எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைத் தனிப்பட்ட முறையில் நான் அறிந்ததில்லை. 1990களில் ரமேஷ் – பிரேம் இருவரும் இணைந்து எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகளில் சந்தித்துச் சில சொற்கள் பேசியிருக்கிறேன். எழுத்திலும் சொந்த வாழ்விலும் பெரும்கலகக்காரராகத் தோன்றினார். அவர் பேசும் கோட்பாடுகள், இலக்கியப் பார்வையோடு எனக்கு ஒட்டுதல் ஏற்படவில்லை.
இருவரும் இணைந்து எழுதிய அப்போதைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன். ‘சொல் என்றொரு சொல்’ நாவல் மனதில் பதிந்த எழுத்து. சில சிறுகதை, கவிதை நூல்களையும் வாசித்துள்ளேன். ‘முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’ சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானது. அத்தொகுப்பு நல்ல வரவேற்பும் பெற்றது. அவர் தனித்து எழுதத் தொடங்கிய பிறகு சிலவற்றை வாசிக்க முயன்று இயலாமல் பின்வாங்கினேன். சொந்த வாழ்வின் கசப்புகள் மீதூர எழுதப்பட்டவையாகத் தோன்றி விலக்கின. ஒற்றைப் பொருள் சார்ந்தே மீண்டும் மீண்டும் எழுதுவதாகவும் தோன்றிற்று.
2000 முதல் 2010 வரை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சில நூல்களுக்குச் செம்மையராகச் செயல்பட்டிருக்கிறேன்; சிலவற்றிற்கு மெய்ப்புப் பார்த்திருக்கிறேன். ஒருநூலைச் செம்மையாக்கிக் கொண்டு வர வேண்டும் என்னும் நடைமுறையைக் காலச்சுவடு பின்பற்றியது. அதற்கு ஒத்துக்கொள்ளும் மனநிலை சில எழுத்தாளர்களுக்கே இருந்தது. பலருக்குச் செம்மையாக்கம் பற்றித் தெரியாமல் எதிர்மனநிலை கொண்டிருந்தனர். நான் ‘மனஓசை’ இதழில் பணியாற்றியதால் ஓரளவு அனுபவம் பெற்றிருந்தேன். செம்மையாக்கத்தில் நஞ்சுண்டன் அப்போது தீவிரமாக ஈடுபடத் தொடங்கியிருந்தார். ஆ.இரா.வேங்கடாசலபதி இதில் வல்லுநர். எல்லோர் பங்களிப்பையும் காலச்சுவடு பயன் கொண்டது.
ரமேஷ் – பிரேம் எழுதிய ‘சக்கரவாளக் கோட்டம்’ கவிதைத் தொகுப்பு 2004இல் காலச்சுவடு வெளியீடாக வந்தது. ரமேஷ் – பிரேமின் ஓரிரு நூல்களையே காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. ‘சக்கரவாளக் கோட்டம்’ தான் முதல் நூல். அதைச் செம்மை செய்து தரும்படி என்னைக் கேட்கக் காலச்சுவடில் முடிவு செய்து ரமேஷ் – பிரேமிடம் ஒப்புதல் பெற்றனர். என்னிடம் ‘செய்து தர முடியுமா?’ என்று காலச்சுவடில் இருந்து கேட்டனர். ரமேஷ் – பிரேம் எழுத்துப் பாணியும் என்னுடையதும் வேறுபட்டவை. என் பார்வையில் இருந்து கவிதைகளைச் செம்மை செய்வது பொருத்தமாக இருக்காது என்பதாலும் அவர்கள் ஏற்கனவே சில கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு ஏற்புப் பெற்றவர்கள் என்பதாலும் மெய்ப்பு மட்டும் பார்க்க ஒப்புக் கொண்டேன். அதுவே போதும் என்றனர்.
அத்தொகுப்புக் கவிதைகள் என் எதிர்பார்ப்புக்கு மாறாக மிக எளிமையாக இருந்தன. சாதாரண உரையாடல் பாணி. இயல்பான ஒன்றில் தொடங்கி வேறொரு தளத்தை எட்ட முயலும் முடிவைக் கொண்டவையாக அவை இருந்தன. சில அதிர்ச்சியூட்டும் காட்சிகள். காமம் பற்றிக் கணிசம். தாயுமானவன், அமுதசுரபி, நெடுநல்வாடை எனத் தமிழ் மரபு சார்ந்த தலைப்புகள். உற்சாகமாக வாசிக்க முடிந்தது. அப்போது பெயராய்வில் எனக்கு ஈடுபாடு இருந்தது. பெயர்கள் பற்றிக் ‘கவிதாசரண்’ இதழில் சில கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் ஏதேனும் கவிதை வரிகளை மேற்கோளாகப் பயன்படுத்தினேன். ஒரு கட்டுரையின் தொடக்கத்தில் ‘சக்கரவாளக் கோட்டம்’ தொகுப்பில் உள்ள ‘பறவைக்குப் பெயரிடுவது பற்றி’ கவிதையின் சில வரிகளை எடுத்தாண்டேன்.
