எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

You are currently viewing எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

சாதி என்கிற அஸ்திவாரத்தின் மேல் எதையுமே உங்களால் கட்ட முடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த ஒழுக்க நெறிகளையும் உங்களால் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாகக் கொண்டு நீங்கள் உருவாக்குகிற எல்லாமே உருக்குலைந்து போகும்; முழுமை அடையாது.

  • பாபாசாகேப் அம்பேத்கார், சாதி ஒழிப்பு, ப.101 – 102.

சாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாய் உள்ளவைகளை அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படிச் செய்யாமல் உயர்வு தாழ்வைப் போக்கி விடலாமென்று கருதுதல் நுனி மரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதரின் முட்டாள் செயலையே ஒக்கும்.

  • தந்தை பெரியார், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 1, ப.1607.

என் அமர்வுக்குக் கொடுத்துள்ள தலைப்பு சற்றே நீளமானது. குறைந்த நேரத்தில் பலவற்றையும் உள்ளடக்கிப் பேசுவது சிரமம். ஆகவே  இந்த அமர்வில் சாதிக்கு எதிரான போராட்டத்தில் இலக்கியம் எவ்வாறு பங்களிப்பு செய்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி என் அனுபவம் சார்ந்து பேச இருக்கிறேன்.

இன்றைய அரசியல் சூழலில் சாதி ஒருங்கிணைப்பு சங்கமாகவோ கட்சியாகவோ தீவிரமாக நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகள் தம்மை மீட்டெடுத்து மேலெழ முயல்கின்றன; தம் மீதான இழிவுக்கு எதிராகவும் தீண்டாமைக்கு எதிராகவும் போராடுவதற்கு இந்த ஒருங்கிணைப்பு அவசியமாகிறது. அதேசமயம் ஆதிக்க சாதிகள் தங்கள் அதிகாரம் கைவிட்டுப் போய்விடுமோ என்னும் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. பல காலமாக ஆதிக்கத்தை, அதிகாரத்தை அனுபவித்து வந்தவை அதைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முயல்கின்றன. அதற்காக அவற்றுக்கு ஒருங்கிணைப்பு தேவைப்படுகிறது.

எப்போதும் இல்லாத வகையில் கடந்த முப்பதாண்டுகளில்  ஆதிக்க சாதி ஒருங்கிணைவு கூடியிருக்கிறது. சாதிக் கட்சிகள் புதிதாக உருவாகின்றன. ஏற்கனவே இருந்தவை புதிய செல்வாக்கைப் பெற்றுள்ளன. சாதிச் சங்கங்கள் தம் செயல்பாடுகளை வெவ்வேறு தளங்களில் விரிவாக்கியுள்ளன. அவை சொத்துடைமை பெறுகின்றன. தம் சாதியினருக்கு இலவச உதவிகள் செய்கின்றன. பெரிய திருமண மண்டபங்களைக் கட்டுகின்றன. சாதித் திருமணத் தகவல் மையங்களைத் தொடங்கி நடத்துகின்றன. இளைஞர் பேரவைகளைத் தொடங்குகின்றன.

சாதியை நிலைநிறுத்தும் வகையில் காதலை எதிர்க்கின்றன. சாதி மறுப்புத் திருமணங்களுக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன. தம் சாதிப் பெண்களிடம் ‘இதே சாதியைச் சேர்ந்த ஆணையே திருமணம் செய்து கொள்வேன்’ என்று சத்தியம் வாங்குகின்றன. மீறிக் காதல் திருமணம் நடந்தால் சாதி ஆணவக் கொலையில் ஈடுபடுகின்றன. கொலை செய்பவர்களுக்கு ‘மாவீரன்’ என்று பட்டம் சூட்டுகின்றன. தம்மை ஆண்ட பரம்பரை என்று நிறுவிக்கொள்ளப் பலவிதக் கட்டுக்கதைகளை உற்பத்தி செய்கின்றன. தம் பண்பாட்டு அடையாளங்கள் எனச் சிலவற்றைத் தன்வயமாக்குகின்றன.

தம் சாதி ஆதி காலத்திலிருந்தே ஆதிக்கமும் அதிகாரமும் பெற்றிருந்தது என்பதை நிறுவப் பலவித முயற்சிகளில் அவை ஈடுபடுகின்றன. தம்மைப் புனிதப்படுத்தித் தனித்தன்மை எனச் சொல்லி ஒதுங்கி நிற்கின்றன. ஆதிக்க சாதிகளின் செயல்பாடு தம் புனிதத்தை, தனித்தன்மையைக் காப்பாற்றி ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதாகும். இந்நிலையில் சாதி ஆதிக்கம் பற்றிப் பேசுவதில் இலக்கியம் பல சிக்கல்களை எதிர்கொள்கிறது.

