2021இல் திமுக அரசு அமைந்த பிறகு மாவட்டம் தோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஏதோ ஒருமாதத்தில் பத்து நாள், பன்னிரண்டு நாள் இந்தக் கண்காட்சி நடத்த வேண்டும் என அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. அறிவுப் பரவல் கொண்ட சமூகமாக மக்கள் உருவாவதற்குப் புத்தகங்களின் பங்கு பெரிது. புத்தகங்களை வாங்குவதற்குப் பெருநகரத்தில் எங்கோ இருக்கும் கடையைத் தேடிச் செல்ல வேண்டிய காலம் ஒன்றிருந்தது. இப்போது அப்படியல்ல. மக்கள் இருக்குமிடம் தேடிப் புத்தகங்கள் வருகின்றன. குடும்பத்தோடு வந்து கடைகளைப் பார்வையிட்டுப் புத்தகங்களை வாங்கிச் செல்லும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
இவ்வாண்டு சேலம் புத்தகக் கண்காட்சி நவம்பர் 27 முதல் டிசம்பர் 9 வரை நடைபெற்று வருகிறது. கண்காட்சி அரங்கில் அன்றாடம் உரைகள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது வழக்கம். உரையரங்கைத் தொழில்முறைப் பேச்சாளர்கள், பட்டிமன்ற நகைச்சுவைத் துணுக்காளர்கள் ஆக்கிரமித்துக் கொள்வதைப் பற்றி எழுத்தாளர்களிடம் இருந்தும் இலக்கிய ஆர்வலர்களிடம் இருந்தும் முணுமுணுப்புகள் எழுந்தன. சமூக ஊடகங்களில் காட்டமான குரல்களும் வந்தன. எனினும் பெரும்பாலான மாவட்டங்களில் மாற்றம் ஏதுமில்லை. கண்காட்சியை ஏற்பாடு செய்யும் அதிகாரிகளுக்கு வெகுஜனப் பேச்சாளர்களைத்தான் தெரியும். புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தால் அல்லவா எழுத்தாளர்களைத் தெரியும்?
தலை சரியாக இருந்தால் வால் நுனி வரைக்கும் நல்லதாக மாறிவிடும் என்பது நிர்வாக அமைப்பின் அடிப்படை. வாசிப்புப் பழக்கம் கொண்ட ஆட்சியர் அமையும் மாவட்டத்தில் புத்தகக் கண்காட்சி சிறப்புற நடைபெறுகிறது. உரையாற்ற எழுத்தாளர்கள் அழைக்கப்படுகின்றனர். 2022ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டப் புத்தகக் கண்காட்சி அரங்கில் பேசுவதற்கு என்னை அழைத்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அம்மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன்குமார் ஜாதவத் என் நூல்களை ஆங்கிலத்தில் வாசித்தவர் என்பதை அறிந்தேன். வேறு மாநிலத்தைச் சேர்ந்த அவருக்குப் புனைவுகளை வாசிக்கும் பழக்கம் இருந்ததால் என்னை அறிந்திருக்கிறார். அவரே என்னை அழைக்கும்படி சொன்னதாகக் கேள்விப்பட்டு அந்நிகழ்வுக்கு மகிழ்வுடன் சென்று வந்தேன்.
அதுபோல இப்போது சேலம் மாவட்ட ஆட்சியராக இருக்கும் பிருந்தா அவர்கள் நல்ல இலக்கிய வாசகர். ஆகவே சேலத்தைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்களைக் கொண்ட குழு அமைத்து நிகழ்வுகள் சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்திருக்கிறார். நாஞ்சில் நாடன், பவா செல்லதுரை, யுவன் சந்திரசேகர், ஹரிகிருஷ்ணன், சித்ரா பாலசுப்பிரமணியம், வெ.இறையன்பு, விஷ்ணுபுரம் சரவணன், ரேவதி உள்ளிட்ட எழுத்தாளர்களே சொற்பொழிவாளர்கள். இதுவரைக்கும் எந்த மாவட்டக் கண்காட்சியிலும் இத்தனை எழுத்தாளர்கள் பேசியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
உரையாளர்களில் ஒருவராக நானும் அழைக்கப்பட்டிருந்தேன். 04-12-24 அன்று என் உரை. ‘புத்தகமே பெருந்துணை’ எனத் தலைப்புக் கொடுத்திருந்தேன். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் அடங்கிய கொங்குப் பகுதி பொருளாதார ரீதியாக வலுப் பெற்றுள்ளது. எல்லாவற்றையும் தொழிலாகக் காணும் பார்வையால் கல்வியும் இங்கே அப்படித்தான் இருக்கிறது. பொதுவான வாசிப்புப் பழக்கம் பற்றிய உணர்வு சிறிதும் இல்லை. ஆகவே சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்ல முயல்வது என் வழக்கம். அதையொட்டியே தலைப்புக் கொடுத்திருந்தேன்.