இந்தப் பறவைக்கு என்ன பெயரிடுவது?
உன் பெயரால் அழைப்பதை அது விரும்புமா?
எனக்கு முதலும் கடைசியுமாக நீ மட்டும்தான்
உன் பெயரால் அப்பறவை அழைக்கப்படுவதை
அதன் சொந்த நிலத்து மக்கள் ஏற்பார்களா?
என்னும் தொடக்கத்தைக் கொண்ட அக்கவிதை,
உன் பெயரால் அப்பறவை அழைக்கப்படும்போது
நீ பறந்துவிடுவாய்
முதலும் முடிவுமற்ற அருட்பெருவெளியில்
என்று அருட்பெருவெளியில் முடியும். வாசிக்க எந்தச் சிரமத்தையும் தரவில்லை எனினும் இப்படி முதலுக்கும் முடிவுக்கும் இடையே பெருமுடிச்சு கொண்ட கவிதைகள் அவை. ‘உப்புக்கனி’ என்னும் சிறுகவிதையை என் உரைகளிலும் வகுப்பறைகளிலும் பயன்படுத்தியிருக்கிறேன். அழகான கவிதை அது:
உப்புக்கனி
நடுப்பகல்
கைதவறி விழுந்து சிதறிய
பழம் போல
பரிதி
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை வழிகிறது
புறங்கையில் என் நா நுனியால்
நக்கிச் சுவைத்தேன்
உப்புருசி
இது உப்புக் கரிக்கும்
பழம் போலும்.
கவிதையில் உவமைதான் பிரதானம். இரண்டாம் பகுதியில் உவமையே உவமேயமாக மாறிவிடுகிறது. ஒளியாகிய நுண்பொருளைப் பழமாகிய பருப்பொருளாக மாற்றும் படிமக் கூறும் கொண்டிருக்கிறது. உவமை பெறும் பரிமாணம் இக்கவிதையில் வியப்பூட்டுகிறது. இப்படி அத்தொகுப்பில் பல கவிதைகள் பிடித்திருந்தன.
முழுமையாக ஒருமுறை நூலை வாசித்துவிட்டு இரண்டாம் முறைதான் மெய்ப்புப் பார்ப்பது என் வழக்கம். கவிதைத் தொகுப்புக்கு மெய்ப்புப் பார்ப்பது கடினமல்ல. சொற்கள் குறைவு என்பதால் ஓட்டமாகச் சென்றுவிடும். ஒற்று, சொல், ஒருமை பன்மை ஆகியவற்றைச் சரிபார்த்துத் திருத்தம் செய்தேன். பொருள் தெளிவுக்காகச் சில இடங்களில் சொற்களை முன்பின் மாற்றினேன். அவ்வளவுதான். என் திருத்தங்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தன. நான் செய்த திருத்தங்கள் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொண்டனர். நூலில் எனக்கும் நன்றி தெரிவித்திருந்தனர். நன்றி கூறும் சிறுகடிதம் ஒன்றும் எழுதினர். ஒரு நிகழ்ச்சியில் நேரில் பார்த்தபோது சில திருத்தங்களைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்டார் ரமேஷ். சொன்னேன். அவருக்கு நிறைவாக இருந்தது.
அதற்குப் பின் தொடர்பு ஏதுமில்லை. புதுச்சேரிக்குச் சென்றிருந்த சில சந்தர்ப்பங்களில் அவரைப் பார்க்க நினைத்தும் இயலாமல் போயிற்று. அரிபறியான வாழ்வில் நினைப்பதை எல்லாம் நிறைவேற்றிக்கொள்ள முடிவதில்லை. அவரைப் பார்த்திருக்கலாம். சில சொற்கள் பேசியிருக்கலாம். உடல்நிலை சரியில்லாமல் பல ஆண்டுகள் இருந்தார். நலம் விசாரித்திருக்கலாம். எத்தனையோ லாம்கள் தோன்றுகின்றன. இனி அவ்வளவுதான். முதலும் முடிவுமற்ற அருட்பெருவெளியில் ரமேஷ் அமைதி பெறட்டும். என் அஞ்சலி.
—– 01-10-25
Add your first comment to this post