பிள்ளைக் கிறுக்கல்

You are currently viewing பிள்ளைக் கிறுக்கல்

 

பழந்தமிழ் இலக்கிய நூல்களில் இடம்பெறும் ஒருகூறு அவையடக்கம். கடவுள் வாழ்த்து அல்லது காப்புப் பகுதிக்கு அடுத்து அவையடக்கத்தை வைப்பது மரபு. கவிஞர் தம்மைத் தாழ்த்திக் கொண்டு பொதுவில் பேசுவதாக அமைவதுதான் அவையடக்கம். இதை இன்று தன்னடக்கம் என்று சொல்கிறோம். இதற்குச் சான்றாக ஒரு விருது விழாவில் கா.சிவத்தம்பி கூறியதை விக்சனரி எடுத்துக்காட்டுகிறது.

“சுவாமி விபுலானந்தர், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, கணபதிப்பிள்ளை, எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்.”

ஏன் அவையடக்கம் தேவை? பெரிதாகச் சாதித்து விட்டோம் என்னும் தன்முனைப்பு ஒருவருக்கு வந்துவிட்டால் அதற்குப் பிறகு மேற்கொண்டு உருப்படியாக எதையும் செய்ய முடியாது. தன்முனைப்பைக் கிள்ளி எறிவதற்குத்தான் அவையடக்கம் தேவை. அவையடக்கப் பாடல்கள் நூலின் முதலில் இடம்பெறும். ஆனால் பெரிய நூலை இயற்றுபவர் அதை முடித்த பிறகுதான் அவையடக்கம் பாடுவார் என்பது என் எண்ணம். செயல் முடிந்த பிறகு அடக்கம் கொள்ள வேண்டும்.  உலகைச் சமான மனநிலையோடு எதிர்கொள்ளவும் அது உதவும்.

இன்றைய சமூகத்தில் தன்னடக்கத்தோடு ஒருவர் இருப்பதைப்  ‘பாவனை’ என்று கருதுகிறார்கள். இலக்கிய உலகில் இப்படிக் கூறும் போக்கு மிகுந்திருக்கிறது. பாவனை என்பது ஒன்றுமற்ற ஓட்டைப் பானைகளுக்குப் பொருந்தலாம். எல்லோருக்கும் பொருந்தாது. தமிழ் இலக்கிய நெடும்பரப்பின் ஆழத்தை அறிந்தோருக்கு இயல்பாகவே தன்னடக்கம் வந்துவிடும். உலக இலக்கியம் எல்லாம் நம்மிடம் வந்து சேரும் காலம் இது. அவற்றை வாசிக்கும்போது வான்பரப்பில் கொட்டிக் கிடக்கும் மீன்களில் ஒன்றாகத் தன்னை ஒருவர் உணரலாம். உற்றுப் பார்த்தால் மட்டுமே தெரியும் மங்கிச் சிணுங்கும் சிறுமீன் என்று இன்னொருவர் கருதலாம். எவ்வளவுதான் நோக்கினாலும் கண்ணுக்கு எட்டாமல் ஒளிந்து கொண்டிருக்கும் ஒன்றோடு தன்னை ஒருவர் பொருத்தலாம். இவை எதுவுமே தானில்லை என்றும்கூட எண்ணலாம். அது ஒரு மனோபாவம்.

மரபு சார்ந்துகூட ஒருவர் அவையடக்கம் கொண்டிருக்கலாம். மேடையில் பேசுவோர் சிலர் ‘என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கூறுகிறேன்’ என்பதுண்டு. உண்மையில் நாம் பெற்றிருப்பது சிற்றறிவுதான். அதிலென்ன சந்தேகம்? நூலுக்கு முன்னுரை எழுதும் போது தயக்கத்தோடு ‘என்னுடையதையும் வாசித்துப் பாருங்கள்’ என்று ஒருவர் சொல்வதைக் காண்கிறோம். பெரும்பரப்பில் தன் காலையும் வைக்கும் ஒருவருக்குத் தயக்கம் தோன்றுவது இயல்புதான். பெரும்சாதனை புரிந்த பிறகு ‘அவையடக்கம்’ கூறும் மரபை இப்போதும் பின்பற்றலாம் என்றே நினைக்கிறேன். அது மனதைச் சமநிலையோடு வைத்துக்கொள்ளப் பயன்படும். பாவனையாக இருந்தால்கூடப் பரவாயில்லை. பயன் தரும் மரபை ஏன் உதற வேண்டும்?

‘தமிழில் அவையடக்கப் பாடல்கள்’ என்னும் நூலை எஸ்.சௌந்தரபாண்டியன் எழுதியிருக்கிறார். 1988ஆம் ஆண்டு ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நூல். இப்போது பதிப்பில் இல்லை.  வெகுநாட்களாக அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை. அவையடக்கம் முதன்முதலாக எந்த நூலில் இடம்பெற்றது என்பதை அந்த நூலில் குறிப்பிட்டிருப்பார் என நினைக்கிறேன்.

