புதுக்கவிதை முன்னோடியாகிய ந.பிச்சமூர்த்திகூடக் கலைக்களஞ்சியத்தில் கட்டுரை எழுதியுள்ளார். ஒருபொருளில் கட்டுரை எழுதப் பொருத்தமானவர் யார் எனத் தேர்ந்தெடுத்து எழுதி வாங்கியுள்ளனர். மணிக்கொடி இதழுக்குப் பொறுப்பேற்றுப் புதுமைப்பித்தன், கு.ப.ரா. உள்ளிட்ட பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியும் சிறுகதைகளை வெளியிட்டும் முக்கியமான இலக்கியப் பணியைச் செய்தவரும் பாரதியார் வரலாறு உள்ளிட்ட பல நூல்களை எழுதியவருமான வ.ரா. எனப்படும் வ.ராமசுவாமியைப் பற்றி ந.பிச்சமூர்த்தி எழுதியுள்ளார். அவரோடு நெருங்கிப் பழகியவர், அவரைப் பற்றிய செய்திகளை அறிந்தவர் என்னும் அடிப்படையில் ந.பிச்சமூர்த்தியிடம் கட்டுரை கேட்டு வாங்கியிருப்பார்கள். அதே போலக் கு.ப.ராஜகோபாலன் பற்றிய சிறுகுறிப்பை அவரது தங்கை கு.ப.சேது அம்மாள் எழுதியிருக்கிறார்.
கலைக்களஞ்சியம் உருவாக்கிய காலத்தில் அதில் இடம்பெறும் பொருள்கள் மட்டுமே முக்கியமானவையாக இருந்திருக்கும். அதனால்தான் எழுதியோர் பெயரைச் சுருக்கக் குறியீடு மூலம் கட்டுரை முடிவில் கொடுத்துள்ளனர். ந.பிச்சமூர்த்தியின் பெயர் ந.பி. என்று மட்டும் இருக்கும். மா.கிருஷ்ணன் பெயர் மா.கி. என்றிருக்கும். ஒவ்வொரு தொகுதியின் முன்பகுதியிலும் கட்டுரையாளர் பட்டியல் கொடுக்கப்பட்டு அதில் சுருக்கக் குறியீடும் அதன் கீழே முழுப்பெயரும் இடம்பெற்றிருக்கும். இன்று கட்டுரையாசிரியர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர்.
ஓர் ஆசிரியர் எழுதிய கட்டுரைகள் மொத்தம் எத்தனை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அவர் பெயர் இடம்பெற்றிருக்கும் தொகுதி முழுவதிலும் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் தேட வேண்டும். அது பெரும் வேலை. ஒரு தலைப்புக்கும் இன்னொரு தலைப்புக்கும் பெரிய இடைவெளி இல்லை என்பதால் கட்டுரையாசிரியர் பெயரை நம் கண் தவறவிடுவது இயல்பு. மா.கிருஷ்ணன் எழுதிய பறவை பற்றிய கட்டுரைகளைத் தேடும்போது அப்படி நான் தவற விட்டவை உண்டு. இப்போது ஆசிரியர் அகர வரிசையில் கட்டுரைகளுக்கு ஓர் அடைவு தயாரிக்க வேண்டும். அது புதிய நூல்களைத் தொகுக்க உதவும்.
மொழிக்கு வளம் சேர்த்த கலைக்களஞ்சியங்கள் மீண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிட்டுப் பொது நூலகங்களில் வைக்க வேண்டியது அவசியம். இப்போது தமிழ் வளர்ச்சிக் கழகமே மீண்டும் அச்சிட்டுப் பெரும்விலை வைத்து விற்றுக் கொண்டிருக்கிறது. தாளும் தரமற்றது. அச்சுத் தொழில்நுட்பம் இந்தளவு வளராத அக்காலத்தில் மிகுந்த நேர்த்தியுடன் அச்சிட்டு நல்ல கட்டமைப்பில் வெளியிட்டதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. அந்தத் தரத்தையாவது எட்ட வேண்டாமா?
