குறவர்களின் கடவுள்

You are currently viewing குறவர்களின் கடவுள்

எனில் எங்கள் பெயர் மட்டும்

ஏனோ ராட்சஸர்கள்.

                               – விக்கிரமாதித்யன்

என் பேராசிரியர் ஒருவரது சொந்த ஊர் கோவைக்கு அருகில் உள்ள சிற்றூர். அவர் எனக்குப் பிடித்தமானவரல்ல என்ற போதும் அவருக்குப் பிடித்தமானவனாக நான் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம். கோடை விடுமுறை ஒன்றின்போது அவர் தம் சொந்த ஊருக்கு வருவதாகவும் அவரைச் சந்திக்க நான் வரவேண்டும் என்றும் கிட்டத்தட்டக் கட்டளை இட்டிருந்தார். ஆகவே வேறு வழியில்லாமல் ஊருக்கு அவர் வரும் நாளைக் கேட்டு வைத்து, அந்த நாளில் நான் வருகிறேன் என்று உறுதி கொடுத்தேன்.

குறிப்பிட்ட நாளுக்கு முந்தைய நாள் திருப்பூரில் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் காலை புறப்பட்டு அந்தச் சிற்றூருக்குச் சென்றேன். சாப்பிடவில்லை. அந்தச் சமயத்தில் தாராளமாகச் செலவு செய்யுமளவு என்னிடம் பண வசதியில்லை. வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் பெயர் பெற்றது கோவைப் பகுதி. எனவே பேராசிரியர் வீட்டில் போய்த் திருப்தியாகச் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்திருந்தேன். அதுவும் கிராமமாக இருந்ததால் கவனிப்பு நன்றாக இருக்கும் என்பது என் கணிப்பு.

கொங்குப் பகுதியின் பெரும்பாலான ஊர்களில் இருப்பதைப் போலவே ஊருக்குள் இல்லாமல் தனியே தோட்டத்தில் இருந்தது வீடு. தேடிக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஒன்றுமில்லை.  ‘வாத்தியார் வீடு’ என்று பெயர் பெற்றிருந்தது. நல்ல நீளமும் அகலமும் கொண்ட பெரிய வீடு. முன்பகுதியில் தென்னங்கீற்றால் வேயப்பட்ட அழகிய கொட்டாரம். வாசல், கட்டுத்தரை எல்லாம் சேர்த்து வீடு இருந்த இடமே அரை ஏக்கர் பரப்பளவு இருக்கலாம்.

வீடிருந்தது. ஆனால் பேராசிரியர் வந்திருக்கவில்லை. ஏதோ காரணத்தால் அவர் பயணம் தடைபட்டு விட்டது போலும். வாசலில் நின்றபடி விசாரித்தேன். வீட்டில் முதியவர் ஒருவர், இளையவர் ஒருவராக இருவர் ஆண்கள். தவிர நான்கைந்து பெண்கள். என்னைக் கண்டதும் எல்லோரும் கூடிவிட்டார்கள். என்னைப் பற்றிய விசாரிப்புகள். சற்றே தாமதமாக வந்தவர்களுக்காக மீண்டும் மீண்டும் தகவல்களைச் சொல்ல வேண்டியிருந்தது. கிராமம் என்றால் அப்படித்தான் என எனக்குத் தெரியும். புதுக்காற்று உள்ளே நுழைந்தால் கூட எங்கிருந்து வருகிறது, என்ன விவரம் என்றெல்லாம் கேட்டுத்தான் அனுமதிப்பார்கள். ஆனால் என் எதிர்பார்ப்புக்கும் நடைமுறைக்கும் இருந்த வித்தியாசம் உறுத்தலாக இருந்தது.

