புறவழிச் சாலை

You are currently viewing புறவழிச் சாலை

குமரேசன் பகுதிநேரமாக அந்த வேலையை ஏற்றுக்கொண்ட ஐந்தாம் நாள் நடந்த நிகழ்வு இது. புறவழிச் சாலையின் ஓரமாக இருந்த காட்டுக்குடிசையில்  வேலை. சின்னக் குண்டு பல்பு வெளிச்சத்தைச் சுற்றிலும் இருள் பம்மிச் சூழ்ந்திருக்கும். அங்கே இரவு முழுவதும் தனியாகத் தங்கியிருக்க வேண்டும். அகாலத்தில் ‘பார்ட்டி’ வந்தால் மெக்கானிக் வளவனுக்கு உடனடியாகச் செல்பேசியில் தகவல் சொல்ல வேண்டும். அதுதான் வேலை.

முந்தைய வாரம் ஒரு நள்ளிரவு நேரம். வாசல் விளக்கு வெளிச்சத்தில் நாவல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தவனுக்கு நேரம் தெரியவில்லை, தூக்கமும் வரவில்லை. பெருஞ்சத்தம் எழுப்பியபடி தெருவில் போன வளவன் சட்டென்று வண்டியை நிறுத்தினான். வண்டிச் சத்தத்தை மீறி ‘என்னடா மாப்ள… இவ்வளவு நேரம் படிப்பா?’ என்று கத்தினான். தெருவில் படுத்திருந்த பலரையும் எழுப்பிவிட்டுப் போனான். அடுத்த ஓரிரு நாளுக்குப் பிறகு ‘இங்க புத்தகம்  படிச்சிக்கிட்டு வெட்டியாத்தான இருக்கற. அத அங்க உக்காந்து படி. தூக்கம் வந்தாத் தூங்கு. எதாச்சும் பார்ட்டி வந்தா போன் பண்ணு. உஞ்செலவுக்கு எதுனா கெடைக்கும்’ என்றான் வளவன். அப்படி வாய்த்த வேலை.

சாலையோரத்தில் மரக்கம்பு ஒன்றை நட்டு அதில்  டயரைத் தொங்கவிட்டு நடுவில் சிவப்பு விளக்கை எரிய விட்டிருந்தான் வளவன். உடைந்த சிமிட்டி அட்டைகளைப் போட்டுப் பேருக்குக் கூரையோடிருந்த  குடிசைக்குள் பஞ்சர் ஒட்டும் பொருட்கள் கொஞ்சம். குடிசைக்கு வெளியே கட்டில், ஒற்றை விளக்கு. கட்டிலில் படுத்துக்கொண்டு தலைப்பக்கம் வெளிச்சம் தெரிகிற மாதிரி புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொள்ளலாம். விளக்கை நோக்கி வரும் இரவுப் பூச்சிகள்தான் தொந்தரவு. வெளிச்சம் தொந்தரவு என்றால் இருளுக்குள் கட்டிலை நகர்த்திக்கொள்ளலாம். நான்கு நாளில் குமரேசனுக்கு இந்தத் திட்டம் எல்லாம் கைகூடி வந்திருந்தது.

சாலையில் மின்னிப் பறக்கும் வாகனச் சத்தம்தான் இன்னும் அவனுக்குப் பழகவில்லை. வீச்சென்று கத்தி மறையும் ஒவ்வொரு வாகனமும் அவனுக்குள் பீதியைக் கிளப்பின. கண்ணுக்கெட்டிய தொலைவில் ஒன்றிரண்டு வீடுகள் இருந்தன. தனியாக இருக்கப் பயமில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தால் நேரம் ஓடுவது தெரியாது. ஒருநாளைக்கு ஒரு புத்தகம் படிக்கலாம் என அவன் திட்டமிட்டுக்கொண்டான்.

அந்த ஐந்தாம் நாள் அவன் எடுத்த புத்தகம் அத்தனை சுவாரசியமாக இல்லை. நாவல்தான். ஆனால் ஒருதொடர் சாதாரணக் கதை சொல்லல், அடுத்த தொடர் பெரிய தத்துவ பாவனை. மனம் ஒன்றவில்லை. மூடி வைத்துவிட்டுத் தொங்கக்கட்டிலில் படுத்தபடி வானத்தையே வெகுநேரம் பார்த்திருந்தான். சாலைக்குப் போய் ஓரமாய் உட்கார்ந்து வாகனங்களை வேடிக்கை பார்த்தான். ஒற்றையடி வைத்து ஏகும்படி இருந்த மழைநீர்க் கால்வாய் மூடாக்கின் மேல் அடி வைத்துக் கொஞ்ச தூரம் நடந்தான்.

வாகனம் வராத சில நொடி நேரம் இருள் சுவர் போல நின்றது. நிலாக்காலம் என்றால் நன்றாக இருந்திருக்கும். வெகுதூரத்திற்கு எதுவுமேயில்லை.  தனியாக நடக்க என்னவோ போலிருந்தது. அப்படியே வந்து கட்டிலில் கவிழ்ந்து படுத்தான். கயிறு நைந்து போன தொங்கக் கட்டில் தொட்டில் போல இருந்தது. இருளுக்குள் நகர்த்திப் போட்டுக் கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனான்.

எந்நேரம் என்று தெரியவில்லை. யாரோ தொடுவது போல உணர்ந்து சட்டென்று எழுந்தான். இருள் ‘சார் சார்’ எனக் கூப்பிட்டது. யாரோ வரும் அசைவு தெரிந்தது.  பிரயாசைப்பட்டு எழுந்து நின்றான்.  அவன் வேலையில் முதல் ‘பார்ட்டி.’  ஆள் முப்பது முப்பத்தைந்து வயதுக்குள் இருப்பான். பேண்ட்டும் சட்டையும் வெகுசாதாரணம். காலில் ரப்பர் செருப்பைப் போட்டிருந்தான். இதை வைத்து இந்தப் பக்கத்து ஆட்களை எடை போட்டுவிட முடியாது. கோடிக்கணக்கில் வைத்திருந்தாலும் பஞ்சைப் பராரிகள் மாதிரி தோற்றம் காட்டுவதில் சூரர்கள்.

