மக்கட் பெயர்களும் ஊர்ப்பெயர்களும் பலவிதச் சுவைகளைக் கொண்டவை. பெற்றோர் சூட்டிய பெயர் பிடிக்காமல் வெறுப்போடு வாழ்நாளைக் கழிப்போர் உண்டு. சிலர் தாமாக முயன்று பெயரை மாற்றிக் கொள்வதுண்டு. தனிமனிதர் தம் பெயரை மாற்றிக்கொள்ளச் சட்டப்பூர்வ வழிமுறைகள் உள்ளன. ஊர்ப்பெயர் பிடிக்காமல் போனால் என்ன செய்வது? அதை மாற்றும் அதிகாரம் அரசிடம்தான் இருக்கிறது. வேறு வழியில்லை, வாழ்நாளெல்லாம் ஊர் மீதே வெறுப்போடு திரிய வேண்டியதுதான்.
ஊர்ப்பெயர் தரும் அர்த்தம் காரணமாக அவற்றை இழிவாகக் கருதுவோர் பலர். ‘ஓலப்பாளையம்’ என்றோர் ஊர். அதன் எழுத்து வழக்கு ‘ஓலைப்பாளையம்.’ பனைகள் மிகுந்திருக்கும் ஊர்களில் ஓலைகளை வெட்டிக் கத்தை கட்டி விற்கும் வழக்கம் இருந்தது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடெங்கும் ஓலைக் கூரை வேய்ந்த வீடுகள்தான் இருந்தன. திரைப்படக் கொட்டகைகளும் பனைஓலை, தென்னங்கீற்று வேய்ந்தவையாக இருந்தன. பனையோலைக்குக் கிராக்கி. சொல்லி வைத்து வாங்கித்தான் கூரை மாற்ற வேண்டும்.
பனை நிறைந்த ஊராருக்கு ஓலை விற்பனை நல்ல வருமானம் தரும். பனையோலைகள் விற்கும் ஊர் என்பதால் அது ‘ஓலைப்பாளையம்’ என்று வழங்கப்பட்டிருக்கலாம். இப்போதைய தலைமுறையினர் அதைச் சொல்லக் கூச்சப்படுகின்றனர். புணர்ச்சியைக் குறிக்கும் வழக்குச் சொல் ‘ஓல்.’ ‘ஓழ்’தான் சரி என்பதும் உண்டு. எப்படி ஆனாலும் மக்கள் ஒலிப்பில் ‘ஓல்’ என்றுதான் வருகிறது. அதன் அடியாக ஓலன், ஓலி ஆகிய சொற்கள் இருக்கின்றன. அவை தனியாகவும் வழங்குகின்றன. ஓலி என்பது பிற சொற்களுடன் இணைந்து கண்டாரஓலி, ங்கொக்கால ஓலி என்றெல்லாம் வசையாக வருகிறது.
‘ஓலப்பாளையம்’ என்று ஊர்ப்பெயரைச் சொன்னால் அது இப்போது ஓலையைக் குறிப்பதில்லை. ஓல் என்பதைக் குறிக்கிறது. அப்படித்தான் அர்த்தப்படுத்திக் கொள்கின்றனர். ஓலை வேய்ந்த வீடுகளில் வாழ்ந்த காலம் மறந்து போயிற்று. அத்தகைய வீடுகள் மறைந்து கொண்டிருக்கின்றன. அதனால் ஓலப்பாளையம் என்று சொன்னதும் புணர்ச்சி அர்த்தமே முன்வந்து நிற்கிறது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தம் ஊர்ப்பெயரைச் சொன்னால் நண்பர்கள் கேலி செய்து சிரிக்கின்றனர். ‘ஓலன்’ என்றே பட்டப்பெயரும் சூட்டிவிடுகின்றனர். இந்நிலையில் அப்பெயரை எப்படி வெளிப்படச் சொல்வது? அருகில் உள்ள பெரிய ஊர்ப்பெயரையோ பக்கத்து கிராமத்துப் பெயரையோ சொல்லிச் சமாளிக்கின்றனர்.