எப்படியோ அச்சில் வந்திருக்கின்றன. அவற்றை அரசு கல்வி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக வழங்கலாம். இன்னும் பெரும்பான்மை மக்கள் அச்சு நூல்களைத்தானே பயன்படுத்துகிறார்கள்? விக்கிப்பீடியா தகவல்கள் முழுமையான நம்பகத்தன்மை கொண்டவை என்னும் தகுதியைப் பெற இந்தக் கலைக்களஞ்சியத் தகவல்கள் அனைத்தையும் உள்ளிடவும் செய்யலாம். இதில் பங்களித்த கட்டுரையாளர்கள் பலரைப் பற்றி இப்போது எதுவும் தெரியவில்லை. நல்ல கட்டுரைகளை வழங்கியோர் பலருண்டு. அவர்களைப் பற்றி அறிமுக நோக்கிலேனும் சில கட்டுரைகளை எழுதலாம்.
இந்நூல் கட்டுரைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலைச்சொற்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. எந்தச் சொல் நிலைபெற்றிருக்கிறது, எது மாற்றம் பெற்றிருக்கிறது, எது பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது என்றெல்லாம் காண உள்ளே நுழைந்தால் மொழி பற்றிய அரிய செய்திகளைக் கண்டடையலாம். இப்படி எத்தனையோ பயன்பாட்டு வகைகள்.
பெ.தூரன் எழுதிய ‘விடைபெறுகிறேன்’ என்னும் உணர்ச்சிவயமான கட்டுரையைக் ‘கலைக்களஞ்சியத்தின் கதை’யின் பின்னிணைப்பாகச் சலபதி கொடுத்துள்ளார். அதே போலக் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கு பெற்றவர்கள் பற்றிய சிறு அறிமுகத்தைப் பின்னிணைப்பில் கொடுத்திருக்கலாம். சிலரைப் பற்றிக் கட்டுரைக்குள் அவர்கள் வரும் இடத்திலேயே சிறுஅறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. பொ.திருகூடசுந்தரம் பிள்ளைக்கு அப்படியான அறிமுகம் உள்ளது. ஆனால் பலருக்கும் அத்தகைய அறிமுகம் தேவைப்படுகிறது.
சி.சுப்பிரமணியம் அவர்களுக்கே ‘பின்னாளில் அமைச்சராக விளங்கியவர்; பசுமைப் புரட்சியை முன்னெடுத்தவர்’ என அறிமுகம் தேவைப்படும் காலம் இது. கலைக்களஞ்சியத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் பணிக்கு முதலில் அடிபட்ட பெயர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான். ஊதியத்தைப் பற்றியே அவர் கவனமாக இருந்தார் என்பதால் அவரை நியமிக்கவில்லை என்னும் செய்தி நூலில் வருகிறது. பரிசீலிக்கப்பட்ட அவரைப் பற்றிப் போதுமான அறிமுகம் தேவைப்படுகிறது. கலைக்களஞ்சியத்தின் முன்னுரைகளையும் பின்னிணைப்பில் கொடுத்திருக்கலாம்.
கலைக்களஞ்சியத்திற்குப் பிறகு ‘குழந்தைகள் கலைக்களஞ்சியம்’ பத்துத் தொகுதிகளையும் வெளியிட்ட தமிழ் வளர்ச்சிக் கழகம் இந்நாளில் எவ்விதமாக இயங்குகிறது என்பதைப் பற்றி எழுதியுள்ள ‘இப்பொழுதும் அதே கட்டடத்தில் வேறோர் அறையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் எளிய முறையில் இயங்கி வருகிறது’ என்னும் குறிப்பு போதுமானதல்ல. அந்த ‘எளிய முறை’ பற்றிச் சற்றே விவரித்திருக்கலாம். அதே போன்று கல்கி பரிந்துரையின் பேரில் பொருளாளராக நியமிக்கப்பட்டவர் கையாடல் செய்த கதையையும் இன்னும் கொஞ்சம் விரித்திருக்கலாம். இவ்விதம் பின்னிணைப்பையும் சில தருணங்களையும் இன்னும் சற்றே விரிவுபடுத்துவது வாசகருக்கு உதவும். கைக்கு அடக்கமாகத் தொண்ணூறு பக்கங்களில் கிரௌன் அளவில் உருவாகியுள்ள இந்நூலின் அளவும் விரிந்து மகிழ்ச்சி தரும்.
