கலை  ‘மற்றும்’ அறிவியல்

You are currently viewing கலை  ‘மற்றும்’ அறிவியல்

இம்மாதத் தொடக்கத்தில் திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என் படைப்புகள் தொடர்பான இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைப் பற்றி ஏற்கனவே பதிவு எழுதியுள்ளேன். அக்கல்லூரியின் பெயர் மாற்றம் பற்றி இப்போது சிறுபதிவு. தந்தை பெரியார் திருச்சியை மையமிட்டும் தம் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருந்தார். அங்கே சொந்த வீடும் அவருக்கு இருந்தது. அக்காலத்தில் திருச்சியில் சில கலைக்கல்லூரிகள் இருந்தன. அவையெல்லாம் சாதி, மதம் சார்ந்தவை. அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் கல்லூரி எதுவும் இல்லை.

‘கிறித்தவர்களுக்குப் பிஷப் ஹீபர் கல்லூரி, செயிண்ட் ஜோசப் கல்லூரி ஆகியவை இருக்கின்றன. இஸ்லாமியர்களுக்கு ஜமால் முகமது கல்லூரி இருக்கிறது. பார்ப்பனர்கள் பயிலத் தேசியக் கல்லூரி இருக்கிறது. எல்லாச் சாதியினரும் பயிலக் கல்லூரி இல்லை. ஆகவே அரசு கல்லூரி வேண்டும்’ என்று தந்தை பெரியார் சொன்னாராம். அது மட்டுமல்லாமல், தாமே நிலம் கொடுத்து அரசு கல்லூரி தொடங்க ஏற்பாடு செய்தாராம். அதனால் கல்லூரிக்கு ‘பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி’ என்று பெயர் வைத்தனர். அதில் ‘அரசு’ இடம்பெறவில்லை. ‘தந்தை’ என்பதும் இல்லை.  ‘பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி’ தான்.

2021ஆம் ஆண்டு தி.மு.க. அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இக்கல்லூரியின் பெயரை மாற்றினர். ‘பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி’ இப்போது ‘தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி’என்றாகியுள்ளது.  ‘பெரியார் ஈ.வெ.ரா.’ என்பதைத் தந்தை பெரியார் என மாற்றியது சமகால அரசியல் சார்ந்த முக்கியமான செயல்பாடு. அதை வரவேற்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கல்லூரிப் பெயர்களிலும் ‘அரசு’ இடம்பெற்றிருந்தது. ஆகவே இப்போது இக்கல்லூரிப் பெயரிலும் ‘அரசு’ சேர்ந்திருக்கிறது. நல்லது.

‘அரசு கலைக்கல்லூரி’ என்று மட்டுமே எல்லாக் கல்லூரிகளுக்கும் பெயர் இருந்து வருகிறது. தொகைச்சொல்லாகக்  ‘கலை’ பயன்பட்டு அறிவியலை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. கலைக்குள் அறிவியலை அடக்க விரும்பாத எவர் கைங்கரியத்தாலோ ‘கலை அறிவியல்’ எனத் தனியாகப் பிரித்துச் சொல்லத் தொடங்கியிருக்கின்றனர். ‘கலை அறிவியல்’ என்று சேர்ப்பது எப்போது வழக்கிற்கு வந்ததோ? கோயம்புத்தூரில்  ‘PSG Arts and Science College’ இருக்கிறது. அது தொடங்கிய போதே இப்படித்தான் பெயர் வைத்தார்களா என்று தெரியவில்லை. நான் அங்கு பயின்றபோது தமிழில் ‘பூசாகோ கலை அறிவியல் கல்லூரி’ என்று எழுதுவோம். கல்லூரி முகப்பிலும் அப்படியே தமிழ்ப்பெயர் அமைந்திருக்கும். ‘மற்றும்’ கிடையாது. 1990களுக்குப் பிறகு வந்த சுயநிதிக் கல்லூரிகள் எல்லாம் ‘கலை மற்றும் அறிவியல் கல்லூரி’ எனப் பெயர் பெற்றன. ‘மற்றும்’ என்பதைச் சேர்த்த அறிவாளி யாரோ தெரியவில்லை. ஆங்கிலத்தில் and என்பதற்கு இணையான சொல்லாக  ‘மற்றும்’ சேர்ந்திருக்கிறது.