இன்னொரு ஊர்ப்பெயர் ‘பல்பிடுங்கிபாளையம்.’ இன்று பல் மருத்துவம் தனித்துறையாக வளர்ந்து ஏராளமான பல் மருத்துவமனைகள் வந்துவிட்டன. அந்தக் காலத்தில் பல்லில் ஒரு பிரச்சினை என்றால் மக்கள் என்ன செய்வார்கள்? கொறடு வைத்துப் பல்லைப் பிடுங்க வேண்டும். மயக்க ஊசியெல்லாம் கிடையாது. வலியைப் பொறுத்துக்கொண்டாக வேண்டும். அது ஒருவகை மருத்துவம். அதை எல்லோரும் செய்ய முடியாது. வழிவழியாகப் பயிற்சி பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் செய்வர். பெரும்பாலும் இலவசமாகவே இந்த மருத்துவம் நடைபெறும்.
அப்படி ஒரு குடும்பம் வாழ்ந்த ஊருக்குப் ‘பல்பிடுங்கிபாளையம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். சூட்டுவது என்ன, மக்கள் பேச்சில் வழங்கியிருக்கிறார்கள். அதுவே பிற்காலத்தில் அதிகாரப்பூர்வமான பெயராகி அரசு ஏடுகளிலும் ஏறிவிட்டது. அதிகார ஏட்டில் ஏறிவிட்டால் மாற்றுவது சுலபமில்லை. பல் பிடுங்கும் மருத்துவம் நடந்த காலத்தில் அப்பெயர் ஊருக்குப் பெருமை தந்திருக்கும். இன்று அப்படியல்ல. இழிவுப்பெயர் என்றாகிவிட்டது. ஒருகாலத்தில் உயர்பொருளில் வழங்கிய சொல் பிற்காலத்தில் இழிபொருளுக்கு மாறுவதுண்டு.
‘நாற்றம்’ என்னும் சொல்லை அதற்கு நல்ல சான்றாக எடுத்துக் காட்டுவார்கள். இது மார்கழி மாதம். ஆண்டாள் திருப்பாவையில் ‘நாற்றத் துழாய் முடி நாராயணன்’ என்று வருகிறது. ‘நாற்றம் அடிக்கும் துளசியைத் தலையில் அணிந்த நாராயணன்’ என்று இன்றைய தமிழில் பொருள் சொன்னால் ஏற்குமா? ‘நறுமணம் வீசும் துளசி’ என்று சொன்னால்தான் பொருந்தும். நாற்றத்திற்கு அன்று நறுமணம் என்று பொருள். நாற்றம் என்னும் தமிழ்ச் சொல்லுக்கு எதிர்ச்சொல் இல்லை போல. ‘துர்வாசம்’ எனச் சமஸ்கிருதச் சொல்லில் வரும் ‘துர்’ரை எடுத்து நாற்றத்தோடு இணைத்துத் ‘துர்நாற்றம்’ என்று வழங்கினர். இப்போது மணம் – நாற்றம் எதிர்ச்சொற்களாக வழங்குகின்றன.
பல்பிடுங்குதலும் அப்படி உயர்பொருளில் இருந்து இழிபொருளுக்கு மாறிவிட்டது. இப்போது ‘பிடுங்குதல்’ என்னும் சொல்லே இழிபொருள் தருகிறது. ‘அங்க என்ன புடுங்கிக்கிட்டு இருக்கறயா?’, ‘பெரிய புடுங்கி’, ‘மயிர் புடுங்கறயா?’ என்றெல்லாம் வசை வழங்குகிரது. இக்காலத்தில் ‘பல் பிடுங்குதலும்’ இழிவாகிவிட்டது. அதனால் அவ்வூர் மக்கள் Palpidunki palayam’ என ஆங்கிலத்தில் எழுதுவதன் முதலெழுத்தை மட்டும் எடுத்து ஊர்ப்பெயருக்கு முன்னெழுத்தாக்கிக் கொண்டனர். ஆங்கிலத்தில் ‘P.Palayam’ என்றும் தமிழில் ‘பி.பாளையம்’ என்றும் எழுதுகின்றனர்.
