அல்லயன்ஸ் இலக்கிய விழா – 2

You are currently viewing அல்லயன்ஸ் இலக்கிய விழா – 2

மறுநாள் வாடிவாசல் கிராபிக் நாவல் பற்றிய அமர்வு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியான அந்நூல் வாசகர் கவனத்தைப் பெரிதும் பெற்றது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு இப்போது வெளியாகியுள்ளது. அதையொட்டித் தனியமர்வு. நானும் ஓவியர் அப்புபனும் பங்கேற்றோம். ஒருங்கிணைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த் தட்சிணாமூர்த்தி. அப்புபன் சிறுதிரையிடலையும் நிகழ்த்தினார். ஆனந்த் நல்ல தயாரிப்புகளோடு வந்து கேள்விகளை முன்வைத்தார். வாடிவாசல் கிராபிக் நாவல் உருவான பின்னணி, காலச்சுவடு கண்ணனின் பங்கு, எங்களுக்குள் இருந்த இணக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பேசினோம். ஓர் ஆசிரியராக மாணவர்களை நான் அணுகும் விதம் பற்றிய கேள்வியையும் ஆனந்த் கேட்டார். சுருக்கமாகப் பதில் சொன்னேன். அப்புபன் ஒரு அமர்வில் பங்கேற்றால் பார்வையாளர்களை ஜாலியாக்கி விடுவார். விஷயத்தோடும் குதூகலமாகவும் அமர்வு அமைந்தது.

அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் பலரைச் சந்தித்தேன். நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் பலர் அங்கு பயில்கிறார்கள். என் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் அங்கே பொருளியலும் அரசியல் அறிவியலும் இணைந்த இளங்கலைப் பட்டப்படிப்பு பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர் சர்வேஷ். தஞ்சாவூரைப் பூர்விகமாகக் கொண்ட அவர் குடும்பம் இப்போது கோவையில் வசிக்கிறது. இரண்டு அமர்வுகளிலும் மிகச் சிறப்பாக மொழிபெயர்த்தார். குறிப்பு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் என் பேச்சை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்த்தார். நல்ல நினைவாற்றலோடு சிறுவிஷயத்தையும் விடாமல் சரளமாக மொழிபெயர்த்ததை அனைவரும் பாராட்டினர். என் படைப்புகள் பலவற்றைப் படித்திருந்தார். தலைமையாசிரியராகப் பணியாற்றும் அவர் அம்மா என் படைப்புகளுக்குத் தீவிர வாசகராம். ஆகவே தமிழ் வழியாகவே வாசித்திருக்கிறார். இரண்டு நாளும் என்னுடனிருந்து அன்போடு  கவனித்துக் கொண்டதும் அவர்தான்.

ஆனந்த் தட்சிணாமூர்த்தி ஏற்கனவே திருச்சி இலக்கிய விழாவில் அறிமுகமானார். பதிப்பு தொடர்பாக நியூயார்க் சென்று படித்து வந்திருப்பவர். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் நூல் வெளியிடும் திட்டங்கள் வைத்துச் செயல்படுகிறார். ட்டூ சோர்ஸ் (Two Shores) என்னும் பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கிறார். வசுதேந்த்ராவின் நூலையும் இவர்தான் வெளியிட உள்ளார். தமிழ் நூல்களைப் பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்லும் வழிமுறைகள் பற்றி ஆர்வமும் அறிவும் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களும் அவருடன் நிறையப் பேச முடிந்தது. எதிர்காலத் தமிழ்ப் பதிப்புத் துறைக்கு நம்பிக்கை தரும் ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று தோன்றியது. 2023ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழிபெயர்ப்பாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தியின் மகன் என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவேயில்லை. நானாக அறிந்துகொண்டேன். இன்றைய தலைமுறையினர் பெற்றோரின் வெளிச்சத்தில் இயங்குவதை விரும்புவதில்லை. தமக்கென்று சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

விழாவில் தொடக்கவுரை நிகழ்த்தியவர் காங்கிரஸ் கட்சிக்காரரான தமிழ்நாட்டு அரசியல்வாதி மணிசங்கர் ஐயர். சசிதரூர் போல இவரும் புத்தகம் எழுதுகிறார்; இலக்கிய விழாக்களில் பங்கேற்கிறார். ஏற்கனவே சில இலக்கிய விழாக்களில் பார்த்திருக்கிறேன். பேசியதில்லை. அரசியல்வாதிகளிடம் பேச எனக்கு அவ்வளவாக விஷயம் இருப்பதில்லை. ஒதுங்கிக் கொள்வதே வழக்கம். நிகழ்ச்சி நிரலைப் பார்த்துவிட்டு என்னைக் காண வேண்டும் என்று கேட்டதாகத் தகவல் சொன்னார்கள். முதல்நாள் இரவு விருந்தில் சந்தித்து அவருடன் சிறிது நேரம் பேசினேன். என்னுடைய இரண்டு நூல்கள் தம்மிடம் இருப்பதாகச் சொன்னார்.

