திருமணம், காதுகுத்து முதலிய மங்கல நிகழ்வுகளுக்கு மொய் வைத்தல் இன்றும் நிகழ்ந்து வருகிறது. தென்மாவட்டங்களில் பல லட்சம் என்ன, கோடிக்கு மேல் மொய் விழுந்த நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளைக் கண்டிருக்கிறேன். பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கடி மதுரை செல்லும் வாய்ப்பு இருந்தது. அப்போதெல்லாம் காதுகுத்துச் சடங்கு பற்றிய பதாகைகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் பல கிடாக்கள் வெட்டிக் கறிவிருந்து போடுவதோடு மொய் வாங்கிச் செழிப்பதும் நடக்கும். கொங்குப் பகுதியிலும் மொய் இன்னும் முற்றிலுமாக நின்றுவிடவில்லை. அதன் கடைசிக் காலத்தில் இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
திருமணத்திற்குப் போய் வந்தவரிடம் ‘எவ்வளவு மொய் எழுதுன?’ என்று கேட்பதுண்டு. ‘மொய் எழுதுதல்’ என்னும் வழக்கு 1950க்குப் பிறகே வந்திருக்க வேண்டும் என்பது என் அனுமானம். பெருவாரியான சாதிகளில் முதல் தலைமுறை எழுத்தறிவு பெற்ற பிறகே குறிப்பேடு போட்டு மொய்க்கணக்கை எழுதும் வழக்கம் வந்திருக்கும். 1970களில் மொய் எழுதுவதற்கு ஆள் தேடுவார்கள். ஒருவர் எழுதுவார்; ஒருவர் பணத்தையும் பொருட்களையும் வாங்கிச் சரிபார்த்து வைப்பார். 1980களில் நல்ல கையெழுத்து இருப்பவரை மொய் எழுத அழைப்பார்கள். அப்போது ஊரில் கணிசமாக எழுத்தறிவு பெற்றுவிட்டனர். அதனால் கையெழுத்தை வைத்துத் தேர்வு செய்வர்.
மொய் எழுதும் வாய்ப்பு ஒருவருக்குக் கிடைக்கும் மதிப்பாகக் கருதப்பட்டதுண்டு. என் அத்தை மகனுக்கு அப்படி ஒருகிராக்கி இருந்தது. அவர் கையெழுத்து திருத்தமாகவும் குண்டுகுண்டாகவும் இருக்கும். யார் வேண்டுமானாலும் படித்துப் புரிந்துகொள்ள முடியும். அது மட்டுமல்ல, மொய் வைப்போர் விவரத்தைத் தெளிவாகக் கேட்டுப் பெயர், ஊர், காடு, தந்தை பெயர் என எல்லாவற்றையும் எழுதுவார். பட்டப்பெயரால் அறியப்பட்டவர் என்றால் அதை அடைப்புக்குறிப்புக்குள் எழுதி வைப்பார். அதனால் மொய் எழுத வேண்டும் என்றால் ‘எஸ்மணி எங்கப்பா?’ என்பார்கள். ஊரில் பல ‘மணி’ இருந்ததால் அவர் அடையாளம் முன்னெழுத்தாகிய ஆங்கில எஸ்.
சில நிகழ்ச்சிகளில் அத்தகைய மதிப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் அது எனக்கு விருப்பமான வேலையல்ல. சாப்பிடக்கூடச் செல்லாமல் எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். கூட்டி மொத்தத்தைக் கணக்கிட வேண்டும். வாங்கி வைத்திருக்கும் தொகையும் கணக்கும் பொருந்த வேண்டும். சிலசமயம் பலமுறை கூட்டிக் கூட்டிப் பார்க்க நேரும். பணத்தை எண்ணி எண்ணிப் பார்க்க வேண்டும்.
‘தோன்றாத் துணை’ நூலில் ‘மொய்க்கணக்கு’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளேன். நானும் அண்ணனும் எழுத்தறிவு பெற்ற பிறகு எங்கள் வீட்டிலேயே ‘மொய் நோட்டு’ ஒன்றைப் பராமரித்தோம். அக்குறிப்பேடு இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதல் பகுதியில் ‘வைத்த மொய்’ எழுதப்பட்டிருக்கும். அடுத்த பகுதியில் ‘வைக்க வேண்டிய மொய்’ இருக்கும். என் அண்ணனுக்கு ஒருவயதாக இருந்தபோது காதுகுத்து நடந்தது. முதல் குழந்தை இறந்து போனதால் இரண்டாம் குழந்தையாக அவன் பிறந்திருந்தான். எங்கள் தாத்தா பாட்டிக்கு அவன் தான் முதல் பேரன். வம்ச விளக்கு. ஆகவே அவன் காதுகுத்துக்குப் பத்திரிகை அடித்து விமரிசையாகக் கொண்டாடியிருந்தனர்.
