கவிஞர் சக்திக்கனல் என்று அறியப்படும் பழனிச்சாமி (1931 : 30-08-2024) அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கல்வெட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர். வானம்பாடி குழுவில் ஒருவர்.
போட்டி பொறாமை சிறுமதி கொண்டிந்தப்
பொம்மைகள் போட்டிடும் ஆட்டங்கள் பார்.
…
மோதி மிதித்துத் தம் மண்டை எலும்பை
முறித்துக் களிக்கும் வெறிச்செயல் பார்
சாதிமதம் மொழி பேதக் கயிற்றினில்
தான் அசைந்தாடும் அதிசயம் பார்.
என்பது போன்ற கவிதைகள் எழுதியிருக்கிறார். வானம்பாடிகளின் கவிதைப் போக்கைப் பிரதிபலிக்கும் வகைக் கவிதைகளுக்குச் சான்று காட்டும்போது சக்திக்கனல் எழுதிய ‘ஒரு ரோடு ரோலரின் பவனி’ என்பதை வல்லிக்கண்ணன் உள்ளிட்ட புதுக்கவிதை வரலாற்றாசிரியர்கள் சுட்டுகின்றனர். இத்தகைய கவிதைகளைக் கொண்ட அவரது தொகுப்பு நூல் ‘கனகாம்பரமும் டிசம்பர் பூக்களும்’ என்பதாகும். ‘சக்திக்கனல் கவிதைகள்’ என்னும் தொகுப்பு ஒன்றும் உண்டு.
1988ஆம் ஆண்டு கோவை, பூசாகோ கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை படிக்க நான் சேர்ந்தபோது ஈரோட்டில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியராக இருந்த கவிஞர் முருகுசுந்தரம் ‘கோவையில் சக்திக்கனல் இருக்கிறார். அவரைச் சந்தியுங்கள்’ என்று சொன்னார். வானம்பாடி இயக்கத்தவராக அடையாளம் பெற்ற பலரும் அக்காலத்தில் கவியரங்கக் கவிஞர்களாக மாறியிருந்தனர். பட்டிமன்றம் போல அப்போது கவியரங்க வடிவமும் பிரபலமாக இருந்தது. ஆனால் சக்திக்கனலை எந்தக் கவியரங்கத்திலும் பார்க்க முடிந்ததில்லை. அவரை நேரில் சந்தித்த போதுதான் அதற்கான விடை தெரிந்தது. தோற்றத்திலும் பேச்சிலும் சக்தியும் இல்லை; கனலும் இல்லை. பெருத்த ஏமாற்றம்.
பொள்ளாச்சி மகாலிங்கத்தின் ஏபிடி பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் சக்திக்கனல் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவிநாசி சாலையிலிருந்து காந்திபுரம் செல்லும் பிரதான சாலை அலுவலகத்தில் சிறுமேஜைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அவரைச் சந்தித்து அறிமுகம் கொண்டேன். மிகவும் மென்மையான குரல் உடையவர் அவர். மேஜைக்கு அந்தப் பக்க நாற்காலியில் உட்கார்ந்து அவர் பேசியதை மேஜை மேல் கையூன்றித் தலையை முன்நீட்டி வைத்துக்கொண்டுதான் என்னால் கேட்க முடிந்தது. அவரால் எப்படிக் கவியரங்கத்தில் முழங்க முடியும்?
கவியரங்கக் கவிஞர்களில் பெரும்பாலோர் பள்ளியிலோ கல்லூரியிலோ ஆசிரியர்களாக இருந்தனர். அவர்களுக்குப் பயணம் செய்வதற்குப் போதுமான விடுமுறை கிடைத்திருக்கும். தனியார் நிறுவனத்தில் எழுத்தர் நிலைப் பணியில் இருந்த சக்திக்கனலுக்கு அதற்கான வாய்ப்பும் அரிதுதான். கவியரங்கக் கவிஞராக அவர் வெற்றியடையவில்லை எனினும் அதில் வாசித்த கவிதைகளைத் தொகுத்து ‘நீங்கள் கேட்டவை’ என நூலாக்கியுள்ளார். அவருடனான உரையாடலும் எனக்குச் சுவாரசியமாக இல்லை. அதனால் அவரைத் தொடர்ந்து சந்திக்கச் செல்லவில்லை.
