தமிழ் இனிது

You are currently viewing தமிழ் இனிது

தாய்மொழியாக இருப்பினும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தவராக ஒருவர் இருக்க முடியாது. முன்னோர் வாழ்வின் ஏராளமான கூறுகளைத் தன்னகத்தே பொதிந்து வைத்திருப்பது மொழி. ஒருசெயல் வாழ்விலிருந்து உதிர்ந்ததும் அதற்குரிய சொற்களும் வழக்கிழக்கின்றன. புதிய செயல் உதிக்கும்போது புதிய சொற்கள் வழக்கிற்கு வருகின்றன. மனம் செய்யும் தந்திரங்களுக்கெல்லாம் மொழி இடம் கொடுக்கிறது. ஒன்றைக் கமுக்கமாகச் சொல்ல வேண்டும் என்றாலும் மொழி கைகொடுக்கிறது. சிறுகுழுவுக்கு மட்டும் புரிந்தால் போதும் எனினும் மொழி பயன் தருகிறது. ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைச் சொல்லி உணர்த்த வேண்டுமானாலும் மொழி  ‘முடியும்’ என்கிறது.  இப்படி எத்தனை எத்தனையோ கூறுகளை உட்கொண்டது மொழி.

தமிழைப் போன்று பல்லாயிரம் ஆண்டாக வழங்கி வரும் செம்மொழிகளில் இந்தக் கூறுகள் இன்னும் அடர்த்தி கொண்டிருக்கும். மொழியின் சித்துக்களை வாழ்நாள் முழுதும் கற்றுக்கொண்டே இருக்கலாம். தமிழைச் சரியாக ஒலிப்பதற்கும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வழிகாட்டும் இலக்கண மூல நூல்கள், மறுஎழுத்தாக்க நூல்கள், பாடநூல்கள் எனப் பல உள்ளன. எங்கெல்லாம் குழப்பம் நேர்கிறதோ அவற்றை மட்டும் எடுத்துப் பேசும் நூல்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைவுதான். அ.கி.பரந்தாமனார் எழுதிய ‘நல்ல தமிழ் எழுத வேண்டுமா?’ நூல் வெகுகாலம் புழக்கத்தில் இருந்தது. இப்போதும் அதன் மவுசு குறைந்து போய்விடவில்லை.

என் ஆசிரியர் க.வெள்ளிமலை ‘தீந்தமிழ் இலக்கணம்’ என்றொரு நூலை 1970களில் எழுதினார். அது தமிழிலக்கிய ஆசிரியர், மாணவர் வட்டத்தோடு நின்று போய்விட்டது. தொடர்ந்து பதிப்பிலும் இல்லை; புகழ் பெறவும் இல்லை. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பணியாற்றிய கா.கோ.வேங்கடராமன் ‘இலக்கண வழிகாட்டி’ என்றொரு நூல் எழுதினார். அது பாடத்திட்டத்தோடு முடிந்து போயிற்று.  இதைப் போன்று தமிழாசிரியர்கள் எழுதி அங்கங்கே சிறுவட்டத்துக்குள் புழங்கி வழக்கிழந்து போனவை பல. இவர்களின் பார்வை மிகவும் பழமையானது. சமகால மொழி மாற்றங்களை இயல்பானது என்று பார்க்காமல் கடுமை காட்டி இலக்கண விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். அதனால் தான் புகழ் பெறாமல் கல்வித் துறைக்குள்ளேயே முடங்கிக் காணாமல் போய்விட்டன போலும்.

1990களில் ஐராவதம் மகாதேவன் ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியராக இருந்தபோது ‘தமிழ்மணி’ இணைப்பில் ‘உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்’ எனத் தமிழண்ணல் எழுதிய தொடர் மிகுந்த கவனம் பெற்றது. பின்னர் நூலாகவும் வெளியாயிற்று. ‘The Hindu’ நாளிதழ் ‘Know your English’ என வெளியிட்டு வரும் தொடரை மாதிரியாகக் கொண்டு தமிழண்ணல் எழுதினார். அந்தத் தொடர் இன்றுவரை வெளியாகி வருகிறது. தமிழில் அப்படிச் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழண்ணல் எழுதிய முறையின் பாதிப்பு இன்று இவ்வகை நூல் எழுதுவோர் வரை இருக்கிறது.

