சலபதி: கலைக்களஞ்சியத்தில் பெரியார் எழுதியிருந்தால்?

You are currently viewing சலபதி: கலைக்களஞ்சியத்தில் பெரியார் எழுதியிருந்தால்?

 

சலபதியின் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’ தொடங்கி ‘நாவலும் வாசிப்பும்’, ‘முச்சந்தி இலக்கியம்’ எனத் தொடர்ந்து ‘எழுக நீ புலவன்’ உள்ளிட்ட அவரது ஒவ்வொரு நூலும் ஆய்வுகளை நோக்கிப் பொதுவாசகரை ஈர்ப்பனவே. ‘நாவலும் வாசிப்பும்’ நூலெல்லாம் கீழே வைக்க முடியாத வாசிப்புத்தன்மையைக் கொண்டது. தகவல்கள் குவிக்கப்படாமல் கண்டடைதல்களின் போக்குக்குப் பயன்படும் வகையில் தரப்படுவதும் சமகாலத் தன்மையைக் கொண்டிருப்பதும் நாம் நிற்கும் இடத்தின் முந்தைய காலச் சூழல் எத்தனை அழகானது அல்லது அபத்தமானது என்பதைப் போட்டுடைப்பதும் எனத் தனி மொழிதலைக் கொண்டிருக்கும் நூல்கள் சலபதியுடையவை.

வரலாறு என்பது சோர்வூட்டும் தகவல்களின் அடுக்கு என்னும் மனப்பதிவைப் போக்கிச் ‘சுவாரசியமான கதைதான் வரலாறு’ எனச் சிறுபிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போல நம்மைக் கவர்ந்துவிடுகிறார். அதற்கேற்ப இந்த நூலின் தலைப்பு ‘கலைக்களஞ்சியத்தின் கதை’ என்றே அமைந்திருக்கிறது. ‘ஒரு புளியமரத்தின் கதை’ போலப் புனைவுக்குத் தலைப்பிடுவது உண்டு. வரலாற்று நூலுக்குக் ‘கதை’ எனத் தலைப்பு. வரலாற்றுக்கும் கதைத்தன்மை இருக்கிறது அல்லது வரலாறு என்பதே கதைதான்.

ஆனால் நமக்கு வரலாறு அப்படிக் கற்பிக்கப்படவில்லை. அரசர்களின் பெயர்கள், ஆண்டுகள், எண்ணிக்கை என மூளையைக் குழப்பும் கணக்கீடுகளாக்கி வரலாற்றை அந்நியமாக்கிவிட்டனர். அதனால் தானோ என்னவோ தமிழ்நாட்டு உயர்கல்வியில் மாணவர்களின் கடைசிப் புகலிடமாக வரலாற்றுத் துறை இருக்கிறது. மூன்றாண்டு கல்லூரி வாழ்வை அனுபவிக்க மட்டும் உதவும் படிப்பு எனக் கருதப்படுகிறது. கலைக்கல்லூரிகளில் வரலாறு படிக்கும் மாணவர்களைப் பற்றி மென்மையான மொழியில் சொன்னால் ‘அடங்காதவர்கள்’ என்று பெயர். ஏன் இந்த நிலை? சலபதியைப் போலக் ‘கதை’ சொன்னால் இந்த நிலை வந்திருக்காதோ?

கலைக்களஞ்சியத்தின் கதையை எழுதியதன் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அவருக்கு இதை எழுதத் தோன்றிய வித்து, பின்னான தேடல்கள் என முன்னுரையில் அதைப் பதிவு செய்திருக்கிறார். பிரெஞ்சுக் கலைக்களஞ்சியம் உருவான வரலாற்றை 1991ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறார். அப்போது தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாற்றை எழுதும் ஆசை தோன்றியிருக்கிறது. பின்னர் பல ஆண்டுகள் முயன்று தரவுகளைச் சேகரித்து இந்நூலைச் சுவைபட எழுதியுள்ளார்.

தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ‘கலைக்களஞ்சியம்’ பத்துத் தொகுதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இந்திய மொழிகளில் வெளியான முதல் கலைக்களஞ்சியம் இதுதான். பல்லாண்டுச் சிந்தனையும் பல்வேறு முன்முயற்சிகளும் நடைபெற்றுப் பின்னர் இந்தக் கலைக்களஞ்சியம் செயல்வடிவத்திற்கு வந்திருக்கிறது. பத்துத் தொகுதிகள், பதினைந்தாயிரம் பதிவுகள், ஆயிரத்திருநூறு கட்டுரையாளர்கள், இருபதாண்டுகள் எனப் பெரும்பரப்பில் உருவான இதன் பின்னணி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதாகும்.

இதை முற்றுவித்த ஆளுமைகளின் உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை மட்டுமல்ல, நேர்ந்த தடைகள், தடையைக் கடந்த நிலைகள் என விரியும் இக்கதை மனிதர்களுக்கு இடையிலான தன்முனைப்புகள் பற்றியும் தொட்டுச் செல்கிறது. இம்முயற்சியை அரசும் அரசியலும் எதிர்கொண்ட விதங்கள் பற்றிய கருத்துக்கள் பல கோணங்களில் சிந்திக்க வைப்பவை. இவ்விதம் முன்முயற்சிகள், செயல்பாட்டுக் காலம், பின்விளைவுகள் என அனைத்தையும் புலனாய்வாளனின் கூர்மையோடு அணுகி விவரித்துச் செல்கிறது இந்தக் ‘கதை’ நூல்.

சென்னை மாகாணத்தின் கல்வி அமைச்சராக அப்போதிருந்தவர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார். நிர்வகிக்கும் ஆற்றலும் செயல்திறனும் கொண்டவர். அவர்தான் கலைக்களஞ்சியம் வெளியீட்டுக்காகவே  ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ உருவாக்கியவர். தனிநபர்களின் நன்கொடைகளைப் பெற்று இம்முயற்சியைத் தொடங்கினார். அது போதாது என்பதால் மத்திய மாநில அரசுகளிடம் நிதியுதவி கோரப்பட்டது. அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் தமிழரான ஆர்.கே.சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம் புகார் காண்டத்திற்கு உரை எழுதியவர். பரந்த வாசிப்போடு புரவலராகவும் விளங்கிய அவர் கலைக்களஞ்சியத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தந்தார்.

எனினும் ஆண்டுதோறும் இவ்வளவு என வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்ட தொகையைப் பெறுவது எளிதாக இல்லை. கடிதம், நேர் சந்திப்பு என இடைவிடாத போராட்டத்தின் மூலமாகவே கிட்டத்தட்டக் கலைக்களஞ்சியப் பணி முடியும் தறுவாயில்தான் நிதியைப் பெற முடிந்தது. நிதி கிடைக்காத காலத்தில் நெருக்கடியைச் சமாளித்து எடுத்த வேலையை முடிக்க அவினாசிலிங்கம் செட்டியாரும் களஞ்சியக் குழுவினரும் மேற்கொண்ட செயல்கள் அத்தலைமுறையின் அர்ப்பணிப்பையும் தியாக உணர்வையும் வெளிப்படுத்துவன.

இந்நூலில் போகிற போக்கில் வந்து விழும் தகவல்கள் வியப்பளிக்கின்றன. Personality என்பதற்கான தமிழ்ச் சொல்லாக ‘ஆளுமை’யைப் பரிந்துரைத்தவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் என்பது ஒரு தகவல். இன்று சாதாரணமாக நாம் பயன்படுத்தும் இச்சொல்லைக் கண்டுபிடிக்க ஒருநாள் கூட்டம் முழுக்கவும் ஒதுக்கப்பட்டதாம். எனினும் முடியவில்லை. பின்னர் அப்பொறுப்பு தெ.பொ.மீ. அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாம். அவர்தான் ‘ஆளுமை’ என்பதைக் கண்டு கூறினாராம். ஒருநாள் மூன்று, நான்கு மணி நேரம் நடைபெறும் கூட்டத்தில் இவ்வாறு பல சொற்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘கலைச்சொல் குழு’ இதற்காகவே உருவாக்கப்பட்டிருந்தது.

