நவம்பர் 2024 காலச்சுவடு இதழில் ‘சாதிப் பெயரில் ஊர்கள்: இழிவா, வரலாறா?’ என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. கல்விப் புலங்களில் ஊர்ப்பெயர் பற்றி ஆய்வுகள் பல நடந்திருக்கின்றன. அவை நடைமுறைப் பிரச்சினையோடு ஊர்ப்பெயர்களை இணைத்துப் பார்ப்பதில்லை. குறிப்பாகச் சாதி தொடர்பானவற்றைத் தொடுவதேயில்லை. பொதுக்கூறு, சிறப்புக் கூறு என்னும் பகுப்போடு தம் ஆய்வை நிறுத்திக் கொள்கின்றனர். அதுதான் நிறுவன ஆய்வுகளுக்கான எல்லை.
இக்கட்டுரையில் ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயரில் வழங்கும் ஊர்ப்பெயர்கள் பற்றி ஸ்டாலின் விவாதித்துள்ளார். அவ்வூர்களில் வாழும் மக்களின் கோணம், வரலாறு, அரசின் அணுகுமுறை ஆகியவற்றை எல்லாம் ஆராய்கிறார். இந்தப் பிரச்சினை குறித்துப் பேச நிறையத் தரவுகள் உள்ளன. எனக்குப் பெயராய்வில் பெருமளவு ஈடுபாடு உண்டு. ஊர்ப்பெயர்கள், மக்கட்பெயர்கள் குறித்துக் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் ‘கவிதாசரண்’ இதழில் சில கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அவை இப்போது நினைவுக்கு வந்தன. அவற்றைத் தேடிப் பதிவிடவும் நினைத்திருக்கிறேன்.
நாமக்கல் மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்துப் பெ.குணசேகரனும் கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்ப்பெயர்கள் குறித்துக் கோ.சீனிவாசனும் என் வழிகாட்டுதலில் முனைவர் பட்ட ஆய்வு செய்துள்ளனர். அவையும் நிறுவன எல்லைக்குள் நின்றவைதான். எனினும் கள ஆய்வுகள் மூலம் அவர்கள் சேகரித்த தரவுகள் மிகவும் முக்கியமானவை. மக்கள் வழங்கும் கதைகள் சிலவற்றையும் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளனர். அவை மேலாய்வுகளுக்குப் பயன்படுபவை.
கொங்குப் பகுதியில் ஏராளமான கவுண்டம்பாளையங்கள் உள்ளன. ‘கவுண்டம்பாளையம்’, ‘கவுண்டனூர்’ என்றே ஊர்கள் உண்டு. முன்னொட்டு கொண்டு புத்திரகவுண்டம் பாளையம், ஆனந்தகவுண்டம் பாளையம், இராஜாகவுண்டம் பாளையம், நல்லகவுண்டம் பாளையம் என்றெல்லாம் பல பெயர்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏறத்தாழ 1600 ஊர்ப்பெயர்களில் 250 பெயர்கள் சாதியைச் சிறப்புக் கூறாகக் கொண்டவை. அவற்றில் கவுண்டர், நாயக்கர், ரெட்டியார், செட்டியார், கொல்லர், சானார் உள்ளிட்ட சாதிப்பெயர்களே மிகுதி. ஒடுக்கப்பட்ட சாதிப் பெயர்கள் (சேவைச் சாதிகள் உட்பட) குறைவுதான். கிட்டத்தட்ட பதினைந்து பெயர்கள் வருகின்றன.
பொதுவாக ஆதிக்க சாதிப் பெயர்களில் உள்ள ஊர்கள் குறித்துப் பிரச்சினை எழுவதில்லை. ஒடுக்கப்பட்ட சாதிப் பெயரைக் கொண்டிருக்கும் ஊரைச் சேர்ந்தவர்கள் அப்பெயரைச் சொல்லத் தயங்குகின்றனர். அருகில் உள்ள ஏதேனும் பெரிய ஊர்ப்பெயரைச் சொல்வார்கள். மிகவும் துருவிக் கேட்டால் பக்கத்து ஊர்ப்பெயரைச் சொல்வார்கள். சான்றிதழைப் பார்த்தால் தான் அவர்களின் சொந்த ஊர்ப்பெயர் தெரியவரும். பல்லாண்டுகள் அரசு கல்லூரி மாணவர் சேர்க்கைப் பணி பார்த்த அனுபவத்தில் இதை நேரடியாகக் கண்டிருக்கிறேன்.