கோவையைப் பற்றி ஈரோடு தமிழன்பன் எழுதும் போது,

ஏனுங்க என்னாங்க

என்ற பேச்சுங்க

தேனுங்க தினை மாவுங்க

என்பார். எனக்கு அப்படித் தோன்றவில்லை. ‘ஏன்’, ‘என்ன’ என ஒருமையில்தான் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. முகங்களில் அசட்டையும் புறக்கணிப்பும். குளிர்ந்த வரவேற்பெல்லாம் ஒன்றுமில்லை. சொல்லப் போனால் சாப்பாட்டை எதிர்பார்த்துச் சென்றவனுக்கு ஒருகுவளை நீர்கூடக் கிடைக்கவில்லை. வந்த விருந்தாளிக்கு முதலில் தண்ணீர் கொடுப்பது விருந்தோம்பல். நானாகக் கேட்கப் பிரியப்படவில்லை. தகவலைக் கேட்டுக்கொண்டு தகவலைச் சொல்லிவிட்டுத் திரும்பினேன். சாலையோரம் இருந்த அடிகுழாயில் அருந்திய நீர் வயிற்றில் சில்லிட்டது.

விடுமுறை முடிந்தபின் பேராசிரியரைச் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம். நான் அவர் ஊருக்குச் சென்றதையோ அங்கு கிடைத்த உபசரிப்பையோ சொல்லவில்லை. நா எழவில்லை. பேச்சோடு பேச்சாக ‘ஊருக்கு வந்திருந்தயா?’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார். நானும் சகஜமாக சிரித்தபடி ‘வந்தன். நீங்க வர்ல… கேட்டுட்டு ஒடனே திரும்பிட்டேன்’ என்றேன். ‘அது… அவுங்க உன்னயத் தப்பா நெனச்சிட்டாங்க’ என்றபடி இழுத்தார். அவர்களுக்கு என்னைத் தெரியாது. என் செயல்கள் எவற்றோடும் அவர்கள் தொடர்புபட்டவர்கள் அல்ல. அவர்கள் மனம் கோண நான் செய்த தவறென்ன? திருடன் என எண்ணியிருக்கலாம். என் முகக்களை அப்படிச் சந்தேகப்படும்படி இருந்திருக்கலாம்.

பேராசிரியர் சொன்னார், ‘உம் பேரு முருகன்னு சொன்னதும் தாழ்த்தப்பட்ட சாதின்னு நெனச்சிட்டாங்க.’

அவர் சொன்னதும் எனக்கு எதுவுமே புரியவில்லை. அப்போதைய என் உலகம் மிகக் குறுகியது. அதனுள் அவர் சொன்ன விஷயம் போய்ச் சேரவில்லை. அதாவது பெயர் கொண்டு சாதியை அடையாளம் காணும் விஷயம் எனக்குப் புதிது. என் பெயரில் என்னென்னவோ அடையாளங்கள் இருப்பதை அந்நிகழ்ச்சிக்கு முன்னும் பின்னும் அறிந்திருக்கிறேன். சிறுவயதில் பள்ளி நண்பர்கள் ‘முறுக்கு முறுக்கு’ என்று அழைப்பார்கள். ஆகத் தின்பண்டத்தின்  அடையாளம் கொண்ட பெயர் எனது. என் தந்தை பழனி முருகன் மேல் பக்தி கொண்டிருந்த காரணத்தால், கிருத்திகை தவறாது அக்கோயிலுக்குச் சென்று தரிசித்துப் பிறந்தவன் நான். பெற்றோருக்குப் பக்தியின் அடையாளம், பழனியின் அடையாளம் என் பெயர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரிடம் வேலை செய்தபோது  ‘முருகன் – தமிழ்க் கடவுள் பெயர்’ என மகிழ்ந்தார். அவருக்குத் தமிழின் அடையாளம் என் பெயர். திரு.வி.க.வின் ‘முருகன் அல்லது அழகு’ நூலைப் படித்த போது என் பெயர் இயற்கையின் அடையாளமாகத் தோன்றிற்று. என் தந்தையின் பெயரையும் இணைத்துப் ‘பெருமாள்முருகன்’ என அறியப்பட்டபோது எழுதிய கட்டுரை ஒன்றில் நான் விமர்சித்திருந்த கவிதையை எழுதிய கவிஞர் ஆவேசப்பட்டு ‘பெருமாள் – வைணவம்; முருகன் – சைவம். என்ன குழப்பம் இது’ எனக் கிண்டல் செய்திருந்தார். அவருக்கு மதத்தின் அடையாளம் என் பெயர்.  நாத்திகரான நண்பர் ஒருவர் எனது பெயரைப் ‘புராணக் குப்பை’ என்றார். அவருக்கு மூட நம்பிக்கையின் அடையாளம் என் பெயர்.

