தர்க்கமும் விளக்கமும்
சில ஆண்டுகளாக இணையத்தில் நான் விரும்பிக் கேட்டுவரும் அரசியல் தலைவரின் உரை என்றால் அது தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுடையதுதான். அவரது உரை ஒன்றைக் கேட்கத் தொடங்கினால் முழுவதும் கேட்டு முடிப்பது வழக்கம். அத்தகைய ஈர்ப்பு அதில் இருக்கும். அப்படி அவர் உரைகள் என்னை கவர்ந்தமைக்குப் பல காரணங்கள் உண்டு.
பொதுவாகத் தமிழக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் மேடை மொழிக்கென்று பல பொதுத்தன்மைகள் உண்டு. அதில் ஒன்று, ஒரு தொடரைத் தொடங்கினால் எளிதில் முடிக்க மாட்டார்கள் என்பது. பின்னிப் பின்னி எடுத்துச் சென்று எங்கே தொடங்கினோம் என்று தெரியாமல் தடுமாறி எதிலோ முடிப்பதுதான் பெருவாரியானவர்கள் இயல்பு. அவ்வுரையிலிருந்து ஒரு விஷயத்தைக் கிரகித்துக் கொள்வது சிரமமானது. எப்படியோ சாரத்தை உணர்ந்து செய்தியாக்கும் செய்தியாளர் திறமை வியப்புக்குரியது. உரையைக் கேட்பதைவிடச் செய்தியைப் படித்து அறிந்து கொள்வது எளிதாக இருக்கும். இதிலிருந்து மிகச் சில தலைவர்களின் உரையே வேறுபட்டிருக்கும்.
தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தம் உரையில் நீண்ட தொடர்களைப் பயன்படுத்துவதில்லை. குறுகிய தொடர்களையே கையாள்வார். அதிகபட்சம் பத்துச் சொற்களுக்குள் தொடர் அமையும். தொடர் சற்றே நீண்டால் தேவையான இடைவெளி கொடுத்து மேலே சென்று சரியாக முடிப்பார். எழுவாய்க்கும் பயனிலைக்கும் முடிபு சரியாக அமையும். எழுத்தில் நீண்ட தொடர் வந்தால் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாசித்துப் புரிந்துகொள்ளலாம். பேச்சில் குறுகிய தொடர்கள் இருந்தால்தான் பின்பற்றுவது சுலபம். செவி எப்போதும் வெவ்வேறு ஒலிகளால் ஈர்க்கப்பட்டுத் திசை மாறிவிடும். அதை உணர்ந்திருப்பவரே குறுந்தொடர்களைப் பயன்படுத்துவர். தோழரின் உரை ஈர்ப்புக்கு இது முதன்மைக் காரணம் எனக் கருதுகிறேன்.
அவரது உரையில் ஒரு தொடருக்கும் அடுத்த தொடருக்கும் இருக்கும் இயைபு அத்தனை பொருத்தமாக இருக்கும். அதைச் சங்கிலித் தொடர் என்று சொல்லலாம். அதனால் கேட்பவர் தொடர்வது எளிது. தேர்ந்த சொல்லாட்சியைக் கையாள்வதும் அவரது இயல்பு. மக்கள் வழக்குச் சொற்களையும் எழுத்து வழக்குச் சொற்களையும் இணையாகப் பயன்படுத்துவார். அவற்றில் எழுத்து வழக்குச் சொற்களைக் கூறும்போது கேட்கும் பார்வையாளர்களின் புரிதல் திறனுக்கேற்ப அதை மேலும் விளக்குவதும் விளக்காமல் விடுவதும் நடக்கும். அதே போலச் சட்டம் உள்ளிட்ட துறைசார் ஆங்கிலச் சொற்களும் அவர் உரையில் தேவைக்கேற்ற அளவு இடம்பெறும். ஆங்கிலத் தொடராயினும் சொல்லாயினும் அதன் பொருளையும் பொருத்தத்தையும் தமிழில் எடுத்துச் சொல்வார். உரையாடல் மொழியையும் வினா நடையையும் உரையாற்றும் தளத்திற்கேற்ப இடையிடையே கலந்துகொள்வது அவர் பாணி.
பெரும்பாலும் அவர் பேச்சு முறை ஆற்றொழுக்காக அமைந்திருக்கும். ஏற்ற இறக்கங்கள் கொடுத்துப் பேசுவார். தடையோ தடுமாற்றமோ ஏற்படுவதில்லை. சரியான சொல் கிடைக்காமல் வாய் குழறுவதும் மனதை நினைவுக்குள் ஆழ்த்தித் தேடுவதும் அச்சந்தர்ப்பங்களில் வெற்றுச் சொற்களை வாய் மட்டும் உதிர்த்துக் கொண்டிருப்பதும் மேடைப் பேச்சாளர் பலரது தன்மை. தோழரின் உரையில் அத்தகைய இடங்கள் வருவதேயில்லை. அவராகப் பார்த்துச் சில இடங்களில் நிறுத்தம் கொடுத்தால்தான் உண்டு. மற்றபடி மனதின் வேகத்திற்குச் சொற்கள் இயைந்து வரும். மிகச் சில சந்தர்ப்பத்தில் மட்டுமே உணர்ச்சிவசப்படுவது போலத் தெரியும். பொதுத்தளத்தில் பேசும்போது மட்டுமே அது நடக்கும்.
