தொடக்கம், துவக்கம் ஆகியவற்றில் எது சரியான சொல் என்பது பற்றிப் பலர் பேசியுள்ளனர். பேசிக் கொண்டும் இருக்கின்றனர். பெரும்பாலோர் ‘தொடக்கம்’ என்பதே சரி என்னும் கருத்துடையவர்கள். தொடக்கமே சரி எனினும் துவக்கம் வழக்கிற்கு வந்துவிட்டதால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது சிலருடைய கருத்து. சென்னைப் புத்தகக் காட்சி பற்றி நான் எழுதியிருந்த ‘கருத்துரிமைக் கதவுகள்’ என்னும் கட்டுரைக்கு ஒருபடத்தை இணைத்திருந்தேன். அதில் ‘48-வது சென்னை புத்தகக் கண்காட்சி துவங்கியது’ என்னும் வாசகம் இருந்தது. நண்பர் ராஜேஷ் கார்கே தொடக்கம் – துவக்கம் பற்றி என் கருத்தைக் கேட்டுச் செய்தி அனுப்பியிருந்தார். அதையொட்டி இந்தச் சிறுபகிரல்.
தொடக்கம் என்பதற்கு நீண்ட வரலாறு உண்டு. ஐங்குறுநூறு 75ஆம் பாடலில் ‘அலர் தொடங்கின்றால் ஊரே’ என்று வருகிறது. சங்க இலக்கியத்தில் தொடக்கம், தொடக்குநர், தொடங்க, தொடங்கு, தொடங்கினன், தொடங்கியோள் எனப் பலவடிவங்களில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருகிறது. இன்று வழங்கும் ‘ஆரம்பம்’ என்னும் பொருளையே கொண்டிருக்கிறது. பிற்கால இலக்கியத்திலும் இச்சொல்லாட்சி பரவலாகப் பயில்கிறது. மிகப் பழமையான சொல் இது என்பதில் ஐயமில்லை.
‘துவக்கம்’ என்னும் சொல்லுக்கும் வரலாறு உண்டு. கம்பராமாயணத்தில் நான்கைந்து இடங்களில் இச்சொல் பயின்று வருகிறது. ஆனால் ‘ஆரம்பம்’ என்னும் பொருளில் அல்ல. கட்டுதல் எனப் பொருள் படுகிறது. கம்பராமாயணத்திற்குப் பிந்தைய நூல்கள் சிலவற்றிலும் இப்பொருளில் துவக்கு இடம்பெற்றுள்ளது. கட்டுதலுக்கும் ஆரம்பத்திற்கும் தொடர்பு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவே இச்சொல் வடிவம் பழையது; பழைய பொருள் வழக்கொழிந்துவிட்டது. இப்போது புதிய பொருளில் வழங்குகிறது. அதே வடிவம் என்றாலும் அதே சொல்தான் பொருள் மாற்றம் பெற்றிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
தமிழ்ப் பேரகராதியில் ‘துவக்கம்’, ‘துவங்கு’ ஆகிய வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றிற்கு முறையே ‘ஆரம்பம்’, ‘ஆரம்பித்தல்’ என இன்றைய பொருளையே தருகிறது. துவங்கு என்பதன் தொழிற்பெயர் வடிவம் துவக்கம். ஆரம்பம் எனப் பொருள் கொடுத்தாலும் அதற்கு இலக்கியச் சான்று எதையும் கொடுக்கவில்லை. ‘பேச்சு வழக்கு’ (colloquial) என்னும் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பேரகராதி 1930களில் வெளியானது. அப்போதே அகராதியில் இடம்பெற்றுவிட்டது. அதை வட்டார வழக்கு என்று குறிப்பு இல்லை. வட்டார வழக்காக இருப்பின் தமிழ்நாட்டின் ஏதோ ஒருபகுதியில் மட்டும் வழங்கும். இது ‘பேச்சு வழக்கு.’ அப்படியானால் தமிழ்நாடு முழுவதும் வழங்குவது என்று அர்த்தம்.
அகராதியில் இடம்பெறும் அளவு 1930களிலேயே இச்சொல் தமிழ்நாடு முழுவதும் வழங்கியிருக்கிறது என்றால் பல்லாண்டுகள் முன்னரே வழக்கிற்கு வந்திருக்க வேண்டும். அனேகமாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டு முதலே இச்சொல் படிப்படியாக வழக்குப் பெற்றிருக்கக் கூடும். உரைநடை நூல்களிலிருந்து சான்று கொடுப்பதைத் தமிழ்ப் பேரகராதி பின்பற்றவில்லை. ஆனால் உரைநடையிலிருந்து சொற்களை எடுத்திருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டுத் தொடக்க கால உரைநடையில் தேடினால் ‘துவக்கம்’ அகப்படும்.