மறைமலையடிகளைக் கட்டுரை எழுதக் கேட்டும் அவர் எழுதவில்லை என்பது இன்னொரு தகவல். அரிய வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கலைக்களஞ்சிய உருவாக்கக் குழுவைக் கடுமையாக விமர்சித்த பேராசிரியர் க.அன்பழகன் யாரெல்லாம் இதற்குக் கட்டுரை எழுதலாம் எனப் பரிந்துரைத்த பெயர்களில் ஒன்று ‘பெரியார்.’ சில தலைப்புகளில் பெரியார் எழுதியிருந்தால் அக்கட்டுரைகள் எப்படியிருந்திருக்கும் என்று கற்பனைதான் செய்ய முடிகிறது. தகவல்களைப் பிரதானப்படுத்துபவை கலைக்களஞ்சியக் கட்டுரைகள் என்றாலும் எத்தகைய தகவல்கள், யாருடைய கோணம் என்பனவும் முக்கியமானவையே.

‘சாதி’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியிருப்பவர் ‘சீ.ஜே.ஜெ.’ சீ.ஜே.ஜெயராம் என்பவர் அரசு பொருட்காட்சிச் சாலையின் மானிடவியல் பகுதியில் ‘கியூரேட்டராக’ இருந்துள்ளார். அவர்தான் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார். இத்தலைப்பில் எழுதுவது மிகவும் சவாலானது என்பது உண்மை. சாதி அமைப்பை உள்ளபடி விவரிப்பதா? அப்படியானால் எந்த நூலை ஆதாரமாகக் கொண்டு விவரிப்பது? சாதி ஆதரவுக் குரல் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது எப்படி? சாதி எதிர்ப்பாளர்களின் குரல்களுக்கு இதில் இடம் உண்டா இல்லையா? இவையெல்லாம் விவாதிக்கப்பட்டிருக்கலாம். எனினும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவும் சாதிப் பிரிவினை இருப்பது போன்ற தோற்றத்தை இக்கட்டுரை உருவாக்குகிறது. இத்தலைப்பில் பெரியார் எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கத் தோன்றுகிறது.

மேலும் இந்நூல் விவரிப்பின் மூலம் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாரின் வினைத்திட்பமும் பெ.தூரனின் அர்ப்பணிப்பும் கண்டு பிரமிப்பு ஏற்படுகிறது. கவிதை, சிறுகதை, கீர்த்தனை, குழந்தை இலக்கியம் எனப் பலதுறைப் படைப்புகளில் ஆர்வம் கொண்டிருந்த பெ.தூரன் இப்பணியில் ஈடுபடாமல் இருந்திருப்பின் பெரும் படைப்பாளுமையாக உருவாகியிருக்கக் கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. ஒருவகையில் ஊதியத்தை மட்டுமல்ல, தம் ஆர்வத்தையும் தியாகம் செய்தவர்தான் பெ.தூரன். ‘இந்த மாதத்தில் ஓய்வு பெற்று என் சொந்தப் படைப்பில் முழுநேரமும் ஈடுபடலாம் என்று எண்ணியுள்ளேன்’ (ப.77) என்று சொல்லும் அவர் தான் கவிஞனாகவே உலகிற்கு அறிமுகமானதையும் சிறுகதை, நாடகம், இசைப்பாடல் எனப் பல துறைகளில் ஈடுபட்டதையும் நினைவுகூர்கிறார்.

இந்த நூலை வாசித்தால் நம் கதையை நாமே அறிந்துகொள்ளலாம். நம் மொழியில் உருவான சாதனைப் புத்தகத்தின் கதை நம்முடைய கதைதான். அது மட்டுமல்ல, மேற்கொண்டு செய்வதற்கான பல வேலைகளும் இருக்கின்றன என்னும் எண்ணமும் தோன்றுகின்றது. சலபதி சொல்வது போல ‘மரபார்ந்த கலைக்களஞ்சியங்களுக்கு விக்கிப்பீடியா சாவுமணி அடித்துவிட்டது’ உண்மைதான் எனினும் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களுக்கான பயன்பாடு இன்னும் முடிந்துவிடவில்லை. வரலாற்றுக்கு மட்டுமல்லாமல் அன்றாடத் தேவைக்கான பயன்பாட்டை இன்றும் கொண்டிருக்கிறது.

