போண்டு – முன்னுரை

You are currently viewing போண்டு – முன்னுரை

 

2024இல் நான் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் ‘போண்டு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். ரோஹிணி மணியின் கைவண்ண அட்டை. அந்நூலுக்கு நான் எழுதியிருக்கும் முன்னுரை இது.

பாதாளக் குகை

கடந்த ஆண்டு (2023) ‘வேல்!’ சிறுகதைத் தொகுப்பு வெளியாயிற்று. அதில் மொத்தம் பதின்மூன்று கதைகள். வளர்ப்பு விலங்குகளை மையமிட்டு எழுதியவை மட்டும் ஒன்பது. அதற்குப் பின்னும் அவ்வகைக் கதைகளையே எழுதிக் கொண்டிருந்தேன். இவ்வாண்டில் எழுதிய பதினொரு கதைகளைக் கொண்ட தொகுப்பு ‘போண்டு.’ இவற்றை எழுதும்போது மனம் நல்ல உத்வேகத்தோடு இருந்தது. இளம்வயதிலிருந்து என்னோடு இருந்த நாய்களும் பூனைகளும் மீண்டெழுந்து வந்தன. அவற்றின் முகங்களும் நிறங்களும் பல சம்பவங்களை நினைவுக்குக் கொண்டு வந்தன. பின்னோக்கிப் போய் அவற்றோடு வாழ்கிற அனுபவத்தை உணர்ந்து லயித்தேன்.

ஒரு சம்பவத்தைக் கதையாக எழுதிவிட எண்ணி எவ்வளவோ முயன்றேன். முடியவேயில்லை. அதை நினைத்ததும் மனம் சோர்ந்து போகிறேன். சிலசமயம் அந்த நாள் முழுவதும் வீணாகிப் போகிறது. பல்லாண்டுகள் கழிந்தும் கண்ணீர் வருகிறது. எதிர்காலத்திற்கு என்று அதைத் தள்ளி வைத்துக்கொண்டே வருகிறேன். இப்படி இவ்வழியில் இன்னும் கொஞ்சம் பயணப்பட முடியும். ‘வேல்!’ தொகுப்பில் ஒன்பது கதைகள்; இதில் பதினொன்று. இன்னும் பல கதைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. இப்போதைக்கு இருபது கதைகளோடு இடைவெளி கொடுத்துவிடலாம். வேறுவகைக் கதைகளில் கொஞ்சம் இளைப்பாறி மனநிலை கூடும்போது திரும்பவும் இதற்கு வரலாம் என்றிருக்கிறேன்.

மற்றபடி இந்தக் கதைகளைப் பற்றிச் சொல்வதற்கு எனக்கு நிறைய விஷயங்கள் இல்லை. ஏதேனும் சொன்னால் கதைகளின் நுட்பங்களைப் பரப்பி வைத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. வாசகச் சுதந்திரத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைந்துவிடும் செயல் சரியல்லவே. ஒன்றே ஒன்று மட்டும் சொல்லலாம். இவை வளர்ப்பு விலங்குகளைப் பற்றிய கதைகள் போலத் தோற்றம் தரும். ஒவ்வொரு கதையிலும் அவற்றின் சித்திரத்தை வேறுபடுத்திக் காட்ட முயன்றிருக்கிறேன். அவற்றின் குணாம்சங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். அவற்றின் நடவடிக்கைகளை ஆழ்ந்து நோக்கியிருக்கிறேன். அவற்றோடு ஊடாடிச் சென்றிருக்கிறேன். எனினும் வியப்புத் தருபவை அவை அல்ல. மனிதர்கள்தான்.

இக்கதைகளுக்குள் வரும் மனிதர்களின் அசைவுகளை இனம் பிரித்துப் பார்த்தால் வியக்க எவ்வளவோ இருக்கின்றன. விலங்குகளுக்கு உணவும் இனப்பெருக்கமும்தான் ஆதாரத் தேவைகள். அன்றாடம் உணவு தேடுவதே வாழ்க்கை. ஆண்டில் சில மாதங்கள் அல்லது சில நாட்கள் இனப்பெருக்கக் காலம். இனப்பெருக்கத்தைத் தடை செய்துவிட்டால் உணவு மட்டுமே. அதற்கு மேல் கொஞ்சம் அன்பும் அனுசரணையும் கிடைத்தால் போதும். அவற்றின் உலகம் நிரம்பித் ததும்பும். ஓரளவு மனித இயல்புகளைக் கற்றுக்கொள்வதால் சில விலகல்கள் ஏற்படுகின்றன. மற்றபடி அவற்றின் உலகில் போதாமை இல்லை.

மனிதரின் பெரிய பிரச்சினை போதாமைதான். எவ்வளவோ அள்ளி அள்ளிப் போட்டாலும் நிரம்பாத பாதாளக் குகை மனித மனம். இன்னும் இன்னும் என்று அவாவிக் கொண்டேயிருக்கும் பேராசை பீடித்த பேய். அடிப்படைத் தேவைகள் நிறைவேறி விட்டாலும் நுகர்வை நோக்கிப் பாய்கிறோமே அது புறச்சான்று. அகச்சான்றுகளுக்கு அளவேயில்லை. எதையும் தன்னுடைமையாக்கிக் கொள்ளத் துடிக்கும் இயல்பு எல்லோருக்கும் உண்டு. பொன் பொருள் சொத்து மட்டுமல்ல, அன்பும் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைக்கும் காலம் இது. முந்தைய காலத்தை விடவும் இந்த உடைமை உணர்வு இப்போது பரக்க வெளிப்படக் காண்கிறோம். எல்லாமே போதாமையில் இருந்து வருவதுதான்.

இலக்கியம் அகத்தில் பயணப்பட்டு மனித அசைவு ஒவ்வொன்றிலும் படிந்திருக்கும் போதாமையை வெளியே இழுத்துக் கொண்டு வந்து காட்டுகிறது. இந்தக் கதைகளின் பொதுத்தன்மை என்றால் இந்தப் போதாமைதான். சிலவற்றில் வெளிப்படையாகவும் சிலவற்றில் உள்ளார்ந்தும் போதாமை இருக்கும். சில கதைகள் வேறெதையோ பேசுவது போலவும் தோன்றும். பாதாளக் குகைக்குள் சிறிது வெளிச்சத்தைப் பாய்ச்ச முயன்றிருக்கிறேன். இவையெல்லாம் வேண்டாம், எனக்கு வளர்ப்பு விலங்குகள் போதும் என்று நினக்கும் மனதிற்கும் உவப்பளிக்கும் வகையில் இந்தக் கதைகளை எழுதியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

இவற்றில் சில கதைகள் காலச்சுவடு, உயிர்மை, மணல்வீடு உள்ளிட்ட அச்சிதழ்களில் வெளியாயின. சில கதைகள் கனலி, வல்லினம், அகழ், வாசகசாலை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகின. அவ்விதழ்களுக்கும் வெளியிட்ட நண்பர்களுக்கும் நன்றி. நூலாக்கம் செய்திருக்கும் காலச்சுவடுக்கும் நன்றி.

20-11-24

நாமக்கல்                                                                                        பெருமாள்முருகன்.

—–  26-12-24

Latest comments (1)