சொல்லும்போது அதிலும் சிக்கல் வருகிறது. ஒலிப்பில் குறில் நெடிலாவது இயல்பு. ‘பி புள்ளி பாளையம்’ என்றா சொல்ல முடியும்? பிபாளையம் என்று சொன்னால் அது பீப்பாளையம் என்று ஒலிக்கிறது. தமிழ் முதல் எழுத்தை வைத்துப் ப.பாளையம் என்று எழுதியிருக்கலாம். அது ஒலிப்பில் ‘பாப்பாளையம்’ என்றாகும். பிரச்சினையில்லை. அழகான பெயர். ஆனால் அப்படிச் சிந்திப்பது நம் மரபு கிடையாதே.
தமிழ் எழுத்தை ஆங்கில ஒலிக்கு மாற்றி மீண்டும் ஒலிபெயர்ப்பு செய்து முன்னெழுத்து வைத்துத்தானே நாம் பழகியிருக்கிறோம். புகழ் பெற்ற ஆளுமைகளின் பெயர்களே அப்படித்தான் இருக்கின்றன. எஸ்.வையாபுரிப்பிள்ளை, டி.எஸ்.சொக்கலிங்கம், ஆர்.ஷண்முகசுந்தரம், ஜி.நாகராஜன் என்னும் வரிசை இன்றைய எழுத்தாளர்கள் வரை தொடர்கிறது. ஆக இப்போது பல்பிடுங்கிபாளையத்தார் எல்லாம் பீப்பாளையத்தார் ஆகி இன்னொரு சிக்கலில் மாட்டிக் கொண்டனர்.
இன்னொரு ஊர்ப்பெயர் ‘நக்கிபாளையம்.’ இந்த ஊர்ப்பெயர் எப்படி வந்திருக்கும் என்று ஊகிப்பது கடினம். கீரையை ‘நக்கிரி’ என்று சொல்வது எங்கள் ஊர் வழக்கம். சில பகுதியில் ‘ரக்கிரி’ என்பதும் உண்டு. ‘நக்கிரிபாளையம்’தான் ‘நக்கிபாளையம்’ ஆகிவிட்டதோ? ‘நக்கி’ என்பது ஒருவருடைய பட்டப்பெயராக இருந்து ஊர்ப்பெயராகி இருக்கலாமோ? ஊர்ப்பெயரில் பட்டப்பெயரும் இடம்பெறுவதுண்டு. ‘கட்டையன்காடு’ என்பது ஒரு ஊர்ப்பெயர். கட்டையன் என்பது பட்டப்பெயர் தான். என்ன ஊகித்தாலும் நிறைவு தரவில்லை.
நக்குதல் என்னும் சொல் நாக்கின் செயலைக் குறிக்கும். ‘ஆத்து நெறையத் தண்ணி ஓடுனாலும் நாய் நக்கித்தான் குடிக்கோணும்’ என்பது பழமொழி. சிறிதும் மிச்சம் வைக்காமல் உணவு உண்டவனைப் பார்த்துச் ‘சட்டியை வழித்து நக்கீட்டா ஊடு உருப்படுமா?’ என்று கேட்பதுண்டு. சட்டியில் கொஞ்சமாவது சோற்றை மிச்சம் வைக்க வேண்டுமாம். அப்போதுதான் தொடர்ந்து சோறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ்ப் பேரகராதி இச்சொல்லுக்குப் பல பொருள் தருகிறது. முதலில் புறநானூற்றில் இடம்பெறும் இச்சொல் ‘சுடுதல்’ என்று பொருள்படுகிறது. ‘நனந்தலைப் பேரூர் எரியும் நக்க’ (புறம்.57) என்று வருகிறது. பேரூரை தீ எரித்தது என்று பொருள். பொதுவாக கொழுந்து விட்டு எரியும் தீயின் உச்சிப்பகுதியை நாக்கு என்று சொல்வது வழக்கம். ‘நாக்கை நீட்டிக் கொண்டு தீ எரிகிறது’ என்று சொல்வதுண்டு. புறநானூற்றிலும் தீயின் நாக்கு நக்குகிறது என்றுதான் பொருள். மென்மையான வருடல் அல்ல, ஊரையே எரித்தல். ஆகவே சுடுதல் என்று உரையாசிரியர்களும் அகராதியியலாளரும் பொருள் கொள்கின்றனர்.