கலை  ‘மற்றும்’ அறிவியல்

தமிழில் ‘உம்’ விரிந்தும் மறைந்தும் வருவது பற்றி இலக்கணம் விரிவாகவே பேசியிருக்கிறது. என்னென்ன பொருளில் ‘உம்’ வரும் என்பதைப்  பட்டியலிடுகிறது. ‘உம்’ மறைந்து வந்தால் அதை உம்மைத்தொகை என்று சொல்கிறது. இதற்கு வழக்கமாகத் தரும் சான்றுகள் இரண்டு: சேரசோழபாண்டியர், கபிலபரணர்.  ‘சேரரும் சோழரும் பாண்டியரும் வந்தனர்’ என்பதைச்  ‘சேரசோழபாண்டியர் வந்தனர்’ என்று உம்மை நீக்கி எழுதலாம். ‘கபிலரும் பரணரும் புலவர்கள்’ என்றும் எழுதலாம்; ‘கபிலபரணர் புலவர்கள்’ என்றும் எழுதலாம்.

வினாவுக்கு விடை சொல்லும்போது உம்மைத்தொகை மிகுதியாகப் பயன்படும். வினாவிடை என்பதே உம்மைத்தொகைதான்.  ‘நூற்பயன் யாது?’ என்பது வினா. விடையாக ‘அறம்பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே’ என்பது நன்னூல் நூற்பா. ‘அறமும் பொருளும் இன்பமும் வீடும் அடைதல் நூற்பயன்’ எனப் பதில் விரியும்.  ‘கம்பராமாயணத்தில் என்னென்ன காண்டங்கள் உள்ளன?’ என்று கேட்டால் ‘பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்’ என்று விடை கூறுவோம். ஒவ்வொரு காண்டத்தின் பெயருக்குப் பின்னும் உம் மறைந்து வருகிறது. விரித்து எழுதினால் ‘பால காண்டமும் அயோத்தியா காண்டமும்…’ என்று செல்லும்.

வழக்கில் எத்தனையோ உம்மைத்தொகைகளை அன்றாடம் பயன்படுத்துகிறோம். தாய் தந்தை, அண்ணன் தம்பி, ஆசிரியர் மாணவர், வீடு வாசல் என்றெல்லாம் பலவற்றைச் சொல்லலாம். காடுமேடு, தோட்டம் துரவு என வரும் இணைமொழிகள் பெரும்பாலும் உம்மைத்தொகைதான். இதன் வரையறை, வகைகள், மொழியில் இடம்பெறும் விதம் பற்றி இலக்கணம் விளக்கமாகக் கூறுகிறது. மொழி இயல்பைப் புரிந்துகொள்ளாமல் உம்மைத்தொகைக்கு இடையே ‘மற்றும்’ போட்டு எழுதும் வழக்கத்தைக் கைக்கொண்டு விட்டோம்.

‘கலை அறிவியல் கல்லூரி’ என்று எழுதினாலே ‘கலையும் அறிவியலும் பயிற்றுவிக்கும் கல்லூரி’ எனப் பொருள்படும். ‘கலைப்பாடங்களும் அறிவியல் பாடங்களும் கொண்ட கல்லூரி’ என்றும் விரிக்கலாம். எழுத்துத் தமிழில் மட்டுமல்லாமல் பேச்சுத் தமிழிலும் உம்மைத்தொகையின் பயன்பாடு மிகுதி என்பதால் எல்லோருக்கும் இது எளிதாக விளங்குவதுதான்.   ‘கலை அறிவியல் கல்லூரி’ என்றிருத்தலே அழகு. இடையில் வரும் ‘மற்றும்’ சோற்றில் கல்லாக இடறுகிறது.

‘மற்றும்’ கதை இத்துடன் முடிவதல்ல; இன்னும் விரிவாகப் பேசப் பல செய்திகள் உள்ளன.

—–   25-01-25

Latest comments (3)

Bharathi Kanagaraj

பல நாள் எனக்கும் இந்த மற்றும் ஏன் போட வேண்டும் என்ற சந்தேகம் இருந்தது. கலைக்கல்லூரி என்பதே அறிவியலையும் உள்ளடக்கியது தானே, கலை அறிவியல் என்பது அழைக்க அழகாய் உள்ளது.

உம்மைத் தொகை குறித்து தேடிக் கற்கும் ஆவல் பிறக்கிறது. மகிழ்ச்சி ஐயா.

தமிழ் மாணவன்

ஐயா வணக்கம்

பெரியாரின் பணம், நிலம் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்லூரி இதுவென்பதால் அப்போதைய முதல்வர் பக்தவத்சலம் அரசு என்று இடம்பெற வேண்டாம் என்று கூறினார் என்பர்.
அதைதொடர்ந்து தமிழ்நாட்டில் பெரியார் பெயரில் அமைந்திருக்கும் எந்த அரசுக் கல்லூரிக்கும் அரசு என்று இருக்காது.
தற்போதைய திமுக அரசு தான் இவற்றை மாற்றியது.

நன்றி🙏🏽

சி வடிவேல்

பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப்பலகைகளில் இவ்வாறு பெயர் குழப்பங்கள் பல வடிவங்களில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன ஐயா.
அரசு அவற்றைச் சீர்படுத்தித் திருத்தமான வடிவத்தை வெளியிடவேண்டும்.