வீட்டில் உள்ள ஒருவரைச் செல்லமாகவோ கோபமாகவோ விசாரிக்கும் தொனியில் ‘அந்தத் தொண்டு எங்க போச்சு?’ என்பார்கள். வெறுமனே ‘தொண்டு தொண்டு’ என்று மகனையோ மகளையோ திட்டும் தாய்மார்கள் உண்டு. தொண்டு முண்டம், தொண்டுத் தாயோலி, தொண்டு நாய் என்று இன்னொரு சொல்லை இணைத்துத் திட்டுவதும் உண்டு.
வீட்டுக்கு அடங்காமல், வேலை எதுவும் செய்யாமல் வெறுமனே திரிந்து கொண்டிருக்கும் ஆணையோ பெண்ணையோ ‘தொண்டு’ என்று திட்டுவார்கள். சில சந்தர்ப்பங்களில் அது பாலியல் ஒழுக்கம் இன்மையையும் குறித்துவரும். சொல்லும் தொனியில் அப்பொருள் வேறுபாடு காணப்படும். புறம் பேசும்போது ‘அது ஒரு தொண்டு’ என்று யாரையாவது குறித்துச் சொன்னால் அது பாலியல் ஒழுக்கத்தைக் குறிப்பதாகும்.
‘அது தொண்டு சுத்திக்கிட்டுத் திரியுது’ என்றும் சொல்வார்கள். பலரோடு உறவு வைத்துக்கொண்டு திரிகிறார் என்று பொருள். ஆணுக்கும் பொருந்தும்; பெண்ணுக்கும் பொருந்தும். இந்தப் பொருளில்தான் ‘சபாநாயகன்’ பட வசனம் வருகிறது. ஆனால் படத்தில் ஆணை அந்தச் சொல் குறிக்கவில்லை. அக்காட்சியில் வரும் பெண்ணை மட்டுமே சுட்டுகிறது. பொதுப்புத்தியில் பெண்ணைத்தான் பாலியல் தொழிலாளியாக அடையாளப்படுத்துவது வழக்கம். ஆண் பாலியல் தொழிலாளர்களும் இப்போது இருக்கிறார்கள் என்றாலும் அது பொதுப்புத்தியில் இன்னும் ஏறவில்லை.
‘தொண்டு’ என்னும் இச்சொல் நீண்ட வரலாறும் பலபொருளும் கொண்டது. ஒன்பது என்னும் எண்ணுப்பெயரைக் குறிக்கும் பழைய வடிவம் ‘தொண்டு’ எனக் கூறுவர். மலைபடுகடாம் நூலில் ‘தொடி திரிவு அன்ன தொண்டுபடு திவவின்’ (அடி 21) என எண்ணுப்பெயராக வருகின்றது. அடிமைத்தனம், அடிமையாள், கடவுள் வழிபாடு, தொழுவம், பழமை உள்ளிட்ட பல பொருள்களைக் கூறும் தமிழ்ப் பேரகராதி ‘ஒழுக்கங்கெட்டவ-ன்-ள்’ என்றும் பொருள் தருகிறது. இப்பொருளில் வருவதற்கு மேற்கோள் எதுவும் தரவில்லை. எனினும் ‘Loc.’ என்னும் குறிப்பு உள்ளது.
அதற்கு Local usage என்று பொருள். அப்பொருளில் இலக்கியத்தில் பயின்று வரவில்லை, ‘உள்ளூர் வழக்கு’ என்று அக்குறிப்புக்கு அர்த்தம். அதாவது மக்களிடம் இப்பொருளில் வழங்குகிறது என்பதைத்தான் அப்படிக் குறிப்பிடுகின்றனர். எந்தப் பகுதி மக்களிடம் வழங்குகிறது? பல வட்டார மொழி கொண்ட தமிழில் எப்பகுதி என்பதைக் காட்டியிருக்க வேண்டும். அகராதி தொகுத்த காலத்தில் வட்டார வழக்கு அகராதிகள் எதுவும் இல்லை. ஆகவே ஒருசொல் எவ்வட்டார வழக்கு என்பதைத் தெளிவுபடுத்த முடியாத சந்தர்ப்பத்தில் ‘உள்ளூர் வழக்கு’ எனப் பொதுவில் சுட்டியுள்ளனர்.
