சென்னை சென்றால் நண்பரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான இரா.இராமனிடம் (கல்யாணராமன்) இருந்து தப்பிப்பது கடினம். மிகப் பெரும் இலக்கியப் பணிகளை எல்லாம் போகிறபோக்கில் செய்துவிடும் ஆற்றல் பெற்றவர். ஆத்மாநாம் கவிதைகள் பற்றிய விமர்சன நூல், தி.ஜானகிராமன் படைப்புகள் குறித்த கட்டுரைகளின் பெருந்தொகுப்பு ஆகியவற்றை அவர் உருவாக்கிய வேகத்தைக் கண்டு அசந்து போயிருக்கிறேன். இப்போது அதிகாரியாக இருப்பதால் நேரம் அமையவில்லை. அவரைச் சந்திப்பதும் பேசுவதும் எனக்கு விருப்பமானது. பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் நல்ல புலமை கொண்டவர். பரந்த வாசிப்பு உள்ளவர். தமக்கென இலக்கியப் பார்வை உடையவர்.
அவருடன் பேசினால் நேரம் போவது தெரியாது. சந்தித்தோம், பேசினோம், பிரிந்தோம் என்றிருந்தால் பிரச்சினையில்லை. திடுமென மாணவர்களிடம் பேச ஏதாவது ஒரு ஏற்பாடு செய்துவிடுவார். ஒன்றரை ஆண்டுகள் நான் பணியாற்றிய கல்லூரி, அரசு கல்லூரி. அம்மாணவர்களிடம் பேசுதல் மகிழ்ச்சி தரும். எனினும் அங்கே அடிக்கடி போவதும் பேசுவதும் சூழலுக்கு உகந்ததல்ல என்று என் மனதில் எண்ணம். அதனால் அவருக்குச் சொல்லாமலே சென்னை சென்று திரும்பிவிட எண்ணுவேன். எப்படியோ அவருக்குச் செய்தி தெரிந்துவிடுகிறது. எதிலாவது சிக்கிக் கொள்வேன்.
இந்த முறை கருத்தரங்கக் கட்டுரை ஒன்று எழுத ஒருகட்டுப் புத்தகங்களை என்மேல் ஏற்றிவிடப் பார்த்தார். புத்தகச் சுமை சுகமானது என்பதால் மறுக்கவில்லை. மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வாளரான மோகனவசந்தன் மூலம் புத்தகம் என்னிடம் வந்து சேரும் என்றார். தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்களில் நம்பிக்கையூட்டும் ஒருவர் வசந்தன். வாசிப்பும் ஆய்வுப் பார்வையும் ஒருங்கே கொண்டவர். எழுத்தாற்றலும் உடையவர். நானிருக்கும் இடத்திற்கே கொண்டு வந்து தருவதாகச் சொன்னார். தாம்பரத்தில் இருந்தேன். என்னதான் புத்தகமாக இருப்பினும் நெடுந்தூரம் சுமக்க முடியாது, தண்டவாளம் போல நீளப் பெயர் கொண்ட சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இரவு கொண்டு வந்து கொடுங்கள் எனச் சொல்லிவிட்டேன். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் முன்னால் ரயில் நிலையம் சென்றுவிடுவேன் என்பதால் பேசிக் கொண்டிருக்கவும் துணை கிடைக்கும் என்னும் நினைப்பு.
வருவதாகச் சொல்லியிருந்தார். கடைசி நேரத்தில் முடியவில்லை. திடுமென ஊருக்குக் கிளம்ப வேண்டியாகி விட்டதால் அவர் மனைவியிடம் கொடுத்தனுப்புவதாகத் தகவல் சொன்னார். மனைவியும் அவர் அக்காவும் வருவார்கள், உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறார்கள் என்றார். வாசிக்கும் ஆர்வம் கொண்டவராக இருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். ரயில் நிலையம் செல்லக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. பெரிய புத்தகக் கட்டை வைத்துக்கொண்டு இருவரும் ஒருமணி நேரத்திற்கு மேலாகக் காத்துக் கொண்டிருந்தனர். பெண்கள் இருவரை இத்தனை நேரம் காக்க வைத்துவிட்டோமே என வருத்தமாக இருந்தது.
