பரிபாடல், மதன விலாசம், அகநக

You are currently viewing பரிபாடல், மதன விலாசம், அகநக

 

1

தமிழ்ச் செவ்வியல் நூல்களை உரையுடன் வெளியிடும் திட்டத்தை 2020 – 2021ஆம் நிதியாண்டில் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் வழியாக நூல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏற்கனவே பத்துப்பாட்டு நூல்களும் எட்டுத்தொகையில் சிலவும் வந்துள்ளன. அவ்வரிசையில் இவ்வாண்டு ‘பரிபாடல்’ வெளிவந்துள்ளது. பரிபாடல் என்பது இசைப்பாடல் வகையைச் சேர்ந்தது. அதைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் வந்துள்ளது. அத்தலைப்பிலேயே அமைந்த எட்டுத்தொகை நூலாகிய ‘பரிபாடல்’ பற்றிப் பல ஆய்வுகள் உள்ளன. இந்நூலில் 70 பாடல்கள் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் உ.வே.சாமிநாதையர் இதைப் பதிப்பித்த போது 22 பாடல்களே கிடைத்தன. பல்வேறு உரைகளிலும் மேற்கோளாகக் காட்டிய சில பாடல்களும் பாடற்பகுதிகளும் உள்ளன. அவற்றைப் ‘பரிபாடல் திரட்டு’ எனக் கொண்டு எல்லாவற்றுக்குமாக உரையுடன் இப்போது இந்நூல் வெளியாகியுள்ளது.

நா.ஹரிகுமார் இந்நூலுக்கு நவீன மொழியில் விரிவாக உரை எழுதியுள்ளார். நூல் அறிமுகம், பாடியோரும் இசை வகுத்தோரும், பரிபாடல் இலக்கணமும் உறுப்புகளும் ஆகிய தலைப்புகளில் நூலைப் பற்றி நல்ல அறிமுகம் முன்பகுதியில் உள்ளது. பின்னிணைப்புப் பகுதியும் முக்கியமானது. பாடல் முதற்குறிப்பு அகராதி,  ‘பரிபாடல் என்னும் இசையமுதம்’ என இசைக் குறிப்புகள், பொருட்பெயர் அகரவரிசை, எட்டுத்தொகை நூல்கள் பற்றிய அறிமுகம் ஆகியவை அப்பகுதியில் உள்ளன. உரையாசிரியர், பதிப்பாசிரியர், ஆய்வாளர் எனத் தமிழ் இலக்கிய உலகுக்கு நன்கு அறிமுகம் ஆகியுள்ள ப.சரவணன் இவ்வரிசை நூல்களுக்குப் பொதுப்பதிப்பாசிரியராக உள்ளார். அவரைக் குறித்தும் உரையாசிரியர் நா.ஹரிகுமார் பற்றியும் சிறுஅறிமுகம் இருந்திருக்கலாம். உரைக்குச் சான்றாக சிறுபகுதி:

‘மின்னல்கொடி போன்று பார்ப்பவர் கண்களில் ஒளிர்பவளும் ஒளிரும் புன்னகையும் அழகும் ஒப்பனை செய்யப்பட்ட மாலையுடன் ஒப்பனை செய்யப்பட்ட கண் இமைகள் அசைய மங்கையொருத்தி ஆடினாள். மாணிக்கச் சிவப்புடன் தேனால் செய்த கள்ளை அருந்தியிருந்ததால் தடுமாறி ஆடினாள். அதனால் அவள் ஆடை நெகிழ்ந்தது; கண்கள் சிவந்தன.’ (ப.519)

630 பக்கம் கொண்ட இப்பெரிய நூலின் விலை 400/- தான். புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். பழந்தமிழ் இலக்கியம் பயில விரும்புவோர் கையில் இந்நூல் இருப்பது நல்லது.

நூல் விவரம்:

நா.ஹரிகுமார் (உ.ஆ.), பரிபாடல், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சென்னை. 

2

பரிபாடல், மதன விலாசம், அகநக

மதன விலாசம்

நம் கருவூலமாகப் பழந்தமிழ் இலக்கியம் இருந்தபோதும் அவற்றின் வடிவங்களாகிய பா, பாவினம் ஆகியவற்றைப் பற்றி நவீன இலக்கியவாணர்களுக்கு நல்லெண்ணம் இல்லை. மரபுக்கவிதையா புதுக்கவிதையா என்னும் விவாதம் சில பத்தாண்டுகள் நடந்ததும் ஒருகாரணமாக இருக்கலாம். எல்லாச் சமூகமும் தம் மொழிவளத்தைப் பாதுகாக்கும் ஒருமுயற்சியாக மரபிலக்கிய வடிவத்தைப் போற்றிப் பேணுகின்றன. நாமோ அவற்றைக் கைவிட்டுக் கொண்டிருக்கிறோம். பெரும் இலக்கியப் பரப்பைப் பெற்றுள்ள தமிழின் யாப்பிலக்கண மரபு அத்தனை எளிதில் காலாவதியாகிவிடாது. அந்நம்பிக்கையை ஏற்படுத்தும் தொகுப்பாக முரளி அரூபனின் ‘மதன விலாசம்’ வந்துள்ளது.

