தந்தை பெரியார் தம் ‘குடிஅரசு பதிப்பகம்’ மூலம் பல நூல்களை வெளியிட்டுள்ளார். தாம் எழுதியவை, தம் இயக்கத்தைச் சார்ந்தோர் எழுதியவை ஆகியவற்றோடு பிறர் எழுதிய நூல்களையும் தேவை கருதி வெளியிட்டுள்ளார். அந்நூல்களுள் ஒன்று ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ சென்னை இராஜதானி கலாசாலை தமிழாசிரியர் உயர்திரு. கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் எழுதிய நூல் இது. 1930ஆம் ஆண்டு இரண்டணா விலையில் வந்த 36 பக்கங்களே கொண்ட சிறுநூல். ஈரோடு ‘உண்மை விளக்கம் பிரஸ்’ஸில் முதல் பதிப்பு 2000 காப்பிகள் அச்சிடப்பட்டுள்ளது. குடிஅரசு பதிப்பக வெளியீட்டு வரிசையில் இது பதினைந்தாம் நூலாகும். இந்நூல் அதே ஆண்டில் மறுபதிப்பாக 1000 படிகள் அச்சிடப்பட்டுள்ளது. பிந்தைய பதிப்புகளும் வந்திருக்கலாம். விவரம் தெரியவில்லை.
‘யான் சொல்லுவதில் காணப்படும் குற்ற நற்றங்கள் ஒருபால் இருப்பினும் யான் ஆராயப் புகும் முறை சரியானதென்று தோன்றுமாயின் அதுவே யான் இன்று செய்யும் உபந்நியாசத்துக்குத் தக்க பலனாகும்’ (ப.2) என்று அவர் குறிப்பிடுவதால் ஏதோ நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமே இந்நூல் என்று தெரிகிறது. அதைப் பற்றி விவரக் குறிப்பு ஏதும் நூலில் இல்லை. ‘இவ்வுபந்நியாசத்தை யான் எழுதுகிற பொழுது’ (ப.27) என்று ஓரிடத்தில் குறிப்பிடுவதால் தம் உரையை எழுதிய பிறகே நிகழ்வில் பேசியிருக்கிறார் என ஊகிக்க முடிகிறது.
கா.நமச்சிவாய முதலியார் (10-02-1876 : 13-03-1936) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகவும் புகழ்பெற்ற தமிழறிஞராக விளங்கியுள்ளார். அவர் வாழ்க்கை வரலாறு தொடர்பாக ஓரளவு தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றைக் காணும்போது விரிவாக எழுத வேண்டிய வகையில் சுவையான வாழ்க்கை வரலாறு கொண்டவர் என்று தோன்றுகின்றது. தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் சென்னையில் வசித்திருக்கிறார். அவர் தந்தை பெயர் இராமசாமி. ஆகவே அவர் பெயரின் முன்னெழுத்தாக அமைந்திருக்கும் ‘கா’ என்பது காவேரிப்பாக்கத்தைக் குறிப்பதாகும்.
வித்துவான் திருமயிலை சண்முகம் பிள்ளையின் மாணவராகிய இவர் சென்னையில் பல பள்ளிகளிலும் இராணி மேரி கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றிலும் தமிழாசிரியராகப் பணியாற்றியதோடு பள்ளிப் பாடப்புத்தகங்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். சில நூல்கள் இப்போது பார்வைக்குக் கிடைக்கின்றன. அக்காலத்திற்கு ஏற்றவாறு எளிய தமிழில் இலக்கணம், சிறுவரலாறுகள் முதலியவற்றை எழுதியிருக்கிறார். அவற்றின் மூலமாகப் பெரும்பணம் சம்பாதித்து செல்வராக வாழ்ந்திருக்கிறார். அதன் காரணமாகப் ‘பாடப்புத்தகம் எழுதுபவர்’ என்னும் பெயர் சூட்டித் தமிழறிஞர் உலகம் அவரை ஒதுக்கி வைத்தே பார்த்திருக்கிறது. நீதிக்கட்சியுடனும் தந்தை பெரியாருடனும் தொடர்பில் இருந்ததாலும் இத்தகைய ஒதுக்கல் நேர்ந்திருக்கலாம்.

தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கருதுதல், திருவள்ளுவர் ஆண்டு உருவாக்குதல், தைப்பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுதல் முதலியவற்றில் நமச்சிவாயரின் பங்களிப்பு இருந்துள்ளது. ‘தமிழ்க்கடல்’ எனச் சொந்த அச்சகம் வைத்திருந்தார். ‘நல்லாசிரியன்’ இதழை நட த்தினார். நூல் தயாரிப்பிலும் கவனம் செலுத்தினார். ‘ஜனவிநோதினி’ இதழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படவில்லை என அ.கா.பெருமாள் தம் ‘தமிழ்ச் சான்றோர்கள்’ நூலில் குறிப்பிடுகிறார்.
இத்தகைய சிறப்புடைய கா.நமச்சிவாய முதலியார் எழுதிய நூல்தான் ‘அகத்தியர் ஆராய்ச்சி.’ இந்நூல் இவர் தமிழ்ப் புலமையையும் ஆராய்ச்சித் திறனையும் வெளிப்படுத்துகிறது. அகத்தியர் தொடர்பாகத் தொல்காப்பியம் தொடங்கித் தமிழ் இலக்கிய இலக்கண நெடும்பரப்பில் காணக் கிடைக்கும் செய்திகளை எல்லாம் ஒருங்கே தொகுத்து அவற்றை ஆய்வுப் பார்வையில் விளக்குகிறார். நவீனத் திறனாய்வுப் பார்வையில் சொன்னால் ‘கட்டுடைக்கிறார்’ எனலாம்.
அகத்தியர் தொடர்பாக இன்று கிடைப்பவை அனைத்தும் புராணக் கதைகள். அவற்றை முழுவதும் புறக்கணிக்கும் பார்வையை நமச்சிவாயர் கொண்டிருக்கவில்லை. ‘புராணக் கதைகளெல்லாம் ஒருகாலத்து ஒருண்மையைப் புலப்படுத்த உண்டானவை. அவற்றில் உண்மை சிறிதும் பொய்ம்மை பெரிதும் கலந்திருக்கும். அவ்வுண்மையும் வெளிப்படையாகப் புலப்படாதவாறு பெரும்பாலும் உருவகங்களாக அமைக்கப்படும். அவ்வுருவகங்கள் சில இடங்களில் தெளிவாகப் புலப்பட பலவிடங்களில் அவ்வாறு புலப்படாது மறைந்து கிடக்கும்’ (ப.1) என்று நூலின் தொடக்கத்திலேயே தம் பார்வையை முன்வைக்கிறார்.
தந்தை பெரியாரின் பார்வை இதற்கு மாறானது. புராணக் கதைகளில் இருக்கும் உருவகம், குறியீடு முதலியவை எல்லாம் அவருக்குப் பொருட்டல்ல. முழுமையான பகுத்தறிவுப் பார்வையில் புராணக் கதைகளை முற்றாக மறுதலிப்பவர் அவர். ஆனால் நமச்சிவாயரின் கருத்தை எந்த மறுப்பும் இன்றி அப்படியே வெளியிட்டிருக்கிறார். இந்நூலில் உ.வே.சாமிநாதையர் பற்றிய பாராட்டுப் பகுதியும் உண்டு. பெரும்பற்றப் புலியூர் நம்பி, பரஞ்சோதி முனிவர் ஆகிய இருவர் இயற்றிய திருவிளையாடல் புராணங்கள் இருக்கின்றன. அவற்றுள் பெரும்பற்றப் புலியூர் நம்பியின் திருவிளையாடல் புராணத்தை உ.வே.சாமிநாதையர் பதிப்பித்துள்ளார். அப்பதிப்பு பற்றி ‘இந்நூலை பிரம்மஸ்ரீ மஹா மஹோபாத்தியாய சாமிநாதையரவர்கள் பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் வெளியிட்டிராவிட்டால் இவ்வகைய அருஞ்செய்திகளும் நமக்குத் தெரியாமற் போயிருக்குமன்றோ?’ (ப.3, 4) என்று எழுதுகிறார். உ.வே.சாமிநாதையர் மீது பெரியார் அப்படி ஒன்றும் மதிப்புக் கொண்டவர் அல்ல. இத்தகைய நமச்சிவாயரின் கருத்துக்களைப் பெரியார் மதித்திருக்கிறார். அகத்தியர் தொடர்பான ‘கட்டுடைத்தல்’ தான் முக்கியம் என்று பெரியார் கருதியுள்ளார்.