அப்போது வாங்கிய மொய்க்கணக்கை எழுதி வைக்கவில்லை. பாட்டியும் அம்மாவும் மனக்கணக்காக வைத்திருந்தார்கள். மொய்க்கணக்கை நினைவில் வைத்திருக்க வேண்டிய வேலை பெண்களுடையது. அண்ணன் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட பிறகுதான் தனி நோட்டுப் போட்டனர். என் பொறுப்புக்கு நோட்டு வந்தபோது ‘வைக்க வேண்டிய மொய்’ மிகக் குறைவாகத்தான் இருந்தது. காதுகுத்துக்கு வாங்கிய மொய்யில் பெரும்பகுதியைத் திரும்ப வைத்திருந்தோம். ‘வைத்த மொய்’ கூடிக்கொண்டே வந்தது. காதுகுத்துக்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்துத்தான் எங்கள் வீட்டு சுபகாரியம் நடந்தது. இருபத்தோராம் வயதில் அண்ணன் திருமணம். அப்போது புதுக்குறிப்பேடு வாங்கி அதில் மொய் எழுதினோம்.
மொய் வைக்கும் வழக்கம் பழையதாக இருப்பினும் எழுதுவது கடந்த நூற்றாண்டில்தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இல்லை, எழுதி வைப்பதும் மிகப் பழமையானதுதான் என்று சமீபத்தில் சீவக சிந்தாமணிக் காப்பியத்தை வாசித்துக் கொண்டிருந்தபோது அறிந்தேன். பழந்தமிழ் இலக்கியத்தில் ஒருவருக்கு வழங்கும் அன்பளிப்புப் பொருளுக்குக் ‘கையுறை’ என்று பெயர். குறுந்தொகையின் முதற்பாடல் ‘செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த’ என்று தொடங்கும். அதன் துறைக்குறிப்பு ‘தோழி கையுறை மறுத்தது’ என்றிருக்கும். தலைவிக்கு அன்பளிப்பாகத் தலைவன் கொண்டு வந்த பொருளை ‘வேண்டாம்’ என்று தோழி மறுத்துரைப்பது என்று பொருள். கையுறையை ஏற்றல், மறுத்தல் என அகப்பொருள் துறைகள் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தில் தான் முதன்முதலாகச் செய்யுளுக்குள் ‘கையுறை’ வருகிறது. வேனிற்காதையில் ‘மையறு சிறப்பிற் கையுறை யேந்தி’ என்னும் அடி. வேனிற்காலத்தை அரசனாக உருவகித்து அவனுக்கு அன்பளிப்பாக வருவனவற்றை இளங்கோவடிகள் விவரிக்கிறார். ‘கையுறை – காணிக்கை’ என அடியார்க்கு நல்லார் பொருள் தருகிறார். கட்டுரை காதையிலும் ‘கடகந் தோட்டொடு கையுறை யீத்து’ என இளங்கோவடிகள் அச்சொல்லைக் கையாண்டுள்ளார்.
தமிழ்ப் பேரகராதி இச்சொல்லுக்கு ‘காணிக்கைப் பொருள், மொய்ப்பணம், தலைவிக்கு அன்பு பாராட்டித் தலைவன் கொடுக்கும் தழை முதலிய நன்கொடை, லஞ்சம்’ ஆகிய பொருள்களைத் தருகிறது. மொய்ப்பணம் என்னும் பொருளில் வருவதற்கு எந்தச் சான்றையும் பேரகராதி தரவில்லை. பழைய சான்று வேண்டுமானால் சீவக சிந்தாமணியிலிருந்து கொடுக்கலாம்.
சீவகனுக்கும் காந்தருவதத்தைக்கும் திருமணம் நடக்கிறது. அவள் இளவரசி. மன்னர்களும் சமூக மதிப்பில் உயர்நிலையில் இருப்பவர்களும் பலர் திருமணத்திற்கு வந்திருப்பர். வெறுங்கையை வீசிக்கொண்டு வர மாட்டார்கள். உறவினர், நண்பர் என யார் வீட்டுக்குச் சென்றாலும் வெறுங்கையோடு போவது தமிழர் வழக்கமல்ல. விசேச நிகழ்ச்சிகளுக்கு என்றால் அன்பளிப்புப் பொருள் அவசியம். சேரன் செங்குட்டுவன் மலைவளம் காணப் போனபோது அங்கு வாழ்ந்த பழங்குடியினர் மலையில் விளைந்த பொருட்களைக் கையுறையாகக் கொண்டு வந்தனர் என்பதை அறிவோம். இராமனைப் பார்க்கச் சென்ற குகன் கையுறையாக தேனும் மீனும் கொண்டு சென்றான் என்பது கம்பராமாயணச் செய்தி.
