ஒரு ஊருல

You are currently viewing ஒரு ஊருல

 

 

மதுரை, கே.கே.நகரில்  ‘Turning PoinT’ என்னும் புத்தகக் கடை 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  ஆங்கில நூல்களை விற்கும் கடை; தமிழ் நூல்களும் உண்டு. அதைத் தொடங்கி நடத்தியவர் குப்புராம் என்னும் புத்தக ஆர்வலர். ‘புக்குராம்’ என்றே அவரை அழைப்பார்களாம். அந்தளவு புத்தகக் காதல் கொண்ட அவர் இப்போது இல்லை. அவர் மகள் சூர்யா ப்ரீத்தி அக்கடையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். புத்தகக் கடை என்பது வெறுமனே விற்பனை நிலையம் மட்டுமல்ல. புத்தகப் பண்பாட்டு மையம். புத்தகம் சார்ந்த பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளில் தாமும் ஈடுபட்டுத் தம் வாடிக்கையாளரையும் ஈடுபடச் செய்யும் தன்மை அதற்கு அவசியம். மேலும் அவ்வூரின் முக்கியப்புள்ளிகள், நிறுவனங்கள் என எல்லாவற்றையும் புத்தகப் பண்பாட்டோடு ஏதேனும் வகையில் தொடர்புகொள்ளச் செய்வது மிக முக்கியம்.

ஆங்கில நூல்கள் விற்பனை செய்யும் ‘Crossword’ நிறுவனம் வழங்கும் ‘புத்தக விருதுகள்’ மிகவும் புகழ்பெற்றவை. பெங்களூருவில் உள்ள ‘Atta Galatta’ புத்தகக் கடை பிரபலமானது. ஆண்டுதோறும் கவிதைத் திருவிழா நடத்துவதோடு தொடர்ந்து கடைக்குள்ளேயே மாதந்தோறும் புத்தகம் சார்ந்த பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறது.  ‘ஆட்டா கலாட்டா விருது’ எனப் புத்தகங்களுக்கு வழங்கும் விருதும் முக்கியமானது. இதுபோலப் பல சான்றுகளைச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் இவ்வகை முன்னெடுப்புகளைச் செய்வது கோவை ‘விஜயா பதிப்பகம்.’ ‘Turning PoinT’ விற்பனையகமும் பல நிகழ்வுகளை முன்னின்று நடத்துகிறது. அதில் சிறப்பானது ‘சிறுவர் இலக்கியத் திருவிழா.’ சிறுவர் இலக்கியம் சார்ந்த கவனம் இப்போது கூடிவரும் தமிழ்ச் சூழலில் இவ்விழாவின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. இதை முழுமையாகப் பொறுப்பெடுத்துத் தம் குடும்பத்தார், நண்பர்கள் உதவியுடன் செய்பவர் சூர்யா ப்ரீத்திதான். அவரது ஆர்வமே நான்கு ஆண்டுகளாக இவ்விழா தொடர்ந்து நடைபெறக் காரணம்.

கடந்த ஆண்டே என்னை இவ்விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அழைத்தார். அப்போது எனக்கு நாட்கள் ஒத்துவரவில்லை. இந்த ஆண்டுக்கென ஆறுமாதம் முன்னாலே என்னிடம் ஒப்புதல் பெற்றுக்கொண்டார். சிறுவர் இலக்கியத்தில் நான் பெரிதாக ஒன்றும் எழுதவில்லை. என் பிள்ளைகளுக்காக எழுதிய பாடல்கள் ‘சிறுவர் மணி’ உள்ளிட்ட சிறுவர் இதழ்களில் வெளியாகியுள்ளன. அவற்றைத் தொகுக்கவும் இல்லை. நண்பர் தேவிகாபுரம் சிவகுமார் தூண்டுதலில் சில கதைகள், கட்டுரைகள் எழுதி இதழ்களில் வெளியாகியுள்ளன. நூலாக எதுவும் வரவில்லை.

ஒரு ஊருலஒரு ஊருல

‘பூனாச்சி’ நாவலில் வரும் அத்தியாயம் ஒன்றை எடுத்து ‘Poonachi : Lost in the forest’ என்னும் தலைப்பில் Westland பதிப்பகம் ஆங்கிலத்தில் வெளியிட்டது.  ‘தோன்றாத்துணை’ நூலின் முதல் அத்தியாயத்தைச் சிறுவருக்கான வகையில் மாற்றி ‘நிலா வெளிச்சத்தில்’ எனத் தமிழிலும் ‘Out in the moonlight’ என ஆங்கிலத்திலும்  ‘Tulika’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்திய மொழிகள் சிலவற்றிலும் இந்நூல் வெளியாகியுள்ளது. இவைதான் சிறுவர் இலக்கியத் திருவிழாவுக்கு என்னை அழைக்கக் காரணம்.