நிகழ்வுக்குப் பொறுப்பாளராக இருந்த ஜெயந்தி, கான், சிவபிரசாத் ஆகியோர் என்னுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். பழைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். நாமக்கல்லில் இருந்து அதிகபட்சம் ஒருமணி நேரப் பயணம். எனக்கு என்ன வசதி வேண்டியிருக்கிறது? நான் நேராக அரங்கிற்கு வந்து பேசிச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டேன். வெளியூரில் இருந்து வரும் எழுத்தாளர்களுக்கு உரிய வசதிகளைச் செய்து தந்திருந்தனர்.
கல்லூரி மாணவர்கள் தினமும் முறை வைத்து வருவதால் அவர்கள் வசதிக்காக மாலை ஐந்து மணிக்கு பேச்சரங்கம் தொடங்கி ஆறு மணிக்கெல்லாம் முடிந்துவிடும்படி ஏற்பாடு. அதன் பிறகு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள். 4.50க்கு அரங்கிற்கு ஆட்சியர் வந்து விடுகிறார். வரவேற்புரை, தலைமையுரை, வாழ்த்துரை எனப் பெரும்பட்டியல் போடும் தமிழ்ச் சமூக மேடைச் சம்பிரதாயம் எதுவும் இல்லை. உள்ளூர் இலக்கிய ஆர்வலர் ஒருவர் எழுத்தாளரை அறிமுகப்படுத்தி ஐந்தே ஐந்து நிமிடம் பேசுகிறார். அதன் பிறகு எழுத்தாளருக்கு உரிய நேரம் முக்கால் மணியிலிருந்து ஒருமணி நேரம். உரை முடிந்ததும் ஆட்சியர் மேடைக்கு வந்து நினைவுப்பரிசு ஒன்றை வழங்குகிறார். உள்ளூர் எழுத்தாளர் ஒருவரின் நூல் வெளியீடு. எல்லாம் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடுகிறது.
வெளியூரில் இருந்து உரையாற்றுவதற்கு என்று தயாரிப்போடு வரும் ஒருவருக்கு உரிய நேரம் கொடுப்பது பெரிய விஷயம். நான் மூன்றரை மணிக்கெல்லாம் சென்றுவிட்டேன். புத்தகக் கடைகளைப் பார்க்க நேரம் கிடைத்தது. காலச்சுவடு பதிப்பகத்திற்கு வழக்கம் போலச் சென்றேன். பின்னர் தாயம்மாள் அறவாணனின் அன்பில் கொஞ்ச நேரம் திக்குமுக்காடிப் போனேன். இந்த வயதிலும் கண்காட்சிக்கு வந்து கடை போட்டுத் தம் நூல்களையும் தம் கணவர், மருமகள் ஆகியோரின் நூல்களையும் விற்பனை செய்யும் அவரது உற்சாகம் கண்டு மகிழ்ந்தேன்.
மகடூஉ முன்னிலை, அவ்வை களஞ்சியம் முதலிய அருமையான தொகுப்பு நூல்களைச் செய்திருக்கிறார். இப்போது பழந்தமிழ்ப் பெண் புலவர்கள் பற்றிய இருநூல்களை வெளியிட்டுள்ளார். பெண்ணின் பெருந்தக்கது இல், இலட்சியப் பெண்டிர் ஆகிய நூல்கள். அவற்றுக்குத் தொகை பெற மறுத்தார். வற்புறுத்திய பிறகு அடையாளமாகக் குறைந்த தொகையைப் பெற்றுக் கொண்டார். நம் பதிப்பகத் தோழர் இவள்பாரதியைச் சந்தித்தேன். விடியல் பதிப்பகம், எதிர் வெளியீடு எனச் சில கடைகளில் உலவினேன்.
இடையில் சேலம் எழுத்தாளர்கள் சாஹிப் கிரான், அகச்சேரன் உள்ளிட்ட நண்பர்களைச் சந்தித்துப் பேச முடிந்தது. வாசகர்கள் சிலரிடம் பேசியும் அவர்கள் வாங்கி வந்த நூல்களில் கையொப்பம் இட்டும் கொடுத்தேன். தோழர் ஷேக் அப்துல்லா என்னை அறிமுகப்படுத்திப் பேசினார். என் நூல்களை வாசித்திருந்த அனுபவம் அவர் பேச்சில் தெரிந்தது. ‘புத்தகமே பெருந்துணை’ என்னும் தலைப்பில் ஐம்பது நிமிடம் உரையாற்றினேன். கடைகளிலும் சரி, அரங்கிலும் சரி கூட்டம் குறைவுதான். பெண்கள் பள்ளி, கல்லூரிகளில் இருந்து வந்திருந்தோர் அடுத்து நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிகளில் தம் கவனத்தைக் குவித்திருந்தனர். எனினும் கேட்பதற்கென்று நூறு பேராவது இருந்தனர். உரை முழுவதையும் ஆட்சியர் இருந்து கேட்டார்.