இன்றும் பேச்சு வழக்கில் ‘தொடங்கு’ என்பதைத் ‘தொவங்கு’ எனச் சொல்வதுண்டு. ‘தொவக்கத்துல இருந்தே அவன் போக்கு சரியில்ல’ என்பது பேச்சு வழக்கில் இயல்பு. ‘தொவக்கம்’ என்பது பேச்சு வழக்கு என்றும் அதன் எழுத்து வழக்கு ‘துவக்கம்’ என்றும் கருதியோர் ‘துவக்கம்’ என எழுதியிருக்கலாம். ‘தொடை’ வழக்கில் ‘துடை’ ஆவதுண்டு. எம்.ஜி.ஆர். நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் வரும் ‘நிலவு ஒரு பெண்ணாகி’ பாடல் மிகவும் பிரபலம். அதில் ‘மடல்வாழைத் துடையிருக்க மச்சம் ஒன்று அதிலிருக்க’ என்று வருவதைக் கேட்டிருக்கலாம். தொடை – துடை ஆகிறது. அது போலத் தொடங்கு – துடங்கு என்றாகிப் பின்னர் ‘துவங்கு’ என மாறியிருக்கலாம்.
எப்படியானாலும் வடிவத்திற்கு ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு வரலாறும் ‘ஆரம்பம்’ என்னும் பொருளுக்குக் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டு வரலாறும் கொண்ட சொல் ‘துவக்கம்.’ இச்சொல்லைப் பிழை என்று சொல்லித் தவிர்ப்பது சரியானதல்ல. தொடக்கப் பள்ளி, துவக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆகிய மூன்றும் எழுத்து வழக்கில் நெடுங்காலமாக இருக்கின்றன. தொடக்கம், துவக்கம், ஆரம்பம் ஆகியவை ஒருபொருட்சொற்கள். மூன்றும் சரியானவையே என்பது என் எண்ணம்.
பயன்பட்டவை:
- தமிழ்ப் பேரகராதி, தொகுதி 4.
- கம்பராமாயணம், யுத்தகாண்டம்.
- இணையதளம்: http://tamilconcordance.in
—– 19-01-25
பேச்சு வழக்கைக் கொண்டு ஒவ்வொரு வேறுபாட்டிற்கு நாம் சில முறையைக் கடைப்பிடிக்கலாம்.
அவன் இன்று முதல் இயற்கை உணவை உண்ணத் துவங்கினான். ( இதற்கு ஆண்டு கணக்கு வராது.
இந்த கல்லூரி 1961 – ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 64 – ஆம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. ( இதற்கு ஆண்டு கணக்கிடல் உண்டு.)
ஓட்டப் போட்டியின் ஆரம்ப இடம் இது.
முடியும் இடம் அது. ( முடிவு உள்ளதை மட்டும் ஆரம்பம் என குறிக்கலாம்.)
தொடக்கப் பள்ளி / துவக்கப் பள்ளி / ஆரம்பப் பள்ளி – இம்மூன்று வடிவங்களில் எது சரியானது? என்ற ஐயம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது. தங்கள் விளக்கம் தெளிவைத் தருகிறது.
அதேபோல, அரசு மேல்நிலைப் பள்ளி / அரசு மேனிலைப் பள்ளி / அரசினர் மேல்நிலைப் பள்ளி – இவற்றில் எது திருத்தமான வடிவம்? என்ற குழப்பமும் நிலவுகின்றது ஐயா.
இருப்பினும் தொடக்கப் பள்ளி / அரசு மேல்நிலைப் பள்ளி என்ற வடிவமே பெருவழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இவ்வடிவங்களே பொருத்தமாக இருக்கும் என்பது என் எண்ணம் ஐயா.
மேலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்பதில் ஒற்று மிகுமா மிகாதா? என்ற ஐயமும் உண்டு.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசு மேல்நிலைப் பள்ளி (பெண்கள்)
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி
அரசு மேல்நிலைப் பள்ளி (மகளிர்)
இவற்றுள் எது திருத்தமான வடிவம் என்பதையும் வாய்ப்பிருந்தால் பதிவு செய்யுங்கள் ஐயா.
நன்றியுடன்…..
மிகவும் சிறப்பு..நல்ல அலசல்.. விளக்கம்.. விவரணை.
தொடக்கப் பள்ளி / துவக்கப் பள்ளி / ஆரம்பப் பள்ளி – இம்மூன்று வடிவங்களிலும் பள்ளியின் பெயர்ப்பலகை இருப்பதைக் காணலாம். அதேபோல மேல்நிலைப் பள்ளி / மேனிலைப் பள்ளி என்பதும். இவற்றில் எது சரியான வடிவம் என்ற ஐயம் அவ்வப்போது எழுப்பப்படுகிறது.
தங்கள் விளக்கம் ஏற்புடையதே. இருப்பினும் தொடக்கப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி ஆகிய வடிவங்களே பெருவழக்காக இருப்பதால் அவற்றையே பயன்படுத்தலாம் என்பது என் எண்ணம்.