தஞ்சாவூர் மாவட்டம் மல்லினப்பட்டினம் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ரமணி கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் மேல் ஒருதலைக் காதல் கொண்டிருந்த இளைஞர் மதன் என்பவர் பள்ளிக்குள் நுழைந்து இச்செயலைச் செய்திருக்கிறார். சிறுகுழந்தைகள் முன்னிலையில் வகுப்பறையிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கலைக்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் எனப் பல அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளுக்குத் தரும் முக்கியத்துவத்தைப் பள்ளிகளுக்கோ பிறவகைக் கல்லூரிகளுக்கோ அரசு தருவதில்லை. அதுதான் நடைமுறை உண்மை.
மருத்துவக் கல்லூரிகளுக்கே ஒன்றிய அரசும் முதன்மை தருகிறது. இந்திந்த வசதிகள், உள்கட்டமைப்பு இருந்தால்தான் அனுமதி தருவோம், அனுமதியைப் புதுப்பிப்போம் என்று ஒன்றிய அரசின் அமைப்புகள் தெரிவிப்பதைக் காண்கிறோம். அப்படிப் பள்ளிகளுக்கோ கலைக்கல்லூரிகளுக்கோ நடைமுறை இல்லை. பள்ளிகளில் இருந்துதான் எல்லாத் துறைக்கும் மாணவர்கள் உருவாகி வர வேண்டும். கலைக்கல்லூரிகள்தான் ஆசிரியர்களை உருவாக்கும் இடம். ஆனால் இவற்றை அரசு கடைசிநிலையில்தான் வைத்திருக்கிறது.
இந்நிறுவனங்கள் பலவற்றில் இரவுக் காவலரோ பகல் காவலரோ கிடையாது. குறிப்பாகத் தொடக்கப் பள்ளி எதிலும் காவலரே இல்லை. அரசு கல்வி நிறுவனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது என்பது கட்டிடங்கள் கட்டித் தருவது மட்டுமல்ல. தேவையான மனித வளத்தையும் மேம்படுத்த வேண்டும். பல பள்ளிகள் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் சமூக விரோதச் செயல்களுக்கான களங்களாக உள்ளன. காலையில் பள்ளிக்கு வந்து பார்த்தால் மதுப்பாட்டில்களும் தின்று போட்ட உணவுப் பொட்டலங்களும் மலக் குவியல்களும் கிடக்கும். கல்வி நிறுவனத்திற்குரிய மதிப்பை அரசும் வழங்கவில்லை. பல தலைமுறைகளாகக் கல்வி வாடையே காணாத பொதுமக்களும் மதிப்பதில்லை.
அரசு கலைக்கல்லூரிகளில் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறேன். கிராமப்புறக் கல்லூரி ஒன்றில் பணியாற்றிய 1990களின் இறுதியில் ஒரே ஒரு இரவுக்காவலர் மட்டும் இருப்பார். பல கட்டிடங்கள் உள்ள கல்லூரி. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் கொண்ட நிலம். கல்லூரிக்குச் சுற்றுச்சுவர் கிடையாது. ஒரே ஒருவர் என்ன செய்ய முடியும்? பெயருக்குத்தான் பாதுகாவல். அவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி ஒரு கட்டிடத்தின் உள்ளே பூட்டிக்கொண்டு படுத்துத் தூங்கிவிடுவார்.
வெளியில் இருக்கும் கட்டிடங்களின் சில வகுப்பறைகளில் பூட்டு கிடையாது. பூட்டு இருந்தாலும் குறிப்பிட்ட வாக்கில் இழுத்தால் திறந்துகொள்ளும். அப்படிப்பட்ட வகுப்பறைகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும். மதுப்பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் மட்டுமல்ல, ஆணுறைகளும் அங்கே கிடந்ததுண்டு. கல்வி நிறுவனத்தைப் பற்றி உயர்வான எண்ணம் இல்லாத கீழான சமூகம் நமது. கோயில்களுக்கு கேட்டால் நிதி தருவார்கள். எதுவும் தரவில்லை என்றால் ஏசுவார்கள். கல்வி நிறுவனத்திற்கு ஒருபைசா தர மாட்டார்கள். தரவும் தூண்ட மாட்டார்கள். அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் வசதிகளையும் தவறாகப் பயன்படுத்துவார்கள்.