எங்கோ கோயிலுக்குப் போய் வந்திருப்பதன் அடையாளமாக அவன் நெற்றியிலும் கழுத்திலும் திருநீறும் பொட்டுக்களும் இருந்தன. வரும் வழியில் வண்டி பஞ்சர் ஆகிவிட்டது. அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு நடந்து வந்திருக்கிறான். ஓட்டமும் நடையுமாக வந்திருக்கக் கூடும். முகமும் கழுத்தும் வேர்வைக்குள் பொதிந்திருந்தன. குமரேசனை மெக்கானிக்காக நினைத்து ‘வாங்க போகலாம்’ என்றான் அவன். கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போய்விடுவான் போலிருந்தது. அத்தனை பதற்றம். அவசரம். 

வளவனைச் செல்பேசியில் அழைத்தான் குமரேசன். அழைப்பு போய்க்கொண்டேயிருந்தது. இரண்டு முறை முயன்றும் எடுக்கவில்லை. வந்தவன் பொறுமையில்லாமல் நின்றான். ‘போலாங்களா?’ என்று கேட்டான்.   ‘ஆள் வரணும்’ என்றான் குமரேசன். ‘உக்காருங்க’ என அங்கே போட்டிருந்த கல்லைக் காட்டினான். மீண்டும் முயலும் முன் வளவன் அழைத்தான். விசயத்தைச் சொன்னதும் ‘வந்தர்றன்’ எனச் சொல்லிப் பட்டென்று  வைத்துவிட்டான். வந்தவன் உட்காரவில்லை.  ‘எப்ப ஆளு வரும்?’ எனப் பலமுறை வெவ்வேறு விதமாகக் கேட்டபடியிருந்தான். அவனிடம் வேறு எதுவும் பேச்சுக் கொடுத்தாலும்  மனம் ஈடுபட்டுப் பதில் சொல்லவில்லை. வண்டியைத் தனியாக விட்டு வந்ததால் பதற்றமாக இருக்கிறான் போல என நினைத்துக்கொண்டான்.

வளவன் ரொம்ப நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. பத்தாவது நிமிடத்தில் வந்து நின்றான். ஊரிலிருந்து இரண்டு கல் தொலைவு சாலை. எழுந்து அப்படியே வண்டியை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். இரவுப் புணர்ச்சியில் ஈடுபட்டிருப்பான் என்று ஊகிக்கும்படி இருந்தது அவன் தோற்றம். வந்தவனைப் பார்த்து ‘என்ன வண்டி?’ என்றான். அவன் பைக்கின் பெயரைச் சொன்னான். அது நல்ல கனமான வண்டி ஒன்றின் பெயர். ‘எங்க நிக்குது?’ என்று கேட்டான். அவனுக்குச் சரியாக இடம் சொல்ல இயலவில்லை. நடக்கும் தூரம்தான் என்றான்.  ‘எந்த வீலு?’ என்ற கேள்விக்கு ‘பேக் வீலு’ என்றான் அவன்.

குடிசைக்குள் கிடந்த காலுடைந்த இரும்பு நாற்காலி ஒன்றைத் தூக்கி வந்து வெளியில் போட்டு நிதானமாக உட்கார்ந்தான் வளவன். வந்தவன் ‘சார், போலாம் சார்’ என்றான். ‘போயி என்ன பண்றது, சொல்லு. பேக் வீலக் கழட்டிக்கிட்டு வர முடியாது. அங்க வந்தாலும் வெளிச்சமிருக்காது, பஞ்சர் போட முடியாது. போட்டாலும் காத்தடிக்க முடியாது. என்ன செய்யலாம் சொல்லு’ என்று சிரித்துக்கொண்டே கேட்டான். வந்தவனுக்குச் சொல்லப் பதில் ஏதுமில்லை.

அப்புறம் முடிவாக ‘என்ன செய்யலாம் சொல்லுங்க சார்’ என்றான். கட்டிலில் உட்கார்ந்திருந்த குமரேசனைப் பார்த்து ‘என்ன மாப்ள செய்யலாம்’ என்றபடி கொஞ்ச நேரம் யோசிப்பது போலப் பாவனை செய்தான் வளவன். ‘ஏம் மாமா… உங்க வண்டியில போயி வீலக் கழட்டிக்கிட்டு வர முடியாதா?’ என்றான் குமரேசன். வந்தவனுக்கு எப்படியாவது உதவி செய்துவிட நினைத்தான் அவன். ‘பிரண்ட் வீல்னா ஈஸி. பேக் வீலக் கழட்டறதுக்குள்ள தாவு தீந்துரும். இந்த வண்டியில அதும் கஷ்டம். ஒரு பட்டறையே வேணும்’ என்றான். 

‘சார், என்னாச்சும் பண்ணுங்க சார். வண்டி தனியா நிக்குது சார்’ என்று வளவனுக்கு அருகில் வந்து கெஞ்சுவது போலக் கேட்டான் அவன். ‘ரோட்டுலயேவா நிறுத்திட்டு வந்த?’ என்றதும் ‘இல்ல சார் ஓரமா இருட்டுக்குள்ளதான் உட்டுட்டு வந்திருக்கறன். ஆனாலும் பயமாத்தான் இருக்குது’ என்றான் அவன்.

‘உன்னப் பாத்தாலும் பாவமா இருக்குது. வண்டிய வெச்சுக்கிட்டுத் தனியா என்ன பண்ணுவ? மெதுவா வண்டிய இங்க தள்ளிக்கிட்டு வந்துரு. ஒட்டித் தந்தர்றன்.’