புராணக் கதைகளைப் பகுத்தறிவுப் பார்வையில் தர்க்கரீதியாக விவாதிக்கும் நமச்சிவாயர், அகத்தியரைக் கட்டமைத்ததில் நச்சினார்க்கினியரின் பங்கையும் விவரித்துள்ளார். அகத்தியர் ஒருவர் அல்லர், ஓராசிரியப் பரம்பரையில் வந்தவர் எல்லோரும் அப்பெயரைச் சூட்டிக் கொண்டிருக்கக் கூடும் என்னும் முடிவுக்கு வருகிறார். ‘அகத்தியம்’ என்னும் இலக்கண நூலை முற்றாக மறுக்கவில்லை. அதன் தொன்மையைக் கேள்விக்கு உட்படுத்துகிறார். அகத்தியரின் மாணவர் தொல்காப்பியர் என்பதை வலுவாக மறுக்கிறார். கே.என்.சிவராஜ பிள்ளையின் அகத்தியர் பற்றிய கருத்துக்களில் சிலவற்றை ஏற்றும் சிலவற்றை மறுத்தும் எழுதுகிறார்.
‘அகத்தியர்’ என்னும் ஒற்றைக்கு மாறாகப் ‘பல அகத்தியர்’ கருத்தை முன்வைத்துத் தம் வாதங்களை அடுக்கும் நமச்சிவாயரின் பார்வை இன்றைக்கும் கவனம் பெறத்தக்கது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என அடுக்கும் அரசியல் சூழலில் ‘பல அகத்தியர்’ கோட்பாடு முக்கியமானது. அகத்தியர் பற்றிய ஆய்வாகத் தமிழில் வெளியான முதல் நூல் இது என்பதும் இதைப் பெரியார் வெளியிட்டிருக்கிறார் என்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்நூல் இப்போது ‘அகத்தியர் ஓர் ஆராய்ச்சி’ என்னும் தலைப்பில் மறுபதிப்பாக வந்துள்ளது. திராவிடர் கழக வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விலை ரூ.30/-. இதைப் பரிசல் பதிப்பகமும் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளது. விலை ரூ.45/-.

அகத்தியர் பற்றிய ஆய்வில் ஆர்வம் உடையோர் கீழ்க்கண்ட நூல்களையும் வாசிக்கலாம்.
- கே.என். சிவராஜ பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய ‘Agastya in Tamil Land’ என்னும் நூல் இஸ்க்ரா மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. பரிசல் வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். விலை ரூ.150/-.
- ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ‘அகஸ்தியர் : ஒரு மீள்பார்வை’ என்னும் நூல் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
- அப்பண்ணசாமி எழுதிய ‘அகஸ்தியர் எனும் புரளி’ நூல் உயிர் பதிப்பகம் வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.
- ப.தங்கராசு எழுதிய ‘தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் ஓர் ஆய்வு’ என்னும் நூல் 1997இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்துள்ளது. இப்போது விற்பனையில் இல்லை. பிடிஎப் வடிவில் படிக்கலாம்.
—– 15-01-26


Add your first comment to this post