கவிஞர் றாம் சந்தோஷின் ‘சட்டை வண்ண யானைகள்’ நூலை அறிமுகப்படுத்தி ‘இவ்வளவு சல்லிசா மகிழ்ச்சி?’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தேன். அதில் ‘தமிழ் மாணவர் அவர்’ என்பதைப் பெருமையோடு குறிப்பிட்டிருந்தேன். பழந்தமிழ் இலக்கியமே இலக்கியம் என்று கருதும் கல்விப்புலப் பார்வை கொண்டு நவீன இலக்கியத்தின் பக்கம் திரும்பாமல் திரியும் தமிழாசிரியர்களையும் மாணவர்களையும் நான் அறிவேன்.
அவர்களுக்குப் பழந்தமிழ் இலக்கியத்திலும் பெரிய அறிவு இருக்காது. தம் ஆர்வக்குறையை மறைத்துக்கொள்ளப் பழந்தமிழ்ப் பதாகை பிடித்து நிற்பார்கள். இலக்கியத்தின் பொதுத்தன்மை காலம் கடந்தது. உண்மையில் பழைய இலக்கிய ஆர்வம் ஒருவருக்கு இருக்குமானால் இயல்பாகவே நவீன இலக்கிய ஆர்வம் வந்துவிடும். பிழைப்புக்காக இலக்கியத்தை வரித்துக்கொண்ட மனம் எந்தக் கால இலக்கியத்திலும் தோய முடியாது.
தமிழ் இலக்கியம் பயில்வோருக்கு நவீன இலக்கியத்தில் ஆழ்ந்த அறிவு இருக்க வேண்டியது கட்டாயம். தாம் வாழும் சமகாலத்தைப் பற்றிய இலக்கியத்தை ஒருவர் எப்படி விரும்பாமல் இருக்க முடியும்? ஒரு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பாடத்திட்டம் உருவாக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு தாளென நான்கு தாள்களை நவீன இலக்கியத்திற்கு ஒதுக்கினேன். முதல் அமர்விலேயே முழுப் புறக்கணிப்பு.
இளங்கலை பயிலும் மாணவர்களுக்கும் அப்படித்தான் வைக்க வேண்டும் என்பது என் எண்ணம். ஆறு பருவத்திற்கும் ஆறு தாள்கள். ஒருவர் முதுகலை பயின்று முடிக்கும்போது மொத்தமாகப் பத்துத் தாள்கள் நவீன இலக்கியத்திற்கு மட்டும் படித்திருக்க வேண்டும். என் திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் மனம் தமிழ்ச் சமூகத்திற்கு இப்போதைக்கு வராது. எப்போதாவது வருமா என்பதும் தெரியவில்லை.
பழந்தமிழ் இலக்கியப் புலமையும் இல்லாமல் நவீன இலக்கிய அறிமுகமும் இல்லாமல் கல்விப்புலத்திலிருந்து வெளியேறி வரும் பெருந்திரள் மாணவர்களைக் கண்டு வருத்தமுறுகிறேன். இயல்பான ஆர்வத்தால் நவீன இலக்கிய வாசிப்பும் ஆர்வமும் கொண்டு தமிழ் இலக்கிய மாணவர் சிலர் படைப்பாளர்களாக வரும்போது பெரிதும் மகிழ்கிறேன். றாம் சந்தோஷ் மட்டுமல்ல, சமகாலத்தில் காத்திரமாகச் செயல்பட்டு வரும் இன்னும் சிலரையும் அறிவேன். அவர்களில் இருவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
ஒருவர் ஜார்ஜ் ஜோசப். இன்னொருவர் இஸ்க்ரா என்னும் சதீஸ்குமார்.