‘தள்ளி முடியல சார். தூரம் அதிகம்.’

‘அப்படினா ஒருவழிதான் இருக்குது. மினிடோர் ஒன்ன வரச் சொல்லி ஏத்திக்கிட்டு வந்தரலாம். இங்க கொண்டாந்து ஒட்டிக்கலாம்.’

‘இந்நேரத்துக்குக் கெடைக்குமா சார்’

‘பாக்கலாம். நம்மூருக்காரப் பசங்க ரண்டு மூனு பேரு வெச்சிருக்கறானுங்க. ஆனா எல்லாம் தண்ணியப் போட்டுட்டுத் தூங்குவானுங்க. கூப்பட்டா போன எடுப்பானுங்களான்னே தெரிலியே. போட்டுப் பாப்பமா? வந்தாப் பணம் ஆவுமே. வெச்சிருக்கறயா?’

‘குடுத்தர்லாம் சார், கூப்பிடுங்க சார்.’

தன் சொத்தையே கேட்டாலும் எழுதிக் கொடுத்துவிடுவான் போல அவன் வார்த்தைகள் வேகமாக வந்தன. வளவன் தன் செல்பேசியை எடுத்துக் குமரேசனிடம் நீட்டினான்.  ‘சீலனுக்குப் போடு’ என்றான். போட்டான். அவன் எடுக்கவில்லை. ‘சந்தனுக்குப் போடு’ என்றான். அவனும் எடுக்கவில்லை. நான்கைந்து பேருக்குச் சொல்லிப் போட்டும் எவனும் எடுக்கவில்லை. குமரேசனுக்கே பதற்றமாக இருந்தது. எவனாவது ஒருவன் எடுத்துப் பேசினால் உடனடியாகப் பஞ்சர் ஒட்டிவிடலாம் என்று தோன்றியது.

மெக்கானிக் வளவன் தாடையைச் சொரிந்துகொண்டு ‘பக்கத்து ஊர்ல ஒருத்தன் இருக்கறான். நல்ல பையன். கூப்பிட்டா வந்திருவான். அவன் வந்தா கொஞ்சம் செலவு எச்சாவும். பாக்கலாமா?” என்றான். வந்தவன் ‘கூப்பிடுங்க சார், வண்டி தனியா நிக்குது’ என்று வளவனின் அருகில் வந்து அவன் கையைப் பற்றுவது போல நெருக்கமாக நின்றான். செல்பேசியைக் கையில் வாங்கி மெதுவாக எண்ணைத் தேடி அழைப்பு விடுத்தான். இரண்டாவது அழைப்பின் போது அவன் எடுத்துவிட்டான்.

‘சின்னவா, ஊட்லதான இருக்கற, வண்டிய எடுத்துக்கிட்டு வர்றயா, இங்க ஒரு பார்ட்டி, பாத்தாப் பாவமா இருக்குது, நடுராத்திரியில உன்னயக் கூப்பிடக் கூடாதுதான், ஆனா பாவம் ஆளு, வா, சேத்து வாங்கிக்கலாம் வா, ஒன்னும் பிரச்சினயில்ல, உன்னோட சேத்தா நாலு பேராச்சு, தூக்கிரலாம், பணத்தப் பத்திப் பிரச்சினயில்ல, வாங்கிக்கலாம் வா, அட எனக்காவ வாப்பா.’

வைத்துவிட்டு ‘வந்திருவான், நான் ஒரு வேலைன்னு கூப்பிட்டு வர்லைன்னா, இன்னொரு நாளைக்கி எப்பிடிக் கூப்பிடுவன்?” என்றான்.  ‘வண்டி தனியா நிக்குது சார், சீக்கிரமா வரச் சொல்லுங்க சார்’ என்றான் வந்தவன்.

‘பொறுப்பா, ஆளத் தூக்கத்துல இருந்து எழுப்பியிருக்கறன், மூஞ்சியக் கீஞ்சியக் கழுவிக்கிட்டு அவன் வரோணுமில்ல, வா, வந்து இப்பிடி உக்காரு, இந்தப் பைபாசு ரோட்டுல சல்லுசல்லுன்னு வண்டிங்க போயிக்கிட்டே இருக்கும், ஆனா ஒருத்தனும் நிறுத்த மாட்டான், இது ஒரு அனாதிக் காடு மாதிரிதான், உன் வண்டிய எவனும் சீந்த மாட்டான், என்ன வண்டி புதுசா, இல்ல, இப்பத்தான் வண்டி வாங்கி ஓட்டறயா, இந்தப் பற பறக்கற?”

பேசியபடியே இருந்தான் வளவன். வந்தவன் குந்த வைத்த மாதிரி உட்கார்ந்து தலையைக் குனிந்துகொண்டான். கண்ணை மாறி மாறித் துடைத்தான். குமரேசனுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ‘என்னண்ணா, அழுவறயா, வண்டி ஒன்னும் ஆயராது, நான் வேண்ணா வர்றன், போயி அங்க நிப்பமா? மாமா நீங்க பின்னால வந்தர்றீங்களா?” என்று வந்தவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வளவனிடம் கேட்டான். ‘நீ யார்ரா, கூத்துல கோமாளியாட்டம், எவ்வளவு தூரம் நடந்து போவ? இப்ப வண்டி வந்திரும், பேசாத இரு’ என்று கோபமாகச் சொன்னான் வளவன். அதைக் கேட்டதும்  ‘ஆகா, இது வழக்கமான நாடகம். இன்றைக்குப் புதுப் பாத்திரங்களாக வந்தவனும் நானும் போல’ என்று தோன்றியது குமரேசனுக்கு. இதுவரைக்கும் இப்படி எத்தனையோ ஆட்களைப் பார்த்திருப்பார்கள். எத்தனையோ வண்டிகளுக்குப் பஞ்சர் போட்டிருப்பார்கள். அவர்கள் இந்த நடிப்புக்குப் பயிற்சி பெற்றவர்கள். இந்த எண்ணம் வந்த  பின் நாடகம் பார்க்கும் ஆவல் குமரேசனுக்கு வந்துவிட்டது.

