இப்போது எதற்கு இந்தச் சோடாப் புராணம்? சமீபத்தில் பழைய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் வந்த காட்சிகளும் ஒருபாடலும் என்னுள் சோடா நினைவுகளைக் கிளறிவிட்டன.
1950, 60களில் வெளியான திரைப்படம் எதையாவது அவ்வப்போது பார்ப்பது என் வழக்கம். அப்படி எதேச்சையாகத் தேர்வு செய்த படம் ‘நம்ம வீட்டு லட்சுமி.’ 1966ஆம் ஆண்டு பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய படம். அக்காலத்தில் ‘குடும்பப் படம்’ என்று வரையறை செய்வார்களே அப்படிப்பட்ட படம். பார்க்கத் தொடங்கியதும் கதை முழுவதும் பிடிபட்டுவிட்டது. பணக்காரத் தந்தை. பொறுப்பற்றுப் பணத்தை வாரியிறைக்கும் மனைவி, மகன்கள், மகள். ஏதோ ஒருதந்திரம் செய்து அவர்களை எல்லாம் திருத்தப் போகிறார் என்று தொடக்கத்திலேயே ஊகித்துக்கொள்ள முடிகிறது.
1940களில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய போதே பெருந்துன்பத்தை அனுபவிக்கும் பெண் பாத்திரம் ஏற்றவர் எம்.வி.ராஜம்மா. அம்மாவாக வேடம் ஏற்ற பின்னர் துயரமுகம் அவருக்கு நிரந்தரமாகிவிட்டது. பண்டரிபாய்க்குக்கூட இளமையில் துள்ளலான பாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படி ஏதும் அமையாதவர் எம்.வி.ராஜம்மா. இப்படத்தில் அலட்டல் மிக்க பணக்காரத் தாயாக வருகிறார். அதற்கேற்ற வகையில் சிகையலங்காரம், உடைகள். அவரைச் சோகமாகவே பார்த்திருந்ததால் சட்டென்று இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கொஞ்ச நேரம்தான். ஏற்க மனம் தயாராவதற்குள் அவரது வழக்கமான முகம் திரும்பிவிடுகிறது. பணக்கார ஜம்பம் எப்படிப் பொருந்துகிறது என்பதைக் காணும் ஆவலில் கொஞ்ச நேரம் பார்த்ததும் நாகேஷ் பாத்திரம் ஈர்க்க முழுப்படத்தையும் கண்டு களித்தேன்.
நாகேஷ் நாடகப் பித்துப் பிடித்தவர். அதற்காக ஏராளம் செலவு செய்யும் கிறுக்கர். ‘ஆல்ரவுண்டு அமெச்சூர் தியேட்டர்’ என்று பெயர் வைத்து நாடகக் கம்பெனி நடத்துகிறார். ‘கதாநாயகன்: ராஜு, டைரக்டர்: ராஜு, மியூஸிக் டைரக்டர்: ராஜு, டான்ஸ் டைரக்டர்: ராஜு, பிராப்ரைட்டர்: ராஜு’ என எல்லாவற்றுக்கும் தன் பெயரையே போட்டுக்கொள்பவர். சொல்லத்தக்க நகைச்சுவைக் காட்சி ஏதுமில்லை. சிரிப்பு வரவில்லை. அவருக்கு நாடகப் பித்து மட்டுமல்ல, சோடாப் பித்தும் உண்டு. அதுதான் என்னை ஈர்த்த விஷயம்.
அறிமுகக் காட்சியில் நாடக ஒத்திகை நடக்கிறது. அதில் வீரவசனம் பேசிவிட்டு ‘மூச்சு வாங்குது. கொண்டாயா ஒரு சோடா’ என்கிறார். ‘சோடா… அது ஒரு கேடா… போடா’ என்கிறார் அருகில் இருக்கும் நடிகர். நாகேஷ் வரும் பெரும்பாலான காட்சிகளில் சோடா குடிப்பதோ சோடாவைப் பற்றிப் பேசுவதோ வருகிறது. சோடாக்கடையில் கடன் வாங்கிக் கணக்கு வைத்திருக்கிறார். சோடாக்கடையில் எண்ணூறு ரூபாய் கடனாம். ஓரிடத்தில் ‘சோடாக் கடக்காரன் என்னப் பாடாப் படுத்தறான். குடுக்கலன்னா ஓடா நொறுக்கிருவான்’ என்பது போல சோடா, போடா என எதுகை போட்டு எழுதிய வசனப் பகுதிகளும் உண்டு.
படத்தின் பிற்பகுதியில் தன் பங்காக வந்த பணத்தை எல்லாம் நாடகப் பித்தினால் இழந்து சோற்றுக்கே வழியில்லாமல் வேலை தேடுகிறார். சோடா விற்கும் வேலை கிடைக்கிறது. கைவண்டியில் சோடா அடுக்கிய கிரேடுகளை வைத்துக்கொண்டு இழுத்துச் சென்று கடைகளுக்கு விநியோகிக்கிறார்; பொதுமக்களுக்கும் விற்கிறார். அப்போது அவருக்கு ஒருபாடல். கூவிக்கூவிச் சோடா விற்பனை செய்யும் பாடல். தமிழ்த் திரைப்படங்களில் பொருள்களை விற்போர் பாடும் பாடல்கள் பலவுண்டு. ‘எலந்தப்பயம்’, ‘எளநி’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலம். எம்.ஜி.ஆர். மாறுவேடம் போட்டுத் தாயத்தும் வளையலும் விற்றிருக்கிறார். பூ விற்கும் பாடல்கள் பலவுண்டு.
