இருந்தமிழே!
உயர்திணையையும் தூது அனுப்பலாம். அஃறிணையையும் தூது அனுப்பலாம். உயர்திணை என்றால் தோழி, தாய், பாணன் எனப் பல பேரை அனுப்பலாம். அதற்கு அகப்பொருள் இலக்கணத்தில் வாயில்கள் என்று பெயர். இவர்களெல்லாம் வாயில்களாகப் பயன்படுவார்கள். வாயில் என்றால் சந்து செய்வது அதாவது சமாதானப்படுத்துவது. தலைவனையும் தலைவியையும் சமாதானப்படுத்துவதற்கான வாயில்கள் என்று இவை உயர்திணையில் அமையும். அஃறிணைப் பொருட்கள் நிறைய அமையும். எகினம் அதாவது அன்னம், மயில், கிள்ளை, மேகம், பாங்கி, குயில், நெஞ்சம், தென்றல், வண்டு இவற்றையெல்லாம் தூது அனுப்பலாம் என்று இலக்கணம் சொல்கிறது. இப்படி உயர்திணையையும் தூது அனுப்பலாம்; அஃறிணையையும் தூது அனுப்பலாம்.
உயர்திணையைத் தூது அனுப்பினால் அவர்கள் போய் சொல்வார்கள். அஃறிணையைத் தூது அனுப்பினால் அவை போய்ச் சொல்லுமா? தூது இலக்கியத்தைப் பொருத்தவரை போய்ச் சொல்ல வேண்டும் என்பது இல்லை. கிளியைத் தூது அனுப்பினால் கிளி போய்ச் சொல்ல முடியுமா? சொல்லாது. அதுபோல் தமிழைத் தூது அனுப்பினால் தமிழ் போய்ச் சொல்லுமா? சொல்லாது. வண்டைத் தூது அனுப்பினால் வண்டு போய்ச் சொல்லுமா? சொல்லாது. தூது இலக்கியத்தில் இதற்கு அனுமதி உண்டு. ‘கேட்குந போலவும் கிளக்குந போலவும்’ என்பார் நன்னூலார். அஃறிணைப் பொருட்கள் கேட்பதுபோல எழுதுவது உத்தி. அதேபோல் அஃறிணை பொருட்கள் பேசாது. பேசுவதுபோல எழுதுவதும் இலக்கிய உத்தி. தொலைக்காட்சிகளில் சிறுவர்கள் பார்ப்பதற்கான அலைவரிசைகள் நிறைய இருக்கின்றன. பூனை, எலி போன்ற மிருகங்கள் எல்லாம் பேசும். இயல்பில் பேசுமா என்றால் பேசாது. ஆனால் கலை என்று வரும்போது அவையெல்லாம் பேசுவது போல அமைப்பது மரபு. ஆகவே அஃறிணைப் பொருட்களையும் தூதாக அனுப்புவது என்பது தொடக்கத்திலிருந்தே உண்டு.
அவை நேரடியாகச் சென்று சொல்கிறதோ இல்லையோ ஆனால் அவற்றிடம் ஒரு விஷயத்தைச் சொன்னால் நம்முடைய மனபாரம் குறைந்து விடும். அது முக்கியமான விஷயம். கடவுள் பக்தி என்பது அதுதான். கடவுளிடம் சென்று நம் கஷ்டத்தை சொல்கிறோம். கடவுள் கேட்கிறார் என்பது நமக்குத் தெரியுமா? கேட்கவில்லை என்று தெரியுமா?அவர் கேட்கிறார் என்று அவர் முன்னிலையில் சென்று நாம் சொன்னோம் என்றால் நம்முடைய மனபாரம் குறைந்து விடுகிறது. தூது விடுவதும் அதே தான். ஒரு பறவையிடம் சொன்னால், மரத்திடம் சொன்னால், ஏதாவது ஒரு விலங்கிடம் சொன்னால் எதனிடம் சொன்னாலும் சரி, நாம் வாய் விட்டுப் பேசி விட்டோம் என்றால் மனபாரம் குறைந்து விடும். அது மனதைச் சமநிலைப் படுத்துவதற்கான ஒரு உத்தி என்று சொல்லலாம். அதைத்தான் இலக்கியம் பயன்படுத்துகிறது.
தூது இலக்கியம் பற்றிய பலவிதமான விஷயங்களை நாம் பார்த்தோம். அடுத்து இது சிற்றிலக்கியமாக வளர்ந்தது என்றால் அது 14ஆம் நூற்றாண்டில்தான். 14ஆம் நூற்றாண்டில் உமாபதி சிவாச்சாரியார் என்ற சைவசமயப் பெரியவர் நெஞ்சுவிடு தூது என்பதை எழுதியிருக்கிறார். அது அவருடைய குருநாதருக்குத் தூது அனுப்புவதாக அமைந்திருக்கிறது. கடந்தை மறைஞானசம்பந்தர் என்பவர் குருநாதர். இவர் இன்னொரு சைவசமயப் பெரியவர். நெஞ்சை தூது அனுப்புகிறார். இதுதான் சிற்றிலக்கியங்களில் முதல் தூது இலக்கியம் ஆகும். இது சீடன் குருவிடம் தூது அனுப்புவதாக அமைந்தது. சைவசித்தாந்தம் தொடர்பான பல்வேறு செய்திகள் அந்த நூலில் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். அதில் முக்கியமாகக் குருநாதரிடம் சென்று சொல்லும்போது சந்தர்ப்பம் பார்த்துப் பேசவேண்டும் நெஞ்சே என்று சொல்கிறார். அவர் இந்த நேரத்தில் இந்தச் செயல்கள் செய்து கொண்டிருப்பார். அப்பொழுதெல்லாம் சென்று அவரைத் தொந்தரவு செய்து விடாதே. இந்தச் சமயத்தில் ஓய்வாய் இருப்பார். சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இருப்பார். சந்தர்ப்பம் பார்த்துப் பேச வேண்டும் என்று அமைந்திருப்பது அந்த நூல்.