வளவன் சொல்லி முடிக்கும் முன்பே  மினிடோரின் வெளிச்சம் அடித்தது. ஊருக்குள்ளிருந்து வரும் பாதையில் பட்டறைக்கு நேரே நிறுத்திவிட்டுச் சின்னவன் இறங்கிச் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு  வந்தான். குமரேசனைப் பார்த்து ‘இவன் எங்க வந்தான்?” என்றான் புகையை ஊதியபடி.

‘பார்ட்டி புடிக்க மாப்ளதான் இங்க படுத்துக்கறான், இவன் ஒரு பொஸ்தவப் பைத்தியம், அதான் இங்க உக்காந்து படிச்சுக்க, பார்ட்டி வந்தாச் சொல்லுன்னு வெச்சிருக்கறன், ஆடு மேச்சாப்பலயும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணுப் பாத்தாப்பலயும் ஆச்சு அவனுக்கு’ என்று சிரித்தான் வளவன்.

வந்தவன் எழுந்து ‘வண்டி தனியா நிக்குது சார், போலாமே’ என்று மினிடோரை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

‘அட நில்லுப்பா, எந்த எடத்துல வண்டி நிக்குது, எவ்வளவு தூரம் எல்லாம் சொல்லீரு. அப்பறம் பணத்துக்கு ஓரியாட்டம் பண்ணக் கூடாது’ என்றான் சின்னவன். தன் கையில் எதுவுமில்லை என்பது வந்தவனுக்குப் புரிந்துவிட்டது.  ‘இங்கருந்து ரண்டு ரண்டரக் கிலோ மீட்டருதான் இருக்கும் வண்டி நிக்கற எடம். கேக்கறதக் குடுத்தர்றன், வண்டி தனியா நிக்குது சார், போலாம் சார்’ என அவன் பறந்தான்.

சிகரெட்டை மண்ணில் போட்டு மிதித்துவிட்டு ‘இங்க பாரு, அஞ்சு கிலோ மீட்டரு வரைக்கும் ஐந்நூறு. அதுக்கு மேல ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நூறு நூறு, ஏத்தி எறக்க மூனு பேரு, ஆளுக்கு எரநூறு. செரியா? பணம் இருக்குதா? வேல முடிஞ்சொடன பணம் இவ்வளவுதான் இருக்குது, அப்படி இப்படின்னு சொன்னீன்னா வண்டிய உடமாட்டம். போயிப் பணம் கொண்டாந்து குடுத்துட்டுத்தான் எடுத்துக்கிட்டுப் போவோணும், என்ன சொல்ற?’ என்று கெத்துக் காட்டினான் சின்னவன்.

வந்தவன் சட்டென்று தன் சட்டையைத் தூக்கிப் பேண்ட் பாக்கட்டுக்குள் கைவிட்டுப் பர்ஸை எடுத்துப் பிதுக்கி வெளிச்சத்தில் காட்டினான். ‘குடுத்தர்றன் சார், வாங்க போலாம், வண்டி தனியா நிக்குது’ என்றான். பர்ஸில் பல வண்ண நோட்டுக்கள் தெரிந்தன. வளவன் திருப்தியுடன் ‘செரி, போலாம், வண்டிய உட்டுட்டு வந்ததுக்குப் புதுப்பொண்டாட்டிய உட்டுட்டு வந்த மாதிரி பறக்கற’ என்று கோணச் சிரிப்புடன் கிளம்பினான். 

சின்னவனுடன் முன்னிருக்கையில் வளவன் உட்கார்ந்துகொண்டான். வந்தவனுடன் குமரேசன் பின்னால் ஏறினான். ‘இங்க பாரு, வண்டி லெப்ட்ல ஒரு கிலோ மீட்டர் போயித்தான் ரைட்டுக்குத் திரும்பணும். இங்க வழி கெடையாது. போக ஒரு கிலோ மீட்டர், ரைட்ல இதுவரைக்கும் வர ஒரு கிலோ மீட்டர்னு இதுவே ரண்டு கிலோ மீட்டர் ஆயிரும். அதுக்கு மேல மூனு கிலோ மீட்டருக்குள்ள வண்டி நிக்கோணும். அதுக்கு மேல ஆச்சுன்னா நான் சொன்னபடி காசு தந்தரோணும். வண்டி நிறுத்துன எடத்துக்கு அடையாளம் வெச்சிருக்கறயா? அங்க இங்கன்னு இழுத்தடிச்சின்னா ஆவாது’ என்று கத்தினான் சின்னவன். வந்தவன் எல்லாவற்றுக்கும் தலையாட்டினான்.  அவனுக்கும் வேறு வழியில்லை என்று தோன்றியிருக்கக் கூடும்.

இரவு நேரப் புறவழிச் சாலையின் தோற்றம் சர்ரென்னும் ஒற்றைச் சத்தமும் கண்ணைக் கூசிப் பளிச்சிடும் வெளிச்சமாகவும் இருந்தது. வந்தவனுக்கு இந்த இரவுச் சாலை எந்த அளவுக்குப் பழக்கமாகியிருக்கும் என்று தெரியவில்லை. சின்னவன் சொன்னது போலவே வண்டி ஒரு கிலோ மீட்டர் போய் வலது பக்கச் சாலைக்குத் திரும்பியது. மீண்டும் பஞ்சர் பட்டறைக்கு நேரே வந்தபோது ‘இதுதான் நாம பொறப்பட்ட எடம்’ எனச் சொன்னான் குமரேசன். வந்தவன் எதிர்ப்பக்கச் சாலையைக் குனிந்து கவனமாகப் பார்த்துக்கொண்டே வந்தான். ஏதோ ஓர் அடையாளத்தை அவன் வைத்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் சொல்லவில்லை. சட்டென்று பதறி ஓரிடத்தில் ‘நிறுத்துங்க நிறுத்துங்க’ என்று கத்தினான். டிரைவருக்குப் பேச வைத்திருந்த சிறு இழுப்புக் கதவுக்குள் வாயை முழுமையாக விட்டு  ‘மாமா நிறுத்துங்க’ என்று குமரேசன் சொன்னதும் வண்டி ஓரமாகப் போய் நின்றது.