திருச்சி, ஜமால் முகமது கல்லூரித் தமிழ்த்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார் ஜார்ஜ் ஜோசப். டேனியல் குயின் எழுதிய ‘இஸ்மாயில்’ (அமெரிக்க நாவல்), கென்கி கவமுரா எழுதிய ‘பூனைகளில்லா உலகம்’ (ஜப்பானிய நாவல்) ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கிறார். 2022இல் சிறுகதை எழுத ஆரம்பித்து ‘எமரால்ட்’ (2023), ‘பெருநெஞ்சன்’ (2024) ஆகிய இருதொகுப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டிருக்கிறார். முறையே பதினாறு, ஒன்பது என மொத்தம் இருபத்தைந்து கதைகள். இரண்டு ஆண்டுகளில் இருபத்தைந்து கதைகள் என்பது கணிசம்தான். ‘எமரால்ட்’ தொகுப்பு ‘திருக்கார்த்தியல் விருது’ பெற்றிருக்கிறது.
இவர் கதையுலகம் இன்னும் சற்றே உருவாகி வந்த பிறகு விரிவாக எழுத ஆசை. இப்போதைக்குச் சிறுஅறிமுகம் மட்டும். மொழிபெயர்ப்புக் கதைகளின் வாடை கருப்பொருள் தேர்விலும் மொழியிலும் முதல் தொகுப்பின் சில கதைகளில் தென்பட்டது. இரண்டாம் தொகுப்பில் நிலைப்பட்டிருக்கிறார். நடுத்தர வர்க்கப் பார்வையாளர் கோணமும் விளிம்பு நிலையினர் வாழ்வும் இயைவதாக இவரது சொல்முறை இருக்கிறது.
அ.எக்பர்ட் சச்சிதானந்தம் எழுதிய சிறுகதைகளுக்குப் பிறகு இவருடைய கதைகளில் தான் கிறித்தவ வாழ்க்கையும் விவிலிய சொற்கள் பொருந்திய மொழியும் கூடி வந்திருக்கின்றன. தமிழ் இலக்கியம் கற்போர் தம்மை அறக்காவலர்களாக, ஒழுக்கசீலர்களாகப் பாவித்துக் கொள்வதுண்டு. அந்த பாவனையே அவர்களைப் பொதுத்தளத்திலிருந்து விலக்கி வைத்துவிடும். இவரிடம் அத்தகைய பாவனை ஏதுமில்லை. சரிதவறு பற்றிய முன்முடிவுகள் இல்லை. வாழ்வை அதன் போக்கில் இலகுவாக அணுகுகிறார்.
பேருந்துப் பயணத்தில் அருகில் அமர்ந்துவரும் இளைஞனின் தோற்றத்திலும் பேச்சிலும் ஈர்க்கப்படும் பெண்ணின் உணர்வுகள் ‘நெடி’ என்னும் கதை. இப்படி ஒரு கருவைத் தேர்ந்தெடுக்கும் மனம் வாய்ப்பது நல்லது. ‘பெருநெஞ்சன்’ கதை மிகச் சாதாரணமானது போலத் தோன்றி ஆழ்ந்த லயிப்பை ஏற்படுத்துகிறது. பெருநெஞ்சனாக இருக்க எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் பாவனை செய்யவே முடிகிறது. சிலரது இயல்பே அதற்குப் பொருந்துகிறது. அப்படி ஒருவனைப் போகிறபோக்கில் காட்சிப்படுத்தும் கதை இது.
சிறுகதை கைவரும் வல்லாளர் இவர் என்பதில் ஐயமில்லை. இந்தப் பாதையிலேயே சென்று இன்னும் அருமையான கதைகளை எழுதட்டும். சீர்மைப் பதிப்பகத்தின் நூலாக்கம் அருமை. மெய்ப்பில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை.