இந்தியச் சமூகத்தில் ஒரு மனிதர் முதன்மையாகச் சாதியால் அடையாளப்படுகிறார். ஒரு கிராமமோ நகரமோ அதைக் களமாகக் கொண்டு பாத்திரப் படைப்பை உருவாக்கும்போது சாதி அடையாளம் தவிர்க்க இயலாதது. சாதிய முரண்களைப் பேசாமல் வெறும் அடையாளத்தை மட்டும் கொடுத்துக் குடும்பப் பிரச்சினைகளைப் பேசிக் கொண்டிருந்தவரை சிக்கல் எதுவும் இல்லை. சாதி ஆதிக்கம் பற்றி, ஏற்றதாழ்வு குறித்துப் பேசும்போது கடும் எதிர்வினைகள் வருகின்றன.  அவை தம் சாதியின் புனிதத்தைக் கீழ்மைப்படுத்தி விட்டதாகவும் இழிவுபடுத்தி விட்டதாகவும் கருதி எழுத்தாளர்களை முடக்கும் செயலில் ஈடுபடுகின்றன.

எதிர்ப்பாக எழுத்து: இலக்கியம், சாதி, சமூக நீதிக்கான போராட்டம்

நான் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் இத்தகைய எதிர்ப்பைப் பெற்றது. அதன் பிறகு பாத்திரங்களின் சாதி அடையாளத்தை நீக்கி மறுபதிப்பு வெளியிட வேண்டியானது. நான் மட்டுமல்ல, வேறு சில எழுத்தாளர்களும் ஏற்கனவே வெளியான தம் நாவல் பாத்திரங்களின் சாதி அடையாளத்தை நீக்கிப் பதிப்பித்தனர். இத்தகைய பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்த்துச் சாதி அடையாளம் இல்லாமல் பாத்திரங்களை உருவாக்கினர். சாதி அடையாளத்தோடு எழுதிக் கொண்டிருந்த இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் சொன்னார், ‘என்னை அறியாமலே சாதி அடையாளத்தைத் தவிர்க்கும் பழக்கம் வந்துவிட்டது.’

சாதியவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி இவ்வாறெல்லாம் எழுத்தாளர்கள் சுயதணிக்கை செய்து கொள்கிறார்கள்; எச்சரிக்கையோடு எழுதும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆனால் சாதியத்தை எதிர்த்து எழுதும் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. சமூகத்தைப் பின்னிழுக்க முயல்பவர்கள் சாதியவாதிகள். சமூகத்தை முன்னால் செலுத்த முயல்பவர்கள் எழுத்தாளர்கள். மொழியைக் கருவியாகக் கொண்டது இலக்கியம். மொழி எத்தனையோ சாத்தியங்களைத் தனக்குள் வைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றை நேரடியாகச் சொல்லவும் அது உதவும். மறைத்துச் சொல்லவும் உதவும். ஒரு விஷயத்தைச் சுற்றி வளைத்துச் சொல்லவும் மொழி பயன்படும். நெற்றிப்பொட்டில் அடித்தது போலச் சொல்லவும் மொழி பயன்படும். மொழி எத்தனையோ உத்திகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. முரண், பகடி, புகழ்வது போலப் பழித்தல், பழிப்பது போலப் புகழ்தல் உள்ளிட்ட எத்தனை எத்தனையோ வழிகளை மொழி திறந்து வைத்திருக்கிறது. மொழி எத்தனையோ அணி வகைகளைத் தனக்குள் கொண்டிருக்கிறது. கற்பனைத் திறனுக்கு மொழி காரணமாக இருக்கிறது.

மொழியைத் தம் கருவியாகக் கொண்ட எழுத்தாளர் தாம் நினைப்பதை எவ்வகையிலாவது வெளிப்படுத்துவதற்கு அக்கருவி பேருதவி செய்யும். அக்கருவியைக் கையாள்வதில் திறன் பெற்ற எழுத்தாளர்கள் தாம் நினைப்பதை, சிந்திப்பதை இலக்கியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சாதியம், பாலின வேறுபாடு, சமூக நீதி உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் எழுத்தாளர்கள் செயல்பட மொழி வழிகாட்டுகிறது. எந்தத் தடையையும் எழுத்தாளர்களால் எழுதிக் கடக்க முடியும்.

—–   22-04-25

(13-04-25 அன்று பெங்களூரு, அசீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புலே, அம்பேத்கார் வாரம் நிகழ்வில் ஆற்றிய சிற்றுரையின் எழுத்தாக்கம்.)

Latest comments (2)

எல் கோபாலகிருஷ்ணன்

மொழி குறித்து போகிற போக்கில் எழுகின்ற எண்ணங்களை அந்த உரையில் மிகவும் ரசிக்கும்படி கையாண்டு இருக்கிறீர்கள் .பேனாவை எடுத்து ஆற அமர எழுதும்போது வரும் எண்ணங்களுக்கு இணையாக இருந்தது அந்த பேச்சின் வடிவம் .மகிழ்ச்சி!

பாரத் தமிழ்

காலையில் ஒரு நல்ல பயனுள்ள அதேசமயம் அவசியமான கட்டுரையை வாசித்திருக்கிறேன் ஐயா.