தொடர் பயணங்களாலும் மனநிலையின் காரணமாகவும் உடல் ஒத்துழைப்புத் தராத போதும் விழாவில் கலந்துகொள்ளச் சென்று சேர்ந்தேன். எந்தச் சிரமமும் நேராத வகையில் போக்குவரத்து, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்து கவனித்துக் கொண்டது நிம்மதியாக இருந்தது. போதுமான அளவு ஓய்வு எடுத்துக்கொள்ள முடிந்தது. எனினும் இருநாட்களில் எனக்கு நான்கு அமர்வுகள்.

23-11-24 அன்று தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்றேன். எழுத்தாளர் உதயசங்கரின் ‘மந்திரத்தொப்பி’ நூலை அந்நிகழ்வில் வெளியிட்டேன். தமிழ்நாட்டில் இலக்கிய விழாக்களே இல்லை என்னும் சூழலில் சிறுவர் இலக்கியத்திற்கெனத் தனிவிழா நடத்துவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுச் சுருக்கமாக உரையாற்றினேன். இவ்விழாவிற்கு ‘ஒரு ஊருல…’ எனத் தலைப்பிட்டிருந்தனர். ஊர்ப்பெயர், மக்கட்பெயர்களைச் சுட்டிச் சொல்லக் கூடாது என்பது நம் அக இலக்கிய மரபு. அதன் தொடர்ச்சியை நாட்டுப்புறக் கதைகளில் காணலாம்.  ‘ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தானாம்’, ‘ஒரு ஊருல ஒருத்தி இருந்தாளாம்’ என்று சொல்வதே மரபு. ஒரு ஊர் என்பதில் நமக்கு விருப்பமான ஊரைப் பொருத்திக் கொள்ளலாம். ‘ஒருத்தன் அல்லது ஒருத்தி’ என்பதில் நமக்கு விருப்பமான பெயரை வைத்துப் பார்க்கலாம்.  இந்தச் செய்தியை மட்டும் சொல்லி என் உரையை முடித்துக்கொண்டேன்.

அதைத் தொடர்ந்து ‘நிலா வெளிச்சத்தில்’ என்னும் என் நூல் பற்றிய அமர்வு. குழந்தைகளுக்குக் கதை சொல்வதையே தம் தொழிலாகக் கொண்டிருக்கும் கதைசொல்லி தீபா கிரண். அவர் சில வித்தியாசமான இசைக்கருவிகளின் துணை கொண்டு  ‘நிலா வெளிச்சத்தில்’ கதையைச் சிறப்பாகச் சொன்னார். சொன்னார் என்பதைவிட நிகழ்த்திக் காட்டினார் என்றே சொல்ல வேண்டும். பாட்டு, இசை, ஓசை, சொல்லல் என எல்லாவற்றையும் பயன்படுத்தி அக்கதையை விவரித்தார். எழுத்தில் இருப்பதைப் பிரமாதமாக நிகழ்த்திக் காட்டினார். அதைத் தொடர்ந்து அந்நூல் பற்றிய சில செய்திகளை நான் பகிர்ந்துகொண்டேன்.

பிற்பகலில் ஓர் அமர்வு. நான்கு பேர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேள்விக்கணைகளைத் தொடுத்தால் என்ன செய்ய முடியும்?  ‘கதைகளும் வாழ்வின் மீதான அதன் தாக்கங்களும்’ என அவ்வமர்வுக்குத் தலைப்பு. இது பொதுவானது என்றும் நானும் அதில் ஒருவராகப் பேச வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். ஆனால் என் கதைகளைப் பற்றி என்னிடம் உரையாடும் அமர்வு என்பதைச் சிறிது நேரத்திற்கு முன்னரே அறிந்தேன். தலைப்புக் கொடுத்து ஒருங்கிணைத்தவர் நண்பர் அ.முத்துகிருஷ்ணன். உதயசங்கர், வனிதாமணி, அந்தியா ஆகியோர் கேள்விகளைக் கேட்டனர். எனக்கு உடல்நிலை சரியில்லை, அதிகம் பேச முடியாது, நீங்கள் கூடுதலாகப் பேசி என்னைக் காப்பாற்றிவிடுங்கள் என்று சொல்லியிருந்தேன். அதன்படி எல்லோரும் ஒத்துழைத்தனர்.