கலைக்களஞ்சியத்தில் ஒரு தலைப்பில் எழுதப்படும் கட்டுரை அப்பொருள் பற்றிய அறிமுகத்தை வழங்கும் நோக்கிலானதாகும். துறைசார் வல்லுநர்கள் எழுதிய அறிமுகக் கட்டுரைகள் பல காலாவதி ஆனவை எனச் சொல்ல முடியாது. இன்றைக்கும் அறிமுகப் பயன்பாட்டை அவை இழக்கவில்லை. ஆகவே மறுபதிப்பாக அச்சிடத் தேவையில்லை என்றாலும் இருக்கும் அச்சு நூலைப் பயன்படுத்தும் விழிப்புணர்வை உருவாக்க இயலும். இணையத்தில் கிடைக்கும் இந்தக் கலைக்களஞ்சியத்தின் தேடல் வடிவைப் பயன்படுத்தும் உந்துதலையும் தோற்றுவிக்கலாம்.

சலபதி: கலைக்களஞ்சியத்தில் பெரியார் எழுதியிருந்தால்?

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் உள்ள கலைக்களஞ்சியத்தின் வடிவத்தில் ஒன்றைத் தேடிக் கண்டடைவது பெரும்பாடாக இருக்கிறது. ஏராளமான பேர் அதைப் பயன்படுத்த முயன்றால் பயன்பாட்டு முறையை இன்னும் எளிமைப்படுத்தும் வேலையை அந்நிறுவனம் மேற்கொள்ளக்கூடும். இணையக் கல்விக் கழகத் தளத்திலேயே பத்துத் தொகுதிகளும் இப்போது பிடிஎப் வடிவில் கிடைக்கிறது. தொகுதி எண் கொடுத்தும் கொடுக்காமலும் பதிவேற்றியுள்ளனர். சிறுகுழப்பம் தோன்றினாலும் பதிவிறக்கிப் பயன்படுத்தலாம். கட்டுரை மொழி இன்றைய மொழிக்கு நெருக்கம்தான். சில சொற்கள் மட்டும் மாறியிருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொள்வதில் பெரிய இடர்ப்பாடு இல்லை.

மேலும் கலைக்களஞ்சியத்திற்கென தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் எழுதிய இலக்கிய வரலாற்றுக் கட்டுரைகளும் மா.கிருஷ்ணன் எழுதிய பறவைகள் குறித்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெற்றுள்ள தகவலை இந்நூல் கொண்டிருக்கிறது. அவ்வகையில் இன்னும் சில நூல்களை உருவாக்கலாம். தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பாகப் புலவர்களைப் பற்றியும் நூல்களைப் பற்றியும் பலர் எழுதியுள்ள கட்டுரைகளைத் தொகுத்தால் சில நூல்களை உருவாக்கலாம். அவை இன்றைய போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும் தன்மை கொண்டவை. மேலும் பொதுவாசகருக்கு அறிமுக நிலையிலும் உதவுபவை.

பறவைகளைப் பற்றிய கட்டுரைகளை மா.கிருஷ்ணன் எழுதியிருப்பது போல விலங்குகளைப் பற்றி மாநிலக் கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராகப் பணியாற்றிய பி.ஏ.பானுமதி என்பவர் எழுதியுள்ள கட்டுரைகளும் புதுக்கல்லூரி விலங்கியல் பேராசிரியர் ப.பானல் என்பார் எழுதியவையும் மிகவும் முக்கியமானவை. அவற்றைத் தொகுத்துத் தனி நூலாக்கலாம். மொழி பற்றிப் பல கட்டுரைகள் உள்ளன. அவை நூலாக்கத் தகுதி கொண்டவை. இவ்வாறு குறிப்பிட்டப் பொருள் சார்ந்து கலைக்களஞ்சியக் கட்டுரைகளைப் பல நூல்களாகத் தொகுக்க வாய்ப்பிருக்கிறது.

(இன்னும் இருக்கிறது. நாளை…)

—–  21-12-24

Add your first comment to this post