நம் மரபில் கல்விக்குப் பெரும் முக்கியத்துவம் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள், இடைக்காலத்தில் கல்வியில் பின்னடைவு ஏற்பட்ட சூழல், பத்தொன்பதாம் நூற்றாண்டில் மீண்டும் கல்வி பற்றிய எண்ணம் பெருகியது ஆகியவற்றை விவரித்தேன். தொடக்க கால நாவல்களில் பெண் கல்வி பற்றிய செய்திகளை எடுத்துக் காட்டினேன். ‘பெண்கள் கல்வி கற்றால் சோர புருஷர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள்’ என்றெல்லாம் காரணம் சொல்லப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அனைத்துச் சாதியினருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது.
பெருந்தலைவர் காமராசர் பள்ளிகளைத் திறந்தார். அதன் பின் வந்த அறிஞர் அண்ணா, கலைஞர் உள்ளிட்டோரின் திமுக ஆட்சியில் உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. இன்னும் உயர்கல்விக்கு முதல் தலைமுறையாகக் கற்க வருவோர் உள்ளனர். அடிப்படைக் கல்வி பெறுவதற்கே இத்தனை காலம் எடுத்துக்கொண்டதால் வாசிப்புக்கு நம் சமூகம் இன்னும் போதுமான அளவு பழகவில்லை. படிப்புக்கும் வாசிப்புக்கும் வேறுபாடு உண்டு. படிப்பு இருந்தால்தான் அடுத்த கட்டமான வாசிப்புக்கு நகர முடியும். இப்போது வாசிப்பை நோக்கி நாம் நகர வாய்ப்பான காலம். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் கருத்துக்களை முன்வைத்துப் பேசினேன். வாசிப்பு எவற்றை எல்லாம் வழங்கும் என்பதைச் சொல்லிப் ‘புத்தகமே பெருந்துணை’ என்னும் நிலைக்கு நாம் வரும் காலம் இது என முடித்தேன்.
நிகழ்வில் எழுத்தாளர் கார்த்தி டாவின்சி எழுதிய ‘வாழை’ குறுநாவல் வெளியீடு நடந்தது. கூடுதல் ஆட்சியராக லலித் ஆதித்ய நீலம் இருக்கிறார். 2016இல் ஹைதராபாத் பல்கலைக்கழகக் கருத்தரங்கு ஒன்றிற்கு நான் சென்ற போது அங்கு மாணவராக இருந்திருக்கிறார். என் நூல்களை ஆங்கிலத்தில் வாசித்துள்ளார். நண்பர்களுடன் பேசி முடித்து வரும் வரை காத்திருந்த அவருடன் சில நிமிடங்கள் பேசினேன். அதிகாரிகள் வாசிப்பாளர்களாக இருப்பது சமூகத்திற்கு நல்லது.
அதன் பின் புக்ஸ் ஃபார் சில்ரன் அரங்கிற்கு உதயசங்கரின் ‘சோசோவின் விசித்திர வாழ்க்கை’ நூல் வெளியீட்டுக்குச் சென்றேன். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் செங்கோட்டுவேல் அதற்கு அழைத்திருந்தார். நூலை வெளியிட்டுப் பேசியவர் ஐந்தாம் வகுப்பு மாணவி பிரியதர்ஷினி. உள்ளிருந்து ஒரு கதையை எடுத்துச் சொல்லி நன்றாகப் பேசினார். உதயசங்கரின் சிறுவர் இலக்கியம் பற்றி ஓரிரு நிமிடம் பேசினேன். அரங்கிற்கு வெளியே கிட்டத்தட்ட ஐம்பது பேர் கூடியிருந்தனர்.
புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளருக்குக் கிடைக்கும் பேறு வாசகச் சந்திப்பும் அவர்களிடம் பேசுவதும்தான். அதற்குச் சேலம் புத்தகக் காட்சி வழியேற்படுத்திக் கொடுத்தது. உரை முடிந்தவுடன் நூல் பிரதிகளில் எழுத்தாளர் கையொப்பம் இடுவதற்குத் தனியிடம் ஏற்படுத்தித் தரலாம் என்று என் ஆலோசனையை ஜெயந்தியிடம் சொன்னேன். அடுத்த ஆண்டு முயல்கிறோம் என்றார். இப்போது கண்காட்சியில் புத்தகக் கடைகள் கிட்டத்தட்ட இருநூறு இருக்கும். அவற்றில் பதிப்பகங்களின் நேரடிக் கடைகள் முப்பது இருக்கலாம். சேலம் மக்கள் ஆதரவு வழங்கினால் பதிப்பகங்கள் வந்து நேரடியாகக் கடை போட விரும்புவர். அடுத்தடுத்த ஆண்டுகளில் அதை நோக்கிச் சேலம் புத்தகக் கண்காட்சி நகர வேண்டும்.
—– 08-12-24
Add your first comment to this post