நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

You are currently viewing நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

ஷேக்ஸ்பியர் வீடிருக்கும் அந்த வீதியே காட்சிக்கானதுதான். பல்வேறு நாடுகளில் இருந்தும் காண வரும் விதவிதமான மக்கள். உள்ளும் வெளியும் அமர்ந்து உண்பதற்கேற்ற உணவகங்கள். எல்லா விளம்பரப் பலகைகளிலும் ஷேக்ஸ்பியர். பிற வீதிகள் அதில் இணையும் சந்தியில் ஷேக்ஸ்பியரின் அழகிய சிலை நிற்கிறது. சமீப காலத்தில்தான் அச்சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் முன் நின்று படங்கள் எடுத்துக்கொண்டோம். அங்கிருந்து நூறடித் தொலைவில் அவர் பிறந்து வளர்ந்த வீடு. பெரிய குடும்பம் என்பதால் வீடும் பெரியதுதான். மிகச் சிறப்பான பராமரிப்பு. இணையம் வழியாக ஏற்கனவே பதிவு செய்துகொண்டால் நல்லது. அவர்கள் ஒதுக்கும் நேர வரையறைக்குள் போய்விட்டால் போதும். தரைத்தளம் முழுக்க அவரது வாழ்க்கை பற்றிய தகவல்கள் கொண்ட நவீன வடிவமைப்பு.

மாடியில் சமையலறை, படுக்கையறை, கணப்பு அடுப்புகள் உள்ளிட்ட பலவும் பழைய முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அவர் தந்தை கையுறை தயாரிக்கும் தொழில் செய்தவர். அதை உணர்த்தும் வகையில் பலவகைக் கையுறைகள் இருக்கின்றன. குளிருக்கு அடக்கமான சிறுசிறு அறைகள். எந்த ஆண்டு முதல் அது நினைவில்லமாக இருக்கிறது என்று தெரியவில்லை. ஐந்தாறு நூற்றாண்டுகளாக அவ்வீடு அதே அமைப்பில் இருக்கிறதா என்று தெரியவில்லை. பொருட்கள் பிற்காலத்தவை என்பது உறுதி. ஷேக்ஸ்பியர் வரலாறு தெளிவானதல்ல. கிட்டத்தட்டப் பத்தாண்டுகள் அவர் என்ன செய்தார் என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை என்கிறார்கள்.

வயதான மரம் ஒன்று தோட்டத்தில் இருக்கிறது. நூறாண்டு கண்ட மரமாக இருக்க வேண்டும். அழகான தோட்டம். சற்றே உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டு ரசிக்கலாம்.  அந்த நினைவில்லம் வடிவமைக்கப்பட்ட விதம் பற்றிய வரலாறு எதுவும் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அவ்வீட்டின் விருந்தினர் இல்லம் போன்ற பக்கவாட்டு வீட்டில் அவர் நூல்கள் மட்டும் விற்கும் புத்தகக் கடை இருக்கிறது. அதில் கேட்டுப் பார்த்தேன். அப்படியான நூல் எதுவும் இல்லை என்றார்கள். ஷேக்ஸ்பியர் படம் பதித்த துணிப்பை ஒன்றை அங்கே வாங்கினோம்.

திருமணத்திற்குப் பிறகு தம் குடும்பம் வசிப்பதற்காக சற்றுத் தூரத்தில் வேறொரு வீட்டை வாங்கியிருக்கிறார். அதைப் பார்ப்பதற்காக நடந்து சென்றோம். பராமரிப்பு வேலை நடப்பதால் அதைக் காண அனுமதியில்லை என்றார்கள். பெருந்தோட்டம் கொண்ட நல்ல வீடு அது. வெளியிலிருந்து மட்டும் பார்த்துவிட்டு மதிய உணவுக்காகச் சென்றோம். அந்தக் கிராமத்து மக்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு ஒவ்வொரு கட்டிடமும் உணவகமாக இருக்கிறது. நண்பர் சங்கர் ஒரு உணவகத்தைத் தேர்வு செய்தார். வெளியிலிருந்து பார்த்தால் சிறுகதவு மட்டும் தெரிந்தது. உள்ளே நுழைந்ததும் அடுத்த வீதி வரைக்கும் செல்லும் நீளம் கொண்ட பெரிய உணவகத்தைக் கண்டோம். எல்லா உணவகங்களிலும் மதுவகைகள் உண்டு. அந்நேரத்திற்கு ஐரிஸ் பீர் பொருந்தும் என்று சங்கர் சொன்னார். அடர்கறுப்பில் கசப்புச் சுவை கொண்டிருந்த அதைப் பருகியபடி உண்டோம்.

ஷேக்ஸ்பியர் ஐம்பத்திரண்டாம் வயதில் தம் சொந்தக் கிராமத்தில் இறந்ததாகத் தெரிகிறது.  இறப்புக்குப் பின் அவர் மனைவி அன்னா ஹாத்வே வேறொரு வீட்டில் வாழ்ந்திருக்கிறார். அதுவும் இப்போது நினைவில்லமாக இருக்கிறது. அக்கிராமத்தின் வேறொரு திசையில் அது இருக்கிறது. நடந்து செல்லும் தூரமல்ல. கார் நிறுத்தியிருந்த இடத்தின் அடையாளத்தை நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம். எந்த வீதிக்குச் சென்றாலும் அங்கே இரண்டு மூன்று நிறுத்தங்கள் இருக்கின்றன. நான்கைந்து வீதிகளில் அலைந்து திரிந்து ஒருவழியாகக் காரைக் கண்டுபிடித்தோம். அன்னா ஹாத்வே வீட்டுக்குச் செல்லும் வழியிலும் சிறுகுழப்பம் ஏற்பட்டுவிட்டது. அவ்வில்லத்திற்குள் மாலை நான்கு மணி வரைதான் அனுமதி. நாங்கள் செல்லும்போது மூன்றே முக்கால். ஆனாலும் உள்ளே செல்ல முடியவில்லை.

