ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

You are currently viewing ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

 

 

ராஜ்கௌதமன் (1950 – 2024) தமிழிலக்கிய ஆய்வில்  முக்கியமான ஆளுமை. அ.மாதவையா படைப்புகள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தார். அது நூலாக ‘அ.மாதவையா (1871 – 1925)’ என்னும் தலைப்பில் 1995இல் வெளியாயிற்று. அப்போது நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருந்தேன். தமிழ்க் கல்விப் புலத்தில் காத்திரமான ஆய்வுகள் இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்த எங்கள் வட்டத்தில் ராஜ்கௌதமனின் இந்த நூல் நல்லதொரு உரையாடலை ஏற்படுத்தியது. இது மட்டுமல்ல, தம் ஒவ்வொரு நூலின் மூலமாகவும் உரையாடலை உருவாக்கியவர்  அவர்.

‘பத்மாவதி சரித்திரம்’ எழுதியவர் என்பதைத் தவிர அ.மாதவையாவைப் பற்றி வேறொன்றும் தெரியாது. சிட்டி, சிவபாதசுந்தரம் ஆகியோர் எழுதிய ‘தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்’ நூலிலும் போதுமான தகவல்கள் இல்லை. அ.மாதவையாவின் எழுத்துக்கள் மீது அவர்களுக்கு நல்லபிப்ராயம் கிடையாது. ‘பத்மாவதி சரித்திரம்’ நாவலுக்கு அவர் மூன்றாம் பாகம் எழுதியதைப் பற்றி ‘இருபத்து நான்கு ஆண்டுகள் கழித்து அதற்கு ஒரு மூன்றாம் பாகம் எழுத வேண்டிய அவசியமில்லை’ என்று குறிப்பிட்டனர். இருபது ஆண்டுகளில் நேர்ந்த சமூக மாற்றத்தை உணர்த்தும் வகையில் இம்மூன்றாம் பாகத்தை மாதவையா எழுதத் தொடங்கியிருக்கிறார். அவரது அகால மரணம் காரணமாக அது பாதியிலேயே நின்று போயிற்று.

இந்நிலையில் மாதவையா வாழ்க்கை பற்றிய பல புதிய தகவல்களை முன்வைத்தார் ராஜ்கௌதமன். சாதி ஆசாரங்களை அவர் மீறியது, மூடப் பழக்கங்களைப் பின்பற்றாமை, தம் சொந்த வாழ்வைத் தம் கருத்துப்படியே அமைத்துக்கொண்டது, சாதி மொழி அரசியல் பற்றிய அவர் எண்ணங்கள் எனப் பலவற்றை ராஜ்கௌதமன் நூல் மூலமே அறிய முடிந்தது. மேலும் அவர் எழுத்துக்களைத் தேடி எடுத்து ஆய்வுத் தரவுகள் ஆக்கினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் கணிசமாக எழுதியிருந்த அவரைப் பற்றிய முழுமைச் சித்திரம் ராஜ்கௌதமன் நூல் மூலமாகவே கிடைத்தது.

‘அ.மாதவையா: வாழ்வும் படைப்பும்’ என்னும் முதல் இயலின் இறுதியில் இடம்பெற்றுள்ள பின்னிணைப்பில் அவரது எழுத்துத் தரவுகளை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். எனினும் இன்னும் அவர் எழுத்துக்கள் முழுமையாகத் தொகுப்பாகவில்லை. அவர் நடத்திய  ‘பஞ்சாமிர்தம்’ இதழ் பற்றி விரிவான ஆய்வுகள் வரவில்லை. இன்றைய வாசகருக்குக் கிடைக்கும் வகையில் தேர்ந்தெடுத்த தொகுப்பு ஏதும் இல்லை.  ‘வேறு சிலவும் இதழ்களில் இருக்கக் கூடும்’ என்று ராஜ்கௌதன் சொல்கிறார். நிறையவே இருக்கின்றன என்பதை இன்று அறிய முடிகிறது. எனினும் ராஜ்கௌதமன் தடத்தில் பயணம் செய்ய அடுத்து யாருமில்லாமல் போயினர்.

தமிழ் நாவல் இலக்கியத்தின் முன்னோடிகளாக மாயூரம் ச.வேதநாயகம் பிள்ளை, பி.ஆர்.ராஜமய்யர் ஆகியோர் போற்றப்படும் அளவுக்கு அ.மாதவையா போற்றப்படவில்லை. மாதவையா பற்றிப் பல்வேறு வதந்திகள் உலவின. இவற்றின் பின்னணியைப் புரிந்துகொள்ளல், அ.மாதவையாவின் கருத்தியலையும் ஆளுமையையும் எடுத்துக்காட்டல் ஆகிய நோக்கங்களோடு ராஜ்கௌதமனின் ஆய்வு அமைந்தது. ‘தமது சொந்த சமூகத்திடம் ஏதோ வஞ்சம் தீர்ப்பவர் போல் எழுதி வந்த’தாக அ.மாதவையாவைப் பற்றிச் சிட்டி, சிவபாதசுந்தரம் எழுதியுள்ளனர்.  ‘சொந்த சமூகம்’ என்று குறிப்பிடுவது  அவர் பிறந்த பார்ப்பன சாதியைத்தான்.