வந்தவன் வண்டி நிற்கும் முன்பே சட்டெனக் குதித்து எதிர்ப்பக்கம் ஓடினான். குமரேசன் ‘பாத்துப் பாத்து’ என்று கத்தினான். தூரத்தில் இருப்பது போலத் தெரியும் வண்டி ஒரே நொடியில் அருகில் வந்துவிடும். அவன் எதிர்ப்பக்க இருளில் போய்க் கலந்தான். ஐந்து நிமிடத்தில் திரும்ப வந்தான். ‘இங்க இல்ல, இன்னம் கொஞ்சம் போவோணும்’ என்றான். ‘தூக்க நேரத்துல எழுப்பி ஏய்யா எங்கள அலய வெக்கற. செரியாப் பாத்துச் சொல்லு. இப்பவே நாலு கிலோ மீட்டர் ஆச்சு’ என்றான் வளவன். ‘கொஞ்சம் மெதுவாப் போங்க, பாத்துக்கிட்டே வர்றன்’ என்றான் அவன். ‘ஆமா, பைபாஸ் ரோட்டுல ஊந்துக்கிட்டுப் போனா அடிச்சுத் தூக்கீருவான், பாத்துக்க’ என்று வேகமாக வண்டியை எடுத்தான் சின்னவன்.

எதிர்ப்பக்கமாகவே பார்த்துக்கொண்டு வந்தவனிடம் ‘எதுனா அடையாளம் வெச்சிருக்கறயாண்ணா? சொல்லு, நானும் பாக்கறன்’ என்று குமரேசன் உதவிக்குப் போனான். இவன் மேல் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்க வேண்டும்.   ‘ஒரு பால மரத்தடியில சின்னக் கோயில் ஒன்னு இருந்துது, வேல்மணிச் சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும், ரோட்டுக்கு மேக்கால’ என்றான் அவன். குமரேசனுக்கு அந்தச் சாலையும் அதன் ஊர்களும் நன்றாகப் பழகியவைதான். என்றாலும் இந்தப் புறவழிச் சாலை வந்த பிறகு எல்லா அடையாளங்களும் சட்டென மாறிப் போய்விட்டன. சாலையோரம் இருந்த புளியமரங்கள் ஆயிரமாயிரம். எல்லாம் வெட்டப்பட்டதும் அடையாளமே இல்லாமல் போயிற்று. எல்லா இடத்திற்கும் ஒரே அடையாளம். அது தார்தான்.

குமரேசன் கண்ணை மூடி யோசித்துப் பார்த்தான். பாலமரம், சின்னக் கோயில், வேல்மணிச் சத்தம், மேற்கு என எல்லாம் அவனுக்குள் வந்தன.  அவனுக்குள் இடம் பிடிபடுகிற மாதிரி தெரிந்தது.  ‘அத ஒட்டிப் பெரிய வேலி போச்சா?’ என்று கேட்டான். அவனுக்கு அப்படி ஒரு அடையாளம் மனதில் பதிந்திருக்கவில்லை. என்றாலும் இடத்தைப் பெரும்பாலும் குமரேசன் ஊகித்துவிட்டான். உடனே வளவனைக் கூப்பிட்டு இடத்தைச் சொல்ல நினைத்தான். அப்படிச் சொன்னால் அவன் திட்டக்கூடும். வந்தவனை இன்னும் கொஞ்சம் அலைய வைப்பது அவர்கள் நோக்கம்.

அவனுடன் சேர்ந்து குமரேசனும் இடத்தைப் பார்த்துக்கொண்டு வந்தான். அந்த இடம் வந்ததும் ‘இதுதான்’ என்றான். உடனே அவன் டிரைவர் இருக்கைப் பக்கம் குனிந்து ‘நிறுத்துங்க நிறுத்துங்க’ என்று கத்தினான். ஆனாலும் சிறுஇழுப்புக் கதவு வழியாக ஊதியதும்தான் வண்டி நின்றது. வந்தவன் குதித்து ஓடி இருளுக்குள் போனான். கொஞ்ச நேரம் ஆளையே காணவில்லை. ‘எங்கடா போய்த் தொலஞ்சான்’ என்று திட்டினான் சின்னவன். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு வந்தான் அவன். அந்த இடம்தான்.  ‘இந்த எடத்துல திரும்பி அங்க வர முடியாது. இன்னம் ஒரு கிலோ மீட்டராச்சும் போய்த்தான் வரணும். இப்பவே அஞ்சு கிலோமீட்டருக்கு மேல ஆயிருச்சு. ரேட்டு சொன்னது நெனப்பிருக்குதா?’ என்றான் சின்னவன். ‘நான் இங்கயே நின்னுக்கறன். நீங்க போய் வாங்க’ என்றான் வந்தவன். ஆனாலும் நம்பிக்கையில்லாமல் அவனுடன் குமரேசனையும் இறங்கிக்கொள்ளச் சொன்னார்கள்.