‘சக்கிலிகாடு’ என்றொரு ஊர்ப்பெயர் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதைச் சொன்னதும் தம் சாதிபெயர் தெரிந்துவிடும் என்னும் தயக்கம். வேறு வழியில்லாத போதுதான் அதைச் சொல்வார்கள். அவ்வூரில் வாழும் பிற சாதியினருக்குத் தம்மை ஒடுக்கப்பட்ட சாதி என்று பிறர் நினைத்துவிடக் கூடும் என்று தயக்கம். அதனால் ஊர்ப்பெயரை நிர்ப்பந்தம் காரணமாகச் சொல்ல நேர்ந்த போதும் தாங்கள் அந்தச் சாதியில்லை என்பதை நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்துவார்கள்.
எல்லா ஊர்ப்பெயர்களுக்கும் இருப்பது போலவே ‘சக்கிலிகாடு’ என்பதற்கும் ஒரு வரலாறு இருக்கும். பொதுவாக அது பஞ்சமி நிலமாக இருந்து பிற்காலத்தில் கைமாறியிருக்கலாம். அந்நிலம் இப்போது ஏதேனும் ஆதிக்க சாதியினர் வசமே இருக்கும். ஆனால் ஊர்ப்பெயர் மாறவில்லை. இது உடைமை சார்ந்த வரலாறு. ஊர்ப்பெயரைக் கொண்டு அவ்வூரில் எப்பகுதி பஞ்சமி நிலமாக இருந்தது என்பதைத் தேடித் துருவினால் கண்டுபிடிக்க முடியும். அங்கு வாழும் மக்களுக்கு அந்த வரலாற்றுத் தகவல் பற்றிப் பிரச்சினையில்லை. ஊர்ப் பெயரைச் சொல்லும்போது இழிவு என்று கருதுகின்றனர். அதுதான் நடைமுறைப் பிரச்சினை.
ஊர்ப்பெயரில் சாதி இருப்பது இழிவா வரலாறா என்னும் கட்டுரையில் பலவற்றையும் விரிவாகப் பேசும் ஸ்டாலின் ராஜாங்கம் இறுதியில் இப்படிச் சொல்கிறார்: ‘இவற்றில் ஏதாவதொரு பார்வை மட்டும்தான் சரி என்பது நம் வாதமல்ல. மாறாக ஒரு விசயம் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில்தான் அர்த்தம் பெறுகிறது. என்றைக்கும் மாறாத ஒரே பார்வை இருந்திருக்கவில்லை. ஒரு விஷயம் ஒரு இடத்தில் வரலாற்றுப் பெருமையும் மற்றொரு இடத்தில் இழிவாகவும் பார்க்கப்பட்டிருக்கிறது. அது ஆதிக்கம் செய்யும் மக்கள் குழு, எதிர்க்கும் சூழல் ஆகியவற்றைப் பொறுத்தமைகிறது.’
இதில் எது சரி என்று சொல்வது கஷ்டம்தான். ஊர்ப்பெயரில் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெயரை மாற்ற வேண்டும் என்பதில் அங்கு வசிக்கும் ஆதிக்க சாதியினர் அனைவரும் ஒன்றுபடுகின்றனர். இப்போது கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், மத்தகிரி ஊராட்சியில் உள்ள ‘சக்கிலியப்பட்டி’ என்னும் ஊர்ப்பெயரைக் ‘குறிஞ்சி நகர்’ என்று அரசு மாற்றியுள்ளது. சமீபத்தில் நடந்த இந்த மாற்றம் குறித்த தகவல் அரசிதழிலும் வெளியாகி அதிகாரப்பூர்வமாயிற்று. ஏன் மாற்றப்பட்டது? அப்பெயர் இழிவாக இருப்பதால் வெளியில் சொல்லிக் கொள்ள முடியவில்லை என்று கருதிய ‘ஊரார்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துத் தொடர்முயற்சி செய்து மாற்றியுள்ளனர். ‘ஊரார்’ என்பது அங்கு வசிக்கும் ஆதிக்க சாதியாரையே குறிக்கும்.
