சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

You are currently viewing சூறை! சூறைதான் அது! – முதற்பகுதி

யூமா.வாசுகியின் படைப்புகளைப் பற்றிய இந்நிகழ்வில் அவருடனான என் அனுபவங்களை முதன்மையாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  அவர் படைப்புகள் குறித்தும் என்னுடைய கருத்துக்களைக் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள எண்ணம்.   சென்னை,  கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் மின்சார ரயில்  வழித்தடத்தில் கிண்டி, பரங்கிமலை ஆகிய நிலையங்களை அடுத்திருக்கும் பழவந்தாங்கல் ரயில் நிலையம் 1990களில் ஒரு இலக்கியச் சங்கமத்திற்கான இடமாக அமைந்தது.  எங்கள் வாழ்க்கையில் அந்த ரயில் நிலையம் அவ்வளவு முக்கியமான  இடம்.  அங்கே எந்த நேரத்துக்குப் போனாலும் யாராவது ஒரு எழுத்தாளரைச் சந்தித்து விட முடியும்.  அதைச் சுற்றி அவ்வளவு பேர் குடியிருந்தார்கள்.

வண்ணநிலவன், மா.அரங்கநாதன், அரவிந்தன், சி. மகேந்திரன்,  ராஜன்குறை, அஜயன் பாலா, யூமா.வாசுகி எனப் பல பேர் அங்கே இருந்தோம். ஒவ்வொருவரையும் பார்ப்பதற்கு வரக்கூடிய வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள் எனப் பலருக்கும் பழவந்தாங்கல் ரயில் நிலையம்தான் போக்குவரத்துக்கு வசதி. அப்போது அந்தப் பகுதிக்குப் பேருந்துப் போக்குவரத்து இல்லை. ரயில் தண்டவாளத்தைக் கடந்து வரச் சாலைகூட இல்லை. இப்போது அங்கிருக்கும் குடியிருப்புப் பகுதிகளை எல்லாம் இணைக்கும் வகையில் சாலைகள் வந்துவிட்டன. பேருந்துப் போக்குவரத்து பெருகிவிட்டது. அன்றைக்கு ரயில்தான் ஒரே வழி.

நான் பழவந்தாங்கலில் குடியிருக்கவில்லை. அந்த ரயில் நிலையத்திற்கு எதிர்ப்பக்கம் ஆலந்தூர்  பகுதியில் குடியிருந்தேன். எனக்குப் பேருந்து வசதியும் நடைதூரம்; ரயில் நிலையமும் நடைதூரம். கட்டணம் குறைவு, பயண நேரம் குறைவு ஆகிய காரணங்களால் ரயில் பயணமே விருப்பமானதாக இருந்தது. எங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து தண்டவாளத்திலேயே நடந்து சென்று நிலையத்தை அடையக் குறுக்குவழி ஒன்று இருந்தது. ஆலந்தூர் பகுதியில் நண்பர்களுடன் இரண்டாண்டுகளும் திருமணமாகி என் மனைவியும் நானுமாக மூன்றாண்டுகளும் என மொத்தம் ஐந்தாண்டுகள் அங்கே குடியிருந்தேன்.

யூமா.வாசுகி பழவந்தாங்கலுக்குக் குடிவந்து சில நாட்களிலேயே எனக்கு அறிமுகமானார்.   ‘திருஞி வெளியீடு’ என்னும் பெயரில் ஒரு பதிப்பகம் தொடங்கி அதன் மூலமாகவே எனது நூல்களை வெளியிட்டிருந்தோம். நூலிலிருந்து முகவரியை எடுத்து யூமா.வாசுகி எனக்கு ஒரு கடிதம் போட்டிருந்தார்.  அந்தச் சமயத்தில் கணையாழி இதழுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. அவ்விதழுக்கு ஓவியங்கள் வரைந்து கொடுப்பது, படைப்புகளைத் தேர்ந்தெடுத்துத் தருவது எனச் சில வேலைகள் செய்தார். ‘மனஓசை’ இதழில் நான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து ‘நிகழ் உறவு’ என்னும் தலைப்பில் 1992இல் சிறுநூலாக வெளியிட்டிருந்தேன். அதுதான் என் முதல் கவிதைத் தொகுப்பு. கவிதைக்கு ‘இளமுருகு’ எனப் புனைபெயர் கொண்டிருந்தேன். அக்காலத்தில் கிரௌன் சைசை விடச் சிறிய அளவில் கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது ஒரு போக்காக இருந்தது. ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பான ‘சொல்லாத சேதிகள்’, சமயவேலின் முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’ முதலிய பல நூல்கள் அந்த அளவில் வந்தன. ‘நிகழ் உறவு’ தொகுப்பையும் அந்த வடிவில் மருதுவின் அழகான ஓவியத்துடன் வெளியிட்டிருந்தோம்.