வாகனங்களைவிட வேகமாகச் சாலை கடந்து அந்தப்பக்கம் போய்விட்டான். குமரேசன் நிதானித்து மெதுவாகவே கடந்தான். சாலையிலிருந்து ஐம்பது அடி தள்ளியிருந்த காட்டை ஒட்டிக் கோயில். பாலமரம் நன்கு அடர்ந்திருந்தது. அதனடியில் நிறுத்தியிருந்த வண்டியைக்  குமரேசன் போவதற்குள்ளாகவே மெல்லத் தள்ளிச் சாலைக்குக் கொண்டு வந்துவிட்டான். அவன் சொன்ன மாதிரி காற்றுக்கு வேல்மணி நாவுகள் அசைந்து ஓசை எழுப்பின. வாகனச் சத்தம் இல்லாத போது மணியோசை நாதம் போல ஒலித்தது. வண்டி அப்படி ஒன்றும் புதிதல்ல. சில வருசங்களுக்கு முன்னாலானதுதான். இதற்கா இப்படிப் பதறினான் என்று குமரேசனுக்கு எரிச்சலாக இருந்தது. சாலையோர மூடாக்கின் மேல் வண்டியை ஒட்டி உட்கார்ந்து கொண்டான் குமரேசன். அவன் மீண்டும் கோயில் பக்கம் போய் இருளில் கலந்தான். பயத்திலும் பதற்றத்திலும் அவனுக்கு வயிறு கலங்கியிருங்கியிருக்கக் கூடும்.

மினிடோர் எவ்வளவு தூரம் போய்த் திரும்பி வருமோ தெரியவில்லை. திரும்பும் வழி ரொம்ப தூரத்தில் இல்லை என்றாலும் எங்கேனும் நிறுத்தியிருந்து பிறகு வருவார்கள். அருகில் இருந்த சிறுநகரத்தில் பட்டறை போட்டிருந்தான் வளவன். இந்த இரவு வேலை என்றைக்காவது அமையும் போல. இது கூடுதல் வருமானம். சாலையோரக் காட்டில் குடிசை போட்டிருக்க ஏதேனும் சிறுதொகை காட்டுக்காரருக்குக் கொடுக்க வேண்டியிருக்கும். விடிய விடிய விளக்கும் எரிகிறது. அதற்கும் சேர்த்துத் தருவானாக இருக்கும்.

இரட்டை விளக்கோடு வரும் வாகனம் ஒவ்வொன்றையும் சின்னவனின் மினிடோராக இருக்கும் என நினைத்து ஆவலோடு பார்த்து ஏமாந்தான் குமரேசன். ஏனோ அந்தச் சமயத்தில் கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சி நினைவுக்கு வந்தது. மாலைக்கண் நோய் இருப்பதை மனைவிக்கு மறைத்து வண்டியோட்டி வரும் கவுண்டமணி, லாரிக்கு நேராகப் போவதும்  ‘ரண்டு பைக்கு வருது, நடுவுல பூந்து போயிரலாமுன்னு நெனச்சன்’ என்று அவர் சொல்வதுமான காட்சி அவன் மனதில் ஓடிச் சிரிப்பு வந்தது. இப்படி ஓர் அகால வேளையில் தன்னந்தனியாக உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருக்கும் தன்னை ஏனோ ஒரு பைத்தியமாய்க் கற்பனை செய்துகொள்ளச் சுகமாக இருந்தது.

ஒருவழியாக மினிடோர் வந்து அவன் காலடியில் நின்றது. அதுவரைக்கும் இருளுக்குள் போனவன் வரவில்லை. பின்பக்கக் கதவுக் கொக்கிகளைக் கழற்றித் திறந்தான் சின்னவன். அதற்குள் வந்தவிட்ட அவன், பைக்கை வண்டியின் பின்னால் தள்ளி வந்தான். ‘ரண்டு கிலோ மீட்டர் எச்சு பாத்துக்க. இந்நேரத்துக்கு இந்த ரோட்டுல எவனாச்சும் பைக்குல வருவானா? பகல்லயே வரக்கூடாது. அப்படி என்ன ராத்திரியில அவசரம்?’ என்று ஏதேதோ அறிவுரைகள் சொல்லியபடியே இருந்தான் வளவன். சின்னவன் வண்டியின் மேல் ஏறிக்கொண்டான். வளவன் பைக்கின் முன்சக்கரத்தைக் கதவுப் பலகையின் மேல் தூக்கி வைத்தான். சின்னவன் முன்சக்கரத்தைப் பிடித்து இழுக்கப் பின்னிருந்து மூவரும் தூக்கித் தள்ள எந்தச் சங்கடமும் தராமல் வண்டியில் ஏறிக்கொண்டது பைக்.  கதவைச் சாத்த நினைத்து ‘ஏறுங்க’ என்றான் சின்னவன்.  ‘ஒரு நிமிசம்’ என்று சொல்லிவிட்டுக் கோயில் பக்கம் ஓடினான் வந்தவன்.

அவன் திரும்ப வரும்போது தலை குனிந்தபடி பெண்ணொருத்தியும் அவனுடன் வந்தாள். ‘வண்டி தனியா நிக்குது நிக்குதுன்னு பொலம்புனானே, இந்த வண்டியத்தானா?’ என்று சிரித்தான் வளவன்.  ‘புதுவண்டியா பாரு, நீதான மெக்கானிக்கு’ என்றான் சின்னவன். அவர்கள் அருகில் வந்ததும் அந்தப் பெண் முக்காடிட்டுக் கொண்டாள். ஒல்லியான உடம்புக்காரி. லேசாக மினுங்கும் தகட்டுப் புடவை ஒன்றைக் கட்டியிருந்ததால் கொஞ்சம் பருத்த மாதிரி தெரிந்தாள். அவள் முகத்தைப் பார்க்கக் குமரேசனுக்கு ஆவலாக இருந்தது.  ‘யோவ், பொம்பளயத் தள்ளிக்கிட்டு வந்தயா?’ என்று கோபப்பட்டான் வளவன். உடனே அவன் ‘இல்ல சார், இவ எம் பொண்டாட்டி. விசேசம் ஒன்னுக்குப் போனம். காலையில கொஞ்சம் வேலையிருக்குது, அதான் போயிரலாமுன்னு வந்தம். இப்பிடிப் பஞ்சர் ஆவுமுன்னு தெரியில’ என்று கெஞ்சுவது போலச் சொன்னான்.