செம்மையராக விளங்கிய நஞ்சுண்டனுக்கு மிகவும் பிடித்த நூல் மருதூர் அரங்கராசன் எழுதிய ‘தவறின்றித் தமிழ் எழுத’ என்பது. மருதூராரும் தமிழ்ப் பேராசிரியர்தான். எனினும் சமகால நோக்கும் நெகிழ்வான பார்வையும் கொண்டவர். திரைப்படப் பெயர்கள், பாடல்களைச் சான்றாக்கிச் சுவையாக எழுதிய நூல் இது. அதனால் தான் தம் பாடநூலாக நஞ்சுண்டன் இதை வரித்துக் கொண்டார். ஏதேனும் ஐயம் ஏற்பட்டாலும் அவரிடம் பேசித் தீர்த்துக்கொள்வார். பொற்கோ எழுதிய ‘தமிழில் நீங்களும் தவறில்லாமல் எழுதலாம்’ என்னும் நூலுக்கும் கல்வித்துறை கடந்த மதிப்புண்டு.

நவீன இலக்கிய எழுத்தாளர்களும் இத்துறையில் இப்போது ஈடுபாடு காட்டுகிறார்கள். கவிஞர் மகுடேசுவரன் தொடர்ந்து முகநூலில் எழுதி வருகிறார். இதழ்களில் கட்டுரைகள் எழுதுகிறார். அவற்றை வெவ்வேறு தலைப்புகளில் தொகுத்து நூலாக்கம் செய்துள்ளார்.  ‘தமிழ் அறிவோம்’ என்னும் பொதுத்தலைப்பு வரிசையில் பதினைந்து நூல்கள் வந்திருப்பதாகத் தெரிகிறது. அரவிந்தன் தம் பத்திரிகை, எழுத்து அனுபவங்களில் எதிர்கொள்ள நேர்ந்தவற்றைப் பற்றிக் குறிப்புகளாக எழுதிய நூல் ‘ஒருசொல் கேளீர்.’ பூவிதழ் உமேஷ் ‘எழுத்தெனப்படுவது’ என்றொரு நூலை எழுதியுள்ளார். நவீன எழுத்துலகம் மொழிச் செம்மையில் இவ்வாறு கவனம் செலுத்துவது மகிழ்ச்சிக்குரியது.

தமிழ் இனிது

இவ்வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள நூல் ‘தமிழ் இனிது.’ தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நா.முத்துநிலவன்  ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் 51 வாரம் எழுதிய தொடர் நூலாகியிருக்கிறது. முத்துநிலவன் தமிழாசிரியர் மட்டுமல்ல; பேச்சாளர். மார்க்சிய ஈடுபாடு கொண்டவர். ஆகவே மொழியை இயங்கியல் நோக்கில் அணுகும் பார்வை கொண்டு இந்நூல் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நாளிதழ் வழங்கிய சிற்றிடத்திற்குள் எல்லைக்குட்பட்டு எழுதிய கட்டுரைகள்.

இன்று எல்லோருமே எழுதுபவர்கள்தான். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவ்வப்போது சில வரிகளையாவது எழுதுகிறார்கள். புலனக் குழுக்களில் தினமும் ஒருவரியாவது எழுதாத இளையோர் இல்லை. அனைவருக்கும் பயன்படும் வகையில் சிறுசிறு குறிப்புகளாகவும் சுவையாகவும் முத்துநிலவன் இக்கட்டுரைகளை எழுதியுள்ளார். பழமையை முழுதும் போற்றாமல் புதியது அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் சமநிலை பேணியுள்ளார். ஆகவே எவருக்கும் வாசிக்கப் பிடிக்கும்.

நூலுக்குள்ளிருந்து எதையாவது சொல்ல வேண்டும் அல்லவா?  ‘கோயிலா? கோவிலா?’ (ப.42) எனக் கேட்டு இலக்கணப்படி ‘கோவில்’ என்பதே சரி என்கிறார். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் ‘கோயில்’ வருகிறது. சிலப்பதிகாரத்தில் ‘வாயில் வந்து கோயில் காட்ட’ என்று  கண்ணகிக்கு அரண்மனையை வாயிற்காப்போன் காட்டிய செய்தியை இளங்கோவடிகள் எழுதுகிறார். கோவில் என்று அவர் எழுதவில்லை. இளங்கோவடிகள் தவறாக எழுதிவிட்டாரா? இல்லை.