அவரது பன்னிரண்டாம் வயதில் தந்தை இறந்துவிட்டாராம். தாயாருடன் டெல்லியில் வசித்திருக்கிறார். தாயார் நன்றாகத் தமிழ் பேசுவாராம். தாய் தமிழில் பேச, இவர் ஆங்கிலத்தில் பதில் சொல்வாராம்.  ‘தமிழைக் கேட்டு வளர்ந்தேன், பேசி வளரவில்லை’ என்றார். பிறகு தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வேண்டி வந்தபோதுதான் பேசக் கற்றுக்கொண்டாராம். மயிலாடுதுறைத் தொகுதியில் நின்றபோது ‘நீங்கள் பேசுவது செந்தமிழ். நான் பேசுவது எந்(ன்)தமிழ்’ என்று கூறினாராம். அது மக்களிடம் எடுபட்டதாம். மயிலாடுதுறைத் தொகுதி அனுபவங்களைக் கொஞ்சம் அசை போட்டார். பஞ்சாபைச் சேர்ந்தவரான அவர் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். பல்கலைக்கழகத்தின் புல முதன்மையரான (Dean)  அனிருத் இளைஞர். சில ஆண்டுகள் சென்னையில் இருந்திருக்கிறார். பாட்டி தமிழ்ப் பேசுபவர். அவரிடம் கற்ற பிள்ளைத்தமிழில் என்னிடம் பேசினார்.

வழக்கம் போலப் புகைபடங்கள், கையொப்பங்கள் ஆகியவையும் நடந்தன. வாசகர்கள் பலர் வந்து பேசியதைக் கேட்டேன். எழுத்தாளர்கள் சிலரிடமும் பேச முடிந்தது. படைப்பிலக்கியத் துறையில் முதுகலை பயிலும் தமிழ்நாட்டு மாணவர் ஒருவர் சிறு நேர்காணல் செய்தார். பதினைந்து நிமிடப் பதிவு.  இரண்டு அமர்வுகளிலும் ஒவ்வொரு அட்டைப்பெட்டியைப் பரிசாக வழங்கினார்கள். பல்கலைக்கழகப் பெயர் பொறித்த கேடயம். அவற்றைத் தூக்கி வருவதுதான் சிரமமாக இருந்தது. போக்குவரத்து வசதியில் கொஞ்சம் குறைபாடு இருந்தது. அமர்வுகளின் நேரம் முன்பின்னாக அமைந்தது. மற்றபடி சிறப்பான ஏற்பாடுகள்.

அல்லயன்ஸ் இலக்கிய விழா - 2

கல்லூரியில் விழா என்றால் மாணவர்களுக்குச் சுதந்திரம் என்று பொருள். அரங்கில் அமர்ந்தோர் குறைவு. சில பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். வெளியிலிருந்து வந்த இலக்கிய ஆர்வலர்கள் பலர் அரங்கில் அமர்ந்திருந்தனர். இலக்கிய ஆர்வமுள்ள பல மாணவர்களுக்கு வேலைகள் ஒதுக்கியிருந்ததால் அவர்களால் அமர்வுகளுக்கு வர இயலவில்லை என்பது தெரிந்தது. பெங்களூருவில் பிரபலமான ஆட்டாகலாட்டா புத்தகக் கடை இருந்தது. அவர்கள் தமிழ் நூல்களும் விற்பார்கள்.  மாணவர்கள் புத்தகம் வாங்குவது குறைவாகத்தான் இருக்கும். எனினும் கடையில் கூட்டம் இருந்தது.

இரண்டாம் நாள் பிற்பகலில் கிளம்பினேன். மூன்றாம் நாளும் இருந்திருக்கலாமோ என்று எண்ணும் அளவு மனதுக்குப் பிடித்திருந்த விழா இது.

—–  26-02-25

Latest comments (1)