பிரெஞ்சுக் காலனியாக புதுச்சேரி இருந்த காலத்தில் கவர்னரின் மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷி) பணியாற்றிய ஆனந்த ரங்கப்பிள்ளை (1709 – 1761) அவர்கள் 1735ஆம் ஆண்டு முதல் 1761ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்தும் இடையிடை விட்டும் நாட்குறிப்பு எழுதியுள்ளார். புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவற்றின் பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றுக்கு ஒரு ஆதாரமாக விளங்குவதோடு பலவகை ஆய்வுகளுக்கு உதவும் ஆவணச் சான்று அது. தமிழ் மொழி வரலாற்றுக்கும் பெரிதும் பயன்படுவதாகும். நாட்குறிப்பு எழுதும் எண்ணம் அவருக்கு உதித்த காரணம் பற்றித் தெரியவில்லை. தமிழ் மரபில் நாட்குறிப்பு எழுதி வைக்கும் வழக்கமும் இல்லை. ஐரோப்பியர்களோடு பழகிப் பணியாற்றியதால் அவர்களிடமிருந்து இப்பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கலாம். தம் நாட்குறிப்பு வரலாற்று ஆவணமாகத் திகழும் என்று கருதாமல் இயல்பாகத் தம் அன்றாடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
அந்நாட்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் நடந்துள்ளன. வரலாற்றாசிரியர்கள் தரவாகப் பயன்படுத்தியுள்ளனர். இதை ஆதாரமாகக் கொண்டே ‘மானுடம் வெல்லும்’, ‘வானம் வசப்படும்’ ஆகிய இருபெரும் நாவல்களைப் பிரபஞ்சன் எழுதினார். இவ்வாறு பலவகைப் பயன்பாடு கொண்ட ஆனந்த ரங்கப்பிள்ளை நாட்குறிப்பு இப்போது பன்னிரண்டு தொகுதிகளாக அச்சில் கிடைக்கிறது. இருபத்தைந்து ஆண்டுக் குறிப்புகளின் மூலப்படி, படியெடுத்தவை, அவற்றின் பாதுகாப்பு, ஆங்கில மொழிபெயர்ப்பு அச்சாக்கம், தமிழ்ப் பதிப்பு முயற்சிகள் என நூல் பிடித்துச் சென்றால் இருநூறு ஆண்டுப் பதிப்பு வரலாறு கிடைக்கிறது. அதில் சில பகுதிகள் தெளிவாக உள்ளன. சில பகுதிகள் குழப்புகின்றன. இதன் மதிப்புணர்ந்து பாதுகாக்கவும் அச்சிடவும் முன்முயற்சி எடுத்தோர் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும்தான். வழக்கம் போலத் தமிழர்கள் மிகத் தாமதமாகவே இதன் அருமையை உணர்ந்திருக்கின்றனர்.
ஆங்கிலேயர்களும் புதுச்சேரி அரசாங்கமும் இக்குறிப்புகளை வெளியிட்ட வரலாறு தெரிகிறது. தமிழ்நாட்டிலிருந்து யாரும் இதை வெளியிட்டதாகத் தெரியவில்லை. 2019இல் மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு அகநி வெளியீடாகப் பன்னிரண்டு தொகுதிகளும் வந்துள்ளன. அனேகமாகத் தமிழ்நாட்டிலிருந்து வரும் முதல் பதிப்பு இதுவாகத்தான் இருக்கும். ஏற்கனவே வந்த பதிப்புகளைப் பற்றி இப்பதிப்பாசிரியர்கள் கீழ்வருமாறு மதிப்பிட்டுள்ளனர்.
‘தெளிவற்ற அச்சும் எளிதில் புரிந்துகொள்ள வழிவிடாத நீண்ட வாக்கியங்களும் கூட்டெழுத்துக்களும் இன்றைய தலைமுறையினரை ரங்கப்பிள்ளையிடம் இருந்து விலக்கியே வைத்திருக்கின்றன. ரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பினை சமகாலத்தவரை வாசிக்க வைக்க வேண்டுமென்றால் நன்கு அச்சிடப்பட்ட பதிப்பும் வழிகாட்டும் வகையிலான குறிப்புகளும் பிறமொழிச் சொற்களுக்கான பொருளும் தேவை என உணர்ந்தோம்.’ (முதல் தொகுதி, ப.11).
தெளிவற்ற அச்சு, நீண்ட தொடர்கள், கூட்டெழுத்துக்கள் என்னும் குறைகள் கொண்ட பதிப்புகளே கிடைக்கின்றன. அவற்றில் வாசகருக்கு வழிகாட்டும் குறிப்புகள் இல்லை. பிறமொழிச் சொற்களுக்கான பொருள் இல்லை. குறைகளைச் சரிசெய்து தேவைப்படுபவற்றைச் சேர்த்துப் பதிப்பிப்பது இப்பதிப்பாசிரியர்களின் நோக்கம்.
