இலயோலா கல்லூரியில் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றி நான் எழுதிய கட்டுரையில் (கற்றுக் கொடுக்கும் கலந்துரையாடல்) இப்படி ஒருதொடர் வருகிறது: ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளுடன் இருக்கிறார்கள்.’
‘நிறையக் கேள்வி’ என்பதில் ஒற்று மிகுமா என நண்பர் க.காசிமாரியப்பன் கேட்டிருந்தார். ‘மிகும்’ என்று சொல்லிவிட்டேன். பள்ளிக் காலத்திலிருந்தே பிழையில்லாமல் எழுதுவது எனக்குப் பயிற்சியாகிவிட்டது. ஐயம் வருமிடங்களில் ஒலித்துப் பார்த்து முடிவு செய்வேன். அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். தட்டச்சு செய்கையில் மனவேகம் விரல்களில் ஏறாததால் சில பிழைகள் நேர்வதுண்டு. சொல்லோ எழுத்தோ முன்பின் மாறுதல், அடுத்த சொல்லின் முடிவெழுத்தை முன்சொல்லில் ஏற்றிவிடுதல், யோசனையில் இருக்கும் வடிவம் எழுதுகையில் மாறும்போது தொடரில் வினையின் இயல்பு மாறுதல் எனச் சில பிழைகள் வந்துவிடும். எழுதி முடித்த பிறகு பார்த்துத் திருத்திவிடலாம்.
நான் எழுதுவதை நானே மெய்ப்புப் பார்ப்பதால் மனவோட்டத்தை நம்பிக் கண் சிலவற்றை விட்டுவிடும். மற்றபடி சொல்வடிவம், ஒற்று ஆகியவற்றில் எனக்குப் பிழை வராது. சில இடங்களில் போடக் கூடாது என்று எனக்கெனச் சில முடிவுகள் உண்டு. அவை பிறருக்குப் பிழையாகத் தோன்றும். ‘அங்கு, இங்கு, எங்கு’ ஆகிய சொற்களை அடுத்து ஒற்று மிக வேண்டும் என்பது மரபு. ‘கைவண்ணம் அங்குக் கண்டேன் கால்வண்ணம் இங்குக் கண்டேன்’ என்பது கம்பராமாயண அடி. உரைநடையில் இச்சொற்களின் முன் ஒற்று மிகுவது ஒலிப்புக்குச் செயற்கையாகத் தோன்றுகிறது. ஆகவே நான் மிகுப்பதில்லை. மேலும் இச்சொற்களுக்குப் பதிலாக அங்கே, இங்கே, எங்கே என்று எழுதுவது வழக்கமாகிவிட்டது. ‘வாழ்த்துக்கள்’, ‘எழுத்துக்கள்’ என்று ஒற்று மிகுத்தே எழுதுவேன். அவற்றில் ஒற்று கொடுக்கும் அழுத்தம் பொருளுக்கு அரண் செய்கிறது என்பது என் எண்ணம். அப்படி எழுதுவது பெருவழக்காகிவிட்டது என்பதால் ஏற்பது நல்லது எனவும் கருதுகிறேன்.
‘நிறையக் கேள்விகள்’ என்பதில் ஒற்று மிகுவது உறுதி என்றாலும் இலக்கணக் காரணம் தெரிய வேண்டுமே. அவருக்கு இப்படிச் சந்தேகம் வரக் காரணம் என்ன? ‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்’ என நன்னூலார் பொதுவிதி சொல்லிவிட்டார். விதிக்கு விலக்குகளும் உண்டு. அவற்றையும் சில நூற்பாக்களில் சொல்கிறார். அவற்றுள் ‘செய்யிய என்னும் வினையெச்சத்தில் மிகாது’ என்பது ஒன்று. உண்ணிய சென்றான், காணிய சென்றான் என்று வருவது பழைய வழக்கு. உண்ணச் சென்றான், காணச் சென்றான் என்பது இன்றைய வழக்கு. உண்ணிய சென்றான் என்றால் மிகாது; உண்ணச் சென்றான் என்றால் மிகும். அதே போல அகர ஈற்றுப் பெயரெச்சத்தின் முன்னும் ஒற்று மிகாது. பாடிய பாட்டு, ஓடிய குதிரை என்பன போல.
‘நிறையக் கேள்விகள்’ என்பது ‘செய்யிய’ என்னும் வினையெச்சமும் அல்ல. அடுத்துக் ‘கேள்விகள்’ என்னும் பெயர் வருவதால் பெயரெச்சமும் அல்ல. ‘உண்ணச் சென்றான்’ என்பது போன்ற அகர ஈற்று வினையெச்சமே ‘நிறைய’ என்பதும் ஆகும். நிறையக் கொடுத்தான், நிறையத் தின்றான், நிறையப் பேசினான் என்றெல்லாம் வரும். ‘நிறையக் கேள்விகள்’ என்பதில் எப்படி இது வினையெச்சம் ஆகிறது? ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளோடு இருக்கிறார்கள்’ என்னும் தொடரில் ‘நிறைய’ என்பது ‘இருக்கிறார்கள்’ என்பதோடு இயைந்து முடியும். ‘மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள்’ என்று எடுத்துக்கொள்ள வேண்டும். எப்படி இருக்கிறார்கள்? கேள்விகளோடு இருக்கிறார்கள்.
இதில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ‘பழைய மாணவர் விடுதி’ போன்ற குழப்பம். ‘மாணவர்கள் நிறையக் கேள்விகளோடு இருக்கிறார்கள்’ என்றால் ‘நிறைய மாணவர்களா?’ ‘நிறையக் கேள்விகளா?’ நிறைதல் என்னும் வினைப்பொருளில் அல்ல, அதிகம் என்னும் மிகுதிப்பொருளில் இவ்விடத்தில் வருகிறது. மிகுதிப் பொருளை நான் கேள்விகளுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அப்படியானால் ‘நிறையக் கேள்விகள்’ என்றால் அது பெயரெச்சப் பொருள் தராதா? பல்வகை அகர ஈற்றுப் பெயரெச்சத்திலும் ஒற்று மிகாது என்று நன்னூலார் சொல்கிறார். ‘நிறைய’ என்பது பெயரெச்சமாகவோ பெயரெச்சப் பண்பு கொண்டோ வரும்; அப்படி வந்தால் ஒற்று மிகும் என்று சொல்லலாமோ?
—– 31-01-25
அருமையான தூண்டுதலை உண்டாக்குகிறது கட்டுரை!
இலக்கணத்தை நோக்கிய தங்களைப் போன்றவர்களின் ஆற்றுப்படுத்துதல் என்பது இன்றைய தேவை. கட்டுரை உருப்பெற காரணமாக இருந்த காசி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்!
ஆய்விற்குரியது. நிறைய கேள்விகள் இலக்கண விதிப்படி சரி. ஆனால், நடப்பியலில் நிறையக் கேள்விகள் என்றே பயன்படுத்துகின்றனர்.
உச்சரிப்பு மற்றும் இலக்கண நூலார் கருத்து, விலக்கு
முதலியன அருமை.
சட்டி நிறையத் தந்தான்; சட்டி நிறைய தந்தான் – வேறுபாடு உண்டு. முதலாவதில் சட்டி நிறையுமாறு எதையோ தந்தான்; பின்னுள்ளதில் நிறைந்திருந்த சட்டியையே தந்தான் எஃஅறாகும்.