நாத்திகத்திலும் தமிழிலும் ஒருசேர ஈடுபாடு கொண்டிருந்த என் நண்பன் ‘பெருமாள் – தலைவனென்று பொருள்; முருகன் – அழகன் என்று பொருள். ஒன்றும் தவறில்லை’ என்று சமாதானப்பட்டுக் கொண்டான். நாத்திகத்தின் அடையாளமாக இல்லை என்றபோதும் அவனுக்கு நட்பின் அடையாளம் என் பெயர். இத்தனை விதமாக அடையாளப்பட்ட என் பெயர் கோவை கிராமம் ஒன்றில் சாதி அடையாளம் பெற்றது. அதற்குப் பின்னர் தான் பெயர்களில் இருக்கும் சாதி அடையாளங்களைக் கவனிக்கத் தொடங்கினேன்.

முருகன் – குறவர்களின் கடவுள் (தமிழர்களின் கடவுள் அல்ல). அதனால் தாழ்த்தப்பட்ட சாதி அடையாளம் இருக்கிறதோ? இல்லை. இந்தப் பெயரில் இருக்கும்  ‘அன்’ விகுதிதான் தாழ்த்தப்பட்ட சாதி அடையாளத்தைக் கொடுக்கிறது. இந்தப் பெயர் ஆதிக்க சாதிப் பெயராக அடையாளம் பெற வேண்டும் என்றால் ‘முருகேசன்’ (இதிலும் ‘அன்’ இருப்பினும் ‘ஈசன்’ – அதாவது ‘சாமி’ என்று பொருள்படுகிறது) என மாற வேண்டும். முருகன், கந்தன், ராமன், ரங்கன், கலியன், குப்பன், செல்லன் எனப் பெயர்கள் இருப்பின் அது தாழ்த்தப்பட்ட சாதி அடையாளம். முருகேசன், கந்தசாமி, ராமசாமி, ரங்கசாமி, கலியமூர்த்தி, குப்புசாமி, செல்லமுத்து என மரியாதை விகுதி பெற்றால் ஆதிக்க சாதி அடையாளம் கிடைத்து விடுகிறது.

பெயரைக் கொண்டு சாதியைக் கணிப்பது சாத்தியமாகுமா? ஆதிக்க சாதிகளிலிருக்கும் உட்பிரிவையும் கூடப் பெயர் கொண்டு கணக்கிட்டு விட முடியுமா? பரிசீலனை வேண்டும். இருப்பின் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. எப்படியோ எனது பெயர் கொண்டிருக்கும் சாதிய அடையாளம் கோவைப் பகுதி வரவேற்பின், விருந்தோம்பலின் லட்சணத்தை அடையாளப்படுத்தி விட்டது.

குறவர்களின் கடவுள்

—– 13-01-25

(கவிதாசரண், ஜூலை – ஆகஸ்ட் 2003 இதழில் வெளியான கட்டுரை.)

Latest comments (2)

கோவை பகுதியில் சாதி என்பது சமூகத்தில் ஊறி போன ஒன்று தான். நகரத்தில் அவ்வளவாக இல்லை, ஆனால் கிராமம் இன்னும் மாற வில்லை.

ஆனந்த் - தமிழணங்கு

ஒரே பெயரின் விகுதியும் சாதி காணும். கோவை விருந்தோம்பலின் இன்னோரு முகம் யோசிக்க வைக்கிறது.