ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

You are currently viewing ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

 

தமிழ் வட்டார நாவலின் முன்னோடி எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம்  ‘நாகம்மாள்’, ‘அறுவடை’, ‘தனிவழி’ உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பெரும்பான்மை இப்போது கிடைப்பதில்லை. அவர் படைப்புகள் அனைத்தையும் அச்சில் கொண்டு வரும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது ‘கற்கைப் பதிப்பகம்.’ திருச்செங்கோட்டிலிருந்து செயல்பட்டு வரும் இப்பதிப்பகம் அவர் நாவல்கள் ஐந்தை இப்போது வெளியிட்டுள்ளது. பூவும் பிஞ்சும், அறுவடை, பனித்துளி, தனிவழி, மனநிழல் ஆகியவை. ‘தனிவழி’ நாவலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை இது.

 

கொட்டிக் கிடக்கும் சுவை

தமிழ் வட்டார நாவலின் முன்னோடியாகிய ஆர்.ஷண்முகசுந்தரம் (1917 – 1977) 1930களின் இறுதியில்  ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதைகள் எழுதி இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். அவர் கதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் கொடுத்த தூண்டுதல் காரணமாக ‘நாகம்மாள்’ நாவலை எழுதி 1942இல் வெளியிட்டார். அதுவே தமிழ் வட்டார நாவலின் தொடக்கமாக அமைந்து அவருக்கு ஏற்பையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. அதன் பின் அவர் கணிசமாக நாவல்கள் எழுதினார். மொழிபெயர்ப்புகள் செய்தார். கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள்  இலக்கியப் பயணம் தொடர்ந்தது.

1986ஆம் ஆண்டு கோவை, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயில்வதற்காகச் சென்றேன். அக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் ச.மருதநாயகம் அவர்கள் நவீன இலக்கியத்தில் ஈடுபாடும் பேரறிவும் கொண்டு விளங்கினார். அவர் வழியாகவே எனக்கு ஆர்.ஷண்முகசுந்தரம் எழுத்துக்கள் அறிமுகமாயின. 1990களில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் முனைவர் பட்ட ஆய்வுக்கு ஆர்.ஷண்முகசுந்தரத்தின் படைப்புகளை எடுத்துக் கொண்டேன். அப்போது முதல் அவர் படைப்புகளைத் தேடிக் கண்டடைதல், வாசித்தல், எழுதுதல் என என் பணிகளில் ஒன்றாக ஆர்.ஷண்முகசுந்தரம் தொடர்பானவை இருந்து வருகின்றன.

ஏதாவது தேவையை முன்னிட்டு அவர் நாவல்கள் சிலவற்றை அவ்வப்போது வாசிப்பதுண்டு. அதுவல்லாமல் தற்காலிக மனச்சோர்விலிருந்து விடுபடுவதற்கு வாசிப்பு எனக்கு ஒரு மருந்து. அத்தகைய சமயங்களில் வாசிப்பதற்கென்று சில எழுத்தாளர்களை வைத்திருக்கிறேன். அதில் ஆர்.ஷண்முகசுந்தரமும் ஒருவர். அவருடைய ஏதாவது நாவலை எடுத்துச் சில பக்கங்கள் வாசிக்கலாம் எனத் தொடங்கினால் முழுமையாக வாசிக்கும்படி ஆகிவிடும். அப்படி என் கைக்கு அடிக்கடி வரும் நாவல் ‘தனிவழி.’

இந்நாவல் முதல்பதிப்பு 1967 அக்டோபரில் வெளியாயிற்று. தமிழ்ப் புத்தகாலயம் வெளியீடு.  கிரௌன் அளவில் கிட்டத்தட்ட நூறு பக்கங்களை மட்டுமே கொண்ட சிறிய நாவல். ஆர்.ஷண்முகசுந்தரத்தின் பெரும்பாலான நாவல்கள் அப்படிப்பட்டவைதான். அவர் எழுதிய இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் நாகம்மாள், அறுவடை, சட்டி சுட்டது, தனிவழி ஆகிய நான்கும் எனக்குப் பிடித்தவை. இந்நான்கில் ‘தனிவழி’ தனித்துவம் கொண்ட நாவல். இதை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் புதுப்புதுத் தகவல்கள், கோணங்கள் எனக்குக் கிடைக்கும்.  சிறுநாவலுக்குள் எவ்வளவோ இருக்கின்றன எனறு வியக்கும்படியான அனுபவங்கள் நேரும். சிலவற்றைச் சுட்டிக்காட்டலாம்.

