பொதுவெளியும் பொதுத்தன்மையும்
‘சகாயம் செய்த சகாயம்’ என்னும் இந்நூலை நான் எழுத நேர்ந்த சந்தர்ப்பம் பற்றி இதன் முதற்பதிப்பு (ஆகஸ்ட் 2014) முன்னுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன். ‘மாதொருபாகன்’ பிரச்சினை துரத்திய 2015இல் என் நூல்கள் அனைத்தையும் அச்சிடுவதை நிறுத்தும்படி பதிப்பகங்களைக் கேட்டுக்கொண்டேன். மாதொருபாகன் வழக்கில் 2016, ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு காலச்சுவடு பதிப்பகம் வழியாக எல்லா நூல்களும் மறுபதிப்பு கண்டன. இந்த ஒருநூல் மட்டும் தங்கிவிட்டது. காரணம் இதன் சமகாலப் பொருத்தப்பாடு குறித்த குழப்பம்தான்.
சகாயம் அவர்கள் இப்போது பொதுவெளியில் இல்லை. நேர்மையின் அடையாளமும் தீவிரச் செயல்பாட்டாளருமான அவர் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இசைந்த கொடுக்காத காரணத்தால் பெரிய அதிகாரம் இல்லாத பதவிகளில் இருத்தி அரசு ஒதுக்கியது. மதுரை கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணை அதிகாரியாக நீதிமன்றமே அவரை நியமித்த சந்தர்ப்பம் ஒன்றைத் தவிர அவரது செயல்பாட்டுக் களங்கள் முடக்கப்பட்டன. அதனால் விரக்தி அடைந்தோ என்னவோ இன்னும் சில ஆண்டுகள் பணிக்காலம் இருந்தும் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டார். அதன்பின் அவர் அரசியலுக்கு வரப் போகிறார் என்றும் தனிக்கட்சி தொடங்குகிறார் என்றும் பேச்சுகள் நிலவின. அப்படி எதுவும் நடக்கவில்லை. தம் கொள்கைகளில் உறுதியும் பிடிவாதமும் கொண்ட அவருக்கு அரசியல் ஒத்துவராது என்றே நினைத்தேன்.
அவரை ஆலோசகராகக் கொண்டு தொடங்கிய ‘மக்கள் பாதை’யின் செயல்பாடுகள் பெரிதாக இல்லை. அதற்குள்ளும் முரண்பாடுகள், சகாயம் மீது குற்றச்சாட்டு எல்லாம் வந்து இருக்கும் இடம் தெரியவில்லை. ஒடிந்தாலும் ஒடிவேனே தவிர வளைந்து கொடுக்க மாட்டேன் என்னும் பிடிவாதம் கொண்ட, யாராலும் பின்பற்ற இயலாத தனித்த ஆளுமை சகாயம். நீக்குப்போக்குகள், நெளிவுசுளிவுகள் என எதுவும் இல்லாமல் தமக்குச் சரி என்று பட்டதைத் துணிந்து செய்பவர். அவரைப் போல இன்னொருவரைப் பார்க்க இயலாது. அவருக்கு உவப்பளிக்கும் விதத்தில் ‘மக்கள் பாதை’ செயல்படாதது எனக்கு வியப்பளிக்கவில்லை. அதன் செயல்பாடுகளில் தம் படத்தைக்கூடப் பயன்படுத்தக் கூடாது என்று ஒருகட்டத்தில் அறிவித்து அதிலிருந்து விடுவித்துக் கொண்டார்.
‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து’ என்னும் முழக்கத்தை முன்வைத்து இயங்கியவர். அதுவே அவரது பேரடையாளமாகத் திகழ்ந்தது. ஊதியம் தவிர வேறு எவ்வகையிலும் பொருள் சேர்க்காத நேர்மைத் திறம் கொண்டவர். அரசியலுக்கு வந்தால் பணம் செலவழிக்க வேண்டும். தம்முடன் வரும் பத்துப்பேருக்கு உணவு வாங்கிக் கொடுக்கவும் போக்குவரத்துக்குமாவது செலவழிக்க வேண்டும் அல்லவா? அவரது பொருளாதார நிலையில் அது சாத்தியப்படாது. வேறு யாராவது பின்னிருந்து உதவ வேண்டும். பணக்காரர்களையோ நிறுவனங்களையோ சார்ந்திராமல் அரசியல் நடத்த முடியாது. அதிகார ஆசை, சுயலாபம் இரண்டையும் குறிவைத்துத்தான் அவர்கள் உதவுவார்கள். அதைச் சகாயம் விரும்ப மாட்டார், அத்தகையவரோடு அவரால் இணங்கிச் செல்ல முடியாது என்று கருதினேன். ஆக இதுவரைக்கும் அவர் அரசியல் பக்கம் வரவில்லை என்பது என் எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.
சமீபமாக இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் பெயர் மீண்டும் பொதுவெளியில் அடிபட்டது. நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் அவர் இணையப் போவதாக ஒருசெய்தி பரபரப்பாக அடிபட்டது. அப்படி இணைவார் என்று சிறிதளவும் நான் நம்பவில்லை. ஆலோசகராகக் கூட அவரால் இயங்க முடியாது. அவர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி வெகுஜன அரசியல் நடத்தும் சூழல் இங்கில்லை என்பதை அரசியல்வாதிகள் தெளிவாக அறிவர். கடும் கட்டுப்பாடுகளைக் கைக்கொள்ளும் ஒருவர் தன்னளவில் அவற்றைப் பின்பற்றிக் கொள்ள முடியுமே தவிர, பிறருக்கு ஏற்றுவது சாத்தியமில்லை.
கிரானைட் ஊழல் வழக்கில் நீதிமன்றத்திற்கு நேரில் செல்வது தொடர்பான பிரச்சினையின் போது தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் காவல்துறை பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதால் தம்மால் நேரில் வர இயலாது என்றும் அவர் தெரிவித்தது பரபரப்பான செய்தியாயிற்று. பிறகு நேரில் செல்லாமல் இணையம் வழியாக அவ்வழக்கு விசாரணையில் பங்கேற்றார். உண்மையில் அவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்றே நம்புகிறேன். பல கோடி ஊழலை வெளிக்கொண்டு வந்து விரிவான அறிக்கை அளித்த அவரை முதலாளிகளும் அரசியல்வாதிகளும் அத்தனை எளிதாக விட மாட்டார்கள். அவ்வழக்கு இன்னும் முடியாத நிலையில் அவர் பாதுகாப்பாக இருப்பதே நல்லது. பொதுவெளியில் தலைகாட்டுவதை அவர் தவிர்த்துக் கொண்டிருப்பதுகூட அதனால்தான் என்று நினைக்கிறேன். அவரைப் போன்றவர்கள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவ வேண்டும். தம் கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். அவருக்கு அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. எனினும் இந்த நூலை மீண்டும் வெளியிடுவதன் மூலம் என்னளவில் அவரைப் பொதுவெளியில் இருத்த முனைகிறேன்.
மேற்கண்ட இருசெய்திகளும் இந்நூலை மறுபதிப்பாகக் கொண்டு வருவதைப் பற்றி மறுபரிசீலனைக்குத் தூண்டின. ஏதோ ஒருவிதத்தில் சகாயம் பற்றிய கவனம் பொதுவெளியில் நிலவும் என்பதால் இந்நூலுக்கும் வாசகத் தேவை இருக்கும் என்று கருதினேன். நூலை முழுவதுமாக மீண்டும் வாசித்துப் பார்த்தபோது சகாயத்தின் தனியாளுமை பற்றி மட்டுமல்லாமல் இதன் பொதுத்தன்மையையும் உணர்ந்தேன். ஆட்சியர் நிலையில் இருக்கும் அதிகாரி ஒருவர் செயல்திறமும் நேர்மையும் மக்கள் நோக்கில் சிந்திக்கும் பார்வையும் கொண்டிருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதுதான் அப்பொதுத்தன்மை. ஆகவே இந்நூலின் பயன்பாடு பற்றி நம்பிக்கை பிறந்தது.