காலையில் ஒருகூட்டமே மலம் கழிக்கக் கல்லூரிக்குள் வரும். அருகில் உள்ள கிராம மக்கள் தம் ஊருக்கு விரைந்து செல்வதற்கான குறுக்குவழியாகக் கல்லூரியைப் பயன்படுத்துவார்கள். வகுப்புகள் நடக்கின்றன என்னும் உணர்வே அவர்களுக்கு இருக்காது. வேகமாகவும் சத்தமாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வார்கள். அதே கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட சிறுசண்டை சாதிக் கலவரமாக மாறியது. மாணவர்கள் அல்லாத வெளியாட்கள் கட்டை கம்புகளுடன் உள்ளே புகுந்தனர். கல்லூரியில் பகல் காவலர் பணியிடமே கிடையாது. கல்லூரிக்குள் யார் வேண்டுமானாலும் வரலாம்; போகலாம். திறந்த வீடுதான். எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
பின்னர் அக்கல்லூரியின் முதல்வர் பொறுப்பை நான் ஏற்றபோது பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து குறைந்தபட்ச ஊதியத்தில் பகல் காவலரை நியமித்தேன். பொதுப்பணித் துறையிடம் போராடிக் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாவல் அறை ஒன்றும் கட்ட ஏற்பாடு செய்தேன். விளக்கு மின்விசிறியுடன் அமைந்த அந்த அறை அடிப்படைப் பணியாளர்களின் ஓய்வறையாகவும் பயன்பட்டது. அலுவலக உதவியாளர், பெருக்குநர், நீர் வழங்குநர் என்றெல்லாம் பணியிடங்கள் உள்ளன. அப்படிப் பணியாற்றுவோருக்கு உட்கார இருக்கை கிடையாது. உட்கார்ந்து சாப்பிட அறை கிடையாது. பாதுகாவல் அறை வந்ததும் அது அவர்களுக்கான புகலிடமாக அமைந்தது. நானே அதை எதிர்பார்க்கவில்லை. ‘நாங்க உக்காந்து ஒருவாய் சாப்பிட ஒரெடம் குடுத்திட்டீங்க சார்’ என்று ஒரு பெண் ஊழியர் கூறியதை மறக்க முடியாது.
கல்லூரி தொடங்கியதும் நுழைவாயில் கதவை மூடிவிட வேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் அடையாள அட்டையைக் காட்டி வரலாம். வேறு யார் வந்தாலும் பெயர், முகவரி, நோக்கம் உள்ளிட்ட விவரங்களை ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்த பிறகே அனுமதிக்கப்படுவார். இந்த நடைமுறை கல்லூரி ஒழுங்குக்குப் பெரிதும் பயன்பட்டது. கல்லூரியைத் தங்கள் பொதுவெளியாகப் பயன்படுத்திய சிலருக்கு எரிச்சலைக் கொடுத்தது. முக்கியமாக ஆசிரியர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பலர் தாமதமாக வருவார்கள். அவர்களது இருசக்கர வாகனம் வெகுவேகமாகக் கல்லூரிக்குள் நுழையும். எப்போதும் மூடா நெடுங்கதவு அல்லவா? அதை மூடி வைத்தால் வண்டியை நிறுத்த வேண்டும். காவலர் வந்து திறந்த பிறகே நுழைய முடியும்.
மாபெரும் ஆசிரியராகிய தன்னைச் சாதாரண ஒருவன் நிறுத்துவதை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. கேள்வி கேட்டார்கள். சண்டை போட்டார்கள். பாதுகாவலரை ஏக வசனத்தில் பேசினார்கள். அவர் மீது குறைகளாகச் சொன்னார்கள். எல்லாவற்றையும் பொறுமையாக எதிர்கொண்டேன். ‘நீங்க நேரத்துக்கு வந்துட்டா ஏன் நிற்க வேண்டி நேர்கிறது?’ என்பதை மென்மையாகவும் சிலருக்குக் கடுமையாகவும் சொல்ல வேண்டியிருந்தது. கல்லூரி தொடங்கிய பின்னும் அரைமணி நேரம் நானே சில நாட்கள் நுழைவாயிலில் நின்றேன். பிறகு கொஞ்ச நாளில் அந்த ஒழுங்குக்கு எல்லோரும் உட்படப் பழகினார்கள்.
