சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி ஆங்கிலத் துறைக்குப் பேச வருமாறு அழைத்திருந்தார்கள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் என் படைப்புகளுக்குக் கருத்தரங்கு முடிவாகியிருந்த பிப்ரவரி 20 அன்று சென்னைக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அதையொட்டி பிப்ரவரி 19 அன்று பேச ஒத்துக்கொண்டேன். இக்கல்லூரியில் ‘பூனாச்சி’ பாடத்தில் இருக்கிறது. சிலர் என் படைப்புகளைத் திட்டக் கட்டுரைக்கும் ஆய்வுக்கும் எடுத்திருக்கிறார்கள். அக்கல்லூரியின் முன்னாள் துறைத்தலைவரும் பேராசிரியருமாகிய மிருணா ஜார்ஜ் அவர்கள் என்னை அழைத்தார். அக்கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கும் ஆழி அரசி மூலம் அழைப்பு வந்தது. பழ.அதியமானின் மகள் ஆழி அரசி.
புகழ் பெற்ற மகளிர் கல்லூரி அது. சில ஆண்டுகளுக்கு முன் பிரகிருதி அறக்கட்டளை நடத்திய கவிதை தொடர்பான நிகழ்வு ஒன்றுக்கு அக்கல்லூரிக்கு ஏற்கனவே சென்றிருக்கிறேன். இப்போதைய நிகழ்வு எழுத்தாளர் சந்திப்பு (Author’s meet). பார்வையாளர்களொடு உரையாடும் வடிவம். குறிப்பிட்ட எழுத்தாளரின் படைப்புகள் குறித்துக் கருத்துக் கூறலாம்; கேள்விகள் கேட்கலாம். ஒரு தலைப்பில் பேசுவதைவிடப் பார்வையாளர்கள் பங்கேற்கும் இந்த வடிவம் சிறப்பானது என்பது என் எண்ணம். நிகழ்ச்சி பத்தே கால் மணிக்குத் தொடங்க வேண்டும். குறித்த நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிடுவது என் வழக்கம். ஆனால் அன்றைக்கு முடியவில்லை. கொஞ்சம் தாமதமாகும் என்பது முன்கூட்டியே தெரிந்ததால் பதினொரு மணிக்குத் தொடங்கலாம், முடிக்கும் நேரம் பிரச்சினையில்லை என்று தகவல் தெரிவித்திருந்தேன். அதை ஏற்று அதற்கேற்ப ஏற்பாடுகளில் மாற்றம் செய்தனர்.
நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றியவர் ஆங்கிலத் துறைத்தலைவர் பேராசிரியர் பத்மா. அறிமுகவுரை மிருணா அவர்கள். இருவரும் என் படைப்புகளை வாசித்திருந்ததும் என்னைப் பற்றி நன்கு அறிந்திருந்ததும் உரைகளில் தெரிந்தன. அதேபோலச் சுருக்கமாகவும் செறிவாகவும் பேசிவிட்டு எனக்கு நேரத்தைக் கொடுத்துவிட்டனர். உரையாடுவதற்கு ஒருதிறப்பு வேண்டும் அல்லவா? ஆகவே பதினைந்து நிமிடம் உரை. அதன் பின் உரையாடல் என்று அமைத்திருந்தனர். என்ன பேசுவது? பிப்ரவரி 19 நல்ல நாள். உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள். அவரைப் பற்றிப் பேச எவ்வளவோ இருக்கிறது. மகளிர் கல்லூரியில் பேச எது வாகாக இருக்கும்? கல்வியைப் பற்றிப் பேசலாம் என்று நினைத்தேன். ஓதலும் ஓதுவித்தலுமே வாழ்க்கையாகக் கொண்ட ஆதிக்க சாதியில் பிறந்த உ.வே.சாமிநாதையர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கல்வி கற்கப் பட்ட பாட்டைப் பற்றிச் சொல்லித் தொடங்கினேன். அவர் குடும்பம் மிகவும் உதவியாக இருந்ததையும் அத்தகைய குடும்பம் அமைவது அரிது என்பதையும் சொன்னேன்.