இரண்டாவது நூலும் ‘நெஞ்சுவிடு தூது’ தான். தத்துவராயர் என்ற ஒரு சைவசித்தாந்தி எழுதியது. அதற்குப் பின்னால் படிப்படியாகப் பதினாறாம் நூற்றாண்டு வரை ஏராளமான தூது இலக்கியங்கள் வந்தன. ‘தெய்வச்சிலையார் விறலிவிடு தூது’ என்பது பதினாறாம் நூற்றாண்டில் வெளிவந்த நூல். அந்த நூல் திருநெல்வேலிப் பகுதியில் இருந்த தெய்வச்சிலை முதலியார் என்பவரிடம் ஒரு புலவர் தூது அனுப்புவதாக அமைந்தது. அந்த நூலை எழுதியவர் குமாரசாமி அவதானி என்ற புலவர். ஒரு காலத்தில் இந்த விறலி விடு தூது நூலை ஆபாச நூல் என்று ஒதுக்கியவர்களும் உண்டு. அதைப் படிக்க மாட்டார்கள். பாடத்தில் வைக்க மாட்டார்கள். நிறைய விறலிவிடு தூதுகள் உண்டு.
‘கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது’ என்ற நூல் உண்டு. ‘சேதுபதி விறலிவிடு தூது’ என்ற ஒரு நூலும் உண்டு. இவையெல்லாம் பாலியல் செய்திகளை வெளிப்படையாகப் பேசுவனவாக இருக்கும். அந்த அடிப்படையில் இவை எல்லாம் ஆபாசங்கள் என்று புறக்கணித்தவர்களும் உண்டு. ஆனாலும் அவை எல்லாம் அச்சில் பதிக்கப்பட்டு இன்றுவரை கிடைக்கக்கூடியனவாக உள்ளன. அவை அந்தக் காலத்தில் பரத்தையர்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பது முக்கியம். இந்த விறலிவிடு தூதுகள் அப்படிப் பாலியலைப் பேசினாலும் கூட இன்றுவரை அதற்கு ஒரு ஆவண மதிப்பு இருப்பதை நாம் காணலாம்.
இதில் இரண்டு முக்கியமான பதிப்பாசிரியர்களை நாம் சொல்லலாம். உ.வே. சாமிநாதையர் பல நூல்களைப் பதிப்பித்தவர். அவர் ஆறு தூது நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். கச்சி ஆனந்த உத்தரேயர் வண்டு விடு தூது என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். பிரபலமான தமிழ் விடுதூது நூலையும் பதிப்பித்திருக்கிறார். ‘இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’ என்ற அருமையான தொடரைக் கொண்ட தமிழ்விடு தூது. அந்த நூலை அவர் பதிப்பித்திருக்கிறார். ‘பத்மகிரி நாதர் தென்றல் விடு தூதில்’ பத்மகிரி என்பது திண்டுக்கல் பகுதியைக் குறிக்கக்கூடியது. அங்கு இருக்கக்கூடிய சிவபெருமானிடம் ஒரு தலைவி தூது அனுப்பியதாக அமைந்திருப்பது இந்தத் தென்றல் விடு தூது. மான் விடு தூது, அழகர் கிள்ளை விடு தூது, புகையிலை விடு தூது ஆகியவற்றையும் உ.வே. சாமிநாதையர் பதிப்பித்திருக்கிறார். அதேபோல மிகச் சிறந்த பதிப்பாசிரியராகிய ச. வையாபுரிப்பிள்ளை நான்கு தூது நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். ராமலிங்ககேசன் மீது பணவிடு தூது, துகில் விடு தூது, தெய்வச்சிலையார் விறலிவிடு தூது, நெல் விடு தூது ஆகிய நான்கு நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார்.
இந்த நூல்களின் பதிப்பும் இந்த நூல்களுக்கு இரண்டு பதிப்பாசிரியர்களும் எழுதிய முன்னுரைகளும் மிகச் சிறப்பானவை. குறிப்பாக உ.வே.சாமிநாதையர் நீண்ட முன்னுரைகளைத் தாம் பதிப்பித்த நூல்களுக்கு எழுதியிருக்கிறார். அதில் தூது இலக்கியம் பற்றிய பொதுவான வரலாற்றுச் செய்திகளையும் அந்த நூலின் சுருக்கம், பின்னணி, அது எந்த ஊரைப் பாடுகின்றது, யாரை பாடுகின்றது என்பன போன்ற விரிவான வரலாற்று தகவல்களை அவர் கொடுத்திருக்கிறார். இவை இல்லாமலும் சில தனித்தனி நூல்களைச் சிலர் பதிப்பித்திருக்கிறார்கள்.
—– 18-03-25
Add your first comment to this post