அவரது முக்கியமான நாவல்கள் அனைத்தும் இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்தையோ விடுதலை பெற்ற முதல் பத்தாண்டு காலத்தையோ பின்னணியாகக் கொண்டவை. தனிவழியும் அப்படித்தான்.  ‘சுதந்திர இந்தியா உருவாகி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன’ என்று  முதல் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். ஐந்தாம் அத்தியாயத்தில் ‘சுதந்திர இந்தியாவின் முதல் சுதந்திரத் தேர்தல்கள் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன’ என்னும் குறிப்பு வருகிறது. நான்காம் அத்தியாயத்தில் ‘இன்றைய நிலை அல்ல பதினைந்து வருஷங்களுக்கு முன்பு!’ என்று ஒரு குறிப்பு. 1967இல் நாவல் வெளியாகியுள்ளது. அதற்குப் பதினைந்து ஆண்டுகள் முன் என்றால் 1952ஆம் ஆண்டுவாக்கில் எனத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக ‘முதல் சுதந்திர இந்தியாவின் தேர்தல்கள் முடிந்த சமயம்’ என்று எழுதியுள்ளார். இவற்றைக் கொண்டு காணும்போது இந்திய விடுதலைக்குப் பிறகு தொடங்கி அடுத்த பத்தாண்டுகள் கதை நடக்கும் காலம் எனக் கொள்ள முடிகிறது.

நாவலின் தனித்தன்மைக்கு முக்கியமான காரணம் 1930கள் தொடங்கிக் கோவை நகரத்தில் உருவாகி வளர்ந்த மில் எனப்படும் நூற்பாலைகள் அல்லது பஞ்சாலைகள் பற்றியும் அவை சார்ந்த வாழ்வியல் மாற்றங்களையும் கிராமத்து நடுத்தர வயதுக்காரர் ஒருவர் பார்வையில் விவரிப்பதாகும். தொழிற்சங்கங்கள் தொடர்பான பல்வேறு தகவல்களையும் தருவதோடு கடுமையான விமர்சனங்களையும் நாவல் முன்வைக்கிறது. தொழிற்சங்க அலுவலக அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு படம் ‘அமரர் தொழிலாளர் தலைவர் என்.ஜி.ராமசாமியின் படம்.’ அவர் கற்பனைப் பாத்திரமல்ல. விடுதலைக்கு முன்னர் கோவையில் பஞ்சாலைத் தொழிற்சங்கம் உருவாக்கித் தீவிரமாகச் செயல்பட்ட தொழிற்சங்க முன்னோடி; விடுதலைப் போராட்ட வீரர்; காந்தியவாதி. அவரைப் பற்றி நாவல் கூறும் வரிகள் இவை: ‘என்.ஜி.ஆர். என்று நெஞ்சம் கனியப் போற்றப்படும் அன்புத் தலைவரின் நினைவுநாள். எதை மறந்தாலும் நினைவு நாள் விழா நடத்துவதை ‘சங்கத்துக்காரர்கள்’ மறக்க மாட்டார்கள். கொடுமையை எதிர்த்த முதற் கட்டிளம் காளை. ஆணவத் தீயை அணைக்க முயன்று அதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இளஞ்சிங்கம். களத்திலே ஆதியிலே தன் இரத்தத்தைச் சிந்திய தமிழ் மகன்.’

என்.ஜி.ஆர். என்று அழைக்கப்படும் என்.ஜி.ராமசாமி பற்றித் தேடினால் இணையத்தில் பல தகவல்கள் கிடைக்கின்றன. என்.ஜி.ராமசாமி (1912 – 1943) அவர்கள் முப்பத்தொரு வயதுவரை வாழ்ந்த தியாகி. உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றதோடு பஞ்சாலைத் தொழிற்சங்க நிறுவனத் தலைவராக விளங்கியவர். 1937ஆம் ஆண்டு தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து. அச்சட்டமன்றத்தில் வயது குறைவான உறுப்பினர் அவர்தான். அவரது தொழிற்சங்கச் செயல்பாடுகள் காரணமாக பஞ்சாலை முதலாளிகளின் தாக்குதலுக்கு உட்பட்டவர். போராட்டம், தாக்குதல், சிறைவாசம் ஆகியவற்றால் உடல் நலிந்து இளம்வயதிலேயே இறந்து போனார். அவர் நினைவை அக்காலத் தொழிற்சங்கங்கள் போற்றிய செய்திகள் இந்நாவலில் பலவாகப் பதிவாகியுள்ளன.