ஆணுக்கே இந்த நிலை என்றால் பெண் கல்வி எந்த நிலையில் இருந்திருக்கும்? தமிழின் தொடக்க கால நாவல்களில் பெண் கல்வி பற்றிய விவாதங்கள் இடம்பெற்றிருக்கின்றன. பெண் கல்விக்கு எதிராக நிலவிய கருத்துக்கள் விசித்திரமானவை. பெண் கல்வி கற்றால் சோர புருஷனுக்குக் (தினத்தந்தி மொழியில்: கள்ளக் காதலன்) கடிதம் எழுதுவாள் என்றெல்லாம் நினைத்திருக்கிறார்கள். அந்தத் தடைகளை எல்லாம் கடந்து ஆயிரக்கணக்கான பெண்கள் பயிலும் ஸ்டெல்லா மேரிஸ் போன்ற கல்லூரிகள் படிப்படியாக உருவானதைச் சுருக்கமாகச் சொல்லி முடித்தேன்.
பிறகு உரையாடல். ஆசிரியர் ஒருவரே கேள்வியைத் தொடங்கி வைத்தார். பூனாச்சி, மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி ஆகிய நாவல்கள் பற்றிய கேள்விகள் நிறைய வந்தன. கேட்டவர்கள் நாவலை நன்கு வாசித்திருந்தனர் என்பது அவர்கள் கேள்வியிலேயே விளங்கியது. நுட்பமாகவும் உள்ளிருந்தும் கேள்விகள் வந்தன. அவர்கள் மனம் கொள்ளும் வகையில் எளிமையாகவே பதில்கள் சொன்னேன். ஒரு பெண் ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ நூலைப் பற்றிக் கேட்டார். என் நூல்களில் பெரும்பாலோர் தவிர்த்துவிடுபவை ‘பீக்கதைகள்’, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ ஆகியன. கெட்ட வார்த்தை பற்றி ஒருவர் கேட்டது மகிழ்ச்சியாக இருந்தது. இருநூறு மாணவியர் குழுமியிருந்த அவையிலிருந்து கேள்விகள் வந்துகொண்டேயிருந்தன. ஒருகட்டத்தில் நேரத்தை உத்தேசித்து முடிக்க வேண்டியதாயிற்று.
‘எங்கள் மாணவியரிடமிருந்து இத்தனை கேள்விகள் வரும் என்று நினைக்கவில்லை’ என்று ஆழி அரசி ஆச்சரியப்பட்டார். சூழல் அனுமதித்தால் நிறையக் கேட்பார்கள் என்பது என் அனுபவம். அதே போல நாம் சொல்லும் பதில்கள் அவர்களைத் தூண்டும். இவரிடம் இயல்பாகக் கேட்கலாம் என்று தைரியம் வரும். அவற்றை ஆழிக்குச் சொன்னேன். பேராசிரியர் மிருணா அவர்கள் கரூரைச் சேர்ந்தவர். ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னை வந்துவிட்டார்களாம். தம் தலைமுறையில் கல்வி கற்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் பெண்களுக்கு இருந்த தடைகளைப் பற்றி என்னிடம் சொல்லிக் கொண்டு வந்தார்.
என்னை ஆட்டோவில் அழைத்துச் சென்ற மாணவர் ஜெயகீர்த்தி ‘பொண்ணுங்க நல்லாப் படிச்சிருக்காங்கய்யா. இப்பிடிக் கேக்கறாங்க’ என்றார். ‘பேச அனுமதித்தால் கேள்விகளுக்கு முடிவிருக்காது கீர்த்தி’ என்றேன். ‘எல்லாமே நீங்க எதிர்பார்த்த கேள்விகளாங்க, ஐயா?’ என்றார். ‘எதிர்பார்க்காத கேள்விகளும் வந்தன. நான் எதிர்பார்த்த ஒருகேள்வி வரவில்லை. அது மயிர்தான் பிரச்சினையா? பற்றியது’ என்றேன்.
—– 16-04-25
உங்கள் கட்டுரையைப் படிக்கும்போது, உங்கள் நிகழ்வில் நானே நேரில் கலந்துகொண்ட அனுபவம் ஏற்படுகிறது. வாழ்த்துக்கள்.
மயிர் தான் பிரச்சனை. ஆயிரம் கேள்விகளுக்கான பதில்.