ஏப்ரல் 23ஐப் ‘புத்தகம் மற்றும் காப்புரிமை நாள்’ என உலகம் கொண்டாடுகிறது. ஆங்கில இலக்கியத்தின் மகத்தான ஆளுமையாக விளங்கும் வில்லியம் ஷேக்ஸ்பியர் நினைவு நாள் இது. இங்கிலாந்தின் வார்விக்சயர் மாநிலத்தில் உள்ள ஸ்ட்ராட்போர்டு கிராமத்தில் ஷேக்ஸ்பியர் பிறந்து வாழ்ந்தார். 26 ஏப்ரல் 1564ஆம் ஆண்டு பிறந்தார் எனவும் 23 ஏப்ரல் 1616இல் இறந்தார் எனவும் நம்பப்படுகிறது. இவற்றுக்கு உறுதியான சான்று கிடையாது. அது ஒரு நம்பிக்கை போலத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஏப்ரல் 23 அன்று வேறு சில எழுத்தாளர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களும் வருவதால் அதையே உலகப் புத்தகம் மற்றும் காப்புரிமை நாளாகத் தீர்மானித்துள்ளனர்.
கடந்த மாதம் (மார்ச்) லண்டன் சென்று சில நாட்கள் தங்கியிருக்க வாய்ப்பு அமைந்தது. இது போன்ற பெருநகரங்களில் ஆவணக் காப்பகங்கள் பலவற்றைப் பார்த்தாயிற்று. அவற்றில் ஏனோ ஆர்வம் குறைந்து போயிற்று. எழுத்தாளர்களின் நினைவில்லங்களைப் பார்க்கும் ஆசை குறையவில்லை. என் பள்ளிப் பருவத்தில் ஷேக்ஸ்பியர் பற்றி அறிந்து அவர் நாடகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசித்திருக்கிறேன். அவற்றின் செல்வாக்கு நம் திரைப்படங்களிலும் இலக்கியத்திலும் எவ்வாறெல்லாம் இருக்கிறது என்று காணும் ஆர்வமும் கொஞ்ச காலம் இருந்தது. அதைத் தொடர முடியவில்லை. அவர் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வரலாற்றையும் அவற்றின் செல்வாக்கையும் உரிய தரவுகளோடு ஆய்வு செய்தால் சுவையான நூல் ஒன்றை எழுதலாம். தரவுகளைத் திரட்டக் கடும் உழைப்பு தேவை. என் சூழல் காரணமாக அதைத் தொடர முடியவில்லை. இனி வாய்ப்பில்லை என்று கைவிட்ட திட்டங்களில் அதுவும் ஒன்றாகிப் போயிற்று. ஆனால் ஷேக்ஸ்பியர் மீதான ஈடுபாடு தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
ஷேக்ஸ்பியர் நினைவில்லத்தைப் பார்க்கும் ஆசையை லண்டனில் வசிக்கும் நண்பர் சங்கரிடம் சொன்னதும் அதற்கென ஒருநாளை ஒதுக்கித் திட்டமிட்டு விட்டார். நான் லண்டன் வரும் தகவலை முகநூலில் பகிர்ந்ததும் உடனே தொடர்பு கொண்டவர்கள் இருவர். அங்கு பல்லாண்டுகளாக வசிக்கும் சங்கர், லிங்கேஸ் ஆகியோர். பயோ டெக்னாலஜி படித்தவர் சங்கர். நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராகப் பயின்ற 1990களில் அவரும் அங்கே பயின்றிருக்கிறார். என்னைவிடச் சில ஆண்டுகள் இளையவர். அவரது பூர்வீகம் திருச்சி.
தமிழ் மீது மிகுந்த பற்றும் நவீன இலக்கிய வாசிப்பு ஆர்வமும் கொண்ட சங்கர் தாம் வாசித்த என் நூல்களை எல்லாம் சொன்னார். அவற்றின் பட்டியல் ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தார். கிட்டத்தட்ட நாற்பது நூல்கள் கொண்ட பட்டியல். விடுபட்ட நூல்களைச் சொன்னால் அவற்றையும் சேர்த்து வாங்கி வாசிப்பதாகச் சொன்னார். எழுதிய மொத்த நூல்களையும் வாசிக்கும் வாசகரைப் போல ஓர் எழுத்தாளனுக்கு மகிழ்ச்சி தருபவர் யாருமில்லை. அவரும் நானும் 12-03-25 அன்று ஷேக்ஸ்பியரைக் காணக் கிளம்பினோம்.
லண்டனிலிருந்து இரண்டரை மணி நேரப் பயணத் தூரத்தில் ஸ்ட்ராட்போர்டு கிராமம் இருக்கிறது. காலை ஒன்பதரை மணிக்குப் புறப்பட்டோம். கார், ரயில் பயணங்களில் காலை உணவை உண்ணும் பழக்கம் லண்டனில் பெருவாரியாக இருக்கிறது. காப்பிக் கோப்பையைக் கையில் பற்றிக்கொண்டு நடக்கும் பலரைத் தெருவில் காணலாம். நான் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒருமணி நேரப் பயணத் தூரத்தில் சங்கரின் வீடு. காலையுணவை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அவர் மனைவி தாமே செய்த மிக்சர் உள்ளிட்ட பலகாரங்களையும் கொடுத்தனுப்பியிருந்தார். நாங்களும் காரிலேயே சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.