‘செரி, எதுக்கும் ஊரு, அட்ரஸெல்லாம் குடுத்துரு. நாளைக்கு எங்களுக்கு எதும் பிரச்சின வந்தரப் போவுது’ என்றான் சின்னவன். தன் ஊர், சொந்தக்காரர்கள் எனப் பலதையும் அடையாளம் சொல்லித் தன்னை நிரூபித்துக்கொள்ள முயன்றான் அவன். சொன்னவை எல்லாம் இன்னும் பத்துக் கல் தொலைவைத் தாண்டியிருந்தன. அதனால் அவர்களுக்கு எந்த அடையாளமும் சரியாகப் பிடிபடவில்லை.

அந்தப் பெண் தன் முகத்தை இருளாகவே வைத்துக்கொண்டாள். அவன் சொல்வது முற்றிலும் உண்மையாகவே இருக்கக்கூடும் எனத் தோன்றியது. ஆனாலும் அவனைச் சந்தேகப்படுவது போலவே இருவரும் பேசினார்கள். அப்படியானவள்தானோ? இருந்தால் வளவனும் சின்னவனும் பேசிப் பார்ப்பார்களோ? பேசினால் தான்  என்ன செய்வது என்று குமரேசனுக்கு யோசனையாக இருந்தது.

‘இந்த பைபாஸ் வந்தாலும் வந்துது, குடிக்கறவன் புடிக்கறவன் எல்லாருத்துக்கும் தாராளமா எடமும் இருட்டும் கெடச்சிருச்சு, எவனையும் நம்ப முடியில’ என்று சொன்னபடியே ‘செரி, ஏத்திக்க, டிக்கெட்டுக்கும் சேத்துக் காசு குடுத்திரு’ என்றான் சின்னவன். ‘எம் பொண்டாட்டிங்க சார்’ என்று அழுகிற மாதிரி சொன்னான் வந்தவன். மினிடோரின் பின்னால் கதவில் கால் வைத்து ஏறிய அவளுக்குக் கை கொடுத்தான் அவன். அவள் மூச்சு விடுகிற மாதிரிகூடத் தெரியவில்லை. அவனுக்குப் பின்னால் போய் ஒளிகிற மாதிரி நின்றுகொண்டான். கதவைப் போட்டுவிட்டு முன்பக்கம் ஏறப் போன வளவன் சட்டென்று பின்னால் வந்து  கொக்கி போட்ட கதவைப் பற்றித் தாண்டிக் குதித்து ஏறிக்கொண்டான்.

சின்னவன் முன்னாலிருந்து ‘என்னண்ணா முன்னால ஏறுவீன்னு பாத்தன். பின்னால ஏர்ற?’ என்று கத்தினான். ‘முன்னாலயே ஏறி ஏறிச் சலிச்சுப் போச்சுடா. ஒருநாளைக்கிப் பின்னால ஏறிப் பாக்கறன்’ என்றான் சிறுகதவின் வழியாக. இருவரும் வாய் விட்டுச் சிரிக்கும் சத்தம் கேட்டது. குமரேசனுக்குப் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது. அவன் படித்த புத்தகங்களில் இப்படியான காட்சிகள் ஏதும் இருக்கிறதா என்று மனம் தேடியது. என்ன செய்வதென்றும் தெரியவில்லை. எந்தப் பக்கம் தன் மனம் சாய்கிறது என்பதைக் கண்டுணர முடியவில்லை.

வண்டி கிளம்பியது. வந்தவனும் அவன் பெண்டாட்டியும் பைக்குக்கு முன்னால் நின்றிருந்தார்கள். இடதுபக்க ஓரத்தில் வளவனும் குமரேசனும். ஐந்து நிமிட நேரத்தில் வண்டி பட்டறைக்குப் போய்விடும். அதுவரைக்கும் வளவனால் சும்மா இருக்க முடியவில்லை. ஏதேதோ சொல்ல ஆரம்பித்தான். எதிர்ப்பக்கம் இருந்து காற்று வந்து அவன் சொற்களை வாரிக்கொண்டு சென்றது. அதனால் யாருக்கும் சரியாகக் கேட்கவில்லை. ‘என்ன மாமா’, ‘என்ன மாமா’ என்று சத்தமிட்டுக் கேட்டான் குமரேசன். ஆனாலும் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவன் சொற்களில் சிரிப்பு வழிகிறது என்பதை மட்டும் உணர முடிந்தது.

பட்டறைக்கு வண்டி வந்து சேர்ந்தது. அவளுக்குக் கை கொடுத்து இறக்கினான். கலைந்த முக்காட்டைச் சரிசெய்தபடி வண்டி ஓரம் போய் நின்றுகொண்டாள் அவள். பைக்கை இறக்கினார்கள்.  ‘புதுவண்டின்னு நெனச்சன். ரொம்ப ஓட்டமா?’ என்றான் வளவன்.  ‘இல்ல சார், பழைய வண்டிதான். செகண்ட் ஹேண்ட்ல வாங்கி ஒருவருசம் ஆவுது’ என்றான் அவன் பவ்வியமாக. ‘பழைய வண்டிக்குத்தான் இப்பிடிப் பறக்கறயா? பஞ்சர் போட்டுட்டு நானும் ஓட்டிப் பாக்கறன். கண்டிசன் எப்படி இருக்குதுன்னு தெரிஞ்சிரும்’ என்றான் சின்னவன். வண்டியைப் பட்டறைக்கு முன்னால் நிறுத்திப் பஞ்சர் போடும் பொருட்களை எடுத்து வந்து வைத்தான் வளவன். 