அவையடக்கம் பாடிய முதல் நூல் சீவக சிந்தாமணியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். அதில் இரண்டு பாடல்கள் உள்ளன. ‘வழுக்கள் நிறைந்த சொற்களை அறிவால் கழுவிப் புலமை மிக்கோர் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று ஒருபாடல் சொல்கிறது. இன்னொரு பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. ‘கடல் நீர் உவர்ப்பாக இருக்கிறது என்பதால் அதில் பிறந்த பவளம், சங்கு, முத்து ஆகியவற்றை யாராவது வெறுப்பார்களா? என் சொற்கள் வழுக்கள் உடையவை ஆயினும் அவை கூறும் பொருள் ஒருவர்க்கு வீடு பேறு தரும். ஆகவே வெறுக்க வேண்டாம்’ என்னும் பொருள் கொண்டது. அப்பாடல் :

முந்நீர்ப் பிறந்த பவளத்தொடு சங்கும் முத்தும்

அந்நீர் உவர்க்கும் எனின்யார் அவைநீக்கு கிற்பார்

இந்நீர என்சொல் பழுதாயினும் கொள்ப வன்றே

பொய்ந்நீர அல்லாப் பொருளால்விண் புகுதும் என்பார்.

சீவக சிந்தாமணிக்குப் பின்வந்த காப்பியங்கள் எல்லாவற்றிலும் அவையடக்கம் உண்டு. யாப்பருங்கலக் காரிகை உள்ளிட்ட இலக்கண நூல்களிலும் அதைக் காணலாம். கம்பராமாயணத்தில் எட்டுப் பாடல்கள் உள்ளன. இரண்டு பாடல்கள் ஒவ்வொரு சுவடியில் மட்டுமே இருந்தன. அதனால் அவற்றை மிகைப்பாடல்களாகக் கருதுகின்றனர். யாரோ எழுதிச் சேர்த்தவை. பொதுவாக ஆறு பாடல்களை எல்லாப் பதிப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

முதல் பாடல் பெரும்புகழ் பெற்று மேற்கோள் காட்டிக் காட்டித் தேய்ந்து போனது என்றே சொல்லலாம். வகுப்புகளிலும் உரைகளிலும் பலமுறை அப்பாடலை நானும் எடுத்துக் காட்டியிருக்கிறேன்.  ‘பாற்கடல் முன் நின்றிருக்கும் பூனை பால் முழுவதையும் பருகிவிட ஆசைப்பட்டது போல’ என்னும் உவமையைக் கொண்ட பாடல் அது. இராமன் கதை பாற்கடல் போன்றது; நானோ சிறுபூனை போன்றவன். அப்பூனை ஆசைப்படுவது போல நானும் ஆசைப்பட்டு இதை எழுதுகிறேன் என்கிறார் கம்பர்.

பிடித்த உணவாக இருந்தால் யாருக்கும் தர மாட்டேன் என்று எல்லாவற்றையும் தன்பக்கம் வைத்துக்கொள்ளும் குழந்தையைப் பார்த்திருக்கிறோம். அள்ளித் தின்று வயிறு நிறைந்ததும் அப்படியே விட்டுவிட்டுக் குழந்தை எழுந்து விளையாடப் போய்விடும். ஆசைக்கு அளவில்லை. வயிற்றுக்கோ அளவுதான். நமக்கு விருப்பானது என்றால் அனைத்தும் தனக்குத்தான் என்று கருதும் மனோபாவம் எல்லோர்க்கும் உண்டு. வளர்ந்தவர்கள் அதை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். குழந்தை வெளிப்படுத்திவிடும். அதைத்தான் பூனையை வைத்துக் கம்பர் காட்சிப்படுத்துகிறார். ஓசை, ஆசை என்பவற்றுக்கேற்பப் பூனை – பூசை ஆகி இருக்கிறது. இலக்கணத்தில் இதற்கு அனுமதியுண்டு. வலித்தல் விகாரம் என்பர். ஓசையோடு வாசிப்பதற்கும் உகந்த பாடல் இது.

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றிய றையலுற் றேன்மற்றிக்

காசில் கொற்றத்(து) இராமன் கதையரோ.