கோவில், கோயில் ஆகிய இரண்டையும் உறழ்ச்சி என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மக்களிடம் ‘கோயில்’ என்றுதான் வழங்குகிறது. எங்கள் பகுதியில் ‘கோயிலுக்குப் போறன்’ என்பார்கள். இகரம் அகரமாகிக் ‘கோயலுக்குப் போறன்’ என்போரும் உண்டு. கோவில் வழங்குவதில்லை. இப்படிப்பட்ட சொற்களில் குழப்பம் ஏற்பட்டால் மக்கள் வழக்கை நாடிச் செல்வது என் வழக்கம். ‘கோயில்’ என்றுதான் எழுதி வருகிறேன்.

‘துவக்கப்பள்ளியா? தொடக்கப்பள்ளியா?’ என்பதற்கு தொடு – தொடங்கு – தொடர் என மூலச் சொற்களைக் கொடுத்துத் தொடக்கப்பள்ளியே சரி என்கிறார். வினைகளாகத் துவங்கு, துவக்கு ஆகியவையும் தொழிற்பெயராகத் ‘துவக்கம்’ என்பதும் வழக்கிற்கு வந்து பல காலம் ஆகிவிட்டன. ஆகவே துவக்கத்தைத் தவறென்றோ பயன்படுத்தக் கூடாது என்றோ சொல்ல வேண்டியதில்லை. இரண்டையும் ஏற்கலாம். சீர்மை பேணுவதற்காக எல்லாப் பள்ளிகளையும் ‘தொடக்கப்பள்ளி’ என்றே சொல்லலாம். ‘துவக்கப் பள்ளி’ என்று எழுதினால் தவறென வேண்டாம்.

இதுமாதிரி சில இடங்களில் தமிழாசிரியர் தலைதூக்குவதைத் தவிர்க்க முடியவில்லை போல. ஆனால் ‘ஒரு, ஓர்’ பற்றி எழுதும் போது ‘புதிய மரபாக ஒரு, ஓர் இரண்டையும் ஒன்றே போலப் பயன்படுத்தும் பழக்கம் தொடர்ந்து வழக்கமாகிவிட்டது. எனினும் இப்படி ஒரு மரபு தமிழில் உள்ளது என்பதையாவது கவனத்தில் கொள்வது நல்லது” (ப.45) என்று சமாதானம் காண்கிறார். அதே இடத்தில் ‘அடுத்து வரும் சொல் உயிர் எழுத்தில் வந்தால் ஓர் எனும் எண்ணுப்பெயர் வரும். மற்ற எழுத்து வந்தால் ஒரு வரும் என்பது இலக்கணம்’ (ப.44) என்கிறார். இந்தக் கருத்துக்கு இலக்கண நூல் எதையும் மேற்கோளாகத் தரவில்லை. இப்படி ஒரு இலக்கணம் எந்த நூலில் இருக்கிறது என்று சொன்னால் அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன்.

இப்படிச் சில இடங்களில் எனக்குச் சொல்லக் கருத்துக்கள் உள்ளன. மற்றபடி இவர் எழுதியிருப்பவை எனக்கும் ஏற்புடையவையே. பொதுத்தளத்தில் தமிழ் மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் எல்லோருக்கும் பயன்படும் நூல்தான் இது.

(நா.முத்துநிலவன், தமிழ் இனிது, 2024, தமிழ் திசை, சென்னை. பக்கங்கள்: 160, விலை : ரூ.160/-)

—–    02-11-24

Latest comments (2)

இ.பு.ஞானப்பிரகாசன்

திறனாய்வுக்கான நூலை மட்டுமின்றி இதே போல் முன்பு வந்த நூல்களின் வரலாற்றையே தொகுத்து எழுதி விட்டீர்கள்! திறனாய்வும் மிக அருமை!! இந்த நூலில் பணியாற்றியவன் என்னும் முறையில் என் மகிழ்நிறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Akilan Ethirajan

பள்ளிப் பருவத்தில் ஒரு ஓர் வேறுபாட்டை இதே விதமாய் சொல்லிக் கொடுத்த நினைவிருக்கிறது. ஆதாரம் கேட்கும் துணிவு இருந்ததில்லை.