் அதற்கான ஆவணங்களைப் பாதுகாத்து வைப்பதிலும் ஆர்வம் மிகக் குறைவு. நவீன காலத்திலும் அதில் பெருமாற்றம் நிகழவில்லை. நிர்ப்பந்தம் ஏற்படும் போதுதான் அதைப் பற்றிச் சிந்திக்கவும் பதிவு செய்து வைக்கவும் தலைப்படுகிறோம். இருபதாம் நூற்றண்டு முழுக்கவும் தேசிய இயக்கம், திராவிட இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தலித் இயக்கம், பெண் இயக்கம், கம்யூனிச இயக்கம் எனப் பல சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தீவிரமாகச் செயல்பட்டிருக்கின்றன. இன்று இருபத்தோராம் நூற்றாண்டின் உலகத் தொழில்நுட்ப வசதிகளை எல்லாம் பெரும்பான்மையான தமிழ் மக்கள் அனுபவிக்கக் காரணம் இவ்வியக்கங்களின் இடைவிடாத செயல்பாடுகள்தான். ஆனால் அவற்றைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் மிகக் குறைவு.
பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற அனைத்துச் செயல்பாடுகளின் விளைவுகளையும் அபகரிக்கவும் தன்வயப்படுத்திக் கொள்ளவும் இந்துத்துவச் சக்திகள் முயல்கின்றன. ஒன்றிய அரசில் ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் இந்துத்துவத்தின் பரவலாக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருப்பதை மறுக்க முடியாது. அதன் தாக்கத்தால் தமிழ்நாட்டு இயக்கங்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்றுத் தம் சுவடுகளைப் பதிவு செய்ய முனைந்திருக்கின்றன. அத்தகைய நூல்களுக்குத் தேவையும் விற்பனை மதிப்பும் கூடியிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படத் தாக்கத்தால் அ.இராமசாமி எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாறு’ (இரண்டு பாகங்கள்) நூல் நன்றாக விற்பனை ஆகி வருகிறது. அது போல மக்களிடம் சென்று சேர வேண்டிய பல நூல்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘1938 : முதல் மொழிப்போரில் பெண்கள்’ என்னும் நிவேதிதா லூயிஸ் எழுதிய மிக முக்கியமான நூல்.

இந்நூல் பழைய இதழ்கள், நூல்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு 1938, 39இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. தந்தை பெரியாருக்குப் ‘பெரியார்’ பட்டம் கொடுத்ததோடு பெண்களின் பங்கு முடிந்துவிடவில்லை. திராவிட இயக்கத்தின் போராட்டங்கள் அனைத்திலும் அவர்கள் தீவிரமாகப் பங்கு பெற்றுள்ளனர். அதை இந்நூல் மிக விரிவாகப் பதிவு செய்துள்ளது. நீலாவதி அம்மையார், அன்னை தருமாம்பாள், அன்னை மீனாம்பாள், பண்டிதை நாராயணி, பார்வதியம்மையார், தாமரைக்கண்ணி அம்மையார் உள்ளிட்ட பல பெண்களின் பங்கு பற்றிய தகவல்களை நூல் கொண்டுள்ளது.
இந்நூலில் பல முக்கியமான செய்திகள் கிடைக்கின்றன. பாதுகாப்புக் கருதிப் பொதுக்கூட்டங்களில் பெண்களுக்குத் தனியிடம் ஒதுக்கிய தகவலும் அதில் பெரியார் கவனம் எடுத்துக்கொண்டதும் கவனத்திற்கு உரியது. மொழிப்போரில் சிறை சென்ற பெண்கள் பற்றி அக்கரை கொண்டு அவர்களைப் பற்றிய செய்திகளுக்கு முதன்மை கொடுத்து நாளிதழில் பதிவு செய்ததும் முக்கியமானது.
இந்நூலின் சான்றாதாரமான நூல்கள், இதழ்களின் முழுமைப் பட்டியல் கொடுத்திருக்கலாம் என்பதைத் தவிர முழுநிறைவான நூல் இது. ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. விலை ரு.300/-
—– 17-01-26


Add your first comment to this post