நகருக்கு வெளியே வந்துவிட்டால் உலகமே சாலையாக விரிந்திருப்பது போலத் தோன்றுகிறது. புறவழிச்சாலை, நெடுஞ்சாலை என்றெல்லாம் சொல்கிறோம். பழைய காலத்தில் தமிழ்நாட்டில் சிலவற்றைப் ‘பெருவழி’ என்பார்கள். வணிகர்கள் தம் சரக்குகளை வண்டிகளில் ஏற்றிச் செல்ல அமைக்கப்பட்டவை. லண்டனுக்கு வெளியே செல்லும் சாலைகளைக் குறிக்கப் ‘பெருவழி’ பொருத்தமான சொல்லாக இருக்கலாம். ‘ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெரு’ என்று மதுரைக்காஞ்சி கூறும். அப்படிச் சொல்வதும் பொருந்தலாம். அப்பெருவழியில் சங்கர் காரை நன்றாக ஓட்டிச் சென்றார். முதன்மைச் சாலையிலிருந்து பிரிந்து திரும்ப வேண்டிய ஓரிடம் தவறிவிட்டது. எப்படியும் கொஞ்ச தூரத்தில் யுடர்ன் இருக்குமே என்று நினைத்தேன். அப்படியில்லை. பல மைல்கள் சென்றுதான் திரும்ப வேண்டும் என்று கூகுள் காட்டியது. திரும்பாமல் நேராகவே சென்று ஷேக்ஸ்பியரை அடையும் வழியையும் அதுவே தெரிவித்தது.
இரண்டரை மணி நேரப் பயணம் மூன்றரை மணி நேரமாயிற்று. ஆனால் சோர்வு தோன்றவில்லை. வெளிப்புறக் காட்சிகள் பெரிதும் ஈர்த்தன. இத்தகைய குளிர்நாடுகளில் மக்கள் தொகை குறைவு என்பதாலோ என்னவோ ஆள் நடமாட்டம் அற்ற பரந்த நிலப்பரப்புகள் உள்ளன. வேலிகளைக் கொண்ட பண்ணைகளில் செம்மறிகள் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருக்கின்றன. சிலவற்றில் குதிரைக் கூட்டத்தைக் காண முடிந்தது. நான் அங்கிருந்த போது வேனிற்காலத்தின் தொடக்கம். விதைப்புக்கு உழவு செய்திருந்த நிலங்களும் அங்கங்கே தெரிந்தன. இடையிடையே ஏறத்தாழ நூறு வீடுகள் கொண்ட கிராமங்கள். லண்டன் நகரத்தின் எந்தப் பரபரப்பும் அற்றவை அவை. நவீன நாகரிகத்தோடு தொடர்பே இல்லாமல் கிராமங்களில் விவசாயம் செய்து வாழும் மக்கள் கணிசமாக இருக்கிறார்களாம். அக்கிராமங்களில் இருந்து வாழ இன்னொரு ஜென்மம் வேண்டும்.
ஷேக்ஸ்பியர் வாழ்ந்த கிராமம் இன்று ஷேக்ஸ்பியரால் வாழும் கிராமமாக இருக்கிறது. கொஞ்சம் பெரிய கிராமம் என்று அவ்வூரைச் சொல்லலாம். வெளியூரிலிருந்து மக்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். ஒவ்வொரு வீதியிலும் கட்டணக் கார் நிறுத்துமிடங்கள் பல உள்ளன. நாங்கள் சென்றது புதன்கிழமை என்பதால் இடம் கிடைத்தது. விடுமுறை நாள் என்றால் கஷ்டம். காரை நிறுத்திவிட்டு நடந்தோம். ஸ்ட்ராட்போர்டு கிராமத்தின் எல்லா வீதிகளும் ஷேக்ஸ்பியர் வீட்டை நோக்கியே செல்கின்றன. அவ்வீதிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அகண்டும் நீண்டும் செல்லும் வீதியின் இருபுறமும் கடைகள். ஆடைகள், சாவி வளையங்கள், பொம்மைகள், தொப்பிகள், பைகள் என அனைத்தும் ஷேக்ஸ்பியர் உருவம் பதித்தவை. ஒரு கடைக்குள் நுழைந்தால் ஆயிரக்கணக்கான ஷேக்ஸ்பியர்கள் விதவிதமான வடிவங்களில் தென்படுகிறார்கள். வீதி முழுக்கவென்றால் நூறாயிரம் ஷேக்ஸ்பியர்கள்.
(தொடர்ச்சி நாளை)
—– 23-04-25
அனைத்துச் சாலைகளும் ரோம் நகரை நோக்கியே செல்கின்றன என்பது போல் அனைத்துச் சாலைகளும் ஷேக்ஸ்பியர் வீட்டை நோக்கியே செல்கின்றன என்று சொன்ன அந்த இடம் வியப்பு ஐயா