சென்னை, புதுக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக விளங்கும் முரளி அரூபன் ஏற்கனவே பதிப்பு, உரை எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். இவரது பதிப்புப் பணி தனியாக விரித்து எழுத வேண்டிய அளவு பங்களிப்பு கொண்டது. குறிப்பாக இசுலாமியத் தமிழ் அறிஞர்களின் பங்களிப்பை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளவர்.  சைது முகம்மது அண்ணாவியார் இயற்றிய ‘மகாபாரத அம்மானை’ என்னும் நூல் இவரது பதிப்பில் சாகித்திய அகாதமி வெளியீடாக வந்துள்ளது. இசுலாமியர் ஒருவர் மகாபாரத அம்மானையை எழுதியிருக்கும் செய்தி தமிழ்ச் சமூகத்தின் இயல்பு நிலையை அறிய உதவுவது.

இத்தகைய பணிகளில் ஈடுபட்டதாலோ என்னவோ தாமும் மரபுக் கவிஞராக மாறி ‘மதன விலாசம்’ எழுதியுள்ளார்.  பொதுமுடக்க காலத்தில் முரளி எழுதி முகநூலில் பதிவிட்ட நேரிசை வெண்பாக்களைப் படித்துச் சுவைத்தேன். அவை நூல் வடிவில் வர வேண்டும் என்றும் விரும்பினேன். இப்போது வெளியிட்டிருக்கிறார். கவிஞர் நீலமணி, ஆகாசம்பட்டு வெ.சேஷாசலம் ஆகியோர் வழியில் முரளி அரூபனை வைத்துப் பார்க்கும் எண்ணத்தை இத்தொகுப்பு தருகிறது. பெண் பற்றி ஆண் நோக்கிலான பழைய விழுமியப் பார்வையை இவ்வெண்பாக்கள் கொண்டிருக்கின்றன என்பது முக்கியமான குறை. மற்றபடி சொற்கூட்டு நன்கமையப் பெற்று இனிய சந்தத்துடன் காமச்சுவை சொட்டச் சொட்ட எழுதியிருக்கும் எளிய வெண்பாக்கள் இவை என்று தாராளமாகச் சொல்லலாம்.

இரண்டு சான்றுகள்:

கணையாம் விழிகள்; இனிதாம் மொழிகள்;

சுனையாம் இதழ்கள்; இரட்டைத் – தினவாம்

முலைகள் பெரிதாம்; முயங்க அரிதாம்;

இலையாம் எனில்வாழேன் இங்கு.

 

செத்த உடல்போன்று சும்மா கிடந்துபின்

மொத்தமாய் மீன்பிடிக்கும் கொக்கினமே – பித்தாக்கி

நெஞ்சத்தைச் சூறையாடும் நேரிழை மார்பணைக்கக்

கெஞ்சுகிறேன் தூதுபோ கேட்டு.

நூல் விவரம்: முரளி அரூபன், மதன விலாசம், கல்தச்சன் பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு: 9444887270.

3

பரிபாடல், மதன விலாசம், அகநக

2025ஆம் ஆண்டின் இறுதி நாளும் 2026ஆம் ஆண்டின் முதல் நாளும் ஈரோட்டில் கழிந்தன. மூன்று நிகழ்வுகளில் பங்கேற்றேன். அவற்றில் இரண்டுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி வந்திருந்தார். மிக எளிமையான அரிய மனிதர். நவீன இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு கொண்ட அவர் மரபுக்கவிதை எழுதும் பயிற்சி மேற்கொண்டு சமீபத்தில் ஒருநூலை வெளியிட்டுள்ளார். முழுவதும் வெண்பாக்களைக் கொண்ட அந்நூல் ‘அகநக’ என்னும் தலைப்பில் வந்துள்ளது. ஆறு தலைப்புக்களில் வெண்பாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாடுபொருளில் நட்பு, காதல், தமிழ், பாசம், சூபித் தத்துவம் எல்லாம் உள்ளன. எழுதிப் பழகிய கையிலிருந்து இயல்பாக உதிர்ந்தவையாக இவ்வெண்பாக்கள் அமைந்து  வாசிக்கச் சுவை தருகின்றன. யாப்பிலக்கணக் குறையில்லை. எனினும் ஒன்றாம் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் பொழிப்பு மோனை அமைந்தால் வெண்பா இன்னும் சிறக்கும். ‘என்னவனே என்னவனே’ என்னும் தலைப்பில் பெண்கூற்றாக அமைந்த வெண்பாக்கள் அறுபது. அவற்றிலிருந்து இரண்டைத் தருகிறேன்.

சட்டெனக் கையைப் பிடித்தல் முறையல்ல

விட்டுவிடச் சொன்னேன்; உதறியவன் – பட்டென

விட்டுவிட்டான்; பாவி யிவனிடம் எப்படித்தான்

சுட்டுவதோ பெண்மனதைத் தான்.

சொன்ன இடத்தில் குறித்ததொரு நேரத்தில்

சொன்னபடி நீவருவாய் என்றெண்ணி – கன்னிநான்

காத்திருந்த போதன்பே நீவராது போனாலும்

பூத்துநிற்பேன் கல்போல் உறைந்து.

நூல் விவரம்: ச.கந்தசாமி, அகநக (வெண்பா விருந்து), கோரல் பதிப்பகம், சென்னை, தொடர்புக்கு: 9043050666.

—–   14-01-26

Add your first comment to this post