‘தொண்டு – ஒழுக்கங்கெட்டவன்/ள்’ என்பது கொங்கு வட்டாரத்தில் வழங்கி வருவதாகும். ‘அவர் தமிழுக்குத் தொண்டு செய்தார்’ என்றால் ‘சேவை செய்தார்’ என இன்றைய மொழியில் பொருள். ‘சேவை’ என்னும் பொருள் தமிழ்ப் பேரகராதியில் இல்லை. இப்பொருள் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகியிருக்கக் கூடும். ‘தொண்டுப்பணி – ஊழியம்’ எனப் பொருள் இருக்கிறது. அதைத் ‘தொண்டூழியம்’ என்று கொங்குப் பகுதியில் வழங்குவர். அதுவும் அகராதியில் உள்ளது.
பள்ளி முடித்துக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதலாண்டு மாணவர்களுக்கு ஒருமுறை பாரதியார் பாடலைப் பாடம் நடத்திக் கொண்டிருந்தேன். அவரைப் பற்றிய குறிப்பை ஒருமாணவரை வாசிக்கச் சொன்னேன். அதில் ‘தமிழுக்கும் நாட்டுக்கும் அவர் தொண்டு புரிந்தார்’ என்பதான தொடர் ஒன்று வந்தது. அதைக் கேட்டதும் வகுப்பில் இருந்த சிலர் சிரித்தனர். ‘ஏன் சிரிப்பு?’ என்று கேட்டபோது ‘இல்லைங்க ஐயா. தொண்டுன்னு இவன வீட்டுல திட்டுவாங்களாமா’ என்று ஒருமாணவர் பதில் சொன்னார். உடனே வகுப்பு முழுவதும் சிரித்தது.
அப்போதிருந்து இச்சொல் பற்றிய யோசனை எனக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் போன்ற பல வட்டார வழக்குடைய மொழியில் பாடத்திட்டம் தயாரிக்கும்போது வட்டாரச் சொற்கள் பற்றிய கவனம் தேவை என்பதற்கு இச்சொல்லைச் சான்றாகச் சொல்வதுண்டு. தொண்டு என்பது பொதுச்சேவை என உயர்ந்த பொருளில் பொதுத்தமிழில் வழங்கிவர, குறிப்பிட்ட வட்டாரத்தில் அதற்கு மாறாக ‘ஒழுக்கமற்றவர்’ என்னும் பொருள் வந்தால் அதை எப்படிக் கற்பிக்க வேண்டும் என்றும் எண்ணினேன்.
அடிமை ஒருவர் எவ்வாறு ஊழியம் செய்வாரோ அப்படிச் செய்தல்தான் தொண்டு. அது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யும் சேவையைக் குறிப்பதற்கு மாறியிருக்கிறது. சேவை – தமிழ்ச்சொல் அல்ல; வடசொல். ‘சேவா சங்கம்’ என்றெல்லாம் வருகிறதல்லவா? அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாகத் ‘தொண்டு’ என்பதைப் பயன்படுத்தியுள்ளனர் போலும். பெரியாரைப் பற்றிப் பாரதிதாசன் பாடுகையில் ‘தொண்டு செய்து பழுத்த பழம்; தூய தாடி மார்பில் விழும்’ என்கிறார். இதில் தொண்டு – சேவை என்னும் பொருளில் வருகிறது. 1950க்குப் பிறகு இச்சொல் ‘பயன் கருதாது பொதுநலனுக்காகச் சமூகத்திற்கு உழைத்தல்’ என்னும் பொருளில் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. யார் முதலில் பயன்படுத்தினார், எவ்வாறு பெருவழக்கு பெற்றது என்பது ஆய்வுக்குரியது.
பயன்பட்டவை:
- ‘சபாநாயகன்’ திரைப்படம், 2023
- ச.வையாபுரிப் பிள்ளை (ப.ஆ.), தமிழ்ப் பேரகராதி, தொகுதி 4, பகுதி 1, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1982, மறுபதிப்பு, ப.2091 – 2092.
- பெருமாள்முருகன் (ப.ஆ.), கொங்கு வட்டாரச் சொல்லகராதி, குருத்து வெளியீடு, கோபிசெட்டிபாளையம், 2000.
—– 20-05-25
Add your first comment to this post