சீவகன், காந்தருவதத்தை திருமணத்திற்கு அப்படி ஏராளமான பொருட்கள் கையுறையாக வந்தன. அவற்றை எழுதிப் பதிவு செய்வதற்கு என்று சிலரை அரசன் நியமித்திருந்தான். ஏன் எழுதிப் பதிவு செய்ய வேண்டும்? அவை ஒருவழியில் முடிந்துவிடும் அன்பளிப்புப் பொருள்கள் அல்ல. திரும்பச் செலுத்த வேண்டிய மொய். பதிவு செய்தால்தான் யார் கொடுத்தார்கள் என்று அறிந்து பிறகு பதிலுக்குத் திரும்பக் கொடுக்க முடியும். பணம் என்று குறிப்பில்லை. ஆனால் கையுறையை எழுதிப் பதிவு செய்தனர் என்று பாடல் சொல்கிறது. பாடல்:
கையுறை எழுதினர் கைந்நொந்து ஏடறுத்து
ஐயென இருப்பமற்று அன்னது ஆதலான்
வையக மருங்கினில் வாழ்நர் மற்றிவன்
செய்தவம் நமக்கிசை கென்னச் சென்றதே. (829)
‘கையுறை எழுதினர் – கலியாணத்திற்கு வந்த வரிசைகளின் கணக்கெழுதியவர்’ என உ.வே.சாமிநாதையர் கூறுகிறார். ‘வந்த பச்சையெழுதி முதலிட்டவர்கள்’ என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். ‘பச்சை எழுதல்’ என்பதற்குப் ‘பலா, வாழை முதலிய காய்களின் கணக்கெழுதல்’ என்று உ.வே.சாமிநாதையர் பொருள் கூறுகின்றார். எங்கிருந்து அவ்வாறு பொருள் கொண்டார் எனத் தெரியவில்லை. ‘பச்சை’ என்பது மொய்யைக் குறிக்கும் நச்சினார்க்கினியர் கால வழக்குச் சொல்லாக இருந்திருக்கலாம். ‘பச்சை’ என்பதற்கு ‘நன்கொடை’ எனப் பொருள் கூறி சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையையே பேரகராதி சான்றாகவும் தருகிறது. ஆங்கிலத்தில் ‘Present, as to a newly married pair’ என்று இன்னும் தெளிவாகவும் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
சரி, திருமணத்திற்கு மொய்யாக வந்த பொருட்களின் கணக்கை எழுதி எழுதிக் கை நொந்து போனார்களாம். வெறுப்புற்று ஏடுகளை ஒருபக்கமாகத் தள்ளி வைத்துவிட்டு ‘அப்பாடா’ என்று இளைப்பாறினார்களாம். ‘கையுறை எழுதினர் கை நொந்து ஏடு அறுத்து ஐயென இருப்ப’ என்னும் தொடர் இப்படிப் பொருள் தருகிறது.
தமிழர் பண்பாட்டின் ஒருகூறாக ‘மொய் வைத்தல்’ மட்டுமல்ல, ‘மொய் எழுதுதலும்’ இருந்திருக்கிறது என்று தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.
—–
பயன்பட்ட நூல்கள்:
- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சீவக சிந்தாமணி, 1986, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு.
- உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), சிலப்பதிகாரம், 1920, கமர்ஷியல் அச்சுக்கூடம், சென்னை, இரண்டாம் பதிப்பு.
—– 12-12-24
மொய் குறித்த இலக்கியப் பதிவு அருமை. சமீபத்தில் கடலூர் மாவட்டம் சக்திவிளாகம் என்ற கிராமத்திற்கு காதுகுத்துக்காகச் சென்றிருந்தேன் அங்கு ஊரில் முக்கியமானவர்கள் இரண்டுபேர் மொய் எழுதினார்கள். மொய் எழுதியவர்களுக்கும் ஊருக்கும் விசேஷ வீட்டுக்காரர்கள் 3000 ரூபாய் கொடுத்தார்கள். ஏன் என்று கேட்டேன் இது எங்கள் ஊர் வழக்கம் என்றார்கள். இது ஊர் பொது பணத்தில் சேரும். இப்படியும் அந்தப் பகுதிகளில் நடக்கின்றது.