அவ்வருத்தத்தை அவர்கள் பேச்சு போக்கிவிட்டது. மோகனவசந்தனின் மனைவி சத்தியப்பிரியா. வரலாற்றுப் பாடத்தில் எம்.பில். பயின்றிருக்கிறார். முனைவர் பட்ட ஆய்வு செய்யக் காத்திருக்கிறார். சத்தியப்பிரியாவின் அக்கா சசிகலா. தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பட்டாபிராம் இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். என் நாவல்களைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அது ஒருபுறம் இருக்கட்டும். அவரிடம் பேசிய கால் மணி நேரத்தில் குடும்பப் பின்னணி, ஆர்வம், எதிர்காலத் திட்டம் என எல்லாவற்றையும் அறிந்துகொண்டேன்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுகிராமம். மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த குடும்பம். பெண்களைப் படிக்க வைக்கும் வழக்கம் கிடையாது. அதுவும் வெளியூருக்கு அனுப்புவது சாத்தியமே இல்லை. உள்ளூரில் இருக்கும் பள்ளிக் கல்வி வரை படிக்க வைத்துவிட்டுத் திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்படிப்பட்ட பின்னணியில் இருந்து தடைகளை எல்லாம் கடந்து சசிகலா சென்னை வந்து பயின்றிருக்கிறார். கணவரும் மகளும் உள்ளிட்ட குடும்பம் ஊரிலேயே இருக்க இவர் மட்டும் சென்னையில் தங்கிப் பணியாற்றுகிறார்.
தம் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்ததும் சசிகலாதான். அதுவும் சாதி மறுப்புத் திருமணம். மோகனவசந்தனின் ஊரும் தூரம்; சாதியும் வேறு. ஊரில் யாருக்காவது திருமணம் செய்து வைத்தால் தங்கையின் கல்வி தொடராது, மோகனவசந்தனைத் திருமணம் செய்தால் கல்வி தொடரும் என்று கருதிக் குடும்பத்தில் பேசிச் சாதித்திருக்கிறார். கல்வியறிவு இல்லாத குடும்பப் பின்னணியில் இருந்து இருபெண்கள் முனைவர் பட்டம் வரைக்கும் வருவது எத்தனை சிரமம் என்பதை நானறிவேன்.
ஆத்தூர், நாமக்கல் ஆகிய ஊர்களில் உள்ளடங்கிய கிராமப்புறத்தில் இருக்கும் அரசு கல்லூரிகளில் என் இருபத்தைந்து ஆண்டுப் பணிக்காலம் கழிந்தது. இரண்டுமே இருபாலர் கல்லூரிகள். எனினும் படிக்கும் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். முப்பத்து மூன்று விழுக்காடே நிறையாது. அதில் ஆண்களைச் சேர்ப்போம். ஊரில், ஊருக்கு அருகில் உள்ள பள்ளியில் எந்த வகுப்பு வரை இருக்கிறதோ அதுவரைக்கும் பெண்களைப் படிக்க அனுப்புவார்கள். உடனே திருமணம் தான். பதினெட்டு வயதுக்கு முன் திருமணம் செய்தால் கடும் தண்டனை என்னும் சட்டம் இருப்பதால் அதுவரைக்கும் காத்திருக்கிறார்கள். சில இடங்களில் சட்டத்தை மீறிப் பதினாறு, பதினேழு வயதில்கூடத் திருமணம் செய்துவிடுகிறார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் சிலவற்றிலும் பட்டியலினச் சாதிகள் சிலவற்றிலும் இந்த வழக்கம் இப்போதும் நீடிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் கணிசமாக வசிக்கும் மிகவும் பிற்பட்ட சாதியிலிருந்து என் பணிக்காலத்தில் ஒரே ஒரு பெண்கூட எங்கள் கல்லூரியில் பயிலச் சேர்ந்ததில்லை என்றால் அச்சாதி வழக்கம் எப்படியிருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம்.