000
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் ஆற்றல் வாய்ந்த இஸ்க்ரா கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் முடித்துவிட்டு அங்கேயே முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். ரஷ்ய மொழி இதழான ‘இஸ்க்ரா’ என்னும் பெயரைப் புனைபெயராகக் கொள்ளும் அளவு மார்க்சிய ஈடுபாடு கொண்டவர். இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதியைப் ‘பிறக்கும் முன்பே ஆய்வைத் தொடங்கிவிட்டவர்’ என்று புகழ்வதுண்டு. இஸ்க்ராவும் அதற்குச் சளைத்தவர் அல்ல. பாலக வயதிலேயே நான்கைந்து நூல்களின் ஆசிரியராகிவிட்டார்.
இஸ்க்ரா பெரும்பாலும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுப்பவை புனைவுகள் அல்ல. புனைவல்லாதவை. முழுநூலை மட்டுமல்ல, ஒருபொருள் சார்ந்தவற்றைத் தொகுத்து மொழிபெயர்ப்பது இவர் முறைமை. இத்தகைய முறைமைக்கு வரலாறு உண்டு. தரவுகளைத் தேடி எடுக்க வேண்டும்.
பெருந்தலைவர்கள் ஆற்றிய புகழ் பெற்ற உரைகளைத் தேர்வு செய்து மொழிபெயர்த்த நூல் ‘காலத்தின் குரல்.’ தொடராக வெளியான போது சிலவற்றை வாசித்து மகிழ்ந்தேன். உணர்ச்சியைக் கடத்தும் தெளிவான மொழிநடை. விவரிப்பைத் துல்லியமாகப் பற்றும் சொற்கள். வாசிப்புக்கு இடைஞ்சல் இல்லாமல், இழுத்துச் செல்லும் இனிமை கொண்ட இவரது மொழிபெயர்ப்பை வாசிப்பது நல்லின்ப அனுபவம்.
பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய ‘வரலாறு என்னை விடுதலை செய்யும்’ என்னும் உரையின் இறுதிப் பகுதி இது: ‘இந்தக் கோழைகளின் கொடூரமான அச்சுறுத்தல்களும் மனிதநேயம் அற்ற தண்டனைகளும் என் சிறைவாச நாட்களை எப்படியெல்லாம் துன்புறுத்தும் என்று எனக்குத் தெரியும். உயிருக்கு இணையான என் எழுபது தோழர்களைப் படுபாதகமாய்க் கொன்ற கொடுங்கோலனுக்கே அஞ்சாத நான், இந்ஹச் சிறைச்சாலைக்கா நடுங்கப் போகிறேன்? என் மேல் குற்றம் சுமத்துங்கள். பரவாயில்லை. வரலாறு என்னை விடுதலை செய்யும்.’ (ப.67).
இருபத்திரண்டு உரைகள் இந்நூலில் உள்ளன. சில உரைகள் முழுமையாகவும் சில சுருக்கமாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வரலாற்றை அறிதற்கும் சமூகத்தைப் புரிந்து கொள்வதற்கும் இந்த உரைகள் உதவும்.
இந்நூலைத் தொடர்ந்து ‘உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்’ என்னும் நூல் வெளியாயிற்று. மாபெரும் எழுத்தாளர்களின் கட்டுரைகள் இதில் உள்ளன. ஜார்ஜ் ஆர்வெல்லின் கட்டுரை ‘கிழக்கு டுடே’வில் முதலில் வெளியான போது வாசித்தேன். சுவாரசியமான கட்டுரை. அதன்பின் வெளியானவற்றையும் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். எழுத்தாளர்கள் தம் அனுபவத்தோடு இயைத்து எழுதிய இக்கட்டுரைகளைப் பெரிதின் முயன்று தமிழாக்கியிருக்கிறார். சிறந்த தொகுப்பு நூல் இது.
இவர் இன்னும் பல நூல்களை மொழிபெயர்க்க வேண்டும். அது மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆழ்ந்து வாசிக்கும் இவர் சுயமான ஆய்வுக் கட்டுரைகள் எழுத வேண்டும். புனைவின் பக்கம் தம் பார்வையைத் திருப்புவதும் நல்லது.