கவிதையில் அவர் சாதனை என்று எதையும் சொல்ல முடியாது. ஆனால் ‘அண்ணன்மார் சுவாமி கதை’யின் பதிப்பாசிரியர் (முதற்பதிப்பு 1971) என்பது அவரது சாதனைதான். நாட்டுப்புறக் கதைப்பாடல் ஒன்றைப் பதிப்பிப்பதற்கான முறையியலைப் பின்பற்றிய பதிப்பு அல்ல. எனினும் அக்கதைப்பாடல் அச்சில் வருவதற்கு அவரே காரணம். இன்று வரைக்கும் வேறொரு பதிப்பு வரவில்லை. புலவர் செ.இராசுவிடம் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது ‘அண்ணன்மார் சுவாமி கதை’யின் சில ஓலைச் சுவடிகள் தம்மிடம் இருப்பதாகவும் பதிப்பிக்கும் எண்ணம் உள்ளதாகவும் சொன்னார். ஆனால் ஏனோ அவர் பதிப்பிக்கவில்லை. சக்திக்கனல் பதிப்பே நிலைபெற்றதாக மாறிவிட்டது காரணமாக இருக்கலாம்.
சக்திக்கனல் பதிப்பில் உள்ள குறைகள் பற்றி ஏற்கனவே ஒருகட்டுரையும் எழுதியுள்ளேன். அண்ணன்மார் சுவாமி கதையின் உடுக்கடிப் பாடல் வடிவத்தைப் பதிவு செய்தவரான பிருந்தா பெக் ‘சக்திக்கனல் தமது கருத்துக்கேற்ப மாற்றங்கள் செய்துவிட்டார்’ என்று குற்றம் சாட்டுகிறார். அதையெல்லாம் விவாதிக்க இன்னொரு பதிப்போ சுவடியோ யாரிடமும் இல்லை என்பது துரதிர்ஷ்டமே. பிச்சன் என்பவர் எழுதியதாக அறியப்படும் இதுவொன்றே அச்சில் வந்தது. கொங்கு நாட்டுப்புற நிகழ்த்து கலை வடிவமான உடுக்கடிக் கதைப்பாடலாகப் பாடியோர் பலர். அவற்றில் சில பதிவுகள் ஒலி வடிவில் இன்றும் கிடைக்கின்றன. சுவடியிலிருந்து எடுத்துப் பதிப்பித்த பணி சக்திக்கனல் செய்தது மட்டுமே.
நமது நாட்டுப்புறக் கதைப்பாடல்களில் இருக்கும் பிரச்சினை சாதிதான். அதன் கதைத் தலைவன் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவனாக இருக்கும்போது அச்சாதியினர் தமது பெருமையை நிலைநாட்டும் சான்றாக அக்கதைப்பாடலைத் தன்வயப்படுத்திக் கொள்கின்றனர். அதுவும் அச்சாதி ஆதிக்க நிலையினதாக இருந்தால் அவ்வளவுதான். ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோர் அதன் பெருமைகளையும் புகழையும் எடுத்துப் பேச வேண்டுமே தவிர வேறு எவ்வகையிலும் ஆய்வுக்கு உட்படுத்த இயலாது. அண்ணன்மார் கதைக்கு நேர்ந்த ஆபத்தும் அதுதான்.
இக்கதைக்கு உடுக்கடிப் பாடல், கூத்து, அம்மானை உள்ளிட்ட வடிவங்கள் இருக்கின்றன. அவற்றுக்கும் ‘அண்ணன்மார் சுவாமி கதை’ பதிப்புக்கும் பல வேறுபாடுகள் உண்டு. பெயரிலேயே வேறுபாடு தொடங்கிவிடுகிறது. மக்கள் வழக்கில் ‘குன்னடையான் கதை’ என்றுதான் வழங்கும். அதையே ‘குன்றுடையான் கதை’ என்று எழுத்து வழக்கில் சொல்கிறார்கள். எழுத்திலக்கிய வழக்குக்கு வரும்போது ‘அண்ணன்மார் சுவாமி கதை’ என்றாகிவிடுகிறது. ‘சாமி’கூட அல்ல; ‘சுவாமி.’ இன்றைய பதிப்புகளில் ‘பொன்னர் – சங்கர் முழுவரலாறு’, ‘கொங்கு நாட்டு வேளாளர் காவியம்’ என்னும் துணைத் தலைப்புகள் சேர்ந்திருக்கின்றன. இத்தகைய மேல்நிலையாக்கக் கூறுகள் அக்கதையைத் தன்வயப்படுத்திக்கொள்ளப் பெரிதும் உதவுகின்றன.