தோழரின் உரைகள் இரண்டு வகையாக அமையும். ஒன்று தர்க்க உரை. இன்னொன்று விளக்க உரை. தர்க்க உரையில் எதிர்த்தரப்பைச் சொல்லிவிட்டுத் தம் தரப்பு நியாயங்களை அடுத்தடுத்து அடுக்கிக்கொண்டே செல்வார். முதன்மைக் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பதிலளிப்பார். பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களை எதிர்த்தரப்பு வலிமையாகப் பரப்பும் போது அதை எதிர்கொள்வது கடமையாகிறது. ஆகவே அதற்கே அவர் உரையில் முன்னுரிமை கொடுத்துப் பேசுவார். பின் படிப்படியாக முக்கியத்துவம் குறைந்த கருத்துக்களுக்கும் பதில் வரும். எதிர்த்தரப்பு முன்வைக்கும் எல்லாவற்றுக்கும் நுட்பமான பதில்களைச் சொல்வார். சிலசமயம் எதிர்த்தரப்பு என்ன சொல்கிறது என்பதை எடுத்துச் சொல்லாமலே தம் தரப்பை மட்டும் தர்க்கப்படுத்துவார். எதிர்த்தரப்பின் கருத்துக்கள் பொதுவில் பரவி விவாதித்திற்கு உள்ளாகியிருக்கும் போது அதைத் திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. மக்கள் அதை அறிந்திருப்பர் என்பதை உணர்ந்து தர்க்கம் செல்லும். அவரது தர்க்க நியாயங்களை ஏற்றுக்கொள்ளாத மனம் திறப்பில்லாத சுவர்தான்.
ஒரு விஷயத்தை எடுத்து விளக்கும் உரையில் எடுத்துக்கொண்டதன் எல்லாக் கோணங்களையும் படிப்படியாக விளக்கி விவரித்துச் செல்வார். இந்த வகை உரையில் ஒருமை இருக்கும். இதைத் தொட்டு அதைத் தொட்டு எங்கெங்கோ சுற்றி என்ன சொல்ல வந்தோம் என்று தெரியாமலே முடிக்கும் அரசியல்வாதிகளின் உரைகளுக்கு எதிரானது இது. தாம் விளக்க வரும் விஷயம் குறித்து முழுமையான அறிவுடன் பேசுவார். அவ்வறிவின் எந்தெந்தக் கூறுகளை இவ்விடத்தில் பேச வேண்டும் என்னும் தெளிவும் தேர்வும் கொண்டிருப்பார். இத்தகைய உரையைச் சிறுகணமும் தவறவிடாமல் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ச்சி அறுபட்டு மீண்டும் உரையைக் கேட்க வேண்டியதாகிவிடும். எந்த விஷயமாக இருப்பினும் சாதியம், சமூக நீதி, ஆணாதிக்கம் ஆகிய பார்வைகளை முன்வைத்து விளக்குவார். பொதுப்புத்திக்கு எதிரான மாற்றுப் பார்வைகளே அவர் உரைக்கு அடித்தளமாக இருக்கும். உணர்ச்சியைத் தூண்டும் பொதுப்புத்தி சார்ந்த கருத்துக்களை எச்சரிக்கையாக உடைத்துப் பேசுவார்.
—— 10-03-25
( ‘பாசிசத்தால் வீழ்த்த முடியாத ஸ்பார்ட்டகஸ்’ என்னும் தொகுப்பு நூலில் இடம்பெற்ற கட்டுரையின் முதற்பகுதி. தொகுப்பாசிரியர்: அமுதன் துரையரசன், அகழி பதிப்பகம், 2021.)
அருமையய்யா
கட்டுரையை முழுதுமாய்ப் படித்தேன்.திருமாவின் பேச்சுப் பற்றிய தகவல்கள் உண்மையே.கடந்த 1994 முதல் அவர் பேச்சோடு பயணிக்கிறேன்.சில சமயங்களில் அவரோடும் பயணித்திருக்கிறேன்.வயதுக்கேற்ப பேச்சின் வீச்சு கனிந்திருக்கிற உண்மையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.தொலைக்காட்சி நேர்காணல்களில் திருமாவின் பேச்சு ஒரு வரலாற்று பெட்கமாய் வெளிப்படும் என்பதும் உண்மை
சிறப்பு ஐயா