இவர் நூல்களுக்கும் நல்ல மெய்ப்புத் திருத்துநர் அமைய வேண்டும்.
000
இன்னொரு மாணவரையும் இவ்விடத்தில் அறிமுகப்படுத்த விழைகிறேன். இவர் வரலாற்றுத் துறை மாணவர். முனைவர் பட்ட ஆய்வாளர். பெயர்: பாரத் தமிழ். ‘நிலமற்றவனை நனைக்கும் மழை’ எனக் கவிதைத் தொகுப்பு வெளியிட்ட இவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டாஃபி’ இப்போது வெளியாகியுள்ளது. பதினான்கு கதைகள் கொண்ட இத்தொகுப்புக்கு என்னிடம் முன்னுரை கேட்டார். தொடர்பயணத்தில் இருந்ததால் எழுத இயலவில்லை. பிற்குறிப்பு மட்டும் எழுதிக் கொடுத்தேன். அது:
பாரத் தமிழ் நல்ல இலக்கிய வாசகராக எனக்கு அறிமுகம் ஆனார். கவிதை, சிறுகதை எழுதுபவர் என்பதைப் பிறகு அறிந்தேன். இத்தொகுப்பில் உள்ள கதைகளை வாசித்தது நல்ல அனுபவம். சாதாரண மனிதர்களின் வாழ்விலிருந்து அசாதாரணக் கணங்களைத் தேர்வு செய்து எழுதிய கதைகள் இவை. திருமணம் செய்து கைவிட்டுப் போன கணவன் சாவைப் புறக்கணிக்கும் பெண், பிரிந்த காதலரின் ரயில் சந்திப்பு, நண்பர்களால் மனதில் வாழும் ஊர் என விரியும் கதையுலகம். ஒரு நாயின் கதையும் இருக்கிறது. அம்பேத்கர், பெரியார், காந்தி முதலிய தலைவர்கள் தொடர்பான சம்பவங்கள் இயல்பாகக் கதைகளுக்குள் வருகின்றன. இவையெல்லாம் தவிர்க்க வேண்டியவை என்று எப்படியோ நவீன இலக்கிய மனதுள் பதிந்து விட்ட எண்ணத்தை எழுத்தின் போக்கில் கடந்து சென்றிருக்கிறார். கதைக்களம் குறைந்த சொற்களில் உருவாகிவிடுகிறது. வடார்க்காட்டு வட்டார மொழி சரளமாக ஓடுகிறது. எல்லா வகையிலும் நம்பிக்கை தரும் பாரத் தமிழின் எழுத்து அவரிடமிருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்க வைக்கிறது.
000
நூல்களின் விவரம்:
- ஜார்ஜ் ஜோசப், எமரால்ட், 2023, சீர்மை, சென்னை, விலை ரூ.190/-
- ஜார்ஜ் ஜோசப், பெருநெஞ்சன், 2024, சீர்மை, சென்னை, விலை ரூ.120/-
- இஸ்க்ரா, காலத்தின் குரல், 2022, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை ரூ.240/-
- இஸ்க்ரா, உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள், 2023, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை ரூ.285/-
- பாரத் தமிழ், டாஃபி, 2024, வம்சி புக்ஸ், திருவண்ணாமலை, விலை ரூ.200/-.
—– 12-01-25
❤️
சிறப்பான அறிமுகம் ஐயா
சிறுகதை கைவரும் வல்லாளர் ஜார்ஜ் ஜோசப் என்பதில் ஐயமில்லை
அன்பும் நன்றியும் ஐயா ♥️
சிறந்த மதிப்புரை ஐயா புதிய எழுத்தாளர்களுக்கு தாங்கள் கொடுக்கும் உத்வேகமும், உற்சாகமும் அருமை ஐயா. எழுதத் தூண்டும் எங்களைப் போன்ற படைப்பாளர்களுக்கு தாங்கள் தரும் ஆதர்சம் அருமை ஐயா.
உண்மை.