பெருமாள்முருகனும் இளமுருகுவும் ஒருவர்தான் எனப் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படித் தெரியாமலே அத்தொகுப்பிலிருந்து ‘தோழமை உறவு’ என்னும் கவிதை ஒன்றைக் கணையாழியில் எடுத்துப் போட்டிருந்தார்கள். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் யூமா.வாசுகி செய்த வேலை அது எனத் தெரிந்தது. அத்தொகுப்பைத் தொடர்ந்து எனது ‘நிழல்முற்றம்’ நாவலும் வெளியாகியிருந்தது.  குதிரைவீரன் பயணம் முதல் இதழில்  ‘நிழல் முற்றம்’ நாவலிலிருந்து ஒரு பகுதியைப் பிரசுரிப்பதற்கு அனுமதி கேட்டு யூமா.வாசுகி எனக்குக் கடிதம் எழுதி இருந்தார். 1993 டிசம்பரில் அந்த நாவல் வந்தது. அனேகமாக அவர் கடிதம் எழுதியது 1994, ஜனவரி அல்லது பிப்ரவரி மாதமாக இருக்கலாம். 

அந்தக் கடிதத்தில் பழவந்தாங்கல் முகவரி இருந்தது. ரயில் நிலையத்திற்கு அருகில்தான். கடிதத்தை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்க நேரிலேயே போய்விட்டேன். தனித்தனியான அறைகள் சிலவும் நடுவில் ஒரு கிணறுமாக இருந்த வரிசை வீட்டின் ஓர் அறையில் அவர் இருந்தார். அருகில் இன்னொரு அறையில் அஜயன்பாலா தங்கியிருந்தார். நேரில் அறிமுகமாகி எங்கள் நட்பு தொடங்கியது. அதற்குப் பின் ரயில் நிலையம் சென்றாலே அவர் இருக்கிறாரா எனப் பார்க்க அவர் அறைக்குச் செல்வேன். காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குப் பழவந்தாங்கலுக்குத்தான் செல்ல வேண்டும். போகும்போது அவரைப் பார்ப்பதும் ஒரு வேலை. தண்டவாளத்தைக் கடந்து எங்கள் வீட்டுக்கு அவர் வருவார். 

சூறை! சூறைதான் அது! - முதற்பகுதி

அவருடைய முதல் தொகுப்பு  ‘உனக்கும் உங்களுக்கும்’ 1993இல் வெளியாகியிருந்தது. அதை எனக்குக் கொடுத்தார்.  அந்தத் தொகுப்பு மிகவும் உக்கிரமான கவிதைகளைக் கொண்டது. கவிதைகளுக்குத் தலைப்பு கிடையாது. அதில் வரும் படிமங்கள் எல்லாம் பதற வைக்கும் தன்மை கொண்டவை. ‘பற்றியெரியும் தீச்சுடர் என் உடல் முழுதும் நாவால் தடவ நான் ஓடிக் கொண்டிருந்தேன்’, ‘உடலில் முளைத்த முட்கள் களைய அரிவாளொன்று வாங்க வேண்டும்’,  ‘பற்களைப் பிடுங்கி விட்டு மணலைப் போட்டு மென்று  கொண்டிரு’ என்றெல்லாம் எழுதியிருப்பார். அந்த நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தார். எல்லாவற்றையும் தலைகீழாக்கம் செய்யும் கலக மனநிலை படைப்பாளர்களிடையே வலுவாக உருவாகிய காலம் அது. அந்த முன்னுரையும் அப்படியானது. 