1971முதல் 2024வரை வெளியாகியுள்ள பதிப்புகளை ஒட்டுமொத்தமாக நோக்கினால் நேர்ந்திருக்கும் மாற்றங்களை அறியலாம். நாட்டுப்புறக் கதைப்பாடல் ஒன்று கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளில் ‘வேளாளர் காவியம்’ என்னும் நிலையை எய்தியிருப்பது எளிதாகக் கடந்து செல்லும் விஷயமல்ல. அதன் பின்னணியில் தமிழ்ச் சமூக வரலாறு புதைந்திருக்கிறது. தன்வயமாக்கி நிலைப்படுத்த உதவும் வகையில் பலரது முன்னுரைகள், அணிந்துரைகள், ஆய்வுரைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்கள் நூலில் சேர்ந்துள்ளன. ஒவ்வொரு பதிப்பிலும் சேர்த்தவை, நீக்கியவை எல்லாம் முக்கியமாகக் காண வேண்டியவை.
நாட்டுப்புறக் கதைப் பாடல்களின் பதிப்பு வரலாறு, அவை நிலைகொண்ட விதம், அவற்றைச் சாதி தன்வயப்படுத்திக் கொண்ட நுட்பம், இன்றும் அவற்றுக்கு இருக்கும் சமகால மதிப்பு ஆகியவை பற்றி விரிவான ஆய்வை நிகழ்த்தினால் அதற்கு ‘அண்ணன்மார் சுவாமி கதை’ தெளிவான சான்றாகத் திகழும். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் அத்தகைய ஆய்வை நிகழ்த்த முடியும் என்னும் நம்பிக்கை எனக்கு இல்லை. பிருந்தா பெக் போல யாரேனும் வெளிநாட்டிலிருந்து வந்து தரவுகளைத் திரட்டிக்கொண்டு போய் வெளிநாட்டிலிருந்தே ஆய்வு நூலை எழுதினால் உண்டு.
‘அண்ணன்மார் சுவாமி கதை’ இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டிருக்கிறது. வேறு எந்த நாட்டுப்புறக் கதைப்பாடலுக்கும் கிடைக்காத விற்பனை வாய்ப்பு இது. கலைஞர் கருணாநிதி ‘பொன்னர் சங்கர்’ என நாவலாக்கினார். அதுவே பின்னர் திரைப்படமானது. இக்கதையை உரைநடை வடிவிலும் ஆய்வாகவும் எழுதிய நூல்கள் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேலிருக்கும். வேறு எந்தக் கதைப்பாடலுக்கும் கிடைக்காத வாழ்வு இது. சக்திக்கனலே அக்கதையை உரைநடை வடிவில் ‘மசைச்சாமி குன்றுடையான்’ என்றும் ‘அண்ணன்மார் சுவாமி கும்மி’ என்றும் எழுதினார். ‘தீரன் சின்னமலை’ பற்றியும் ஒருநூல் எழுதியிருக்கிறார்.
வானம்பாடி இயக்கப் புரட்சிக் கவிகளில் ஒருவராக இருந்து ‘அண்ணன்மார் சுவாமி கதை’ மூலம் நாட்டுப்புறக் கதைப்பாடல் பதிப்பாசிரியராக அடையாளம் பெற்று அறிந்தோ அறியாமலோ பிற்காலத்தில் சாதி வளையத்துக்குள் அடைபட்டுத் தம்மைச் சுருக்கிக் கொண்டவர் எனச் சக்திக்கனலை மதிப்பிடலாம். எப்படியும் ‘அண்ணன்மார்’ மூலம் அவர் பெயர் விளங்கும். அவருக்கு அஞ்சலி.
—– 26-10-24
ஒரு படைப்பாளியை உங்கள் வழியாக இன்றுதான் அறிகிறேன். நன்றி ஐயா!