‘பார்ட்டிகிட்டக் காச வாங்கிக்கிட்டுக் கெளம்பு. நான் பாத்துக்கறன்’ என்றான் சின்னவனைப் பார்த்து. ‘போறன் போறன். என்ன அவசரம். வண்டி எப்படின்னும் ஓட்டிப் பாத்துட்டுப் போறனே’ என்று சிரித்தான் அவன்.  ‘நீதான் எந்த வண்டின்னாலும் உட மாட்டயே. ஓட்ட ஒடசலுன்னாலும் ஏறிப் பாப்பயே. செரி, இரு. எனக்கும் பேச்சுத் தொணையா இருக்கும். மாப்ள புதுசு. வண்டியப் பாத்ததும் காலு அவனுக்கு நடுங்குது பாரு’ என்றான் வளவன். வந்தவன் மினிடோர் மறைப்பில் அந்தப் பெண்ணோடு போய் நின்றுகொண்டான்.  ‘ஏப்பா, வந்து இப்பிடி உக்காருப்பா. உன் வண்டிய என்ன பண்றமுன்னு பாக்க வேண்டாமா?’  என்று சத்தம் கொடுத்தான் வளவன். அவர்களுக்குப் பெரும் உற்சாகமாய் இருந்தது.

குமரேசனைப் பார்த்து ‘பஞ்சர் போட்டிருக்கறயா நீ? இன்னைக்குப் போட்டுப் பாக்கறயா?’ என்று சிரித்தான் சின்னவன். ‘இல்லண்ணா எனக்குத் தெரியாது’ என்று தீவிரமாகச் சொன்னான் குமரேசன்.  ‘தெரியாதாம்டா’ என்று சின்னவன் சொல்ல இருவரும் ஓங்கிச் சிரித்தார்கள். டயரைக் கழட்டி டியூபை உருவிக் கைகளில் வைத்துப் பார்த்த வளவன் ‘ஏப்பா, டியூப் முழுக்க நஞ்சு போச்சு. வண்டியப் போட்டு உருட்டீருப்பயாட்டம் இருக்குது’ என்று மினிடோர் பக்கம் பார்த்துச் சத்தமாகச் சொன்னான். அவன் மட்டும் வெளியே வந்தான். ‘எப்படியாச்சும் ஒட்டிக் குடுண்ணா, ஊடு வரைக்கும் போயிட்டாப் போதும். அப்பறம் காத்தாலைக்கிப் பாத்துக்கறன்’ என்றான் அவன். குரலில் கொஞ்சம் நடுக்கம் இருக்கிற மாதிரி தெரிந்தது.

‘சுத்தமா ஆவாதுப்பா. பஞ்சராச்சுன்னா அதே எடத்துல நிறுத்தீரோணும். அதுக்கு மேல போட்டு உருட்டுனா டியூப் இப்படித்தான் ஆவும்’ என்றான் வளவன். ‘டியூப் ஆவுமா ஆவாதா? முடிவாச் சொல்லு’ என்று கேட்டான் சின்னவன். ‘நீ வேண்ணா தொட்டுப் பாத்துட்டுச் சொல்லு’ என்றான் வளவன்.  மொழியில் ஒற்றை அர்த்தம் மட்டும் கொண்ட சொல் ஒன்றுகூடக் கிடையாது என்று  அந்தக் கணத்தில் குமரேசன் அறிந்தான்.

இதற்கு மேல் குமரேசன் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிவித்துக்கொண்டு நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். கடைக்காரன் வீட்டுக்குப் போய் அவனை எழுப்பித்தான் புதுடியூப் வாங்கி வர வேண்டும் என்று வளவன் சொன்னான். வந்தவனைச் சின்னவனோடு போய்வரச் சொன்னான். அவனோ மறுத்துவிட்டான். அந்தப் பெண்ணை விட்டுக் கணமும் நீங்கவில்லை. வளவனும் சின்னவனும் போய் வாங்கி வந்தார்கள். புது ட்யூப் மாற்றி முடித்து வண்டியைக் கொடுத்தார்கள். மினிடோர் வாடகை, பைக்கை ஏற்றி இறக்கும் கூலி, புது ட்யூப் விலை, அதை மாற்றிக் கொடுக்கக் கூலி எனக் கணக்கிட்டு வளவன் கணிசமான தொகையைக் கேட்டான். வந்தவன் ஒரு வார்த்தை பேரம் பேசாமல் கேட்ட தொகையைக் கொடுத்துவிட்டு வேகமாகப் பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பினான். அவன் பின்னால் உட்கார்ந்து போன அவள் அப்போதும் முகத்தைக் காட்டவேயில்லை.

அவன் பெண்டாட்டிதான் அவள் என்றும் இல்லை என்றும் கொஞ்சநேரம் விவாதித்திருந்த வளவனும் சின்னவனும் பின் கிளம்பினர். போகும்போது ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றைக் குமரேசனிடம் கொடுத்துவிட்டுப் போனான். ஆனால் ஏனோ குமரேசனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. அந்தப் பணத்தைப் ‘பாவத்தின் சம்பளம்’ என்று மனம் சொன்னது. அப்படியானால் அதை என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

யாருக்காவது பிச்சை போட்டுவிடலாமா? பிச்சை போடக்கூடாது என்னும் கொள்கை உடையவன் அவன். அனாதை ஆசிரமம் எதற்காகவது அனுப்பிவிடலாமா? பாவத்தை யார் தலையிலாவது சுமத்திவிடுவது சரிதானா? கோயில் உண்டியலில் போட்டுவிடுவது உத்தமம் என்று தோன்றியது. ஆனால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை கொஞ்சம் குறைவாகவே இருந்தது. பல யோசனைகளுக்குப் பிறகு ரொம்ப நாட்களாகவே வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகம் ஒன்றை அந்தப் பணத்தில் வாங்கிவிடலாம் எனக் கடைசியாக முடிவு செய்தான்.