ஒரு நூலுக்கு  முன்னுரை எழுதும் போது ஆசிரியரைப் பற்றி  ‘நல்லவர், வல்லவர், அப்படிப்பட்டவர், இப்படிப்பட்டவர்’  என்றெல்லாம் புகழ்ந்து போற்றி எழுதுவது பொதுவழக்கம். அதை மாற்றி, ஒழுக்கப் பார்வையைச் சீர்குலைக்கும் வகையில் முன்னுரையை யூமா எழுதியிருந்தார். அம்முன்னுரை  ‘யூமா.வாஸுகி எனும் புனைபெயரைக் கொண்டுள்ள இவன் ஓவியக் கல்லூரியில் பயின்றவன். ஆனால் இன்றுவரை உருப்படியாக ஒரு ஓவியம்கூடச் செய்ததில்லை. நினைவு தெரிந்து எந்தக் காலத்திலும் ஆரோக்கியமாகச் சிந்தித்ததில்லை. மிகவும் பிடித்தது கோவா சாராயம். முட்டக் குடித்துவிட்டுச் சாலையோரங்களில் விழுந்து கிடப்பது பிடிக்கும். கஞ்சா, சிகரெட் இப்படி எதையாவது தொடர்ந்து புகைத்துக் கொண்டிருப்பதில் பெரிதும் நாட்டமுடையவன். பாலியல் குரூரங்களைச் சகல நிலைகளிலும் அனுபவித்து இன்றுவரை 17 விலைமகளிரோடு கூடி எவர் முயற்சியும் இன்றித் தன்னைத்தானே முன்னேற்றிக் கொண்டவன்’ என்று தொடங்கும். 

‘முற்காலத்தில் உண்டியல் திருடனாய் இருந்து பிறகு நூலகப் புத்தகங்களைத் திருடுமளவிற்கு வளர்ந்தவன்’ என்றும் ‘ஒருபோதும் தன் நண்பர்களிடத்தில் உண்மையாய் நடந்து கொண்டானில்லை’ என்றும் ‘விருந்தாளியாகச் சென்ற இடத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை முத்தமிட முயன்று துரத்தியடிக்கப்பட்டவன்’ என்றும் அம்முன்னுரை தொடரும். இரண்டு பக்க முன்னுரை ‘இவனை அறிமுகப்படுத்த இவ்வளவு போதும்’ என்று முடியும்.  அந்தத் தொகுப்பை வீட்டில் வைத்திருந்தேன். அப்போது எனக்குத் திருமணமாகிச் சில மாதங்கள் தான் ஆகியிருந்தன.  என் மனைவி அந்த புத்தகத்தை எடுத்து வாசித்திருக்கிறார். அது எனக்குத் தெரியாது. 

அதன் பிறகு யூமா எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் உடனே என் மனைவி சமையலறைக்குள் போய்விடுவார். முதலில் அதை நான் கவனிக்கவில்லை. இரண்டு மூன்று முறை அப்படி நடந்ததும் எனக்கு ஒருமாதிரி இருந்தது. அப்புறம் கேட்டேன்.   ‘அவரைப் பார்த்தால் ரொம்ப பயமா இருக்குது’ என்று சொன்னார். காரணம் கேட்டேன். அந்தக் கவிதைத் தொகுப்பு முன்னுரையை எடுத்துக்காட்டிப்  ‘பாருங்க’ என்றார்.  முன்னுரையில் எழுதியதெல்லாம் உண்மை இல்லை,  முன்னுரை எழுதும் பாணியைக் கேலி செய்வதற்காக அவர் அப்படி எழுதியிருக்கிறார், அதில் எழுதியிருப்பவை உண்மை இல்லை, அவர் அந்த மாதிரியான ஆள் எல்லாம் இல்லை என்று விளக்கினேன். அதற்குப் பிறகு தான் என் மனைவி இயல்பானார். 

—– 14-02-25

(தொடர்ச்சி நாளை)

 

Latest comments (6)

சி வடிவேல்

கொளுத்திப்போட்டுக் கொஞ்சம் பதற வைத்துவிட்டுப் பின்னர் மயிலிறாகால் தடவியதுபோல் இருந்தது ஐயா!

Savithri Tamilmani

வணக்கம். நானும் உங்கள் கட்டுரையை முழுமையாக வாசிக்காமல் ஏதேனும் ஒரு அவசர காரணத்தால் முக்கால் பாகம் மட்டும் வாசித்துவிட்டிருந்தால் அவர் அப்படித்தான்போலும் என நினைத்திருப்பேன் ஐயா…

ஜானகி

ஐயா இந்த மாதிரி பதிவுகள் உங்களால் தான் வாசகர் அறிய முடியும்.
சிறப்பு
யூமா வாசுகி அவர்கள் மீது மதிப்பு கூடுகிறது.
சிரிக்க முடிந்தது.
நன்றி

யூமா வாசுகி குறித்த பதிவு அருமை ஐயா. கங்கணம் நாவலை அவருக்கு சமர்பித்தலில் இருந்து அறிந்துகொண்டேன். அவரின் புனைவுகளையும் யதார்த்தங்களையும் பதிவு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.