மு.இராமனாதனின் ‘ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு’ கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தேன். இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. இலக்கியம், திரை, ஆளுமைகள், அனுபவங்கள். இருபத்தெட்டுக் கட்டுரைகள். அவற்றில் சரிபாதி இலக்கியக் கட்டுரைகள். இவற்றை விமர்சனம் என்று சொல்ல முடியாது; அறிமுகம் என்றும் சொல்லிவிட முடியாது. கட்டுரை எழுதுமுறையில் இவர் ஒருவகைத் தனித்தன்மையைப் பேணுகிறார். ‘தகவல்கள் சார்ந்த எழுத்து’ என்று வகைப்படுத்தலாம்.
விக்கிப்பீடியா உள்ளிட்ட இணையத் தகவல் களஞ்சியங்கள் ஏராளம் உள்ள இக்காலத்தில் தகவல்களைக் கொண்டு சுவையான கட்டுரை எழுதுவது சாத்தியமா? ‘பருத்திக் குண்டிகை’ போலத் தகவல்களைப் போட்டுத் திணிக்காமல் அவற்றின் மதிப்பையும் தேவையையும் உணர்ந்திருந்தால் சாத்தியம்தான் என்பதற்கு இக்கட்டுரைகள் சான்று.
இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் எவை நம்பகமானவை, எவை பிழைகள் கொண்டவை என்பதைப் பகுத்துக் காண்பது எல்லோருக்கும் கடினம். நம்பகமான தளங்களைக் கண்டறிந்து தகவல்களைச் சேகரிப்பதற்குப் பெருந்தேடல் தேவை. அங்கங்கே உதிரிகளாகச் சிதறிக் கிடப்பவற்றை ஒருபுள்ளியில் கோத்துத் தருவதற்கு நல்ல வாசிப்பும் இயைக்கும் பார்வையும் வேண்டும். இவையெல்லாம் இவரிடம் இயல்பாக அமைந்திருப்பதோடு தம் அனுபவங்களையும் சரிவிகிதத்தில் கலக்கும் நேர்த்தியும் சேர்வதால் சுவையான எழுத்து கிடைத்துவிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் இயைக்கும் தகவல்கள் சார்ந்து ஒற்றைக் கருத்து வலுவான நூல் போலத் தாங்கி நிற்கிறது. யாரும் மறுக்க முடியாத கருத்து அது.
செய்தித்தாளில் இவர் கட்டுரையைக் கண்டால் தவறாமல் வாசித்துவிடுவது என் வழக்கம். எந்தக் கட்டுரையும் ஏமாற்றம் தந்ததில்லை. நாவல் பழங்களைப் பொறுக்கிச் சேர்த்துக் கைநிறைய வைத்திருக்கும் ஒருவர் அதில் ஒருபகுதியை நம்கைக்கு அப்படியே கடத்துவது போன்ற நிறைவு கிடைக்கும். ‘பூக்குழி’ நாவல் பன்னாட்டுப் புக்கர் விருதுக்கான நெடும்பட்டியலில் இடம்பெற்ற போது அதைப் பற்றிப் பலருக்கும் விளக்க வேண்டிய துன்பத்தை அனுபவித்தேன். அச்சமயத்தில் ‘புக்கரும் பூக்குழியும்’ என்னும் தலைப்பில் இவர் கட்டுரை எழுதினார். காலச்சுவடு இதழில் வெளியாயிற்று. அதன்பின் அந்தக் கட்டுரையின் மென்பிரதியை அனுப்பி ‘வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்று சொல்ல முடிந்தது.
அதில் புக்கர் விருதின் வரலாற்றைச் சுருக்கமாக எழுதியிருக்கிறார். மூன்று வகை விருதுகள் இருக்கின்றன என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதன் நடைமுறைகள் குறித்து விவரித்திருக்கிறார். நடுவர் குழுவின் தரம், அக்குழு ஒவ்வொரு நாவலுக்கும் கொடுக்கும் சிறுகுறிப்பு, பூக்குழியைப் பற்றியும் நாவலாசிரியர், மொழிபெயர்ப்பாளார் குறித்தும் தந்திருக்கும் தகவல்கள் என அனைத்தையும் மொழிபெயர்த்துத் தருகிறார். கட்டுரையின் இறுதியில் இப்படி எழுதுகிறார்:
‘பூக்குழி இந்த இடத்தை அடைந்ததற்கு மூன்று ஆளுமைகள் காரணமானவர்கள். முதலாமவர் நாவலாசிரியர், அடுத்தவர் மொழிபெயர்ப்பாளர், மூன்றாமவர் பதிப்பாளர் ‘காலச்சுவடு’ கண்ணன். இவர் பல்லாண்டு காலமாகப் பல தமிழ்ப் படைப்புகளைப் பன்னாட்டு வாசகர்களுக்குக் கொண்டு சேர்ப்பவர். பிறநாட்டு நல்லறிஞர் படைப்புகளைத் தமிழுக்குத் தருபவர்.