ஒவ்வொரு நூலுக்கும் முன்னுரை, அணிந்துரை முதலியவை அமைகின்றன. பழந்தமிழ் இலக்கியத்தில் பாயிரம் உண்டு. இவற்றில் அந்நூல் உருவானது பற்றிச் சொல்லியிருப்பார்களே, அதற்கு மேல் ஆய்வு செய்து தனியாக ‘நூல் வரலாறு’ எழுத வேண்டிய தேவை என்ன என்று தோன்றலாம். கலைக்களஞ்சியத்திலும் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னுரை உள்ளது. அவை அதிகாரப்பூர்வமானவை. அதிகாரப்பூர்வம் என்றாலே இன்னின்னவற்றைச் சொல்லலாம், இன்னின்னவற்றைச் சொல்லக் கூடாது என்னும் கட்டுப்பாடு வந்துவிடும்.
கலைக்களஞ்சியத் தொகுதிகள் அனைத்துக்கும் தி.சு.அவினாசிலிங்கத்தின் முன்னுரைகள் இருக்கின்றன. முதல் தொகுதியில் நிதி தொடர்பான சில செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார். ‘கலைக்களஞ்சியம் வெளியிடுவதற்கு என்ன செலவாகுமெனக் கணக்கிட்டுப் பார்த்தபோது விரிந்த அளவில் செய்யச் சுமார் 14 இலட்சம் ஆகுமெனத் தோன்றிற்று’ என்று கூறுவதோடு யார் யார் தொகை கொடுத்தார்கள் என்று ஒரு பட்டியலையும் தருகிறார். திருப்பதி தேவஸ்தானம் 25,000/- தந்த செய்தியும் இருக்கிறது. மற்ற தொகுதிகளில் பெரும்பாலும் சம்பிரதாயமாகவே முன்னுரை எழுதியிருக்கிறார்.
முதலில் ஒரு குழு அமைக்கிறார்கள்; அது அப்படியே தொடர்வதில்லை. பின்னர் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. ஏன் மாற்றம் நேர்ந்தது, என்ன பிரச்சினை ஏற்பட்டது என்பது பற்றி அதிகாரப்பூர்வ முன்னுரையில் இருக்காது. மாற்றம் பற்றிய தகவல்கூட முன்னுரையில் இல்லாமல் போகலாம். குழுப் பட்டியலைப் பார்த்துத்தான் நாம் தெரிந்துகொள்ள முடியும். நூல் வரலாற்று ஆய்வு இத்தகைய இடங்களை நோக்கிக் கவனம் செலுத்தும். இவ்வாறு உருவான ஒருநூலுக்கு வந்த எதிர்வினைகளைப் பற்றியும் நூல் வரலாறு பேசும். அதில் உள்ளோடிய அரசியலையும் எடுத்துக் காட்டும்.
இந்நூலில் ‘எதிர்வினைகள்’ என்றே தலைப்பிட்டு ஒருபகுதியைச் சலபதி எழுதியுள்ளார். அதில் திராவிட இயக்கம் இதை எதிர்கொண்ட விதத்தையும் ம.பொ.சி. போன்ற தேசியர்கள் எதிர்கொண்ட விதத்தையும் விவரித்துள்ளார். பெரும்பொருட் செலவில் பல குழுக்கள் இணைந்து உருவாக்கிய இத்தொகுதிகளின் விற்பனை எவ்வாறு இருந்தது என்பதை எப்படி அறிவது? அதையும் சலபதியின் இந்த நூல் பேசுகிறது. கட்டுரையாளர்களுக்குக் கொடுத்த மதிப்பூதியப் பட்டியலும் இதில் இருக்கிறது. நூல் உருவாக்கத்தின் பின்னணி, உருவாக்க நடைமுறைகள், அக்காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஆகியவற்றை எல்லாம் சொல்லும் இந்நூல் கலைக்களஞ்சிய வெளியீட்டிற்குப் பிறகான நிலைமைகளையும் எடுத்துப் பேசுகிறது.