நாலடியாரில் ‘ஆமா போல் நக்கி’ (377) என்று வருகிறது. அதற்கு ‘நாவனால் பரிசித்தல்’ என்பது பேரகராதிப் பொருள். விலங்குகள் கன்று ஈன்றதும் அதை நாவல் நக்கிச் சுத்தப்படுத்துதல் இயல்பு. தீண்டுதல், அழித்தல் ஆகிய பொருள்களையும் அகராதி தருகிறது. அதன்பின் மக்கள் வழக்கிலிருந்து ‘அவன் கஞ்சிக்கு இல்லாமல் நக்குகிறான்’ என்னும் தொடரைச் சான்றாகக் கொடுத்து ‘வறுமைப்படுதல்’ என்கிறது. உணவு உண்ணும் போது கையை வழித்து நக்கி உண்போர் உண்டு. ‘வழிச்சு வழிச்சு நக்கு. பொழப்பும் நக்கிக்கிட்டுப் போவட்டும்’ என்று திட்டுவர். அங்கே வறுமைப்படுதல் என்பதுதான் பொருள்.
மாமனைக் கேலி செய்யும் எங்கள் ஊர் சிறுவர் பாடல் ‘மாமா மாமா மக்கு மாமா மத்தியானச் சோத்துக்கு நக்கு மாமா’ என்று சொல்லும். இதிலும் ‘வறுமைப்படுதல்’ தான் பொருள். இலக்கியத்திலும் வழக்கிலும் இப்படியெல்லாம் பொருள் இருந்தாலும் மக்கள் எதை முதன்மைப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர் என்பது முக்கியம். புணர்ச்சியின் போது நடைபெறும் நக்குதலே மக்கள் நினைவில் ஆழப் பதிந்திருக்கிறது.
‘நக்கி’ என்பது வசைச்சொல்லாகவும் வழங்குகிறது. தனியாகவும் பெண் உறுப்போடு சேர்த்தும் இச்சொல்லை வசையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ‘நக்கிபாளையம்’ என்னும் ஊர்ப்பெயரை வெளியே சொல்லி ஏளனத்திற்கு உள்ளாக முடியுமா? அவ்வூரார் எல்லாம் சேர்ந்து ‘மணிப்புதூர்’ என்று புதுப்பெயர் சூட்டி அதையே சொல்லத் தொடங்கினர். பின்னர் கடும் முயற்சியில் அதையே அதிகாரப்பூர்வமாகவும் மாற்றிவிட்டனர்.
இப்படி இன்னும் எத்தனையோ ஊர்ப்பெயர்க் கதைகள் உள்ளன.
—– 25-12-24
Good
புளிச்சக்கீரையை இன்றும் புளிச்சநக்கரி, புளிச்சநக்கடி என்றெல்லாம் சொல்லும் வழக்கம் இன்றும் எங்கள் உள்ளது.