வந்து சேரும் பெண்களிலும் கல்வி விழிப்புணர்வு பெற்றவர்கள் மிகவும் குறைவு. தங்களைச் சுற்றியிருக்கும் பெண்கள் பலர் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாகக் கருதுவார்கள். பயிலும் காலத்திலேயே பெற்றோர் பார்க்கும் பையனைத் திருமணம் செய்துகொள்வார்கள். சிலர் காதல் திருமணம் செய்வார்கள். பெரும்பாலும் தம் சாதிக்குள்ளேயே அது நிகழ்ந்துவிடும். எப்படித் திருமணம் செய்துகொண்டாலும் கல்வி அத்தோடு முடிந்துவிடும். பட்டப்படிப்புக்கு வந்து சேரும் பெண்களில் பத்து விழுக்காட்டினர் மேல்படிப்புக்குச் சென்றால் அதிகம். அப்படிச் செல்பவர்களும் விரைவில் திருமணம், குழந்தைப் பேறு என்று குடும்பத்திற்குள் புகுந்து காணாமல் போய்விடுவார்கள். பெண் கல்வியில் நம் சமூகம் இன்னும் எவ்வளவோ முன்னேற வேண்டும். விழிப்புணர்வு அடைய வேண்டும்.
இத்தகைய நிலையில் சசிகலா போல ஓரிருவர் பிடிவாதமாக இருந்து எல்லாவற்றையும் உடைத்துக்கொண்டு முன்னேறி வருவதைக் கண்டால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாகும். பெண் கல்வி தனியொருவருக்கு நன்மை செய்வதோடு முடிந்துவிடுவதல்ல. சசிகலா கல்வி கற்றதும் அவர் தங்கை சத்தியப்ரியா கல்வியைத் தொடர்கிறார். சசிகலாவின் மகள் அடுத்து வருகிறார். அவர்களின் உறவினர் வீடுகளில் சில பெண்களுக்கேனும் கல்வி பயிலும் உத்வேகத்தைத் தரும். ஊரிலிருந்தும் சிலர் கல்லூரிக்குச் செல்லக் கூடும். ஒருபெண் கல்வி கற்பதில் இப்படி ஒரு தொடர்ச்சி அமையும். ஆகவே சசிகலா போன்றவர்கள் பெரிதும் போற்றத்தக்கவர்கள்.
விடைபெறும்போது சசிகலா ஒருசம்பவத்தைச் சொன்னார். அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற அவரும் அவர் தந்தையும் போய் ஒரு நாள் முழுக்க நின்றார்களாம். ‘இந்தப் பச்சமையில கையொப்பம் போடும் வேலைக்குப் போயே ஆக வேண்டும்’ என்று அப்போது முடிவெடுத்தாராம். முனைவர் பட்டம் முடித்து தனியார் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக இருக்கும் அவர் விரைவில் அரசுப்பணிக்குச் செல்லட்டும்; பச்சை மையில் கையொப்பம் இடட்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
—– 01-03-25
🙌அனைத்து பெண்களுக்கும்,இந்த கட்டுரையை கொண்டு செல்ல வேண்டும்..இதுதான் பெருமாளய்யாவிற்கு நாம் செலுத்தும் நன்றி. 🙏ரொம்ப நன்றிகள் ஐயா. 🌷🌹
இதை கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவிகள் முன்னுதாரணமாக எடுத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்
பள்ளியில் வாசிக்கப்பட வேண்டிய கட்டுரையாக நான் கருதுறேனய்யா
நன்றியய்யா