நவீன இலக்கியப் பரப்பு மிக விரிந்ததும் பல வகைமைகளைக் கொண்டதும் ஆகும். ஆனால் மிகச் சில எழுத்தாளர்களைச் சுற்றிய வட்டத்திற்குள் அதைச் சுருக்கும் முயற்சிகள் திட்டமிட்டோ இடாமலோ நடக்கின்றன. அதற்குள் சிக்கிக் கொள்ளும் வாசகர்களும் கடிவாளப் பார்வையுடன் திரிய நேர்கிறது. அக்கம்பக்கமும் பார்வையைத் திருப்பிச் சற்றே விசாலமாக்கிக் கொண்டால் விதவிதமான வாசிப்பு அனுபவங்களைத் தரும் நூல்களைக் கண்டடையலாம்; சுவைக்கலாம்.
கடந்த 2025 டிசம்பர் 31 அன்று பெருந்துறை மருத்துவக் கல்லூரியில் உரையாற்றிய போது ஓர் இளைஞர் வந்து தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு தாம் ஒருநூல் எழுதியிருப்பதாகவும் அதை எனக்குக் கொடுக்க விரும்புவதாகவும் சொன்னார். ‘அதற்கென்ன கொடுங்கள்’ என்றேன். கைவசம் படி இல்லை என்றும் அன்று மாலை ஈரோட்டில் ‘மகரந்தம் வாசிப்பு இயக்கம்’ நடத்திய கூட்டத்திற்கு வரும்போது தருவதாகவும் சொன்னார். கூட்டங்களுக்குச் செல்லும்போது இப்படிப் பல நூல்கள் கைக்கு வந்து சேரும். பெரும்பாலும் உள்ளூர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் கவிதைத் தொகுப்புகளாக இருக்கும். அப்படி ஏதோ ஒருநூல் என்று நினைத்துக் கொண்டேன். சொன்னது போல அவர் கொண்டு வந்து என் கையில் சேர்த்த நூல் ‘காவிரிப் பெருநிலம்.’
காவிரி ஆற்றின் தடத்தில் பயணம் செய்து தி.ஜானகிராமனும் சிட்டியும் இணைந்து எழுதிய நூல் ‘நடந்தாய் வாழி காவேரி.’ அதன்பின் காவிரியைப் பற்றியும் நீரரசியல் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் நூல்கள் வந்துள்ளன. எனினும் அப்படி ஒரு பயணநூல் இல்லை. அக்குறையைத் தீர்க்கும் பெரும்பயண நூல் என்று ‘காவிரிப் பெருநிலம்’ நூலைத் தாராளமாகச் சொல்லலாம். ஈரோட்டில் வழக்கறிஞராகப் பணியாற்றும் இளைஞர் ஆ.விஜய். அவர் தம் நண்பர்களுடன் இரண்டு கட்டமாகக் காவிரித் தடம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவத்தை விவரிக்கும் நூல் இது.
வரலாற்றுப் பின்னணி, பயண வழிகள், உணவு, தங்கல் பற்றிய தகவல்கள் அளவாக இடம்பெறுகின்றன. காவிரியைச் சுற்றியுள்ள பண்பாடு, மக்கள் வாழ்க்கை ஆகியவற்றுக்கு முக்கிய இடம். இவை பொதுவாகப் பயண நூல்களில் இருப்பவைதான். இந்நூலைத் தனித்துத் தெரியச் செய்வது காவிரியைச் சுற்றி நடக்கும் அரசியலைத் தமக்கே உரிய தெளிவுடன் விவரித்துச் செல்வதுதான். காவிரி தொடர்பான வழக்கு விவரங்களும் போகிறபோக்கில் பொருத்தமாக அமைகின்றன.
பரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின், புரட்சியாளர் சேகுவேரா ஆகியோரின் பயண அனுபவங்கள் தம்மை ஈர்த்த விதத்தைச் சொல்லித் தொடங்கும் நூல் ஓரிடத்திலும் தொய்வில்லாமல் மழைக்காலக் காவிரி போல் பெருகியும் பொங்கியும் சாவகாசமாக நடையிட்டும் சென்று கொண்டேயிருக்கிறது. எங்கும் வறண்ட காவிரியைக் காண முடியவில்லை. இந்நூலைப் பற்றி இத்தகைய சித்திரம் ஒன்று மனதில் தோன்றிய போது ஒரு கோடைகாலப் பயணத்தை மேற்கொண்டு வறண்ட காவிரியைக் காண வேண்டும் என்னும் எண்ணமும் உதித்தது. ஒருபோதும் காவிரி வறளாது. ஒற்றையடித் தடம் போலேனும் நீரோட்டம் இருக்கும். அப்போதைய காவிரிக் காட்சியும் மக்கள் வாழ்க்கையும் இன்னொரு வகைச் சித்திரத்தைத் தரக்கூடும்.
இதுதான் விஜயின் முதல் நூல். அப்படி எண்ண இயலாதபடி சுவையான விவரிப்பு, தேர்ந்த மொழி. காவிரிப் பயணத்திற்கு முன்னும் பின்னுமாகச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காப்பியங்கள் தொடங்கிச் சமகால நூல்கள் வரை பலவற்றையும் ஆழ்ந்து வாசித்திருக்கிறார். அச்செழுமை நூல் எழுதுகையில் பெரிதும் பயன்பட்டிருக்கிறது. பயண நூல் விரும்பிகளும் நவீன இலக்கிய வாசகர்களும் தவற விடாமல் வாசிக்க வேண்டிய நூல் இது. நூலைக் ‘கரா பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. நூல் செம்மை பெறுவதில் பங்காற்றி முன்னுரையும் வழங்கியுள்ள செ.சதீஸ்குமார், உடன் பயணம் செய்த நண்பர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகத்தார் உள்ளிட்ட அனைவரும் பாராட்டத்தக்கவர்கள். சென்னைப் புத்தகக் கண்காட்சி, அரங்கு எண் 105இல் நூல் கிடைக்கும்.

சாதாரணமான ஒருநூலை எழுதிவிட்டு அதை அசாதாரணம் போலக் காட்டப் பல்வேறு உத்திகளைக் கையாளும் சமகால எழுத்துலகில் பெருஞ்சாதனை என்று போற்றத்தக்க நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். பெரிதும் கவனம் பெற வேண்டிய நூல் என்றே கருதுகிறேன். தம் எழுத்து பற்றி எந்தக் கர்வமும் இல்லாமல் அடக்கத்துடன் என்னிடம் நூலை வழங்கிய விஜயின் தோற்றம் மனதில் இருக்கிறது. இன்னும் பல நூல்களைப் படைக்கும் வல்லமை பெற்ற செ.விஜய் வாழ்க!
ஆ.விஜய், காவிரிப் பெருநிலம் (தலைக்காவிரி முதல் பூம்புகார் வரையிலான பயண அனுபவங்கள்), காரா பதிப்பகம், மதுரை, டிசம்பர் 2025, விலை ரூ.370/-
—– 14-01-26


Add your first comment to this post