ஐயா வணக்கம். நான் சேலமாவட்டத்தில் ஜலகண்டாபுரத்தில் பணியாற்றிய போது மேட்டூருக்கு அருகாமையிலிருந்து ஒருவர் என்னோடு பணியாற்றினார். அவர் தனது சொந்த ஊர்ப் பெயரை எக்காரணம் கொண்டும் சொல்லமாட்டார். நானா விடுவேன். கூட்டமாக அனைவரும் கூடியிருக்கக் கூடிய இடம் பார்த்து அண்ணே நீங்க எந்த ஊர் என்பேன். அவர் சற்றும் யோசிக்காமல் உனக்கு மரியாத இல்ல என்பார்.( பெண்கள் இருக்கும் போது கோவப்பட மாட்டார். இலாவகமாக பேச்சை மாற்றிவிடுவார்) நான் பணி செய்த ஓர் ஆண்டு காலமும் அவர் வாயிலிருந்து அவர் ஊர் பெயர் வரவே இல்லை. கடைசியாக எனக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்ற போது எல்லோரும் என்னைப்பற்றி பேசினார்கள். அப்போது அவர் வீதம் வந்தது “தம்பியின் பிரிவு என்பது மிகுந்த மன வருத்தத்தைக் கொடுக்கிறது.” என்றெல்லாம் சொல்லி கடைசியாக உன் விருப்பப்படி என் ஊர் பெயரைச் சொல்கிறேன் என்றார் அனைவர் முன்பாக….. குஞ்சாண்டியூர் குஞ்சாண்டியூர் குஞ்சாண்டியூர் என்று.
அரூர் பகுதிகளில் சில ஊர் சாதிப் பெயர்களாக வரும். அதை பயன்படுத்தும் போது பிறர் பார்வையில் இவர் அந்த சாதியை சார்ந்தவர் என்ற பார்வையும் தீண்டாமை உண்டாகிறது.. ஆனால் அந்த ஊர்களில் அனைத்து சாதி மக்களும் வசிக்கின்றனர்.. இதை தவிர்க்க மேற் சொன்னது போல ஆங்கில பெயராக மாறி விடுகின்றன.
எ. கா. சக்கிலிப்பட்டி.. எஸ். பட்டி.. என வழங்குதல்.. ( பறையப்பட்டி. கவுண்டம்பட்டி. )
மேற்சொன்ன எஸ்.பட்டி என்ற பெயரை பயன்படுத்தியதற்கு 6ஆம் வகுப்பு படித்த போது உடன் இருந்த மாணவனை ஏன் சக்கிலிப்பட்டி என சொல்ல மாட்டியா என காதை திருகி மீண்டும் மீண்டும் சக்கிலிப்பட்டி என சொல்ல வைத்த ஆசிரியை உண்டு….. என் ஊர் பெயர் வேப்ப நத்தம் இங்கு ஒரு பட்டியல் மக்கள் மட்டுமே உண்டு.. இந்த பெயரை பயன்படுத்த நினைக்காத வேறு சாதி மக்கள் புதூர் என்னும் பெயரை பின் இணைப்பாக்கி விடுகின்றனர்..
அரூர் பகுதிகளில் சில ஊர் சாதிப் பெயர்களாக வரும். அதை பயன்படுத்தும் போது பிறர் பார்வையில் இவர் அந்த சாதியை சார்ந்தவர் என்ற பார்வையும் தீண்டாமை உண்டாகிறது.. ஆனால் அந்த ஊர்களில் அனைத்து சாதி மக்களும் வசிக்கின்றனர்.. இதை தவிர்க்க மேற் சொன்னது போல ஆங்கில பெயராக மாறி விடுகின்றன.
எ. கா. சக்கிலிப்பட்டி.. எஸ். பட்டி.. என வழங்குதல்.. ( பறையப்பட்டி. கவுண்டம்பட்டி. )
மேற்சொன்ன எஸ்.பட்டி என்ற பெயரை பயன்படுத்தியதற்கு 6ஆம் வகுப்பு படித்த போது உடன் இருந்த மாணவனை ஏன் சக்கிலிப்பட்டி என சொல்ல மாட்டியா என காதை திருகி மீண்டும் மீண்டும் சக்கிலிப்பட்டி என சொல்ல வைத்த ஆசிரியை உண்டு….. என் ஊர் பெயர் வேப்ப நத்தம் இங்கு ஒரு பட்டியல் மக்கள் மட்டுமே உண்டு.. இந்த பெயரை பயன்படுத்த நினைக்காத வேறு சாதி மக்கள் புதூர் என்னும் பெயரை பின் இணைப்பாக்கி விடுகின்றனர்..