தூது இலக்கியம் 1

You are currently viewing தூது இலக்கியம் 1

சிட்டுக்குருவி! சிட்டுக்குருவி!

தூது இலக்கியம் என்பது ஏதோ பழந்தமிழ் இலக்கியம் என்று நாம் கருதிவிடக் கூடாது. அது பழமையான நீண்ட நெடிய வரலாறு உடையதாக இருந்தாலும் கூட இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்து வரும் இலக்கிய வகைமை. சில இலக்கிய வகைமைகள் அவை தோன்றி  ஓரிரு நூற்றாண்டுகளுக்குள் முடிந்து போய் விடும். அவற்றைப் பின்பற்றி வரக்கூடிய சில நூல்களும் அதே விதமான அமைப்பில் மாற்றங்கள் இன்றித் தொடர்ந்திருக்கும். ஒரு நூலைப் படித்தால் போதுமானது. அதனுடைய தொடர்ச்சியாக அமையக்கூடிய பிற நூல்கள் எல்லாம் நகல் எடுத்தது போல இருக்கும்.

ஆனால் தூது இலக்கியம் அப்படியல்ல. ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுப்பித்துக் கொண்டு விதவிதமாக மாறிக்கொண்டே வந்துள்ளது. அதற்கு இன்றைக்கு நாம் கேட்கத் கூடிய திரைப்படப் பாடல்களே உதாரணமாக அமைகின்றன. 1950க்கு பின்னால் வந்த திரைப்படங்களில் பல தூதுப் பாடல்களைக் கேட்கலாம்.

சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?

என்னை விட்டு பிரிந்துப் போன கணவன்  வீடு திரும்பல.

‘டவுன் பஸ்’ என்ற படத்தில் வந்த அந்த பாட்டு அந்த காலத்தில் மிகவும் பிரபலம். சிட்டுக்குருவியிடம் தன் துயரத்தைச் சொல்வதாக அமைந்த பாடல். தன்னை விட்டுப் பிரிந்த கணவன் இன்னும் வரவில்லை என்னும் செய்தியைச் சிட்டுக்குருவியிடம் அவள் சொல்கிறாள். நம் மரபிலே சிட்டுக்குருவியைத் தூது அனுப்பும் வழக்கம் இல்லை. இலக்கணமும் இலக்கியமும் சிட்டுக்குருவியைத் தூது அனுப்புவதாகச் சொல்லவில்லை. ஆனால் திரைப்பட பாடலில் ஒரு தலைவி சிட்டுக்குருவியிடம் பேசுகிறாள். இது கிட்டத்தட்டத் தூது அம்சம் கொண்ட பாடல்தான்.

‘படகோட்டி’ என்ற படத்தில் வரும் ஒரு பாட்டு,

“பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ

துள்ளி விழும் வெள்ளலையே நீபோய்

தூது சொல்ல மாட்டாயோ”

என்பதாகும்.  அந்த பாடல் அலையைத் தூது அனுப்புவதாக அமைந்திருக்கும். நெய்தல் நிலத் தலைவனும் தலைவியும் ‘வெள்ளலையைத்’ தூதனுப்புவது மிகவும் பொருத்தம். நம் மரபில் இல்லாத புதுமை இது.

அதேபோலக் ‘குறவஞ்சி’ படப்  பாடல் ஒன்றுண்டு.

“யார் சொல்லுவார் நிலவே? நீ சொல்லாவிடில்

யார் சொல்லுவார் நிலவே”

என்று தொடங்கும் பாடல். நிலவைத் தலைவன்  தூதாக அனுப்புகிறான்.

“வைகைக் கரை காற்றே நில்லு

வஞ்சி தனைப் பார்த்தால் சொல்லு”

என்பது ‘உயிருள்ள வரை உஷா’ படப் பாட்டு. வைகைக் கரைக் காற்றை அனுப்புவதாக அமைந்திருக்கும். ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் வரும்

‘ஏரிக்கரப் பூங்காத்தே – நீ

போறவழி தென்கிழக்கு

தெங்கிழக்கு வாசமல்லி – என்னத்

தேடிவரத் தூது செல்லு’

என்னும் பாடலும் மிகவும் பிரபலம். இவை போலத் தென்றல் உட்படப் பலவிதமான காற்றைத் தூது அனுப்பும் பாடல்கள் இருக்கின்றன.