ஏற்கனவே புதுவை அரசு வெளியிட்டுள்ள தமிழ்ப் பதிப்பு நூல்களை மூலமாகக் கொண்டுள்ளனர். ஒப்பிட்டுப் பார்க்க ஆங்கிலப் பதிப்புகளைப் பயன்படுத்தியுள்ளனர். பன்னிரண்டு தொகுதிகளையும் பதிப்பிப்பது சாதாரணப் பணியல்ல. அவற்றைக் கணியச்சு செய்வதும் மெய்ப்புப் பார்ப்பதே பெரும் சிரமம். பத்தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி உரைநடை ஆகியவற்றை வாசிக்கும் பயிற்சி கொண்டவர்களே அருகி வரும் நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டு உரைநடையை வாசித்தலும் பொருள் கொள்ளுதலும் பெரும்பணி. தம் உழைப்பையும் காலத்தையும் செலவிட்டு இப்பணியை ஆற்றியிருக்கும் பதிப்பாசிரியர்கள் பாராட்டுக்கு உரியவர்கள்.
‘மூலத்தின் தன்மை குலையாமலும் அதே நேரம் வாசிப்புக்கு லகுவாகவும் மாற்ற வேண்டும் என்பது பெரும் சவாலாகவும் கடினமான பணியாகவும் இருந்தபோதும் அதைச் செய்து முடித்திருக்கிறோம்’ (மேற்படி, ப.11)
எனப் பதிப்பாசிரியர்களும் தமக்கிருந்த சவாலைப் பற்றிக் கூறியுள்ளனர். இப்பதிப்பின் சிறப்புகளாக எவற்றைக் கருதலாம்? இதன் தனித்தன்மை எவை? சிலவற்றைப் பதிப்பாசிரியர்களே தம் முன்னுரையில் பட்டியலிட்டுள்ளனர். அவற்றைத் தொகுத்துக் காணலாம்.
அ) ஆங்கிலப் பதிப்புக்கும் தமிழ்ப் பதிப்புக்கும் இடையில் காணப்பட்ட வேறுபாடுகளை அடைப்புக்குறிக்குள் கொடுத்தல்.
ஆ) வாசிக்கும்போது கடினமாகத் தோன்றும் இடங்களில் அடைப்புக்குறிக்குள் விளக்கம் தருதல்.
இ) அடுத்து வரும் செய்தியைப் புரிந்துகொள்ள உதவும் வகையில் தொடருக்கு முன்னால் அடைப்புக்குறிக்குள் விளக்கம் கொடுத்தல்.
ஈ) அன்றைய மொழிக்கும் இன்றைய மொழிக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளைக் காணும்போது பிழையாக அச்சிட்டுள்ளதாகக் கருத வாய்ப்புள்ளதால் அவ்விடங்களில் இன்றைய முறையைப் பின்பற்றுதல். குறிப்பாக ரகர றகர ழகரப் பயன்பாடுகள்.
உ) சொற்களை எழுதும் முறையில் உள்ள வேறுபாட்டையும் களைதல். சான்று: ரங்கப்பிள்ளை ‘உளுக்கார்ந்து’ என்று எழுதியுள்ளார்; அதை ‘உட்கார்ந்து’ என மாற்றுதல்.
ஊ) இடையிடையே பேச்சுத் தமிழையும் கலந்து எழுதியிருப்பதால் தேவைப்படும் இடங்களில் விளக்கம் தருதல்.
எ) நீண்ட தொடர்களாக அமைபவற்றைச் சிறுசிறு பத்திகளாகப் பிரித்துக் கொடுத்தல்.
ஏ) ஆங்கிலக் கடிதங்களின் மொழிபெயர்ப்பு, முக்கியமான மனிதர்களைப் பற்றிய குறிப்புகள், கோட்டைகள் பற்றிய தகவல்கள், பிறமொழிச் சொற்பட்டியலும் தமிழ் ஒலிப்பும், பெயர்ச் சொல்லடைவு, புகைப்படங்கள் முதலியவற்றைப் பின்னிணைப்பாகத் தருதல்.
ஐ) பொருள் தெரியாத சொற்கள் வருமிடங்களில் கேள்விக்குறி இடுதல்.
ஒ) ஒவ்வொரு தொகுதியின் முன்பகுதியிலும் நாட்குறிப்பின் சாரத்தைத் தொகுத்து வழங்குதல்.
மேற்கண்ட பணிகளோடு கள ஆய்விலும் பதிப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரிக்கும் கடலூர் முதலிய தமிழ்நாட்டு ஊர்களுக்கும் சென்றுள்ளனர். நாட்குறிப்பில் பல கோட்டைகள் பற்றிய தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்று அவற்றில் பெரும்பாலானவை இல்லை. கோட்டை இருந்த தடங்கள்கூட இல்லை. இருநூறு முந்நூறு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வளர்ச்சி என்று கருதுவதா? தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்கத் தெரியாத தமிழர் நிலையை எண்ணி வருந்துவதா? பதிப்பாசிரியர்கள் தம் வருத்தத்தையும் ஆற்றாமையையும் பதிவு செய்துள்ளனர்.
(தொடர்ச்சி நாளை)
—– 10-04-25
மிகவும் பயனுள்ள தகவல். நம்மில் பலர் நாட்குறிப்பு எழுதுவது என்றால் தினமும் செய்யும் வேலையைப் பற்றி எழுதுவது என்று நினைத்து அதைச் செய்வதில்லை. நாட்குறிப்பு என்றால் நம் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளில் நமக்கு ஏற்படும் தாக்கங்களை பற்றி எழுதுவது. இதை முறையாகச் செய்வதற்குப் பயிற்சி தேவை, ஆர்வம் தேவை, முயற்சி தேவை.
ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பின் சிறந்த மதிப்புரை ஐயா. நன்றி