மாற்றத்திற்கு ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் வரவேற்பும் இருக்கிறது; எதிர்ப்பும் இருக்கிறது. அந்த கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களும் சரி, பிற கிராமங்களில் வசிக்கும் அருந்ததியர் மகக்ளும் சரி மாற்றத்தை வரவேற்கின்றனர். அந்தப் பெயரால் அடையாளப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. ‘அருந்ததியர்’ என்னும் மாற்றுப் பெயரையே பொதுவெளியில் பயன்படுத்த விரும்புகின்றனர். வரலாற்றை விடவும் அன்றாட வாழ்வு அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது.
ஆனால் கிராமங்களை விட்டு வெளியேறி அரசியல் மயப்பட்டிருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மாற்றம் கூடாது என்கின்றனர். பெயர் மாற்றம் என்பது வரலாற்று அழிப்பு. ஒடுக்கப்பட்ட சாதிப் பெயர்களில் சில ஊர்களே இருக்கின்றன. அவற்றையும் மாற்றிவிட்டால் எப்படி என்று வாதிடுகின்றனர். ‘இந்தியக் கணசங்கம் கட்சி’ இந்த மாற்றத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ‘சக்கிலியப்பட்டி’ என்னும் பெயரே தொடர வேண்டும் என நீதிமன்றம் செல்லவும் தயாராகிறது. அக்கட்சியின் கருத்து ‘இது வரலாற்று அழிப்பு’ என்பதாகும்.
இதில் நுட்பமான சிக்கல்களும் இருக்கின்றன. தருமபுரி மாவட்டத்தில் உள்ள ‘சக்கிலிப்பட்டி’ என்னும் ஊரில் அருந்ததியர் சாதிக் குடும்பம் ஒன்றுகூட இப்போது வசிக்கவில்லை. ஒருகாலத்தில் அவர்கள் வசித்திருக்கக் கூடும். ஏன் மொத்தமாகக் குடிபெயர்ந்தார்கள், எங்கே சென்றார்கள், என்ன நடந்தது என்பதெல்லாம் வரலாற்றுக்குள் புதைந்துவிட்டது. இப்போது ஆதிக்க சாதியினரும் பறையர் சாதி மக்களுமே அங்கே வசிக்கின்றனர். அவர்கள் எல்லோரும் தம் ஊர்ப்பெயரை ‘எஸ்.பட்டி’ என்றே சொல்லிக் கொள்கின்றனர்.
ஸ்டாலின் ராஜாங்கம் எடுத்துக்காட்டுவது போல ஊர்ப்பெயர், தெருப்பெயர் முதலியவற்றில் இருக்கும் சாதிப் பெயர் ஒட்டுக்களை முழுமையாக நீக்கும் அரசாணை இருக்கிறது. அதை முழுமையாக நடைமுறைப்படுத்தி ஊர்ப்பெயர்களில் உள்ள எல்லாச் சாதிப்பெயர்களையும் நீக்கிவிடலாம். அழகழகான தமிழ்ப்பெயர்களைச் சூட்டலாம். அக்காலமும் வருமா?
—– 23-12-24
நல்ல கட்டுரை ஐயா. அண்ணன் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களுக்கும் வாழ்த்துகள். வேலூரில் கூட போட்டிக் காலனி என்று நகரத்தின் மையப்பகுதி ஒன்று இருக்கிறது. அதை, அந்த மக்கள் மீதான தீண்டாமையாக உணர்ந்து சட்டப்படி’அம்பேத்கர் நகர்’ என்று மாற்றிக் கொண்டனர்.
அக்காலமும் இனி அரும்பாது;
இக்காலமும் திருந்தாது;
எக்காலமும் போங்காலம்தான்!
மாற்றமே மாறாதது மாற்றுவோம் வருங்காலத்தில் சிறப்புறும்