கிளியை தூது அனுப்புவது என்பது ஒரு பெரிய மரபு. ‘அழகர் கிள்ளைவிடு தூது’ என்று மிக பிரபலமான இலக்கியம் உண்டு. அது போலக் கிளியை தூது அனுப்பக்கூடிய பாடல்களும் திரையில் உண்டு. அதில் ஒரு பாடல்

“நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்

கொஞ்சம் சொல்லுங்களேன்

துள்ளிவரும் முத்து கிள்ளைகளே “

தூது இலக்கியம் 1

கிள்ளை என்ற வார்த்தை திரைப்பட பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன் தலைவனிடம் சென்று செய்தியைச் சொல்லித் திருமணமாகிய நல்ல காரியம் சீக்கிரம் நடப்பதற்கு நீங்கள் உதவி செய்யவேண்டும் என்று கேட்பதாக அமைந்த  பாடல் அது. தூது இலக்கியத்திலேயே வடமொழியில் காளிதாசன் இயற்றிய ‘மேக சந்தேசம்’ மேகம் விடு தூது ஆகும். சமஸ்கிருதத்தில் சந்தேசம் என்பது தூதுவைக் குறிக்கும். ‘மேக சந்தேசம்’ என்பது முதல் நூல் என்று சொல்கிறார்கள். திரைப்படப் பாடல்களிலும் மேகத்தை தூது அனுப்புவதாக பல பாடல்கள் உண்டு.

“அன்பு மேகமே இங்கு ஓடி வா!

எந்தன் துணையை அழைத்து வா!

என்று சொல்லக்கூடிய பாடலை நாம் பார்க்கலாம்.

‘நெஞ்சு விடு தூது’ என்பதுதான் தமிழிலே தோன்றிய முதல் தூது இலக்கிய நூல். சிற்றிலக்கிய வகைகளில் முதலில் தோன்றிய தூது இலக்கிய நூல் நெஞ்சுவிடு தூது என்பது ஆகும். தலைவன் தன்னுடைய நெஞ்சிடம் பேசுவதாகச் சங்க இலக்கியங்களில் பாடல்கள் உண்டு. தலைவன் தன்னுடைய நெஞ்சிற்கு கூறியது என்றால் தனக்குத்தானே பேசிக் கொண்டது. ‘நெஞ்சொடு கிளத்தல்’ என்பது துறைப்பெயர்.  ஒருவன் தனக்குத்தானே பேசிக் கொண்டால் அவன் தன்னிடம் பேசிக் கொண்டான் என்று சொல்லுவதுண்டு. அந்த நெஞ்சையே தூது அனுப்புவதாகப் பதினான்காம் நூற்றாண்டில் நெஞ்சுவிடுதூது தோன்றியது. திரைப்படப் பாடல்களில்  நெஞ்சைத் தூது விடுவது போலப் பல பாடல்கள் உண்டு.

“நெஞ்சே நீ போய்ச் சேதியைச் சொல்ல

நானும் வருவேன் மீதியைச் சொல்ல”

என்று ஒரு பாடல் இருக்கிறது. இப்படிப் பல பொருள்களைத் தூது அனுப்புவதாக இன்றைக்கு வரைக்கும் திரைப்படப் பாடல்களில் தூது இலக்கியங்களை நாம் பார்க்க முடிகிறது. இவ்வளவு நம் வாழ்வோடு ஒன்றி இருக்கின்ற திரைப்படங்களிலும் பொருந்தி வரக்கூடியதாகத் தூது இலக்கியம் இருக்கிறது. இதற்கு நீண்ட வரலாறு உண்டு. தொல்காப்பியத்தில் இருந்தும் சங்க இலக்கியத்திலிருந்தும் இதற்கான வரலாற்றை நாம் காணமுடிகிறது.

——   14-03-25

(குறிப்பு:  கொரானோ பொதுமுடக்கக் காலத்தில்  ‘சிற்றிலக்கியச் சீர்’ என்னும் பொதுத்தலைப்பில் சிங்கப்பூர் கவிமாலை அமைப்பு வலையுரைத் தொடர் ஒன்றை நடத்தியது. அதில் டிசம்பர் 29, 2020 அன்று தூது இலக்கியம் பற்றி உரையாற்றினேன். அதை எழுத்து வடிவமாக்கிக் கொடுத்தனர். திருத்தங்களுடன் கட்டுரையாகச் ‘சிற்றிலக்கியச் சீர்’ என்னும் தொகுப்பு நூலில் (செப்டம்பர் 2021) இடம்பெற்றது. இவ்வுரை வழங்கவும் எழுத்தாக்கவும் உதவியவர் சிங்கப்பூரைச் சேர்ந்த கவிஞர் இன்பா. அவருக்கு நன்றி.

நீண்ட கட்டுரையை வாசிப்புக்கு ஏற்பச் சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துப் பதிவிடுகிறேன்.)

Add your first comment to this post