அப்போது ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொழிற்சங்கம் எனக் கட்சி சார்ந்த பிரிவுகள் உருவாகியதையும் அதனால் ஏற்பட்ட பிரிவினைகளையும் நாவலில் விவரித்துச் செல்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் சில செயல்களை எள்ளலோடு விவரித்துள்ளார். தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் வெளியில் போய்ச் சாப்பிடுவதில்லை. பிரியாணி, கோலா உருண்டை, ஈரல் வறுவல் என்றெல்லாம் உணவகத்தில் சாப்பிடுவதைத் தொழிலாளர்கள் பார்த்தால் என்னவாகும்?  ‘இது நம்ம பணம் அல்லவா?’ என்று தோன்றத்தானே செய்யும்? அதைத் தவிர்க்கப் பார்சல் வாங்கிக் கொண்டு வந்து அலுவலக அறையிலேயே சாப்பிடுவார்களாம். சென்னை சென்றுவிட்டுத் திரும்பும்போது நேரடியாகக் கோவை வராமல் தம் குடும்பம் இருக்கும் திருப்பூரில் இறங்கிக் கொள்வார்களாம். குடும்பத்துக்கெனத் தாம் வாங்கி வந்த பொருள்களை எல்லாம் தொழிலாளர்கள் பார்க்கக் கூடாது என்று இந்த ஏற்பாடாம்.

ஆர்.ஷண்முகசுந்தரம்: தனிவழி

சிங்காநல்லூர் கூத்தாண்டிப் பண்டிகை, ஒண்டிப்புதூர் தர்மர் வைத்திய சாலை, பலவிதமான மில்கள் எனப் பதிவாகியுள்ளவற்றை வைத்துப் பார்த்தால் ஆவணத்தன்மை கொண்ட நாவல் இது என்று சொல்லலாம். பொதுவாக ஆர்.ஷண்முகசுந்தரம் தம் நாவல்களில் தேவையற்ற தகவல்களை வழங்குபவர் அல்ல. கதைக்குத் தேவைப்படும் அளவில்தான் தகவல்கள் இருக்கும். ஒரு தகவலைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்வார். அதற்கான விளக்கம் தேவை என்றாலும் தர மாட்டார். இந்நாவலில் அவ்வியல்பிலிருந்து பிறழ்ந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கும் காரணம் உள்ளது.  கீரனூர் என்னும் சிறுகிராமத்தில் வாடகைக்குச் சவாரி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் நாச்சப்பன் தம் மகன் பொருட்டு கோவைக்கு வந்து வாழ நேர்கிறது. கிராமத்தில் பிறந்து வளர்ந்து அம்மனநிலையுடனே வாழும் நாச்சப்பனின் கோணத்தில் கோவை நகர மாற்றங்கள் காட்டப்படுகின்றன. அதற்கேற்பப் பல தகவல்களைக் கொடுக்கும் தேவை ஏற்படுகிறது.