இந்தப் பாடலைப் போலவே அல்லது இதை விடவும் எனக்குப் பிடித்தது கடைசிப் பாடல். அதில் குழந்தையையே கம்பர் காட்சிப்படுத்துகிறார். கரிக்கட்டையோ பலப்பமோ கையில் கிடைத்தால் குழந்தை என்ன செய்யும்? தரையிலோ சுவரிலோ கிறுக்கத் தொடங்கிவிடும். கைக்கு வந்தபடி எல்லாம் கிறுக்கித் தள்ளும். நாம் போய் ‘இது என்ன?’ என்று ஒன்றைக் காட்டிக் கேட்டால்  ‘இது வீடு’ என்று குழந்தை சொல்லும். இரண்டு மூன்று வயதுக் குழந்தை என்றால் வீட்டின் அறைகளை எல்லாம் சுட்டிச் சொல்லும்.

அதைக் கேட்டுச் சலித்துக் கொள்வோமா நாம்? அம்மாவோ அப்பாவோ பெரிய ஓவியராக, சிற்பியாகத்தான் இருக்கட்டுமே. தம் குழந்தை வரைந்ததைக் குறை சொல்லித் திட்டுவோமா?  இது போய் வீடா என்று குழந்தையின் முதுகில் இரண்டு அடி வைப்போமா? மாட்டோம்.  ‘ஆகா! என்ன அருமையாக வீடு வரைந்திருக்கிறாய்’ என்று பாராட்டுவோம். வீட்டில் இருப்பவர்களை அழைத்து ‘பாரு குழந்தை வரைந்த வீடு’ என்போம். பார்ப்பவர்களும் வியந்து பாராட்டுவார்கள்.

தான் எழுதிய இராமாயணத்தை அத்தகைய ‘பிள்ளைக் கிறுக்கல்’ என்கிறார் கம்பர். அதை வாசிக்கும் நாமெல்லாம் யார்? நன்கு தேர்ந்த சிற்பிகளாம். சிற்பிகளே என்னுடையதைப் பிள்ளைக் கிறுக்கலாகக் கருதி ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். ‘சிறிதும் அறிவில்லாத எனது புன்கவிகளை முறையாக நூல்களைக் கற்றறிந்தோர் கோபம் கொண்டு ஒதுக்குவார்களோ?’ என்று கேட்கிறார்.

பிள்ளைக் கிறுக்கல்

‘பிள்ளைக் கிறுக்கலைச் சிற்பிகள் ஏற்றுக்கொள்வது போல என்னுடையதையும் ஏற்றுக்கொள்வார்கள்’ என்கிறார்.   நூல்கள் படைத்தும் வாசித்தும் பெரும்புலமை கொண்டவர்களை நோக்கிக் கம்பர் இப்படி வேண்டுகோள் வைக்கிறார். கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பருக்கு எத்தகைய தன்னடக்கம்! அவையடக்கப் பாடலையே காலத்தை வென்று நிற்கும் வகையில் படைத்த கம்பன் தீட்டிய சித்திரம் இது:

அறையும் ஆடரங் கும்படப் பிள்ளைகள்

தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ

இறையும் ஞானம் (இ)லாதஎன் புன்கவி

முறையின் நூலுணர்ந் தாரும் முனிவரோ.

இப்பாடல் பற்றிக் கூடுதல் செய்திகள் சில. ‘அறையும் ஆடரங்கும் மடப்பிள்ளைகள்’ என்றும் பாடம் உண்டு. மடப்பிள்ளைகள் என்றால் ‘இளவயதுப் பிள்ளைகள்’ என்று பொருள்.  ‘அறையும் ஆடரங்கும் தோன்ற (தெரிய)’ எனப் பொருள் தரும் ‘பட’ என்னும் பாடத்தையே பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ‘தரை’ என்றுதான் வந்திருக்க வேண்டும். அறை, இறை, முறை ஆகியவற்றுக்கேற்ப இடையின ரகரம் வல்லினமாக மாறுகிறது. ஒரு மெல்லின எழுத்து வல்லினமாக மாறினால் அதற்கு வலித்தல் விகாரம் என்று பெயர். இங்கே இடையின எழுத்து வல்லினமாக மாறுகிறது. இதையும் வலித்தல் விகாரம் என்றே கொள்ள வேண்டும் போல.

—–  17-12-24

Latest comments (1)

Savithri Tamilmani

நான் டிரினிட்டி கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நீங்கள் சிறப்பு விருந்தினராக வந்தீர்கள் ஐயா. அப்போது மேடையில் உங்களை அறிமுகம் செய்யும் பேறு கிடைத்தது. சிறப்பு விருந்தினர் அறிமுக உரை நான் வழங்கிய போது “ஓசை பெற்றுயர் பாற்கடல்” என்ற பாடலைக் கூறி, கம்பர் தனது அவையடக்கத்தில் கூறியது போலதான் இந்தச் சிறிது நேரத்தில் ஐயாவின் புகழைக் கூறி அறிமுகப்படுத்தும் முயற்சியும் என்று கூறினேன். நீங்கள் இன்று இப்பாடலைப் பதிவிட்டதும் மேலெழுந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன்.