நான்கு மணி வரை உள்ளே இருக்கலாம். அதனால் மூன்றரைக்கு சீட்டுக் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். எங்களுக்குக் கால்மணி நேரம் போதும் என்றாலும் கணக்கு முடித்துவிட்டோம், அனுமதியில்லை, நாளைக்கு வாருங்கள் என்று சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரர்கள் நேர விஷயத்தில் இரக்கமே இல்லாதவர்கள். பணத்தை வாங்கிச் சட்டைப்பையில் போட்டுக்கொள்ளும் பழக்கம் இல்லாவிட்டால் பரவாயில்லை, வாங்கி வைத்து நாளைய கணக்கில் சேர்த்துக் கொள்ளலாமே. இந்த மாதிரியான யோசனைகளைச் சொன்னாலும் கேட்க மாட்டார்கள். என்ன செய்வது? அனுமதிச் சீட்டு கொடுக்கும் அறையே அந்த வீட்டின் பகுதிதான். அதன் கட்டமைப்பை வெளியிலிருந்தே கண்டோம். முதலிரண்டு வீடுகளை விடவும் இது பெரிய தோட்டத்திற்குள் அமைந்திருந்தது.

இப்போதுகூட அருகில் அவ்வளவாக வீடுகள் இல்லை. கிராமத்திலிருந்து வெகுதூரம் தள்ளிப் புறக்கிராமம் என்று சொல்லும் வகையில் அமைந்திருக்கிறது. நானூறு ஆண்டுகளுக்கு முன் எப்படியிருந்திருக்கும்? ஆள் நடமாட்டமற்ற அந்தப் பகுதிக்குத் தனிமையை நாடி அவர் வந்திருப்பாரோ? நல்ல அழகான வீடு. தனிமையில் இருப்பதற்கும் தக்க வீடு. ஷேக்ஸ்பியர் இறப்புக்குப் பின் அவருடைய நாடகங்களை எல்லாம் முழுமையாக அவர் நண்பர்கள் அச்சிட்டு வெளியிட்டுள்ளார்கள். அதிலிருந்து வருமானம் வந்திருக்கலாம். அவர்களுக்கு இரண்டு மகள்கள். ஒரு மகன். பதினொரு வயதிலேயே மகன் இறந்து போனான். மகனை இழந்து, கணவரையும் இழந்த அவர் மகள்கள் திருமணமாகிச் சென்ற பிறகு தனிமை அவருக்கு வாய்த்திருக்கலாம். ஷேக்ஸ்பியரை விட்டுவிட்டு அவர் மனைவியைப் பற்றி யோசனை ஓட ஆரம்பித்துவிட்டது.

நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள் 2

அங்கிருந்து கிளம்பிப் பெருவழியைப் பற்றினோம். என்னைப் பார்த்த நாளிலிருந்து நான் காலில் செருப்பு அணிந்திருப்பது சங்கருக்குப் பிரச்சினையாக இருந்தது. கண்ணனும் லண்டன் நண்பர்கள் பௌசர், தன்பால் ஆகியோரெல்லாம் சொல்லியும் நான் அசையவில்லை. லண்டனில் வேனிற்காலம் என்பதால் கடுங்குளிர் இல்லை. எனினும் கால் விறைத்துவிடும், பிறகு வலி வரும் என்றெல்லாம் நண்பர்கள் பயமுறுத்தினர். சங்கரும் ஏதேதோ சொல்லி ஷூ வாங்கிக் கொள்ளலாம் என்றார். அந்தப் பெருவழியில் சரியாகக் கார் ஓட்டிச் சென்று என்னைச் சேர்க்கும் பொறுப்பு சங்கரிடம் அல்லவா இருக்கிறது? ஷூ வாங்கிவிடலாம், ஒன்றும் பிரச்சினையில்லை, என் காலுக்கு ஒவ்வாமை இருந்தாலும் பரவாயில்லை, போட்டுக் கொள்கிறேன் என்றெல்லாம் சொல்லி அவரை ஊக்கப்படுத்தினேன்.

ஷேக்ஸ்பியருக்கு அமைந்தது போல உலகத்தில் வேறேதாவது இலக்கிய ஆளுமைக்கு நினைவில்லம் அமைந்திருக்குமா? ஒரு வீடு அல்ல, மூன்று வீடுகள். மூன்று வீடுகள் அல்ல, ஒரு முழுக்கிராமம். ஆங்கில இலக்கியத்திற்கு அழியாப் புகழ் சேர்த்த அப்பெருமகன் தாம் பிறந்த ஊரை இன்றளவும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறாரே, அதுதான் மாபெரும் பெருமை. வழியெல்லாம் யோசனை ஓடியது மட்டுமல்ல, இன்று வரைக்கும் ஸ்ட்ராட்போர்டு கிராமம் என்னுள் அப்படி நிறைந்திருக்கிறது.  வாழ்க ஷேக்ஸ்பியர்!

—–   24-04-25

Add your first comment to this post