கோவை நகரத்தில் நடக்கும் ஒவ்வொன்றும் அவருக்குப் புதிதாக இருக்கின்றது. பஞ்சாலை, தொழிலாளர் வேலை, கைநிறையப் பணம், சங்கங்கள், முதலாளிகள், அவர்களுக்குக் கீழுள்ள கங்காணிகள் என்றெல்லாம் அவர் பார்க்கும் உலகம் புதிது. ஆண் பெண் உறவு, சாதி ஆகியவை பற்றி அவர் கொண்டிருக்கும் விழுமியங்கள் எல்லாம் நகரத்தில் செல்லுபடியாவதில்லை. தம் கிராமத்தையும் நகரத்தையும் ஒப்பிட்டு மனம் குமைவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. தன் மகனுக்குக் கிராமத்தில் பெண் பார்த்துத் திருமணம் செய்யும் அவர் ஆசையும் நிறைவேறவில்லை. அவர் வழி தனியாகவும் அவர் மகன் கிட்டப்பன் வழி தனியாகவும் இருக்கிறது. இன்னும் நாவலில் முக்கியப் பாத்திரங்களாக வரும் கருப்பண்ணன், மாரக்காள், அவள் மகள் குஞ்சாள், கிட்டப்பனின் நண்பர்கள் எல்லோரையும் காணும் போது  அனைவரின் வழியும் ஒன்றாகவும் நாச்சப்பனின் வழி தனிவழியாகவும் இருக்கிறது. மாற்றத்தைக் கொண்டு வரும் ஜோதியில் நாச்சப்பனால் ஐக்கியமாக முடிவதில்லை.

இப்போது நாவலை வாசிக்கும்போது அதன் ஆவணத்தன்மை முக்கியமான கூறாக இருந்தாலும் நாவலுக்குரிய கூறுகளில் குறைபாடு ஏதும் தோன்றவில்லை. ஆவணத்தன்மை பற்றிக் கவனம் கொள்ளாமலே நாவலை வாசித்துச் சுவைக்க முடிகிறது. அதற்குப் பாத்திரங்களின் மனப்பாங்குகளில் அவர் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதுதான் காரணம். சிறுவனாக இருக்கும் கிட்டப்பனுக்குக் கிராமத்து வேலைகளில் ஒட்டுதல் ஏற்படவேயில்லை. அதற்கு உதாரணமாக அவர் சொல்லும் சில வேலைகள் சுவாரசியமாக இருக்கின்றன. வயதான மணியக்காரருக்குத் துணையாக இருக்கும் வேலைக்குச் செல்கிறான். அந்த மணியக்காரரைப் பற்றிய சித்திரம் இது:

‘படுக்கைக்கு அருகே வைத்திருக்குக் படிக்கம் கவிழ்ந்துவிடாமல் இருப்பது முதற்கொண்டு ஒரு பத்து வயதுப் பாலகன் கண்காணித்துக் கொள்வதென்றால் சாமான்யக் காரியமா? வெற்றிலை எச்சிலைத் தம்முடைய மேல் துண்டின் மீதே துப்பிக் கொள்வார். மேலாடை காற்றில் பறந்து அலங்கோலத்தை அப்பிக் கொண்டால் அதற்குக் கிட்டானா பிணை? “ச்சீ! நாய் மகனே” என்பார். மணியக்காரருக்கு நாய்மகன் என்ற வார்த்தையைத் தவிர வேறு சொல் அகப்படாது.’

நாய்மகன் என்னும் வசையைக் கேட்டுச் சகிக்காமல் அவ்வேலையை விட்டுக் கிட்டப்பன் ஓடி வந்தான். இப்படி இன்னும் சில வேலைகள். ஒவ்வொரு வேலை பற்றியும் ஒவ்வொரு பத்தி விவரிப்புத்தான். அவற்றில் ஆர்.ஷண்முகசுந்தரத்துக்கே உரிய எள்ளலும் ரசனையும் சேர்ந்திருக்கின்றன. அவன் வளர்ந்து இளைஞனாகப் பரிணமிக்கும் போது தன் வழியை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான் என்பதும் சுவாரசியம்தான்.

ஆவணத்தன்மையும் இலக்கியச் சுவையும் ஒருங்கே கொட்டிக் கிடக்கும் நாவலாகிய ‘தனிவழி’யைத் ‘கற்கைப் பதிப்பகம்’ புதிய பதிப்பாகக் கொண்டு வருவது மகிழ்ச்சிக்குரியது. இந்நாவல் வாசகரைச் சென்றடைய வேண்டியது என்பதில் ஐயமில்லை.

19-12-23

ஆனைக்கட்டி.                                                                          பெருமாள்முருகன்.

நூல் விவரம்: ஆர்.ஷண்முகசுந்தரம், தனிவழி, 2024, கற்கைப் பதிப்பகம், திருச்செங்கோடு, விலை: ரூ.120/- தொடர்புக்கு: 8838323170.

—–  13-12-24

Add your first comment to this post