அனிருத்தனைப் போன்ற பல மொழிபெயர்ப்பாளர்களும் கண்ணனைப் போன்ற பல பதிப்பாளர்களும் தமிழுக்கு வாய்க்க வேண்டும். அவர்கள் தரமான படைப்புகளைப் பன்னாட்டரங்கிற்குக் கொண்டுசெல்ல வேண்டும்’ (ப.79).
‘பூக்குழிதான் புக்கரில் பறக்கும் முதல் தமிழ்க்கொடி’ (ப.71) என்று ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய தருணத்தில் பூக்குழியைப் பற்றியும் புக்கர் விருது பற்றியும் சொல்லும்படியான பத்துக் கட்டுரைகளாவது வந்திருக்க வேண்டாமா? சில இதழ்களில் செய்தி வெளியாயிற்று. கட்டுரை என்றால் இவர் எழுதியது ஒன்றே ஒன்றுதான். இதற்குக் காரணம் தமிழ்ச் சூழலில் நிலவும் அசட்டை அல்ல, வெறுப்பு மனோபாவம் என்றே நினைக்கிறேன்.
சரி, இந்நூலில் உள்ள இலக்கிய கட்டுரை ஒவ்வொன்றும் இப்படித்தான் புதிய நூலையோ புதிய இலக்கியச் செய்தியையோ அறியத் தருகின்றது. திரைப்படம் பற்றி ஐந்து கட்டுரைகள் இருக்கின்றன. திலீப்குமார் எழுதிய ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ சிறுகதை ‘நசீர்’ என்னும் தலைப்பில் திரைப்படமாகியிருக்கிறது. அதைப் பற்றி ஒரு கட்டுரை. தமிழும் பிரெஞ்சு மொழியும் கலந்து ‘தீபன்’ திரைப்படத்தில் ஷோபாசக்தி நடித்துள்ளார். அதைப் பற்றி ஒரு கட்டுரை. நண்பகல் நேரத்து மயக்கம், சார்பட்டா, திருஷ்யம் ஆகிய படங்கள் பற்றிய கட்டுரைகளும் இருக்கின்றன. இலக்கியக் கட்டுரைகளுக்குச் சொன்னது போலவே இவையும் தகவல் சார்ந்த எழுத்துக்கள். ‘நாசர்’ படக் கட்டுரையில் திலீப்குமாரின் சிறுகதை எங்கெல்லாம் பயணப்பட்டிருக்கிறது என்னும் தகவல்களைத் தருகிறார். தமிழ் வாசகருக்கு மட்டுமல்ல, எழுத்தாளர்களுக்கும் இத்தகவல்கள் புதிதானவையாக இருக்கும். நம் இலக்கியத்தை நாம் கொண்டு சேர்க்க வேண்டிய தூரம் பற்றிய தெளிவு இவற்றின் வழியாகத்தான் வந்து சேரும்.
‘ஆளுமைகள்’ தலைப்பில் ஆறு கட்டுரைகள். இந்நூலில் மிகச் சுவாரசியமான பகுதி இது. இலக்கியப் பகுதியில் ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ நூலைப் பற்றியும் அவர் எழுதிய ‘கலைக்களஞ்சியத்தின் கதை’ பற்றியும் ஒவ்வொரு கட்டுரை உள்ளது. ஆளுமைகள் பகுதியிலும் அவரைப் பற்றி ஒரு கட்டுரை. அவருக்கு ‘இயல் விருது’ வழங்கிய போது எழுதியது. அவரது ஒட்டுமொத்தப் பணிகளையும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி விதந்தோதுகிறது. இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா பற்றிய கட்டுரை என்னை அப்படியே நாற்பது ஆண்டுகளுக்கு முந்தைய என் மேட்டுக்காட்டுப் பாறைக்குத் தூக்கிச் சென்றுவிட்டது. ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் சொல்ல ஏதாவது இருக்கிறது. வாசித்தால் பயன் உண்டு.
பிழைகளே இல்லாத நூல் என்று எதையும் சொல்ல முடிவதில்லை. எப்படியோ சில நேர்ந்துவிடுகின்றன. இந்நூல் எண்ணிச் சொல்லும் அளவு குறைந்த பிழைகளைக் கொண்டதுதான். ‘தியடோர் பாஸ்கரன்’ பெயரைப் பலரும் ‘தியோடர்’ என்றே எழுதுகின்றனர். இதிலும் அப்படியே. அம்பையின் ‘கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு’ நூல் சிறுகதைத் தொகுப்பு; நாவல் அல்ல.
(மு.இராமனாதன், ஷெர்லக் ஹோம்ஸ் வாழ்ந்த வீடு, 2024, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள்: 192, விலை ரூ.240/-)
—– 28-10-24
Add your first comment to this post