நாமக்கல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய காலத்திலும் முதலில் செய்த செயல் பகல் காவலர் நியமனம்தான். கல்லூரிக்கு அருகிலேயே இருந்த கிராமத்திலிருந்து இளைஞர் ஒருவரைக் குறைந்தபட்ச ஊதியத்தில் நியமித்தேன். அவருக்கு வேறு சில வேலைகள் கொடுத்து அதிலும் கொஞ்சம் வருமானம் வரும்படி பார்த்துக் கொண்டேன். நுழைவாயிலில் பாதுகாவலர் இருப்பதும் குறிப்பேட்டில் விவரங்கள் பதியப்படுவதும் கல்லூரிக்கு நற்பெயரைக் கொடுத்தது. சுற்று வட்டாரக் கிராம மக்களிடம் கல்லூரி ஒழுங்காக நடக்கிறது என்னும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
இங்கும் ஆசிரியர்களுக்குத்தான் பிரச்சினை. இக்கல்லூரியில் இரண்டு நுழைவாயில்கள் இருந்தன. ஒன்று பயன்படுத்தாமல் இரும்புக் கதவு துருப் பிடித்துக் கிடந்தது. அதையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தேன். கல்லூரி தொடங்கும் நேரம் வரை முதன்மைக் கதவு திறந்திருக்கும். தொடங்கியதும் முதன்மைக் கதவை மூடிவிடுவோம். இன்னொரு கதவு வழியாகத்தான் வர வேண்டும். ஆசிரியர்கள் பலருக்கு இந்தச் சிறுநுட்பம் புரியவில்லை. எதற்குச் சிறுகதவைத் திறக்க வேண்டும் என்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கேள்வி வந்தது. நீங்கள் தாமதமாக வந்தால் இன்னொரு கதவு வழியாகத்தான் வர வேண்டும், தொடர்ந்து அவ்வழியாக வருவது உங்களுக்குக் குற்றவுணர்வை ஏற்படுத்தும் என்றேன். ஏற்படுத்தியதோ இல்லையோ அப்படி ஒரு நுட்பம் இருப்பது அவர்களுக்குப் புரிந்தது.
கல்லூரியாக இருந்தாலும் தொடக்கப் பள்ளியாக இருந்தாலும் பாதுகாவலர் அவசியம். சமூக விரோதிகளைக் கட்டுப்படுத்த அது உதவும். இப்போது பெரும்பாலும் அரசு கல்வி நிறுவனங்களில் சுற்றுச்சுவர் எழுப்பியிருக்கிறார்கள். நுழைவாயிலில் இரும்புக்கதவு போட்டிருக்கிறார்கள். ஆனால் பாதுகாவலர் இல்லை. அதனால் யார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் என்பதுதான் நிலை. அதனால் இப்போதும் மலக்காடாக இருக்கும் கல்வி நிறுவனங்கள் பல. பாதுகாவலர் இருந்தால் பகலில் யார் உள்ளே வருகிறார்கள், நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்காணிக்க முடியும்.
இத்தகைய பணியிடங்களை அரசு கைவிட்டுவிட்டது. இப்போது ‘அவுட் சோர்சிங்’ முறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அடிப்படைப் பணிகளுக்கு ஆட்களை நியமனம் செய்யும் முறை பின்பற்றப்படுகிறது. அது சரியா தவறா என்னும் விவாதத்திற்குள் போக விரும்பவில்லை. எவ்வழியாக இருப்பினும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு இரவிலும் பகலிலும் பாதுகாவலர் வேண்டும்.
—– 22-11-24
அரசு மருத்துவமனைகளிலும் இதே நிலைதான் அண்ணே
20 வருடங்களுக்கு முன் 450 க்கும் மேற்பட்ட பல்வேறு அடிப்படை பணியாளர்கள் பதவி அவர்கள் ஓய்வு பெற்ற பின் நிரப்பப்படவில்லை..
இப்போது வெறும் 40 பேரை வைத்து என்ன செய்ய முடியும்?
மருத்துவஊழியர்-நோயாளி உறவு சிக்கல் தான் ஏற்படுகிறது
நீங்கள் சொல்லும் MCI NORMS டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கு மட்டும் தான் பார்ப்பார்கள் அதாவது முழுமையாக நிரப்பப்பட்டு இருக்கிறதா? என்றால் அதுவும் இல்லை.
இதில் பத்து வருடங்களாக செவிலியர்களுக்கு நிரந்தரப்பணி இல்லை 18000 ரூபாய் சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படைதான்..
பத்து வருடங்கள் மேலாகியும் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரியும் செவிலியர்கள் மருத்துவமனையில் இன்னும் இருக்கிறார்கள்…