இந்த ‘விற்பனைப் பாடல்’ பட்டியலில் சோடாவை நான் வைத்திருக்கவில்லை. சோடாவுக்குப் பாடல் எதுவும் இல்லை என்றே நினைத்திருந்தேன். அபூர்வமாக இப்படத்தில் கணீர்க் குரலில் சீர்காழி கோவிந்தராஜன் சோடாப்புகழ் பாடுகிறார். அதுதான் ‘சோடா சோடா சோடா சோடா’ என்று தொடங்குகிறது. கண்ணதாசன் எழுதியிருக்கிறார். கோலிசோடாவில் அடைத்திருக்கும் கோலிக்குண்டை விரலால் அழுத்தித் திறக்கும் போது வரும் சத்தத்தை இடையிடையே வைத்து எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார்.
ஜாலியான அந்தப் பாடல் :
சோடா சோடா சோடா சோடா
சூடான சூடா காப்பி எதுக்கு
இந்த ஜோரான சோடா சாப்பிடு
தீராத தீனி சாப்பிட்ட பின்னே ஜீரணமாகும் சாப்பிடு (சோடா)
கால்பந்தாட்டம் ஆடிடும் போது கையோடு சோடா கொண்டு போ
கச்சேரி வித்வான்கள் கரகரக் குரலுக்குக் கமகம சோடா போடுங்கோ
ஊர்வலம் போகும் தொண்டர்கள் எல்லாம் ஒரிஜனல் சோடா போடுங்கோ
உற்சாகம் இல்லாத பேச்சாளர் எல்லாம் ஒருதரம் போட்டுப் பாருங்கோ (சோடா)
ஆயிரத்து எண்ணூத்திப் பதினேழில் இந்த அதிசய சோடா வந்தது
அப்போது இதன் விலை ஆறரை ரூபாய் அடிக்கடி கடையிலும் கிடைக்காது
இப்போது ஒருடஜன் ஒருரூபாய் என ஏழையைத் தேடி வந்தது
கல்யாண வீட்டிலும் காட்டிலும் மேட்டிலும் கடைகடையாகக் குவிந்தது (சோடா)
மிக எளிமையாக இப்பாடலைக் கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ‘சூடான சூடா காப்பி எதுக்கு? இந்த ஜோரான சோடா சாப்பிடு’ என்கிறார். காப்பிக்குப் பதிலீடாகச் சோடா அமையாது. இரண்டும் வேறு வேறு தன்மை கொண்டவை. காப்பி குடிக்கும் வழக்கம் பரவலாகியிருந்த தருணத்தில் இப்படி எழுதியிருக்கிறார் போல. விளையாடிக் களைத்தவர்களுக்குச் சோடா, கச்சேரி பாடுபவர்களுக்குச் சோடா, ஊர்வலம் செல்லும் தொண்டர்களுக்குச் சோடா, பேச்சாளர்களுக்குச் சோடா எனப் பட்டியல் முதல் சரணத்தில் நீள்கிறது. அதற்கேற்ற வகையில் காட்சிகளும் வைத்துள்ளனர்.
இரண்டாம் சரணத்தில் சோடாவின் வரலாற்றுச் செய்தியைத் தருகிறார். 1817இல் சோடா வந்தது என்கிறார். எனக்கு அந்த வரலாறு தெரியாது. இனித் தேடிப் படிக்க வேண்டும். அப்போது அதன் விலை ஆறரை ரூபாயாம். இருநூறு ஆண்டுகளுக்கு முன் அது பெருந்தொகை. பவுனைவிட அதிகமாக இருந்திருக்கும் போல. 1966இல் சோடா சாதாரண பானமாகி ஒருடஜன் ஒருரூபாய் விலைக்கு வந்துவிட்டது. அதுதான் நான் பிறந்த ஆண்டு. எனக்கு ஐந்தாறு வயதானபோது 1970களில் சோடாவின் விலை பதினைந்து பைசா. அதுதான் என் மனதில் பதிந்திருக்கும் முதல் விலை. கடைகளுக்குப் பத்துப்பைசா விலைக்கு அப்பா கொடுப்பார். ஐந்து பைசா கடைக்காரர்களுக்கு லாபமாகக் கிடைக்கும். ஏழை எளியவர்களுக்கும் கல்யாணம் உள்ளிட்ட விசேஷங்களிலும் கிடைக்கும்படி சோடா பரவலாகிவிட்ட தகவலையும் பாடலில் கண்ணதாசன் வைத்திருக்கிறார்.
இப்படத்தைப் பி.ஆர்.பந்துலு முதலில் கன்னடத்தில் எடுத்துள்ளார். அப்படத்திலும் நாகேஷ் போன்ற ஒருநடிகர். சோடாப் பாடலும் உண்டு. அது வேறு மெட்டு. பாடல் வரிகளும் வேறு. அதை மொழிபெயர்த்துப் பார்த்தால் கர்நாடகத்தில் சோடா பற்றிய பார்வை என்னவாக இருந்தது என அறிய முடியும்.
இந்தச் சோடாப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கும் சோடா குடிக்கும் ஆசை வரும்!ன்
பாடல் இணைப்பு: https://www.youtube.com/watch?v=aGHCUsIE2jM
—– 13-05-25
நேற்று நான் கலந்து கொண்ட சீர் விருந்தில் மதிய உணவுக்கு அசைவ ஐட்டங்கள் சுடச்சுட தயாராகிக் கொண்டிருந்தது. அப்பொழுது பணியில் ஈடுபட்டிருந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் பக்கத்தில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்திருந்த சோடாவும் பன்னீர் சோடாவும் கலர் சோடாவும் குளிர்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது!
ஒரு பாட்டிலின் விலை 20 ரூபாயாம்.