வாசிக்கும் போதுதான் இதிலுள்ள பல தகவல்கள், சம்பவங்கள் என் நினைவிலிருந்து உதிர்ந்து போயிருப்பதையும் அறிந்தேன். அரசுப் பதிவேடுகளில் எப்போதிருந்து எப்போது வரை ஆட்சியராக இருந்தார் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். ஒருவர் எவ்விதம் உயிர்ப்போடு இயங்கினார் என்பதைப் பற்றிய பதிவுகள் ஏதும் இருக்காது. உழவர் உணவகம், கிராமத்தில் தங்குவோம் உள்ளிட்ட திட்டங்களைப் பற்றி பதிவேடுகள் என்ன சொல்லக் கூடும்? நாமக்கல் மாவட்ட ஆட்சியராகச் சகாயம் இருந்த ஜூன் 2008 – செப்டம்பர் 2010 வரையான பதிவேடுகளை யாரேனும் புரட்டினால் (யார் புரட்டப் போகிறார்கள்!) என்ன கிடைக்கும்? குறிப்பிட்ட நாட்கள், பயனாளிகள் எண்ணிக்கை எனப் புள்ளி விவரங்கள் அகப்படலாம். நான் எழுதியிருக்கும் கோணமோ பார்வையோ கிடைக்க வாய்ப்பே இல்லை. அவ்வகையில் இந்நூலுக்கு ஓர் ஆவண மதிப்பும் இருக்கிறது. மறுபதிப்புக்கு இத்தகைய சமாதானங்கள் தோன்றுகின்றன.
முதற்பதிப்பு முன்னுரையில் எழுதியதையே மீண்டும் வழிமொழிகிறேன்: ‘இதை வாசிப்போர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக உ.சகாயம் பணியாற்றியபோது அவரது செயல்பாடுகளைச் செய்திகள், நிகழ்வுகள், மக்கள் வாய்மொழி வழக்காறுகள் வழியாகக் கவனித்து வந்த எழுத்தாள மனப்பதிவு இந்நூல் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வாழ்க்கை வரலாறோ துல்லியமான ஆவணப் பதிவோ அல்ல. துதிபாடும் நோக்கம் கொண்டதும் அல்ல. நேர்மையான அதிகாரி ஒருவரைக் கௌரவிக்க வேண்டும் என்னும் எண்ணத்திலும் அதேசமயம் அதிகாரி ஒருவரின் எல்லைகள் பற்றிய புரிதலுடனும் சுயபார்வை துலங்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ஆளுமைகளை எவ்விதம் கொண்டாடுவது என்பதற்கான சான்றாகும் இத்தகைய எழுத்து முறை தமிழுக்கு மிகவும் புதிது.’
இதை வெளியிடும் ‘அலர் கேசவன்’ சில ஆண்டுகளாக எனக்கு நண்பர். இலக்கிய ஆர்வமும் செயல் திட்டங்களும் கொண்ட இளைஞர். தீவிர வாசிப்பும் விமர்சனப் பார்வையும் உடையவர். அவர் பதிப்பகம் தொடங்கி மேற்செல்லும் சந்தர்ப்பத்தில் என் நூல் ஒன்றைக் கொடுத்துதவ வேண்டும் என்று எண்ணினேன். 2016 முதல் எல்லா நூல்களையும் காலச்சுவடு பதிப்பகம் மூலமே வெளியிட்டு வருகிறேன். தங்கிவிட்ட இந்த நூலைக் கேசவனுக்குத் தரலாம் என்று தோன்றியது. காலச்சுவடு கண்ணனும் ஒப்புதல் தந்தார். இதன் வெளியீட்டில் பங்காற்றியிருக்கும் அனைவருக்கும் நன்றி.
15-08-25
நாமக்கல் பெருமாள்முருகன்.

( ‘சகாயம் செய்த சகாயம்’ நூல் அலர் வெளியீடாக மறுபதிப்பாகியுள்ளது. அதற்கு எழுதிய முன்னுரை. ஓவியமும் அட்டை வடிவமைப்பும் : ரோஹிணி மணி. சென்னைப் புத்தகத் திருவிழாவில் நூல் கிடைக்கும் இடங்கள்: பனுவல், கலப்பை, யாப்பு, அந்திமழை)
—– 16-01-26


Add your first comment to this post