‘பூனாச்சி’ நாவல் பற்றி உதயசங்கர் நல்ல நுட்பத்தோடு பேசினார். சில இடங்களை அவர் எடுத்துக்காட்டி விவரித்தார். அதே போலத் ‘தோன்றாத்துணை’ நூல் பற்றி வனிதாமணி விரிவாகச் சொன்னார். அந்தியாவும் ‘பூனாச்சி’ பற்றிப் பெண்ணியப் பார்வையில் சில செய்திகளை மனம் கொள்ளும்படி எடுத்துப் பேசினார். ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகளுக்கு முடிந்தவரைக்கும் சுருக்கமாகப் பதில் சொன்னேன். எழுத்தாளர்களின் பார்வைகளும் அவர்கள் அறிந்துகொள்ள விரும்பும் விஷயங்களும் எனக்கு உற்சாகம் கொடுத்தன. நிறைவான அமர்வு.

விழாவில் கதைசொல்லும் நிகழ்வுகளும் சிறுவர் திறன்களை வெளிக்கொணரும் வகையிலான பயிலரங்குகளும் போட்டிகளும் வெவ்வேறு இடங்களில் நடந்தன. அவ்வரங்குகளை அற்புதமாக வடிவமைத்திருந்த விதத்தை ஒருசுற்றுப் பார்வையிட்ட பிறகு அறைக்கு வந்து ஓய்வெடுத்துக் கொண்டேன். மனம் அவாவினாலும் உடல் ஒத்துழைக்க வேண்டுமே. நல்ல ஓய்வுக்குப் பிறகு மாலையில் மதுரைக் கல்லூரிப் பேராசிரியர் நண்பர் பொ.ராஜாவும்  அமெரிக்கன் கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் முத்துப்பாண்டியும் அறைக்கு வந்தனர். அவர்களுடன் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் உரையாடியதும் உடல் இன்னும் கொஞ்சம் தெம்பாயிற்று.

ஒரு ஊருல

இரண்டாம் நாள் (24-11-24) எனக்கு ஒரே ஒரு அமர்வு மட்டுமே என்பதால் முற்பகல் முழுக்க அறையிலேயே ஓய்வெடுத்துக் கொண்டேன். மதிய உணவுக்குப் பிறகு ‘Creating Relatable Characters for Young Readers’ என்னும் தலைப்பிலான கலந்துரையாடல். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நடைபெற்ற அமர்வை மீரா ஒருங்கிணைத்தார். அதிதி ராவ், அஸ்வின் பிரபு, சவி கர்னல் ஆகியோருடன் பங்கேற்றேன். சிறுவர் இலக்கியத்தில் பாத்திரங்களை உருவாக்கும் விதம் பற்றி ஒவ்வொருவர் பார்வையும் வெளிப்படும் வகையில் உரையாடல் அமைந்தது.

சில லட்சம் செலவில் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்குப் பெற்றோர் ஒத்துழைப்பு அவ்வளவாகக் கிடைக்கவில்லை என ப்ரீத்தி வருத்தப்பட்டார். உண்மைதான். சிறுவர்களுக்குப் பாடநூல் தவிரப் பிறநூல்களை வாசிக்கும் பயிற்சி இல்லை. அதற்கு முக்கியமான காரணம் பெற்றோர்தான். மதுரை போன்ற பண்பாட்டு நகரில் நடைபெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பங்கேற்றிருக்க வேண்டும். பெற்றோரும் பள்ளிகளும் அதை ஊக்குவித்திருக்க வேண்டும். எனினும் வந்திருந்த சிறுவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். விழாவை அறிந்து வெளியூர்களில் இருந்து தம் பிள்ளைகளோடு வந்து கண்டுகளித்த பெற்றோரையும் சந்திக்க முடிந்தது. நல்ல வாசகர்கள் சிலர் வந்து பேசிப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்; புத்தகங்களில் கையொப்பம் பெற்றனர். இத்தகைய விழாக்களில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் முதன்மை மகிழ்ச்சிக்குக் காரணம் வாசகர்கள்தான்.

—–     28-11-24

Add your first comment to this post