ராஜ்கௌதமன் : உரையாடலை உருவாக்கியவர்

அ.மாதவையா மேல் இத்தகு ஒவ்வாமைகள் நிலவ என்ன காரணம் என்பது பற்றி ராஜ்கௌதமன் ஆராய்கிறார். அவர் வாழ்ந்த காலச் சூழல் பற்றி ஓர் இயலில் விரிவாக எழுதிவிட்டு எத்தகைய சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை அவர் கொண்டிருந்தார் என்பதை இன்னோர் இயலில் விளக்குகிறார். சாதிய நடைமுறைகளை மீற வேண்டும் என்பதையும் கைம்பெண் மறுமணம் உள்ளிட்ட சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதையும் அவர் தம் படைப்புகளின் ஊடாக எவ்வாறு வலியுறுத்தினார் என ராஜ்கௌதமன் விவரிக்கிறார்.

நிகழ்காலப் பிரச்சினைகளைப் பேசும்போது அதற்குத் தீர்வாகப் பழைய கால நடைமுறைகளை (கணவனே கண் கண்ட தெய்வம் என்றிருக்கும் பெண்களுக்குக் கடவுள் அருள் கிடைக்கும் என்பன போன்றவை) முன்வைக்கும் ராஜமய்யர் போன்றவர்களைப் ‘படைப்பாளிகள்’ என்று ஏற்றுக்கொள்வோர் அ.மாதவையா போல அடுத்த கட்டச் சீர்திருத்த நடவடிக்கைகளை முன்வைப்போர் எழுதுவதைப் ‘பிரச்சாரம்’, ‘வஞ்சம்’, ‘பழி வாங்குதல்’ என்றெல்லாம் சொல்லிப் புறக்கணிக்கின்றனர். இந்த மனநிலையைத் தமக்கே உரிய வகையில் ராஜ்கௌதமன் இந்நூலில் எழுதியுள்ளார்.

அ.மாதவையாவின் மொழி பற்றிய பார்வையை இன்னொரு இயலில் விளக்குகிறார். தனித்தமிழ் நடையில் எழுதும் ஆர்வம் அவருக்கிருந்தது என்பதும் ‘நன்னடை’ என்று அவர் குறிப்பிட்டது பற்றியும் இவ்வியல் பேசுகிறது. சமஸ்கிருதச் சொற்களைத் தவிர்க்க முடியாத இடங்களில் அவர் பயன்படுத்துவதையும் எடுத்துக் காட்டுகிறார். நிர்வாகச் சொற்களை அன்றைய வழக்கிற்கேற்ப அவரும் கையாண்டுள்ளார். தமிழை விடவும் ஆங்கிலத்தில் அவர் பெற்றிருந்த புலமை, பயிற்சி ஆகியவற்றாலோ என்னவோ ஒருவகை மொழிபெயர்ப்பு நடை அமைந்ததையும் சான்றுகளோடு காட்டியுள்ளார்.

ஆங்கில நாவலாசிரியர் தாக்கரேவின் செல்வாக்கு அ.மாதவையாவிடம் காணப்படுவதைக் க.கைலாசபதி முதலியோர் சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும் விரிவாக அதைப் பற்றி யாரும் எழுதவில்லை. அக்குறையைப் போக்கும் வகையில் இருவர் படைப்புகளையும் ஒப்பிட்டுக் காட்டி ராஜ்கௌதமன் விரிவாக ஓர் இயலில் எழுதியுள்ளார். அதில் தாக்கரேயின் வாழ்வையும் படைப்பையும் பற்றி அறிமுகப்படுத்தும் வகையில் ஒருபகுதி எழுதியிருப்பது முக்கியமானது. தாக்கரே எழுதிய சில பகுதிகளை அப்படியே மொழிபெயர்த்துத் தம் படைப்புகளில் அ.மாதவையா பயன்படுத்தியிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

ராஜ்கௌதமன் நூல்களில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நூலில் அ.மாதவையாவின் பெயர் பற்றிய குழப்பத்தைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை என்பது ஆச்சரியம் தருகிறது. அவர் இறந்த 1925ஆம் ஆண்டு வெளியான நூல்களிலும் ‘பஞ்சாமிர்தம்’ இதழிலும் ‘பத்திராதிபர்: அ.மாதவையர்’ எனப் பெயர் ‘ர்’ விகுதி பெற்றே காணப்படுகிறது. எப்போது ‘மாதவையா’ என மாறியது எனத் தெரியவில்லை. 1924ஆம் ஆண்டு வெளியான  ‘பாரிஸ்டர் பஞ்சநதம்’ நூலில் ‘அ.மாதவையர்’ எனத் தமிழிலும் ‘A. MADHAVIAH’ என ஆங்கிலத்திலும் பெயர் காணப்படுகிறது. ஆங்கிலத் தாக்கத்தின் காரணமாக ‘ஐயர்’ என்பது ‘ஐயா’ ஆகியிருக்கலாமா?  எதிர்கால ஆய்வுகள்தான் இப்புதிரை விடுவிக்க வேண்டும்.

காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் மறுபதிப்பு வந்ததா எனத் தெரியவில்லை. அவரது பிற நூல்கள் மறுபதிப்புகளாக வந்திருக்கின்றன. இந்நூல் கல்விப்புலம் சார்ந்து மட்டுமல்ல, நவீன இலக்கிய அரசியல் சார்ந்தும் முக்கியமான நூலே. எனினும் போதுமான கவனம் பெறவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எத்தகைய ஆதிக்கச் சாதியில் பிறந்திருந்தாலும் சீர்திருத்தம் புறத்தில் மட்டுமல்லாமல், அகத்திலும் நடைபெற வேண்டும் என  வலிமையாக வெளிப்படும் ஆளுமையைச் சாதிய சமூகம் ஒதுக்கத்தான் செய்யும் என்றும் காரணம் கூறலாம். இது அகக்காரணம். புறக்காரணங்களையும் தேடலாம்.

நூல் தலைப்பு வெறுமனே ‘அ.மாதவையா (1872 – 1925)’ என்று மட்டும் அமைந்தது ஒருகாரணம் ஆகலாம். நூல் தயாரிப்பும் அச்சீடும் கையிலெடுக்கத் தயங்கும் தன்மையிலானவை. குறைந்தபட்ச வாசக ஈர்ப்பைக்கூட ஏற்படுத்தாத தரம். மெய்ப்பே பார்க்காமல் அச்சிடுவதும் பார்த்துக் கொடுத்தாலும் திருத்தம் செய்யாமல் அச்சிடுவதும் காவ்யா பதிப்பகத்தின் வழக்கம். காவ்யா பதிப்பக நூல்களில் இருக்கும் பிழைகளைப் பற்றிப் பேசும்போது ‘மாமியார் வைத்த மயிர்க்குழம்பில் ஒன்றிரண்டு கத்தரிக்காய் மிதக்காதா என்ன?’ என்னும் பழமொழிதான் எப்போதும் என் மனதில் வரும்.

இந்நூல் அச்சாக்கமும் அப்படி அமைந்ததுதான். நூலுக்கு வாசக ஏற்பு கிடைக்காமைக்கு அதுவும் காரணமாகலாம். இப்பேர்ப்பட்ட ஒருநூல் வந்த பிறகும் அ.மாதவையாவைப் போதிய அளவு அறிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை என்பது தமிழ்ச் சமூகத்தின் வரலாறு பற்றிய அலட்சியப் பார்வையை வெளிப்படுத்துகிறது என்றே கொள்ளலாம்.

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்திற்குப் புத்தாக்கப் பயிற்சிக்காகச் சென்றபோது ஒருமுறையும் அவருடைய மாணவராகிய என் நண்பர் மா.வெங்கடேசனுடன் ஒருமுறையும் அவர் பணியாற்றிய கல்லூரிக்குச் சென்று சந்தித்துப் பேசியிருக்கிறேன். இரண்டுமே குறுகிய நேரச் சந்திப்புக்கள். மெல்லிய குரலில் பேசினார். அ.மாதவையா பற்றிய நூலைச் சிலாகித்துப் பேசிய போது புன்னகைத்தார்.

அவரோடு பழக வாய்ப்பில்லாத போதும் நூல்களைப் பெரிதும் வாசித்து வந்திருக்கிறேன். ஒவ்வொரு நூலைப் பற்றியும் பலபடப் பேசலாம். குறிப்பாகப் பழந்தமிழ் இலக்கியம் பற்றித் தலித்தியக் கோட்பாட்டுப் பார்வையில் மறுவாசிப்பு செய்து அவர் எழுதிய நூல்களைக் குறித்துச் சொல்ல எனக்கும் சில விஷயங்கள் உள்ளன. எனினும் முதலில் வாசித்த அ.மாதவையா பற்றிய இந்நூல் மனதில் ஆழப் பதிந்திருந்ததாலும் கல்விப்புல ஆய்வு என்பதால் அதிகம் பொருட்படுத்தாத நூலாக இருப்பதாலும் அவரது ஆய்வுப் பார்வையைக் கட்டமைத்த தொடக்க நூல் என்பதாலும் இதைப் பற்றி எழுதத் தோன்றியது.

ராஜ்கௌதமனுக்கு என் அஞ்சலி.

பயன்பட்ட நூல்கள்:

  1. ராஜ்கௌதமன், அ.மாதவையா (1872 – 1925), 1995, காவ்யா பதிப்பகம், பெங்களூர்.
  2. பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம், தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, கிறித்தவ இலக்கியச் சங்கம், சென்னை.
  3. அ.மாதவையர், பாரிஸ்டர் பஞ்சநதம், 1924, ஆசிரியர் அச்சுப் பிரசுராலயம் – புஸ்தக சாலை, சென்னை.

—–   19-11-24

Add your first comment to this post