இந்நூலை எழுதுவதற்குரிய தகவல்களைச் சலபதி எப்படித் திரட்டியிருப்பார் என்பதை அறிவதும் முக்கியமானது. எழுத்துச் சான்றுகளே பிரதானம் என்றாலும் அவற்றைக் கண்டடைவது சாதாரணமல்ல. கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கேற்றோர் பட்டியல் பெரிது. அவர்களில் யாரெல்லாம் தம் அனுபவத்தை எழுதியிருக்கிறார்கள் என்று தேட வேண்டும். பின்னணியில் இருந்த அரசியல் ஆளுமைகளின் கருத்துக்களைத் தேட வேண்டும். எல்லாவற்றையும் ஒருசேரக் கொண்டிருக்கும் நூலகம் ஒன்று நம்மிடம் இல்லை.
இந்நூல் உருவாக்கம் அரசாங்கத்தோடு தொடர்புடையது. ஆகவே அரசு நடைமுறை சார்ந்த ஆவணங்களைத் தேடிப் பார்க்க வேண்டும். கலைக்களஞ்சியம் உருவான அலுவலகத்தில் அதன் எச்சங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். தொடர்புடையோர் உயிருடன் இருந்தால் அவர்களைச் சந்திக்க வேண்டும். இல்லாதோர் சந்ததிகளை நாட வேண்டும். இத்தகைய கள ஆய்வுக்குப் பொருளும் காலமும் எவ்வளவோ செலவாயிருக்கும். சிறிய நூலாயினும் இதன் பின்னுள்ள பேருழைப்பு சாதாரணமல்ல. அதனால் தான் இதை உருவாக்க நெடுங்காலம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் இதற்கான தகவல்களை நினைவில் கொண்டிருப்பதும் தொடர்ச்சி கொடுப்பதும் ஆர்வத்தால் நிகழ்வது.
‘கலைக்களஞ்சியத்தின் கதை’யைச் சலபதி எழுதியிருப்பது போல இன்னும் சில அகராதிக் கதைகள் எழுதப்படுவது அவசியம். தமிழ் லெக்சிகன் என்னும் தமிழ்ப் பேரகராதி உருவாக்கம் பல திருப்பங்களும் சுவையான நாடகக் காட்சிகளும் கொண்ட கதையாகும். அதன் உருவாக்கத்தின் முன்னும் பின்னும் பல கதைகள் இருக்கின்றன. ச.வையாபுரிப் பிள்ளை எழுதியுள்ள ‘அகராதி நினைவுகள்’ என்னும் சில கட்டுரைகளே பல்வேறு விஷயங்களை உட்கொண்டிருப்பவை. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட அவ்வகராதி வரலாறு பெரும் நூலாக்கத் தகுதி பெற்றதாகும்.
சாம்பசிவம் பிள்ளையின் ‘மருத்துவ அகராதி’க் கதையை நமக்குக் கொடுத்த சலபதி ‘கலைக்களஞ்சியக் கதை’யையும் தந்திருக்கிறார். இத்தகைய நூல்களை அவர் இன்னும் எழுத வேண்டும் என வேண்டுகோள் வைக்கலாம். ஒன்றை எழுதுபவரிடமே இதைச் செய், அதைச் செய் என்று சுமையை ஏற்றிச் சொல்வது வாடிக்கையாக இருக்கிறது. ஆகவே இதைப் பின்பற்றி இளைய தலைமுறையினர் பலவற்றை எழுதலாம் என்பதே என் எதிர்பார்ப்பு.
—–
பயன்பட்ட நூல்கள்:
- ஆ.இரா.வேங்கடாசலபதி, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை, 2018, நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
- சுந்தர சண்முகனார், தமிழ் அகராதிக் கலை, 1965, புதுச்சேரி: புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்.
- வ.ஜெயதேவன், தமிழ் அகராதியியல் வளர்ச்சி வரலாறு, 1985, சென்னை: ஐந்திணைப் பதிப்பகம்.
—– 22-12-24
(காலச்சுவடு, பிப்ரவரி 2019 இதழில் வெளியான மதிப்புரையின் விரிவு.)
Add your first comment to this post